முன்னோக்கு

அபுதாபி பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு

உக்ரேனின் சமீபத்திய தாக்குதல்களுடன், நேட்டோ-ரஷ்யப் போரில் ஐரோப்பா தனது உறுதிப்பாட்டை இருமடங்காக்கியுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, ரஷ்யா மீதான போரின் தொடக்கத்திலிருந்து இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய ஆளில்லா விமானத் தாக்குதலை உக்ரேன் நடத்தியுள்ளது. 1,300-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை இடைமறித்து அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ள போதிலும், கிரீமியாவில் உள்ள கெர்ச் பாலம் உட்பட பல இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் ரஷ்ய கூட்டமைப்பில் இரண்டு பொதுமக்களும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஆறு பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

பிரஸ்ஸல்ஸ், லண்டன், பேர்லின், பாரிஸ் ஆகிய இடங்களில் உள்ள அரசாங்கங்களால் கொண்டாடப்பட்ட இந்தத் தாக்குதல், உக்ரேன், ரஷ்யா, அமெரிக்கா ஆகியவற்றுக்கு இடையே அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பாவும் கியேவும் அளித்த பதிலடியாகும். இந்தப் பேச்சுவார்த்தைகளில் அதிகபட்ச செல்வாக்கைப் பெறும் நோக்கத்துடன் மாஸ்கோ தனது வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், எதுவும் தம்மைப் போரைத் தொடர்வதிலிருந்து தடுக்காது என்பதை ஐரோப்பிய ஏகாதிபத்தியமும் அதன் பினாமியான ஜெலென்ஸ்கி அரசாங்கமும் தெளிவுபடுத்துகின்றன.

ஐரோப்பிய சக்திகளைப் பொறுத்தவரை, கடந்த வாரம் அபுதாபியில் நடந்த பேச்சுவார்த்தைகள் ஒரு பேரழிவாக அமைந்தன. உக்ரேனிய எண்ணெய், எரிவாயு மற்றும் மூலோபாய கனிமங்கள் மட்டுமல்லாமல், ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு மற்றும் மூலோபாய கனிமங்களிலும் பெரும் பங்கைப் பெறுவதை ட்ரம்ப் நிர்வாகம் உறுதிசெய்ய முயன்றதால், அவர்கள் மீண்டும் ஒருமுறை தாழ்வாரங்களிலேயே கைவிடப்பட்டனர் என்பது மட்டுமல்லாமல், கடந்த ஐந்து ஆண்டுகால மோதலில் ஏகாதிபத்திய சக்திகள் மறைக்க முயன்ற பிரச்சினைகளை அரசியல் ரீதியாக இந்தப் பேச்சுவார்த்தைகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன.

உக்ரேனியப் பிரதேசத்தின் கட்டுப்பாடு குறித்த பேச்சுவார்த்தைகளுடன், ஐரோப்பாவின் “பாதுகாப்புக் கட்டமைப்பு” தொடர்பான, அதாவது நேட்டோ தொடர்பான பரந்த கேள்வி குறித்தும் சம்பந்தப்பட்ட தரப்புகள் கலந்துரையாடத் தொடங்கின. இது, ஐரோப்பிய அரசாங்கங்களையும் அவற்றின் பேச்சாளர்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. திடீரென, உக்ரேனின் இறையாண்மை மற்றும் ஜனநாயகம் குறித்த பேச்சுகள் மறைந்து, ஏகாதிபத்தியக் கூட்டணியையும் ரஷ்ய எல்லைகளில் அதன் முன்னிலை படை நிறுத்தல்களையும் எந்த விலையைக் கொடுத்தாவது விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற பிடிவாதம் முன்னுக்கு வந்துள்ளது.

நேட்டோ குறித்த, அதன் விரிவாக்கம் குறித்த கேள்வி பேச்சுவார்த்தைகளின் மையமாக இப்போது ஒப்புக்கொள்ளப்படுவது, அந்தக் கூட்டணியின் பிரச்சாரத்திற்கு விழுந்த அடியாகும். பல ஆண்டுகளாக, முதலாளித்துவ நாடுகளுக்கு இடையேயான இயல்பான உறவுகளின் கண்ணோட்டத்தில், உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு முற்றிலும் விளக்க முடியாதது என்று ஏகாதிபத்திய அரசாங்கங்கள் அறிவித்து வந்தன. அது விளாடிமிர் புட்டின் என்ற நபர் வழியாகச் செயல்பட்ட ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட தீமையின் விளைவு என்றும் கூறி வந்தன.

2021 டிசம்பரை ஊடகங்கள் இப்போது நினைவுகூர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளன. பிபிசியின் ரஷ்யா பிரிவு ஆசிரியர் ஸ்டீவ் ரோசன்பேர்க்கின் வார்த்தைகளில் கூறுவதானால், ”அந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா மற்றும் நேட்டோவிடம் சில வரைவு ஒப்பந்தங்களை ரஷ்யா முன்வைத்தது. இந்த ஒப்பந்தங்கள், நேட்டோ கிழக்கு நோக்கி விரிவடைவதைத் தடுக்கும் வகையில், உக்ரேன் மற்றும் ஜோர்ஜியா போன்ற நாடுகள் ஒருபோதும் நேட்டோவில் இணைந்து கொள்ளாது என்பதற்கான உறுதியான உத்தரவாதங்களை மாஸ்கோவிற்கு வழங்கக் கோரின. மேலும், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்த நேட்டோ இராணுவக் கட்டமைப்புகளைத் திரும்பப் பெறவும் அவை வலியுறுத்தின”.

குறிப்பாக, 1997 மே மாதத்திற்குப் பிறகு கூட்டணியில் இணைந்த நாடுகளான போலந்து, ஹங்கேரி, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, பால்டிக் நாடுகள், ருமேனியா, பல்கேரியா மற்றும் பால்கன் நாடுகளிலிருந்து நேட்டோ துருப்புகளையும் ஆயுதங்களையும் அகற்ற வேண்டும் என்று அந்த முன்மொழிவுகள் கோரின. மேலும், நேட்டோ விரிவாக்கத்திற்கு முடிவுகட்டுவதும், உக்ரேன், கிழக்கு ஐரோப்பா, தெற்கு காகசஸ், மத்திய ஆசியா ஆகிய பகுதிகளில் எந்தவொரு இராணுவ நடவடிக்கையையும் மேற்கொள்ள மாட்டோம் என்ற உறுதியும் அதில் உள்ளடங்கியிருந்தது.

டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட இடைநிலை தூர அணு ஆயுதப் படைகள் ஒப்பந்தத்திற்கு மாற்றாக, அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒன்றுக்கொன்று தாக்கும் தூரத்திற்குள் குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை நிலைநிறுத்துவதைத் தடை செய்யும் ஒரு ஏவுகணை ஒப்பந்தமும் முன்மொழியப்பட்டது.

ரஷ்யச் செய்தித்தாளான கொம்சோமோல்ஸ்கயா பிராவ்தாவின் அண்மைய பதிப்பு ஒன்றை ரோசன்பேர்க் மேற்கோள் காட்டுகிறார்; அது, “எங்கள் முன்மொழிவுகள் கிட்டத்தட்ட எள்ளி நகையாடப்பட்டன” என்று நினைவு கூர்கிறது.

இந்தக் கோரிக்கைகளை நிராகரிப்பதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை நேட்டோ சக்திகள் முழுமையாக அறிந்திருந்தன. அப்போது, ரஷ்யாவின் முன்மொழிவுகள் குறித்து கருத்து தெரிவித்த கார்னகி மாஸ்கோ மையத்தின் தலைவர் டிமிட்ரி ட்ரெனின், “இதன் தர்க்கரீதியான பொருள் என்னவென்றால், [ரஷ்யா] தனது பாதுகாப்பைத் தனியாகவே, பெரும்பாலும் இராணுவத் தொழில்நுட்ப வழிமுறைகள் மூலம் உறுதி செய்ய வேண்டியிருக்கும்” என்று எழுதினார்.

ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை மேலும் எதிர்ப்பதில் உறுதியாக இருந்தாலும், தனது ஒட்டுமொத்த வர்க்கத்தைப் போலவே ரஷ்ய மற்றும் சர்வதேசத் தொழிலாளி வர்க்கத்திற்குக் கடுமையான விரோதப் போக்கைக் கொண்டுள்ள புட்டினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ரஷ்ய தன்னலக்குழுவின் பிரிவிற்கு இதுவே பிரதான வாய்ப்பாக இருந்தது என்பதை நேட்டோ திட்டமிடுபவர்கள் அறிந்திருந்தனர். ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கையை முன்னெடுக்கத் திறனற்ற அது, பிற்போக்குத்தனமான ரஷ்ய தேசியவாத எதிர்வினையைத் தொடுத்தது: அதாவது, உக்ரேனியப் பகுதிகளை இணைத்துக் கொள்வதற்கான போரை நடத்தி, அதனை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடனான பேச்சுவார்த்தைக்கான துருப்புச்சீட்டாகப் பயன்படுத்துவதாகும்.

ஏகாதிபத்திய அரசாங்கங்கள் இதையே எதிர்பார்த்துக் காத்திருந்ததுடன், கீயேவ்வில் உள்ள தீவிர வலதுசாரி அரசாங்கத்துடன் இணைந்து, உக்ரேனில் ஒரு இரத்தக்களரியான புதைசேற்றை தயார் செய்தன. இது, இப்போது இரு தரப்பிலும் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கியுள்ளது.

உக்ரேனியர்களின் உயிரிழப்புகளுக்குப் பதிலாக, அந்நாட்டின் மீதான கட்டுப்பாட்டைப் பெறுவதும், ஆட்சி மாற்றத்திற்கும் தங்களுக்கு இணங்கி நடக்கக்கூடிய ஒரு அரசாங்கத்தை நிறுவுவதற்கு வழிவகுக்கும் வகையில் ரஷ்யாவிற்கு ஒரு “மூலோபாயத் தோல்வியை” ஏற்படுத்துவதுமே அவர்களின் நோக்கமாக இருந்தது, இன்றும் இருக்கிறது. ரஷ்யாவிற்கு அத்தகைய அடியைக் கொடுப்பதில் ஐரோப்பா கொண்டுள்ள உறுதிப்பாடு, ட்ரம்ப் நிர்வாகத்தால் கருதப்படும் எந்தவொரு நடைமுறைச் சாத்தியமான தீர்வுக்கும் எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்து, எப்பாடுபட்டாவது போரைத் தொடர வேண்டும் என்பதில் அதனை மிகவும் போர்வெறி கொண்டதாக மாற்றியுள்ளது.

தமது தடயங்களை மறைப்பதற்காக, போரின் பின்னணியை மறுக்கும் ஒரு பிரச்சாரத் தாக்குதலை ஏகாதிபத்திய சக்திகள் தொடுத்தன. நேட்டோ விரிவாக்கம் குறித்த அல்லது ரஷ்யாவுக்கு எதிரான ஏகாதிபத்திய அச்சுறுத்தல்கள் குறித்த எந்தக் குறிப்பும் புட்டின் ஆதரவு அடிவருடிகளின் வேலை என்று கண்டிக்கப்பட்டது. போலி-இடது குழுக்கள் இந்தப் பிற்போக்குப் பிரச்சாரத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டன அல்லது தமது அரசியல் கருத்துரைகளிலும் செயல்பாடுகளிலும் உக்ரேன் போரைப் பெருமளவு குறைத்து மதிப்பிடுவதன் மூலம் அதற்கு இசைந்து போயின.

ஏகாதிபத்தியப் போருக்காக வக்காலத்து வாங்கும் இத்தகைய செயல்களுக்கு எதிராக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) தொடக்கத்திலிருந்தே போராடி வருகிறது.

ரஷ்யப் படையெடுப்பு தொடங்கிய சில மணி நேரங்களுக்குள், “புட்டின் அரசாங்கத்தின் உக்ரேன் படையெடுப்பையும் அமெரிக்க-நேட்டோ போர்வெறிக் கூச்சலையும் எதிர்ப்போம்!” என்ற அறிக்கையை ICFI வெளியிட்டது. அதில், “உக்ரேனை நேட்டோவில் இணைப்பது குறித்த ரஷ்யாவின் ஆட்சேபனைகளை கலந்துரையாட மறுத்ததன் மூலம், பைடென் நிர்வாகம் உக்ரேனை ஒரு தூண்டிலாகப் பயன்படுத்தியது. மேலும், பைடென் நிர்வாகம் இந்த படையெடுப்பைத் தூண்டியதோடு, இப்படையெடுப்பு இப்போது ரஷ்யாவுடன் அதிகரிக்கும் மோதலுக்கான ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்பட இருக்கிறது” என்று விளக்கப்பட்டிருந்தது.

ஒரு மாதத்திற்குப் பிறகு, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், “உக்ரேன் போரின் வரலாற்று மற்றும் அரசியல் பின்னணி தொடர்பாக நண்பர் ஒருவருக்கு ஒரு கடிதம்” என்ற கட்டுரையில் பின்வருமாறு விளக்கினார்:

உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை உலக சோசலிச வலைத் தளம் பகிரங்கமாகக் கண்டிக்கிறது. இருப்பினும், அரசியல் இடதுகளின் தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் இந்தக் கொள்கை ரீதியான எதிர்ப்பிற்கு, இப்போரை ரஷ்யாவால் எவ்விதத் தூண்டுதலுமின்றித் தன்னிச்சையாகத் தொடுக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகச் சித்தரிக்கும், மிகவும் ஒருதலைப்பட்சமான அதிகாரப்பூர்வ அமெரிக்க-நேட்டோ பரப்புரைக் கதையாடலுடன் எந்தச் சம்பந்தமும் இல்லை…

ரஷ்யாவின் கொள்கைகளை, அவை எந்த உலகளாவிய சூழலில் வடிவமைக்கப்படுகின்றன என்பதை ஆய்வு செய்யாமல், அதனைப் புரிந்துகொள்வது எப்படிச் சாத்தியம்? அமெரிக்கா இடைவிடாமல் போர்களைத் தொடுத்து வந்துள்ளது என்ற உண்மையைக் கருத்தில் கொள்ளும்போது, நேட்டோவின் விரிவாக்கத்தை புட்டின் அச்சத்துடன் பார்ப்பது பகுத்தறிவற்ற செயலாகிவிடுமா? கருங்கடல் பிராந்தியம், காஸ்பியன் பிராந்தியம், மற்றும் ஒட்டுமொத்த யூரேசிய நிலப்பரப்பு ஆகியவற்றில் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய அளவிலான மூலோபாய நோக்கம் இருப்பதை அவரும், ரஷ்யாவின் பிற கொள்கை வகுப்பாளர்களும் நிச்சயமாக நன்கு அறிவார்கள். மறைந்த ஜிபிக்னியூ பிரெசின்ஸ்கி (Zbigniew Brzezinski) மற்றும் பிற முன்னணி அமெரிக்கப் புவிசார் மூலோபாயவாதிகள், “உலகத் தீவு” என்று அழைக்கப்படும் யூரேசியாவின் மீதான அமெரிக்க மேலாதிக்கமே ஒரு தீர்க்கமான மூலோபாய இலக்கு என்று நீண்டகாலமாக வலியுறுத்தி வருவது ஒன்றும் இரகசியமான விஷயமல்ல...

ட்ரம்ப் ஜனாதிபதியானதிலிருந்து நேட்டோவின் போர் முயற்சிக்குத் தலைமை தாங்கி வரும் ஐரோப்பிய சக்திகளின் எதிர்வினை, இந்தப் பகுப்பாய்வின் உண்மையை நிரூபிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் “ரஷ்யா விரிக்கும் பொறிகள்” குறித்து எச்சரித்து, “எங்களிடம் ஓர் ஆக்கிரமிப்பாளரும் ஒரு பாதிக்கப்பட்டவரும்தான் இருக்கின்றனர். ஆக்கிரமிப்பாளருக்குப் பாதுகாப்புக் கவலைகள் எதுவும் இல்லை” என்று விளக்கமளித்தார்.

ஜேர்மன் சான்சலர் பிரெட்ரிக் மெர்ஸ், “ஐரோப்பியப் பாதுகாப்புக் கட்டமைப்பு குறித்த கேள்விகளைப் பற்றிப் பேச ரஷ்யா விரும்புகிறது. அதைப்பற்றி நாம் விவாதிக்கத் தேவையில்லை; அது ஏற்கெனவே உள்ளது,” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

ஐரோப்பிய வெளியுறவுக் கவுன்சிலுக்காக எழுதிய அரசியல் ஆய்வாளர் அன்டன் பார்பாஷ், மிகவும் வெளிப்படையாக, “அபுதாபியில் நடந்த பேச்சுவார்த்தைகள், உக்ரேன் விவகாரத்தில் ஒரு உடன்பாட்டை விட அதிகமானதை ரஷ்யா விரும்புகிறது என்பதைக் காட்டுகின்றன. அதாவது, ஐரோப்பாவின் பாதுகாப்பு ஒழுங்கில் கடந்த 35 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களைப் பின்னோக்கி இழுக்க அது விரும்புகிறது. உக்ரேனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான விலையாக இந்த இலக்கு மாறுவதை ஐரோப்பியர்கள் அனுமதிக்கக் கூடாது” என்று குறிப்பிட்டார்.

அதாவது, ஐரோப்பியத் தலைநகரங்கள் மிகவும் விரும்புவதாகக் கூறப்படும் உக்ரேன் அமைதி என்பது, எமது ஏகாதிபத்திய நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடாது. இதனை வேறு விதமாகச் சொல்வதானால், ஐரோப்பாவில் நேட்டோ அமைப்பின் நலன்களுக்காக இந்தப் போர் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதாகும்.

ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தைப் பொறுத்தவரை, இதில் பல பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான கடன் திருப்பிச் செலுத்துதல்கள், உக்ரேனின் மலிவான உழைப்புச் சக்தி மற்றும் வளமான இயற்கை வளங்கள் ஆகியவை அடங்கியுள்ளன. மேலும், ரஷ்யாவையும் அதே வழியில் பலவீனப்படுத்திச் சூறையாடுவதற்கான வாய்ப்பு ஆகியவையே பணயத்தில் உள்ளன.

உக்ரேனின் கடன் ஏறத்தாழ 185 பில்லியன் யூரோவாக உள்ளது. அதில் மிகப்பெரிய பங்கு (சுமார் 40 சதவீதம்) ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் செலுத்த வேண்டியதாகும். மேலும், ஆறில் ஒரு பங்கு சர்வதேச நாணய நிதியத்துக்கும் உலக வங்கிக்கும் செலுத்த வேண்டியதாகும். ஏறத்தாழ 2 சதவீதத்திற்கும் குறைவான “சலுகை” வட்டி விகிதத்தில் வழங்கப்பட்ட இந்தக் கடன்கள், அந்நாட்டின் பொருளாதாரத்தை தடையற்ற சந்தை முறைக்கு ஏற்ப மறுசீரமைப்பதை முன்னெடுக்கும் நூற்றுக்கணக்கான கடுமையான நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டுள்ளன.

2026-2027 காலகட்டத்தை உள்ளடக்கிய, மேலும் 90 பில்லியன் யூரோ மதிப்பிலான உக்ரேன் ஆதரவுக் கடன், மாஸ்கோவுக்கு ஒரு பெரும் தோல்வியை ஏற்படுத்துவதைப் பொறுத்து, ரஷ்யாவின் இழப்பீட்டு நிதியிலிருந்து திருப்பிச் செலுத்தப்பட உள்ளது. அத்தகையதொரு சாத்தியக்கூறு ஏற்பட்டால், அளவிட முடியாத அளவுக்குப் பெரும் செல்வங்கள் ரஷ்யாவிலிருந்து கிடைக்கச் செய்யப்படும்.

உக்ரேனில் இத்தகைய வாய்ப்புகளைப் பாதுகாப்பதற்கும், அவற்றை ரஷ்யாவிற்குள் விரிவுபடுத்துவதற்குத் தயாராவதற்கும் ஐரோப்பிய சக்திகளிடம் உள்ள ஒரே சாத்தியமான இராணுவக் கட்டமைப்பு நேட்டோ மட்டுமே ஆகும். இதில் வெற்றி பெற, போர்முனையில் நிலவும் கொடிய துயரங்கள் பின்னணிப் பகுதிகளுக்கும் பரவி வரும் நிலையில், நாளுக்கு நாள் மிகவும் கொடூரமாகி வரும் இப்போரை அவர்கள் நீட்டிக்க வேண்டியுள்ளது.

உக்ரேனிய ட்ரோன்கள் ரஷ்ய எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகள், கிடங்குகள், துறைமுகங்கள், சரக்குக் கப்பல்களை இலக்கு வைத்துள்ளன. ரஷ்யத் தாக்குதல்கள் உக்ரேனின் மின்சாரம், போக்குவரத்து, ஏற்றுமதி உள்கட்டமைப்புகளைத் தாக்கி, உறைபனி நிலவும் சூழலில், மேலும் குறைந்து வரும் வெப்பநிலைகளுக்கு மத்தியில் பரவலான மின்தடைகளை ஏற்படுத்தியுள்ளன.

இரு நாடுகளின் பொருளாதாரங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன; அவற்றின் சுமைகள் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்படுகின்றன. ரஷ்யா அடுத்த ஆண்டு சமூகச் செலவினத்தை 15.2 சதவீதம் வெட்டுகிறது. உக்ரேன் ஓய்வூதியங்களுக்கும் சமூகத் திட்டங்களுக்கும் செலவிடுவதைவிட, தனது கடன் திருப்பிச் செலுத்தல்களுக்கே அதிகம் செலவிடுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைய புள்ளிவிவரங்களின்படி, அக்டோபர் மாதத்தில் உக்ரேனில் 372 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; ஏறத்தாழ 2,000 பேர் காயமடைந்தனர். இது, முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து அக்டோபர் மாதத்தில் பதிவான மிக அதிகபட்ச எண்ணிக்கையும், ஓராண்டுக்கு முன்பிருந்ததைவிட 95 சதவீத அதிகரிப்புமாகும். அதே மாதத்தில், தனது பிரதேசத்திலும், தனது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்திலும் 149 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், ஏறத்தாழ 700 பேர் காயமடைந்ததாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

கருங்கடலிலோ, காலினின்கிராடிலோ, வேறு எங்கோ உக்ரேனுக்கு வெளியே நிகழும் மோதல்களும் ஆத்திரமூட்டல்களும், ரஷ்யாவுக்கும் நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் இடையே நேரடி மோதலை ஏற்படுத்தும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன.

டேவிட் நோர்த் எழுதிய “ஒரு நண்பருக்கு எழுதிய கடிதம்” என்ற கட்டுரை, ஸ்டாலினிச அதிகாரத்துவத்திலிருந்து தன்னலக்குழுவாக உருமாறியவர்களால் நடத்தப்பட்ட “சோவியத் ஒன்றியத்தின் கலைப்பினால் ஏற்பட்ட துயரகரமான மற்றும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை உக்ரேன் நெருக்கடியின் வடிவத்தில் ரஷ்யா எதிர்கொள்கிறது” என்பதை வலியுறுத்தியது.

உலக முதலாளித்துவத்தின் விருந்து மேசையில் தங்களுக்கு ஒரு இடம் கிடைக்கும் என்று நம்பிய அவர்களும் அவர்களது ஏகபோக நிறுவனங்களும், அதற்குப் பதிலாக அந்த மேசையில் உணவாகப் பரிமாறப்படும் நிலைக்கே தள்ளப்பட்டனர். கீயேவ் நகரைப் போல ஏகாதிபத்திய சக்திகளுக்குச் சேவகம் செய்வதாக இருந்தாலும் சரி, அல்லது மாஸ்கோவைப் போல அவர்களுடன் விளிம்புநிலை ஆபத்து விளையாட்டில் ஈடுபடுவதாக இருந்தாலும் சரி, தேசியவாதக் கொடியின் கீழ் போரை முன்னெடுப்பதே அவர்களின் ஒரே பதிலாக உள்ளது.

இந்த இரண்டுக்குமான விலையைத் தொழிலாள வர்க்கமே செலுத்துகிறது. இந்தப் பேரழிவிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி, அக்டோபர் புரட்சியின் சோசலிச சர்வதேச மரபுகளுக்குத் திரும்புவதே ஆகும். அந்தப் புரட்சிதான் சோவியத் ஒன்றியத்தை உலக சோசலிசப் புரட்சியின் முதல் முன்னரங்காக நிறுவியது. ரஷ்ய மற்றும் உக்ரேனியத் தொழிலாளர்கள், ஐரோப்பா முழுவதிலும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தங்கள் வர்க்கச் சகோதர சகோதரிகளுடன் இணைந்து, போருக்கு எதிராகவும், அந்தப் போரைத் திட்டமிட்ட ஆளும் வர்க்கத்திற்கு எதிராகவும் அணிதிரள வேண்டும்.

அத்தகைய ஓர் இயக்கத்திற்கான புறநிலைச் சமூக அடித்தளம் வளர்ந்து வருகிறது. ஐரோப்பா முழுவதும், நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் சிக்கன நடவடிக்கைகள், மீள் ஆயுதமயமாக்கல், கட்டாய இராணுவச் சேவை, தமது வாழ்க்கைத் தரங்களின் அழிவு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கி வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் ஐக்கியப்படுத்தப்பட்டு, வளர்ந்து வரும் எதிர்ப்பை ஏகாதிபத்தியப் போருக்கும் அதைப் பிறப்பிக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிரான, சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த இயக்கமாக மாற்றும் வகையில், நனவான சோசலிச, சர்வதேசியவாத முன்னோக்குடன் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.

Loading