கொரொனா வைரஸ் தொற்றுநோய் மீது பெருவணிகங்களின் சேதி: உயிர்களை அல்ல, இலாபங்களைக் காப்பாற்றுங்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த கொரொனா வைரஸ் தொற்றுநோய் உலகெங்கிலும் தொடர்ந்து பரவி வருகின்ற நிலையில், மற்றும் அமெரிக்காவில் அறிவிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை வேறெந்த நாட்டையும் விட அதிக வேகத்தில் அதிகரித்து வருகின்ற நிலையில், “குணப்படுத்தல் இந்நோயை விட மோசமானது,” என்று அமெரிக்க ஆளும் வர்க்கத்திடம் இருந்து ஒரு தீர்க்கமான தொனி எழுந்து வருகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பெருநிறுவன இலாப நலன்களுக்காக மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் உயிர்கள் தியாகம் செய்யப்பட வேண்டும் என்றாகிறது.

“பிரச்சினையை விட குணப்படுத்துதல் மோசமாக இருக்கும் என்பதை நாம் கவனிக்காமல் விட முடியாது,” என்று ட்ரம்ப் ஞாயிறன்று மாலை ட்வீட்டரில் அறிவித்தார். “[ஒரு வாரத்திற்கு முன்னர் தொடங்கிய] இந்த 15 நாட்களின் முடிவில், நாம் எந்த வழியில் செல்ல விரும்புகிறோம் என்பதை நாம் முடிவெடுத்தாக வேண்டும்,” என்றார்.

அவரின் திங்கட்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பில், ட்ரம்ப் கூறுகையில், அமெரிக்க வணிகங்களை “மாதங்களில் அல்ல, சில வாரங்களில்" மீண்டும் திறக்க விரும்புவதாகவும், “...ஒரு குறிப்பிட்ட தருணத்தில், நாம் வெளியில் வந்து இயங்க வேண்டியிருக்கும். இந்த நிறுவனங்களை நாங்கள் இழக்க விரும்பவில்லை...” என்றும் தெரிவித்தார்.

அமெரிக்காவில் ஏற்கனவே சுகாதார கவனிப்பு அமைப்புமுறையைச் சுமையால் மூழ்கடித்துள்ள இந்த தொற்றுநோயின் முக்கியத்துவத்தைக் குறைத்துக்காட்டி, ட்ரம்ப் தொடர்ந்து கூறுகையில், “மிகவும் வேகமாக பரவும் இந்த சளிக்காய்ச்சல் பருவகாலம், மிகவும் அதிக வேகமாக பரவி வருகிறது... வாகன விபத்துக்களைக் கவனியுங்கள், இவை நாம் பேசி வரும் எந்தவொரு எண்ணிக்கையையும் விட மிக அதிகமாக உள்ளன. இனி யாரும் கார் ஓட்டாதீர்கள் என்று ஒவ்வொருவருக்கும் நாம் கூறப் போகிறோம் என்பது இதன் அர்த்தமல்ல. ஆகவே நமது நாட்டை செயல்படுத்துவதற்கான விடயங்களை நாம் செய்ய வேண்டியவர்களாக உள்ளோம்,” என்றார்.

மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்தால், இறக்கட்டும். அதுதான் வணிகம் செய்வதற்கு கொடுக்கப்படும் விலை. இதைத் தான் பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டு அறிவிக்கிறது. கோல்ட்மன் சாக்ஸ் இன் முன்னாள் தலைமை செயலதிகாரி Lloyd Blankfein ட்வீட்டரில் குறிப்பிடுகையில், “இந்நோயால் குறைந்த பாதிப்புடன் இருப்பவர்கள் ஒரு சில வாரங்களில் வேலைக்குத் திரும்ப செய்வது" அவசியம் என்று எழுதினார்.

இத்தகைய அறிக்கைகள் திங்கட்கிழமை வோல் ஸ்ட்ரீட் கூடுதல் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட நிலையில் வெளியிடப்பட்டன. அமெரிக்க பெடரல் ரிசர்வால் நிதியியல் சந்தைகளுக்குள் மட்டுப்பாடின்றி பணம் பாய்ச்சப்பட்டதற்கு மத்தியிலும் 2016 இல் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பிந்தைய குறைந்தபட்ச மட்டங்களுக்குச் சந்தை வீழ்ச்சி அடைந்திருந்தது.

வோல் ஸ்ட்ரீட்டை ஊக்குவிக்க வணிக செயல்பாடுகள் மீதான கட்டுப்பாடுகளை வேகமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆளும் வர்க்கத்தின் நகர்வு தொற்றுநோய் நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களின் பரிந்துரைகளுக்கு நேரெதிராக நிற்கிறது. திங்கட்கிழமை இரவு பதியப்பட்ட ஒரு கட்டுரையில், நியூயோர்க்டைம்ஸ் குறிப்பிடுகையில், “அத்தகைய கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது அந்த வைரஸால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையைக் கணிசமானளவுக்கு அதிகரிக்கக்கூடும் என்று பொது சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்" என்ற போதும் கூட, “அரசாங்கம் தொலைதூரம் விலகி சென்றுவிட்டதா என்று ட்ரம்ப், வோல் ஸ்ட்ரீட் செயலதிகாரிகள் மற்றும் பல பழமைவாத பொருளாதார நிபுணர்களிடம் கேள்விகள் வர தொடங்கிவிட்டன,” என்று எழுதியது.

ஆனால் "வேலைக்குத் திரும்புவதற்கு" அழைக்கும் பிரச்சாரங்களில், ஜனநாயகக் கட்சியின் ஊடக நிறுவனமாக விளங்கும் நியூயோர்க்டைம்ஸின் தலையங்க பக்கமும் உள்ளடங்கும் என்பதை டைம்ஸ்குறிப்பிடவில்லை. “பொருளாதார வளர்ச்சி" என்ற பெயரில் மக்களை உயிரிழக்க விடச் செய்வதற்கான மிகவும் வெளிப்படையான வாதம் முன்னணி டைம்ஸ் கட்டுரையாளர் தோமஸ் ப்ரீட்மனிடம் இருந்து வந்தது.

திங்கட்கிழமை பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில், ப்ரீட்மன் வினவுகிறார், “ஆனால் நமது பல வணிகங்கள் மூடப்பட்டுள்ளன, மில்லியன் கணக்கானவர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர் இந்நிலையில், சில வல்லுனர்களோ 'ஒரு நிமிடம் பொறுங்கள்! நமக்குநாமே நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நம் பொருளாதாரத்திற்கும் தான்? இந்த குணப்படுத்தல் —சிறிது காலத்திற்கேனும்— இந்த நோயை விட மோசமாக இருக்காதா?' என்று கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.”

ப்ரீட்மனின் கட்டுரை பொய் பொய்யாக அடுக்கி வைத்துள்ளது.

பொய்#1: இந்தநோயைக்கட்டுப்படுத்துவதுசாத்தியமில்லை

இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கங்கள் கைவிட வேண்டுமென ப்ரீட்மன் வாதிடுகிறார். “பல, பல அமெரிக்கர்களுக்கும் இந்த கொரொனா வைரஸ் தொற்று ஏற்படவிருக்கிறது அல்லது ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் என்ற உண்மையை இந்த தருணத்தில் தவிர்க்கவியலாது. அந்த கப்பல் பயணம் தொடங்கிவிட்டது,” என்றவர் எழுதுகிறார். அவர், “பரந்த மக்களிடையே கட்டுப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை நாம் தவறவிட்டுவிட்டோம்,” என்று அறிவிக்கும் அவரின் சக பத்திரிகையாளரான டைம்ஸ்பத்திரிகைக்கு பங்களிப்பு செய்யும் டேவிட் எல். காட்ஜை ப்ரீட்மன் மேற்கோளிடுகிறார்.

COVID-19 ஐ "கட்டுப்படுத்துவதற்கான" முயற்சிகளைக் கைவிடுவது பொருத்தமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை தொற்றுநோய் சம்பந்தமாக அங்கீகரிக்கப்பட்ட உலகளாவிய அமைப்பான உலக சுகாதார அமைப்பு (WHO) தெளிவுபடுத்தி உள்ளது. “கட்டுப்படுத்துவதில் இருந்து தீவீரத்தைக் குறைப்பதை நோக்கி நாடுகள் மாற வேண்டும் என்ற கருத்து தவறானதும் அபாயகரமானதும் ஆகும்,” என்று அந்த அமைப்பின் பொது-இயக்குனர் Tedros Adhanom Ghebreyesus தெரிவித்தார்.

COVID-19 இன் இறப்பு விகிதம் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. மக்களில் பெரும்பான்மையினரைப் பரிசோதித்து இந்த தொற்றுநோய்க்குச் சிகிச்சை அளிப்பதற்காக பெரும் ஆதாரவளங்களை அர்பணித்த கொரியாவில், இந்த உயிரிழப்பு விகிதம் 1.2 சதவீதமாக உள்ளது. இந்த நோயால் சுமையேறி மூழ்கி போயுள்ள சுகாதார அமைப்பைக் கொண்டுள்ள இத்தாலியில், இறப்பு விகிதம் 9.4 சதவீதமாக உள்ளதுடன், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தளவு ஏற்படக்கூடிய விளைவுகளின் அடிப்படையில் பார்க்கையில், பெருந்திரளான மக்களை COVID-19 பாதிப்பதற்கு அனுமதிக்குமாறு ப்ரீட்மனின் முன்மொழிவு ஒரு மில்லியனில் இருந்து 18 மில்லியன் வரையிலான உயிர்களைப் பலி கொள்ளக்கூடும்.

பொய்#2: சமூகவிலக்குஉயிர்களைக்காப்பாற்றாது

தொடர்புகளின் சுவடைப் பின்தொடர்வது, தனிமைப்படுத்தல் மற்றும் ஒதுக்கி வைத்தல் மூலமாக இந்த தொற்றுநோயைத் தடுப்பதற்கான முயற்சிகளுக்கு எதிராக வெறுமனே வாதிடுவது மட்டுமின்றி, மாறாக "பொருளாதாரத்தை" காப்பாற்றுவதற்கான என்ற பெயரில் சமூக விலக்கை முடிவுக்குக் கொண்டு வருமாறு கோருவதன் மூலமாக ப்ரீட்மன் இன்னும் அதிக கண்டனத்திற்குரிய படியை எடுக்கிறார்.

“ஆளுநர்களும் நகராட்சி தலைவர்களும், … குறிப்பிடப்படாத காலத்திற்கு அடிப்படையில் ஒவ்வொருவரையும் வீட்டுக்கு அனுப்பி, சொல்லப் போனால் அனேகமாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்குத் தொற்று ஏற்படும் அபாயங்களை அதிகரித்துள்ளனர்,” என்று ப்ரீட்மன் வாதிடுகிறார்.

இது மற்றொரு பொய்யான ஆதாரமற்ற கருத்து என்பதுடன், இது WHO இன் வழிகாட்டி நெறிமுறைகளுடன் முற்றிலும் முரண்பாடாக உள்ளது, மருத்துவமனைகள் அதிக சுமையேறாமல் செய்வதன் மூலம் உயிர்களைப் பாதுகாக்க அவசியப்படுவதால் சமூக விலக்கை அந்த அமைப்பு அங்கீகரித்துள்ளது.

பொய்#3: உயிர்களைக்காப்பாற்றுவதுபொருளாதாரத்தைஅழித்துவிடும்"

ப்ரீட்மன் தொடர்ந்து எழுதுகிறார், “ஆனால் —அதேயளவுக்கு அவசரமாக— சாத்தியமான அளவுக்கு உடனடியாக எத்தனை அமெரிக்கர்கள் சாத்தியமோ அத்தனை பேரையும் பாதுகாப்பாக வேலைக்குத் திரும்புமாறு செய்வதற்கான வாய்ப்புகளை... நம்மால் அதிகரிக்க முடியுமா என்றும் நம்மைநாமே கேட்டுக் கொள்ள வேண்டும். அது ஏறத்தாழ ஒரு சில வாரங்களுக்கு உள்ளேயே நடக்கலாமென அடிமட்டத்தில் நான் பேசிய ஒரு வல்லுனர்களும் நம்புகின்றனர்.”

அந்த "வல்லுனர்" டாக்டர். டேவிட் எல். காட்ஸ் ஆவார். டாக்டர்காட்ஜின்விருப்பத்திற்குரியஉணவுவகை: இந்தவிஞ்ஞானபூர்வமாகநிரூபிக்கப்பட்டஇந்ததிட்டத்தைக்கொண்டுஎடையைக்குறைக்கஉங்கள்சுவையுணர்வைப்பயன்படுத்துங்கள் என்பது உள்ளடங்கலாக படைப்புகளை இவர் பிரசுரித்துள்ளார். மருத்துவத் தொழில்துறை "எளிதில் ஏற்றுக் கொள்ளத்தக்க ஆதார கருத்துருவை" தழுவ வேண்டும் என்று அறிவிக்கும் காட்ஸ், நிரூபிக்கப்படாத ஹோமியோபதி மற்றும் "ஜீவகாந்த மருத்துவ" விஞ்ஞானத்தை ஊக்குவிக்கிறார். காட்ஸ் போலி விஞ்ஞானத்தை விஞ்ஞானத்துடன், முட்டாள்தனத்தை அறிவுநுட்பத்துடன், நிஜமான மருத்துவத்துடன் மாற்று மருத்துவத்தை "ஒருங்கிணைக்க" முயல்வதில் காட்ஸ் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர் என்று புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர் டேவிட் கோர்ஸ்கி வாதிட்டுள்ளார்.

டைம்ஸில் முந்தைய கட்டுரையில் காட்ஸ் எழுதுகையில், “சமூகத்தின் பெரும்பாலான வாழ்க்கை வழக்கமாக திரும்புவதற்கும் மற்றும் அனேகமாக பொருளாதாரத்தின் பல பிரிவுகளும் பொறிவிலிருந்து தடுக்கப்படுவதற்கும்" வாதிட்டிருந்தார். "ஆரோக்கியமான குழந்தைகள் பள்ளிக்குத் திரும்பலாம், ஆரோக்கியமான இளம் வயதினரும் அவர்களின் வேலைகளுக்குத் திரும்பலாம். தியேட்டர்களும் உணவு விடுதிகளும் மீண்டும் திறந்துவிடப்படலாம்,” என்றவர் வாதிட்டார்.

“இந்த சளிக்காய்ச்சலை, பரந்த பெரும்பான்மையினர் இன்னும் சில நாட்களில் பெறுவார்கள், சிறிய எண்ணிக்கையிலானவர்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும், மிகவும் பாதிக்கப்படுபவர்களில் மிகவும் சிறிய சதவீதத்தினர், துயரகரமாக, இறந்து போகலாம்,” என்று காட்ஜை மேற்கோளிட்டு ப்ரீட்மன் வாதிடுகிறார்.

உண்மையில் உள்கட்டமைப்பில் பாரியளவிலான முதலீட்டுடன் பாதுகாப்பான நிலைமைகளின் கீழ் தான் சமூகம் செயல்படுவதற்கு அவசியமான பொருளாதார நடவடிக்கையை நீடித்து வைத்திருக்க முடியும். இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அவசியமான காலத்திற்கு அத்தியாவசியமல்லாத அனைத்து உற்பத்தியையும் நிறுத்தி வைக்க வேண்டும். ஆனால் இதற்கு, அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் பிரதானமாக தீர்மானிக்கும்—அதாவது செல்வந்தர்களின் இலாப நலன்கள்—பற்றிய அனைத்து பரிசீலனைகளும் நீக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

காட்ஸ் மற்றும் ப்ரீட்மனின் கருத்துக்கள் முன்னணி தொற்றுநோய் நிபுணர்களால் கண்டிக்கப்பட்டுள்ளன. டைம்ஸிற்கு எழுதிய ஒரு கடிதத்தில், யேல் பல்கலைக்கழக தொற்றுநோய் நிபுணர்கள் நான்கு பேர், Sten H. Vermund, Gregg Gonsalves, Becca Levy மற்றும் Saad Omer ஆகியோர் "ஆலோசனையை அதாவது உலகளாவிய சமூகம் Covid-19 க்கு மிதமிஞ்சி எதிர்வினையாற்றி வருகிறது,” என்ற காட்ஸின் கருத்தை, "அவர் இந்த தொற்றுநோய் அதன் போக்கில் செயல்படட்டும் என்று விட்டுவிடுவதை ஆதரிக்கிறார்" என்று அறிவித்து கண்டித்தனர்.

யேல் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் துறையின் உதவி பேராசிரியர் Gonsalves, தொற்றுநோய்களைக் குறித்து தசாப்தங்களாக ஆராய்ச்சி செய்துள்ள இவர், நியூயோர்க்டைம்ஸ் பொது தலையங்க பக்கத்தின் பதிப்பாசிரியர் Jim Dao அல்லது தலையங்க பக்க பதிப்பாசிரியர் James Bennet “இந்த பொறுப்பற்ற குப்பையைப் பிரசுரிப்பதற்கு முன்னதாக இது குறித்து தொற்றுநோய் நிபுணர்களுடன் பேச வேண்டுமென" நினைக்கவில்லை என்று அறிவித்து, ட்வீட்டரில் இன்னும் அதிக நேரடியாக தாக்கியிருந்தார்.

காட்ஸ் மற்றும் ப்ரீட்மனின் கட்டுரைகள் "எந்தவித ஆதாரமும் இல்லாமல், எந்தவித பகுப்பாய்வு தீர்மானங்களும் இல்லாமல், வெற்று கருத்துக்களுடன் பொது மருத்துவ முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது" என்றவர் எழுதினார்.

அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்: “@வெள்ளை மாளிகையில் நாம் @நிஜமான டொனால்ட் ட்ரம்பைக் கொண்டிருக்கிறோம் இவர் தொற்றுநோய்க்குரிய விடையிறுப்பை சர்ச்சைக்குரியதாக ஆக்கிவிட்டார், தங்கள் மனதில் இருப்பதைப் பேச விரும்பும், ஜனாதிபதியை போலவே தெரிந்து வைத்திருக்கும் மற்றும் அவரை விட சற்று கூடுதலாக அறிந்து வைத்திருக்கும் உயர்மட்ட நடுத்தர வர்க்க நபர்களை @nytimes இல் நாம் கொண்டிருக்கிறோம். @DrDavidKatz @tomfriedman @jimdao & @Jbennet உங்களுக்காக நீங்களே வெட்கப்பட வேண்டும்.”

ஒரு தொற்றுநோயின் போது நியூயோர்க்டைம்ஸ்வேண்டுமென்றே மாற்று விஞ்ஞானத்தை ஊக்குவித்து, வாழ்வை அபாயத்திற்கு உட்படுத்துகிறது. இத்தகைய நடவடிக்கைகள் ஒரு தீர்க்கமான சமூக உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன. ட்ரம்பைப் போலவே, டைம்ஸின்பிரதான கவலையும் என்ன விலை கொடுத்தாவது வணிகங்களை மீண்டும் இயங்க வைக்க வேண்டும் மற்றும் பங்குச் சந்தையின் மதிப்பை உயர்த்த வேண்டும் என்பது தான். தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற நிலைமைகளில் கடுமையாக உழைக்க நிர்பந்திக்கப்பட்டால் அவர்கள் "துயரகரமாக உயிரிழப்பார்கள்" என்றால் — அப்படியே நடக்கட்டும் என்பதே இதன் அர்த்தம்.

இந்த நிகழ்ச்சிப்போக்கின் அடியிலுள்ள தர்க்கம் இது தான். நிதியியல் அமைப்புமுறைக்குள் பாரியளவில் கடனைப் பாய்ச்சுவதென்பது தொழிலாள வர்க்கத்திடம் இருந்து உபரி மதிப்பை உறிஞ்சி எடுப்பதன் மூலமாக ஆதரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

கட்டாய ஒதுக்கத்தை நீக்குவதால் மக்கள் மிகச் சிறிதளவே கடைகளுக்கும் உணவு விடுதிகளுக்கும் செல்வதாக இருக்கும். ஆனால் வேலை செய்யாமல் இருப்பது அவரவர் தனிப்பட்ட முடிவு என்பது, பாதுகாப்பற்ற நிலைமைகளில் வேலை செய்ய மறுக்கும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பின்மை காப்பீட்டுக்கு அவர்களைத் தகுதியற்றவர்களாக ஆக்கும்.

ஆரம்பத்தில் இருந்தே, ஆளும் வர்க்கம் இந்த தொற்றுநோயை பொது மருத்துவ பிரச்சினையாக அல்ல, மாறாக இலாபத்தை ஈட்டுதவற்கு ஒரு சாத்தியமான முட்டுக்கட்டையாகவே பார்க்கிறது. இந்த நெருக்கடி அதன் அடிமட்டத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதே அதன் ஒரே கவலையாகும். இப்போது அது பாரிய அரசு பிணையெடுப்பு ஒன்றை பெற்றுள்ள நிலையில், ஆளும் வர்க்கம் மீண்டும் வழமையான வியாபாரத்திற்கு வருவதை உறுதிப்படுத்த விரும்புகிறது.

இந்த வடிவிலான சமூகரீதியில் ஒப்பளிக்கப்பட்ட உத்வேகம் ஒரு தனித்துவமான பாசிசவாத தன்மையைக் கொண்டுள்ளது, ஊனமுற்றவர்கள் "அவசியமற்றவர்கள்" என்றும் அவர்கள் துடைத்தெறியப்பட வேண்டும் என்ற நாஜிக்களின் வாதத்திலிருந்து இது வேறுபட்டதல்ல. அமெரிக்க முதலாளித்துவம் முகங்கொடுத்து வரும் மிகப்பெரும் நெருக்கடிக்கு முன்னால், ஆளும் வர்க்கம் தன்னை ஒட்டுண்ணித்தனமாக மட்டுமல்ல, மாறாக மனிதபடுகொலை புரியதக்கதாகவும் எடுத்துக் காட்டி வருகிறது.

இந்த இலாபகர அமைப்புமுறையுடன் மோதாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட முடியாது என்ற சவாலுக்கிடமற்ற அனுமானத்திலிருந்து இந்த கொள்கை மேலெழுகிறது. மில்லியன் கணக்கானவர்களின் வாழ்வை அச்சுறுத்தும் ஓர் உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் கூட, உலக அரசாங்கங்கள் மற்றும் அவற்றின் ஊடக தலையாட்டிகளின் முன்னுரிமையோ ஆளும் வர்க்கத்தின் செல்வ வளத்தையும் பெருநிறுவன-நிதியியல் உயரடுக்கின் நலன்களையும் என்ன விலைகொடுத்தாவது பாதுகாப்பதாகவே உள்ளது.

சமூகத்தின் அனைத்து பொருளாதார ஆதாரவளங்களையும் இப்போது வோல் ஸ்ட்ரீட்டை அழியாமல் காப்பாற்றுவதற்காக அல்ல, அந்த தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்காக ஒன்றுதிரட்டப்பட வேண்டும்! தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்புவதன் மூலமாக அவர்களினதும் மற்றும் அவர்களின் குடும்பங்களினதும் வாழ்வைத் தியாகம் செய்ய வேண்டும் என்ற ஆளும் வர்க்கத்தின் கோரிக்கை, அவசியமென்று, பலவந்தமாகவே கைவரப் பெற்றால், அது மிகப்பெரும் எதிர்ப்பை உருவாக்கும்.

வோல் ஸ்ட்ரீட், ஊடகங்கள் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் கோரிக்கைகளுக்கு பெருந்திரளான மக்கள் எதிர்ப்பின் அபிவிருத்தியானது, இந்நோய்க்கு எதிரான போராட்டத்தையும், தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைப் பெறுவதற்கான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதையும் அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்பதைப் போலவே, அதேநேரத்தில் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தையும் அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.