தென்னிந்தியா மற்றும் இலங்கையில் வெள்ளத்தால் நாற்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

தென்னிந்தியா மற்றும் இலங்கையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக ஆரம்பத்தில் அக்டோபர் பிற்பகுதியில் தொடங்கிய கடுமையான வானிலை நவம்பர் 7 ஆம் திகதி மோசமடைந்தது.

ஏற்கனவே கோவிட்-19 தொற்றுநோயாலும் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வாலும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள உழைக்கும் மக்களும், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுமே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். தற்போதைய பேரழிவு, 17 பேரின் மரணங்களுக்கு வழிவகுத்த ஜூன் மாதத்தில் நடந்த பேரழிவுகரமான வெள்ளத்தைத் தொடர்ந்து நடந்துள்ளது.

புத்தளம் நாகவில்லுவில் வெள்ளத்தில் இருவர் நடந்து செல்கின்றனர் [Source: Facebook]

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) சமீபத்திய அறிக்கைகளின்படி, 17 மாவட்டங்களில் உள்ள 145 பிரதேச செயலகங்களில் வசிக்கும் 60,200 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 212,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 23 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டு 1,229 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இடம்பெயர்ந்தவர்கள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாகாண அலுவலகங்களால் நிர்வகிக்கப்படும் 76 'பாதுகாப்பான இடங்களுக்கு' அனுப்பப்பட்டுள்ளனர்.

தென்னிந்தியாவில் தமிழகத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. மாநிலத் தலைநகரான சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த வாரத்தில் பெய்த மழை, கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் பெய்த கனமழையாகும்.

இஎஸ்ஐ மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அண்ணாநகர் மருத்துவமனை, சைதாப்பேட்டை மருத்துவமனை உள்ளிட்ட பல சென்னை மருத்துவமனைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நோயாளிகள் வேறு வசதிகளுக்கு மாற்றப்பட்டனர். மாநிலத்தில் பல பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக கல்லூரிகள் மூடப்பட்டதுடன் சில ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

இலங்கையில் புதன்கிழமையன்று வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் 204 மில்லிமீற்றர் மிகப்பெரிய மழை பதிவாகியுள்ளது. அதே மாகாணத்தில், மன்னார் மாவட்டத்தில், வெள்ளத்தில் 13 வீடுகள் அழிந்ததுடன் 802 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 3,500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தின் மீரிகம பிரதேசத்தில் நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் மோசமாக சேதமடைந்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் வெள்ளம் நிரம்பிய வீதி [Source: Facebook]

வீதிகள், ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியதாலும் நிலச்சரிவுகள் மற்றும் மரங்கள் விழுந்து கிடப்பதாலும் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய சேவைகளின் விநியோகம் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எரிவாயு, எரிபொருள், சர்க்கரை மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் போராடும் தொழிலாளி வர்க்க குடும்பங்களும் ஏழைகளும் இப்போது உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். விவசாய நிலங்களும் மளிகைக் கடைகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளதோடு நாடு முழுவதும் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளனர். பாதுகாப்பான குடிநீர் மற்றும் பிற அடிப்படைத் தேவைகள் இல்லாததால் நாடு முழுவதும் காலரா, வயிற்றுப்போக்கு மற்றும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் பாதி பேர் மண்சரிவு காரணமாகவே உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை, கேகாலை மாவட்டம் ரம்புக்கனையில் மண்சரிவினால் நடுத்தர வயதுப் பெண்ணும் 8 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகளும் உயிரிழந்தனர். அதே மாவட்டத்தில் உள்ள கலிகமுவ என்ற இடத்தில், அன்றைய தினம் மண்சரிவில் பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அவரது கணவர் மற்றும் அவர்களது 32 வயது மகனும் உயிரிழந்தனர். மறுநாள் மதியம் வரை அவர்களது உடல்கள் கிடைக்கவில்லை.

ரம்புக்கனை மண்சரிவு. இங்கு இரு சிறுவர்கள் உட்பட மூவர் கொல்லப்பட்டனர் [Source: Facebook]

மண்சரிவினால் கொல்லப்பட்ட ஏனையவர்களில் ரிதீகம உடவத்தையில் திருமணமான தம்பதியரும் வடமேற்கு மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் நாரம்மல என்ற இடத்தில் பெண் சுகாதாரப் பணியாளரும் அடங்குவர்.

இலங்கையின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) 10 மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. கண்டி, கேகாலை மற்றும் குருநாகல் மிகவும் ஆபத்தான பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

பிரதமர் மகிந்த இராஜபக்ஷ வியாழன் அன்று பாராளுமன்றத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது அனுதாபத்தை வெளிப்படுத்திய போதிலும், அரசாங்க ஆதரவு நடவடிக்கைகள் பற்றி எந்த விவரங்களையும் வழங்கத் தவறிவிட்டார். அரசாங்கம் முறையான உதவிகளை வழங்கத் தவறியமை சம்பந்தமாக மக்களின் மத்தியில் வளரும் கோபத்தைக் கட்டுப்படுத்தும் தெளிவான முயற்சியில், குறிப்பிடப்படாத 'நிவாரணத் திட்டங்களில்' பங்கேற்குமாறு எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

வியாழன் காலை, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சுதந்த ரணசிங்க ஒரு செய்தியாளர் மாநாட்டில் பேசிய போது, நிலைமை 'படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளது' என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஆபத்துகள் குறித்து எச்சரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்த முயற்சித்த ரணசிங்க, 'ஆபத்தான பகுதிகளை விட்டு வெளியேற தவறியதாலும் அவர்களின் கவனக்குறைவான நடத்தையாலுமே' மரணிக்க நேர்ந்ததாகக் கூறினார்.

NBRO வகுக்கப்பட்டுள்ள ஆபத்தான பகுதிகளிலிருந்து வெளியேறத் தவறும் எவரும், பொலிஸாராலும் நீதிமன்ற உத்தரவுகளாலும் பலவந்தமாக வெளியேற்றப்படுவார்கள் என ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ தனக்கு பணிப்புரை விடுத்ததாக ரணசிங்க தெரிவித்தார். பலவந்தமாக வெளியேற்றப்படுவது தற்காலிகமானதா, அல்லது, வெளியேற்றப்பட்ட மக்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படுமா என்பது பற்றி அவர் எதுவும் கூறவில்லை.

உத்தியோகபூர்வ எச்சரிக்கைகள் வெறும் அறிவிப்புகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாலும், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று வசதிகளை வழங்குவது உட்பட, முறையான பேரிடர் முன்னெச்சரிக்கைகள் மற்றும் உண்மையான வெளியேற்றங்களை ஒழுங்கமைக்க தவறியதாலும், இலங்கையில் வருடாந்த மண்சரிவு மரணங்கள் அதிகரித்து வருகின்றன.

நிலச்சரிவுகளால் பாதிக்கப்படக்கூடியவர்களில் பெரும்பான்மையானவர்கள் தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் நிலம் வாங்கவோ அல்லது வலுவான வீடுகளை கட்டவோ முடியாத ஏழை விவசாயிகள் ஆவர்.

பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது கட்டப்பட்ட லைன் அறைகளில் இன்னும் வாழ்கின்றனர், அவர்களில் பலர் ஒரு நூற்றாண்டு பழமையானவை மற்றும் லேசான காற்று மற்றும் மழையால் எளிதில் சேதமடைகின்றன. 2016 ஆம் ஆண்டு, கேகாலை மாவட்டத்தில் சாமசர கந்தவில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் மண்சரிவில் உயிரிழந்தனர்.

மேலும், இலங்கை அரசாங்கங்கள், தானாகக் கட்டப்பட்ட தற்காலிக குடியிருப்புகளை 'அங்கீகரிக்கப்படாத கட்டிடங்கள்' என்று முத்திரை குத்தி, கொழும்பில் உள்ள சிறிய வீடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றன. நகர்ப்புறங்களில் வெள்ளம் ஏற்படுவதற்கு குடியிருப்பாளர்கள் மீது குற்றம் சாட்டப்படுவதுடன் பெரும் வணிக முதலீட்டு திட்டங்களுக்காக நிலங்களை ஒதுக்குவதன் பேரில் அவர்கள் பலாத்காரமாக வெளியேற்றப்படுகின்றனர்.

கொழும்பு அரசாங்கங்கள் சர்வதேச மூலதனத்தை ஈர்ப்பதற்காக அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் புதிய விமான நிலையங்கள் போன்ற உட்கட்டமைப்பு அபிவிருத்திகளுக்கு பெரும் தொகையை செலவிட்டுள்ள போதிலும், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு ஒழுக்கமான வீடுகள் அல்லது போதுமான நீர்வழிகள், வடிகால் மற்றும் சுகாதார வசதிகளுக்கான கணிசமான திட்டங்களை ஆரம்பிக்கத் தவறியுள்ளன. அரசாங்கத்தின் கூற்றுகளுக்கு மாறாக, மனித தேவைக்கு ஏற்ப விஞ்ஞானபூர்வமான திட்டமிடலை விட இலாபங்களுக்கு முன்னுரிமை கொடுத்து மேற்கொள்ளப்படும் முறையற்ற நகரமயமாக்கலே நகர்புறத்தில் வெள்ளம் ஏற்படுவதற்கான பிரதான காரணி ஆகும்.

அடுத்த சில நாட்களில் மழை குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மத்திய மலையகப் பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகள் தாழ்வான பகுதிகளில் நிரம்பி வழிவதால், நிலச்சரிவு அபாயத்துடன் வெள்ள அபாயம் நீடிக்கிறது. டெங்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முழுவதும் 770 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். அதனுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு நவம்பர் முதல் 10 நாட்களிலேயே 1,360 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Loading