பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் தனது சீன சம தரப்பினர் ஜி ஜின்பிங்குடன் அவரது முறையான முதல் உச்சிமாநாட்டை நடத்தி முடித்து ஒரு மாதத்திற்குள், பிப்ரவரியில் பெய்ஜிங்கில் தொடங்கப்படவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா இராஜதந்திர ரீதியாக புறக்கணிப்பதாக ஆத்திரமூட்டும் வகையில் அறிவித்துள்ளது.

குறிப்பாக 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக கட்டமைக்கப்பட்ட புகழ்பெற்ற “சிண்ட்ரெல்லாவின் ஷூ” என்ற பிரம்மாண்ட திறந்தவெளி அரங்கு (Source: Wikimedia Commons)

பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு அமெரிக்கா உத்தியோகபூர்வ தூதுக்குழுவை அனுப்பாது என வெள்ளை மாளிகை பத்திரிகை செயலர் ஜென் சாகி ஒரு சுருக்க செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அமெரிக்கா அதன் மூலம், சீனா “தற்போது நடத்தி வரும் இனப்படுகொலை மற்றும் ஜின்ஜியாங்கில் மனிதகுலத்திற்கு எதிரான அதன் குற்றங்கள் மற்றும் அதன் பிற மனித உரிமை மீறல்கள்” குறித்து தனது எதிர்ப்பை பதிவு செய்யும். இருப்பினும் அமெரிக்க விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் போட்டியிடுவார்கள்.

இந்த முடிவு, சீனாவின் மேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் வீகர் இனத்தவரை சீனா “இனப்படுகொலை” செய்வதாக கூறும் பொய்களின் அடிப்படையில் ஒலிம்பிக்கை புறக்கணிக்குமாறு கூக்குரலிடும் அமெரிக்க ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தில் அதிகரித்து வரும் வெறித்தனமான பிரச்சாரத்தைத் தொடர்ந்து எடுக்கப்படுகிறது.

பெய்ஜிங் “அட்டூழியங்களிலும்” “இனப்படுகொலைகளிலும்” ஈடுபட்டுள்ளதாக கூறுவது ஒருபுறமிருக்க, ஜின்ஜியாங்கில் சீனாவின் பரவலான மனித உரிமை மீறல் குற்றங்கள் குறித்து பைடென் நிர்வாகம் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. ஒரு சிறு ஆதாரம் கூட இல்லாமல், “இனப்படுகொலை” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது, அதன் அர்த்தத்தையும் நாஜி படுகொலை போன்ற கடந்த காலத்தின் உண்மையான குற்றங்களையும் கீழ்ப்படுத்துகிறது.

பரவலான கண்காணிப்பு, தடுப்புக்காவல் மற்றும் மதச் சுதந்திரத்தை மீறுதல் பற்றிய குற்றச்சாட்டுக்கள், அமெரிக்காவால் நிதியளிக்கப்பட்ட உலக வீகர் காங்கிரஸ் மற்றும் அமெரிக்க வீகர் சங்கம் போன்ற அமைப்புக்களுடன் தொடர்புடைய வீகர் நாடுகடத்தப்பட்டவர்களின் உறுதிப்படுத்தப்படாத கதைகளுடன் கூட, ஒரு சில தீவிர வலதுசாரி, கம்யூனிச எதிர்ப்பு கல்வியாளர்களின் போக்குக் கூற்றுக்களின் மீது தங்கியுள்ளன.

ட்ரம்ப் நிர்வாகத்தின் இறுதி நாட்களில், அப்போதைய வெளியுறவு செயலர் மைக் பொம்பியோ ஜின்ஜியாங்கில் சீனா இனப்படுகொலை செய்வதாக முதன்முதலில் குற்றம்சாட்டினார். சீனாவை இழிவுபடுத்துவதன் ஒரு பகுதியாக பைடென் நிர்வாகமும் அந்த பொய்யை விரைந்து பற்றிக் கொண்டது. போருக்கான தயாரிப்பாக இந்தோ-பசிபிக் முழுவதும் இராணுவத்தைக் குவித்தது உட்பட, கடந்த தசாப்தம் முழுவதும் அனைத்து முனைகளிலும் சீனாவுடன் மோதுவதற்கான மற்றும் அதனை கீழறுப்பதற்கான ஆக்கிரோஷமான அமெரிக்க மூலோபாயத்தின் கூறுபாடாக இந்த பரப்புரை பிரச்சாரம் உள்ளது.

“மனித உரிமைகளை மேம்படுத்துவதில் எங்களுக்கு ஒரு அடிப்படை கடமைப்பாடு உள்ளது” என்று சாகி அறிவித்தது உட்பட, அதன் நடவடிக்கைகளுக்கு சாக்குபோக்காக “மனித உரிமைகள்” என்ற பதாகையை அமெரிக்கா மீண்டும் இழிவாக உயர்த்துகிறது.

இந்த அறிக்கையின் மோசமான பாசாங்குத்தனம், ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் படையெடுப்பிற்கு எதிராக 1980 இல் மாஸ்கோவில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்கத் தலைமையில் புறக்கணிக்கப்பட்டதிலிருந்து தெளிவாகிறது. புறக்கணிப்பை நடத்திய கார்ட்டர் நிர்வாகம், அல்கொய்தா எனப்படும் அமைப்பு மூலமாக வெளிநாட்டுப் போராளிகளை அனுப்பியது உட்பட, காபூலில் சோவியத் ஆதரவு ஆட்சிக்கு எதிராக முஸ்லீம் ஜிஹாதிகளுக்கு நிதியுதவியும் ஆயுதங்களும் வழங்கும் மிகப்பெரிய CIA நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்தது.

இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், ஆப்கானிஸ்தானில் CIA இன் அழுக்குப் போரினால் ஏற்பட்ட “அதிர்வு” செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவில் நிகழ்ந்த அல்கொய்தாவின் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு வழிவகுத்தது. ஆப்கானிஸ்தானை சீரழித்து ஏராளமான உயிர்களை பலிகொண்ட சட்டவிரோத படையெடுப்பையும் நவ காலனித்துவ ஆக்கிரமிப்பையும் செயல்படுத்த வாஷிங்டன் இந்த தாக்குதல்களை பற்றிக்கொண்டது. அதாவது, சோவியத் ஒன்றியத்திற்கு எப்படி பேரழிவாக இருந்ததோ அதே வழியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இது ஒரு புதைகுழியாக இருந்தது.

அமெரிக்கா அதன் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற முழக்கத்தின் பேரில் ஆப்கானிஸ்தானில் நிகழ்த்திய குற்றங்களையும் அட்டூழியங்களையும் நியாயப்படுத்துவது போல, “மனித உரிமைகள்” பிரச்சினையையும் மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொண்டுள்ளது. அதன் போர்களில், ஈராக் மீதான படையெடுப்பும், சிரியா மற்றும் லிபியாவில் அதன் இராணுவ ரீதியான தலையீடுகளும் அடங்கும், இதில் முழு சமூகங்களையும் அழிப்பதில் ஈடுபட்டுள்ளது. இத்தகைய சமூகப் படுகொலைகள் மனிதகுலத்திற்கு எதிரான உண்மையான குற்றங்களாகும்.

அதே நேரத்தில், மனித வாழ்வின் மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழு அலட்சியமும் உள்நாட்டில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் மீதும் காட்டப்படுகிறது. சாமானிய உழைக்கும் மக்களின் உடல்நலத்தையும் வாழ்க்கையையும் பணயம் வைத்து பெருநிறுவனங்களின் இலாபங்களையும் மற்றும் பெரும் பணக்காரர்களின் செல்வத்தையும் பெருக்கிய ட்ரம்ப் மற்றும் பைடென் நிர்வாகங்களின் குற்றவியல் கொள்கைகளின் விளைவாக சுமார் 800,000 அமெரிக்கர்கள் கோவிட்-19 நோய்தொற்றால் இறந்துள்ளனர்.

தீவிரமாக ஒப்பிட்டுப் பார்த்தால், தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து சீனாவில் நிகழ்ந்த மொத்த இறப்புக்களை விட அமெரிக்காவில் ஒவ்வொரு வாரமும் வைரஸால் அதிகமான மக்கள் தொடர்ந்து இறக்கின்றனர். வெள்ளை மாளிகையில் இதற்கு காரணமானவர்கள் மீது இன்னும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இப்போது உலகளவில் அச்சுறுத்தும் ஓமிக்ரோன் மாறுபாட்டின் காரணமான பாரிய நோய்தொற்று மீளெழுச்சி, பைடென் நிர்வாகமும் வாஷிங்டனில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் எதிர்கொள்ளும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை மிகப்பெரியளவில் அதிகரித்துள்ளது. சீனா அரக்கத்தனமானது எனச் சித்தரிப்பது, உள்நாட்டில் உள்ள சமூக பதட்டங்களை ஒரு வெளிநாட்டு எதிரிக்கு எதிராக வெளிப்புறமாக திருப்பும் ஒரு அநாகரிக முயற்சியாகும்.

பைடென் நிர்வாகம் இந்த வாரம் மற்றொரு இழிவான “மனித உரிமைகள்” பயிற்சியை அரங்கேற்றுகிறது, இது ஜனநாயகத்திற்கான அமெரிக்க உச்சிமாநாடு என்று அறிவிக்கப்பட்டது, மேலும், ஜனநாயக உரிமைகள் தொடர்புப்பட்ட போட்டி நாடுகளின் பதிவுகள் பற்றி சிறிதும் பொருட்படுத்தப்படாமல் அவர்களை விலக்கி வைத்து, கூட்டாளிகள் மட்டும் இதற்கு அழைக்கப்படுகிறார்கள். ஒரே சீனா கொள்கையின் கீழ் தைவான் தீவை சீனாவின் ஒரு பகுதியாக அமெரிக்கா கருதும் உண்மை ஒருபுறமிருக்க, பைடென் குறிப்பாக இத்தீவை அழைத்துள்ளார். இந்த நிகழ்வு சந்தேகத்திற்கு இடமின்றி சீனாவை கண்டிக்கும் மற்றொரு மன்றமாக பயன்படுத்தப்படும், அதே நேரத்தில் தைவானுடனான உறவுகளை வலுப்படுத்த தனது நட்பு நாடுகளை அமெரிக்கா ஊக்குவிக்கும்.

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் சர்வதேச புறக்கணிப்புக்கு வாஷிங்டன் பெரும் ஆதரவைத் திரட்ட முனையும். ஆஸ்திரேலியா, கனடா மற்றும் இங்கிலாந்து அரசாங்கங்கள் புறக்கணிப்புக்கு பரிசீலிக்கப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளன.

புறக்கணிப்பு அறிவிக்கப்பட்டதற்கு சீனா கோபமாக பதிலளித்தது. அதன் வாஷிங்டன் தூதரகம் இந்த அறிவிப்பை “ஒரு பாசாங்குத்தனமான செயல்” என்றும் “அரசியல் சூழ்ச்சி” என்றும் கூறி நிராகரித்தது.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் திங்களன்று இவ்வாறு அறிவித்தார்: “குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அரசியல் அரங்கேற்றம் மற்றும் சூழ்ச்சிக்கான ஒரு மேடை அல்ல என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். இது, ஒலிம்பிக் சாசனத்தின் தன்மையை பெரிதும் பரிகசிப்பதாகும், அப்பட்டமான அரசியல் ஆத்திரமூட்டலாகும், மேலும் 1.4 பில்லியன் சீன மக்களுக்கு ஏற்படும் கடுமையான அவமதிப்பாகும்.”

ஜாவோ “உறுதியான எதிர்நடவடிக்கைகள்” பற்றி எச்சரித்தார், ஆனால் பெய்ஜிங் அது என்ன செய்யக்கூடும் என்பது பற்றி இதுவரை குறிப்பிடவில்லை.

இந்த புறக்கணிப்பு, அமெரிக்கா வேண்டுமென்றே சீனாவுடனான மோதலை தீவிரப்படுத்துவதற்கான மற்றும் முடுக்கிவிடுவதற்கான மற்றொரு அறிகுறியாக உள்ளது. கோவிட்-19 தொற்றுநோய்க்கு சீனாதான் காரணம் என்று வூஹான் ஆய்வகப் பொய்யை பரப்பியது உட்பட, “மனித உரிமைகள்” குறித்து பெய்ஜிங்கை இழிவுபடுத்துவதானது, பொருளாதாரத் தடைகளடங்கிய வர்த்தகப் போர்கள், மற்றும் பிற தண்டனைக்குரிய அபராதங்கள் மற்றும் சீனாவை அமெரிக்க இராணுவம் சுற்றி வளைப்பது ஆகியவற்றுடன் ஒருமித்து நடக்கின்றது.

இந்த புறக்கணிப்பு சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான பனிப்போரை நினைவுபடுத்தும் அதேவேளை, சீனாவுடனான நீடித்த மோதலுக்கு அமெரிக்கா தயாராகவில்லை. இருப்பினும், அமெரிக்கா சோவியத் ஒன்றியத்துடனான அதன் நிலைப்பாட்டைப் போலல்லாமல், சீனாவின் அசாதாரண பொருளாதார வளர்ச்சியை அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான பிரதான அச்சுறுத்தலாகக் கருதுவதுடன், சீனாவின் பன்முக வளர்ச்சியைத் தடுக்க தேவைப்பட்டால் போர் உட்பட எதையும் அது நிறுத்தாது.

Loading