முன்னோக்கு

பெய்ஜிங் ஒலிம்பிக்கை அமெரிக்கா புறக்கணிக்கின்றது: ஒரு கொலைகார அரசு "மனித உரிமைகள்" பற்றி பேசுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சீனாவின் 'மனித உரிமை மீறல்களை' எதிர்த்து பெய்ஜிங்கில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள குளிர்கால ஒலிம்பிக்கை அமெரிக்கா இராஜதந்திர புறக்கணிப்பு செய்வதாக திங்களன்று அறிவித்தது. இதன் அர்த்தம், அமெரிக்க விளையாட்டு வீரர்கள் போட்டியிடும் போது, உத்தியோகபூர்வ அமெரிக்க பிரதிநிதிகள் ஒருவரும் அங்கு இருக்கமாட்டார்கள். இது வாஷிங்டனின் உண்மையான ஆத்திரமூட்டும் நடவடிக்கையாகும்.

சீனாவின் 'ஜின்சியாங்கில் நடந்துவரும் இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் பிற மனித உரிமை மீறல்களுக்கு' வாஷிங்டனின் எதிர்ப்பை இந்த புறக்கணிப்பு வெளிப்படுத்தியதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாக்கி கூறினார்.

ஜின்ஜியாங்கின் வீகர் இன மக்கள் மீது பெய்ஜிங்கின் இனப்படுகொலை பற்றிய வாஷிங்டனின் குற்றச்சாட்டு, வெள்ளை மாளிகையினாலும் மற்றும் அமெரிக்க ஊடகங்களினாலும் பலமுறை திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளது. அது அடிப்படை எண்கணித உண்மைகளாக நன்கு நிறுவப்பட்டது போல் இப்போது பரவலாகக் கருதப்படுகிறது.

பெய்ஜிங்கில் வரவிருக்கும் 2022 குளிர்கால ஒலிம்பிக்கிற்கான இடமாக இருக்கும் பறவை கூடு என்றும் அழைக்கப்படும் தேசிய மைதானத்தின் வெளிப்புறத்தில் ஒரு நபர் ஒலிம்பிக் வளையங்களை கடந்து செல்கிறார் (AP Photo/Mark Schiefelbein)

இனப்படுகொலை என்ற சொல் மிகவும் உறுதியான, வரலாற்று அடிப்படையிலான அர்த்தத்தை கொண்டுள்ளது. இது பாதுகாப்பற்ற மக்கள் குழுக்களை திட்டமிட்டு அழித்ததை விவரிக்கிறது மற்றும் மிகவும் மோசமான யூதப்படுகொலைகள் போன்ற தொழில்துறை பாரிய படுகொலைகளுடன் தொடர்புடையது. பைடெனின் வெள்ளை மாளிகையும் அமெரிக்க ஊடகங்களும் எந்த வரையறையும் இல்லாமல் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகின்றன மற்றும் பெய்ஜிங், ஹிட்லரின் அளவில் குற்றங்களை செய்ததாக குற்றம் சாட்டுகின்றன.

ட்ரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பைடென் வெள்ளை மாளிகை மறுசுழற்சி செய்கிறது. ஒருவர் போதுமான அளவு ஆழமாக தேடினால், வெள்ளை மாளிகையின் பின்வரும் கூற்றை ஒருவர் காணலாம்: பெரும்பாலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளான சிறுபான்மை முஸ்லீம் வீகர் மக்களின் மத உரிமைகளை கட்டுப்படுத்துதல் மற்றும் பரந்த கட்டுப்பாடுகள் வீகர்களின் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கான முயற்சியாகும். இது 'கலாச்சார இனப்படுகொலை' என்று அழைக்கப்படுகிறது”.

இனப்படுகொலை என்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பது ஒரு அரசியல் குற்றமாகும். பொய்யின் மிகப்பெருமளவானது அதன் பின்னால் மறைந்திருக்கும் குற்ற நோக்கத்தின் அளவை வெளிப்படுத்துகிறது. அமெரிக்க ஆளும் வர்க்கம் தனது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த 'மனித உரிமைகளுக்கு' அழைப்புவிடுவதில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆனால் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கை உத்தியோகபூர்வமாக புறக்கணிப்பது, இந்தமுறை அதன் பாசாங்குத்தனத்திற்காக தங்கப் பதக்கத்தை வெல்லலாம்.

பைடென் சடலங்கள் நிறைந்த மலையின் உச்சியில் இருந்து சீனாவை நோக்கி விரலைக் காட்டுகிறார். 'இனப்படுகொலை' பற்றிய அதன் குற்றச்சாட்டுகளுக்கு வெள்ளை மாளிகை எந்த ஆதாரத்தையும் வழங்க முடியாது என்றாலும், இன்று உலகில் ஏராளமான பாரிய மரணங்கள் உள்ளன. அவை சீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளாக கவனத்தைத் திசைதிருப்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்குள் எட்டு இலட்சம் (800,000) அமெரிக்கர்கள் கோவிட்-19 தொற்றுநோயால் இறந்துள்ளனர். அமெரிக்காவின் அனைத்துப் போர்களிலும் வெளிநாடுகளில் இறந்த மொத்த அமெரிக்கர்களை விட அதிகமாக உள்ளது. இந்த மிகப்பெரிய அளவிலான மரணம் முற்றிலும் தடுக்கக்கூடியதாக இருந்தது. அவை ட்ரம்ப் மற்றும் பைடென் நிர்வாகங்களால் பின்பற்றப்படும் வேண்டுமென்றே பாரிய மரணத்தை ஏற்றுக்கொள்வது, மனித உயிர்களை விட இலாபங்களுக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மறுப்பது ஆகியவற்றின் விளைபொருளாகும்.

சீனாவின் இறப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவின் எண்ணிக்கை பயங்கரமானது. நான்கு மடங்குக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட சீனாவில் மொத்த தொற்றுநோய் காலம் முழுவதும் இறந்தவர்களை விட, அமெரிக்காவில் ஒவ்வொரு வாரமும் கோவிட்-19 காரணமாக அதிகமான மக்கள் இறக்கின்றனர். ஒழுங்கமைக்கப்பட்ட பூட்டுதல்கள், தீவிர பரிசோதனைகள், தொடர்புத் தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்தல் ஆகியவற்றின் மூலமான விஞ்ஞானரீதியான 'பூஜ்ஜிய கோவிட்' கொள்கை சீன அரசாங்கத்தால் பின்பற்றப்பட்டதால் மில்லியன் கணக்கான உயிர்களைக் அது காப்பாற்றியுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் சீனாவின் கொள்கை உயிர்களைக் காப்பாற்றும் அதே வேளையில், தொற்றுநோய்க்கான அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பு இலாபங்களைக் காப்பாற்றியுள்ளது. அமெரிக்க பில்லியனர்களின் செல்வம் 2020 தொடக்கத்தில் இருந்து 60 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

தொற்றுநோய்க்கும் அப்பால், அமெரிக்கா மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக முடிவில்லாத போரை நடத்தியதால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை மில்லியன் கணக்கில் உள்ளது. 'மனித உரிமைகள்' என்ற இரத்தத்தில் தோய்ந்த பதாகையின் கீழ் ஒவ்வொரு போரையும் நடத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியம், அது கைவைக்கும் முழு நாடுகளையும் இடிபாடுகளில் விட்டுச் செல்கிறது. அதன் ஒரே கவலை அமெரிக்க மூலதனத்தின் பொருளாதார மேலாதிக்கத்தை பராமரிப்பது விரிவுபடுத்துவதுதான்.

ஈராக்கில் அமெரிக்கப் போர் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை கொன்றது. இரண்டு தசாப்தங்களாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்குப் பிறகு, 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிருக்கு ஆபத்தான உணவு கிடைப்பதற்கான பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதால், அதன் மக்கள் போரின் அழிவுகளினால் பட்டினி கிடக்கின்றனர். சவூதி அரேபியாவிற்கு வாஷிங்டன் வழங்கிய ஆயுதங்களால் குண்டுவீச்சுக்கு உள்ளான யேமன் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். அமெரிக்க போர் எந்திரத்தால் உருவாக்கப்பட்ட சாம்பலில் சிரியாவும் மற்றும் லிபியாவும் உள்நாட்டுப் போரில் மூழ்கியுள்ளன.

மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து, தங்கள் வீடுகளையும் சமூகங்களையும் விட்டு தூக்கியெறியப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் நாகரீகங்கள் தரைமட்டமாக்கப்பட்டன, வரலாற்று நினைவுச்சின்னங்கள் அழிக்கப்பட்டன, முழு கலாச்சாரங்களும் மொழி குழுக்களும் சிதறடிக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஈராக்கின் அழிவுகளை ஆய்வு செய்தால், கலாச்சார இனப்படுகொலை பற்றிய வாஷிங்டனின் குற்றச்சாட்டை அதன் முகத்திலேயே மீண்டும் தூக்கி வீசலாம்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்களால் இடம்பெயர்ந்த அகதிகள் மூடிய எல்லைகள், சாத்தியமான அடிமைத்தனம் மற்றும் அவநம்பிக்கையான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். மத்தியதரைக் கடலில் ஆயிரக்கணக்கானோர் மூழ்கி இறந்துள்ளதுடன், புலம்பெயர்ந்த குழந்தைகளின் சடலங்கள் அதன் கரைகளில் ஒதுங்குகின்றன.

அமெரிக்க எல்லையைத் தாண்டி 'மனித உரிமைகள்' மற்றும் 'ஜனநாயகம்' ஆகியவற்றின் நிலத்திற்குள் நுழைய முயலும் அந்த திரண்ட மக்கள் கூண்டுகளில் அடைக்கப்படுவார்கள். ட்ரம்ப் பதவியில் இருந்து வெளியேறிய போது இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக முப்பதாயிரம் புலம்பெயர்ந்தோர், நாட்டிற்குள் நுழைய முயன்ற 'குற்றத்திற்காக' தற்போது அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொலைகார நிறுவனமாக உலகம் முழுவதும் அறியப்படும் CIA, அழுக்கான போர்களுக்கு நிதியளித்து, ஜனநாயகத்தை தூக்கியெறிந்தது மற்றும் ஷா முதல் பினோசே வரையிலான மிருகத்தனமான சர்வாதிகாரிகளை பதவியில் இருத்தியுள்ளது. அமெரிக்க அரசாங்கம் பெய்ஜிங்கைக் கண்டிக்கும் அதேவேளையில், பிலிப்பைன்ஸின் தலைவரான பாசிச குண்டர் ரோட்ரிகோ டுறேற்றவை கட்டித்தழுவி, அவரை இந்த வார இறுதியில் ஜனநாயகத்திற்கான உச்சிமாநாட்டிற்கு அழைத்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், 30,000க்கும் மேற்பட்ட வறிய பிலிப்பின் மக்களைக் கொன்ற 'போதைப் பொருட்களுக்கு எதிரான போர்' என்ற போர்வையில், டுறேற்ற பாரிய கொலை நடவடிக்கையை மேற்பார்வையிட்டார். டுறேற்ற க்கான பைடெனின் அழைப்பில், 'அனைத்து குடிமக்களும் செழிக்க உதவும், ஜனநாயக மற்றும் மனித உரிமைகளை மதிக்கும் சமூகங்களைக் கட்டியெழுப்புவதில் உங்களின் கூட்டுழைப்பை நாங்கள் அங்கீகரிப்பதோடு பாராட்டுகிறோம்.' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் மனித உரிமைகளை நசுக்குவதற்கான இராணுவ உபகரணங்கள் பழைமையாகிப் போகும்போது, அவை உள்நாட்டில் ஜனநாயகத்தை நசுக்க அமெரிக்க காவல் துறைகளுக்கு வழங்கப்படுகிறது. பொலிஸ் படுகொலைகளுக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு விடையிறுக்கும் வகையில் அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் கவச இராணுவ வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலத்தில், [“City Upon a Hill” அமெரிக்காவின் ஒழுக்கத்தின் மாதிரிக்கான ஒரு சொல்] 1980 முதல் 30,000 க்கும் மேற்பட்ட மக்களை காவல்துறை கொன்றுள்ளது.

இப்போது பாசாங்குத்தனம் மற்றும் மூடத்தனத்தின் பரந்த எந்திரம், அதாவது அமெரிக்க ஊடகங்கள் சீனாவிற்கு எதிராக இயக்கப்படுகின்றன. தைவான் மற்றும் ஹாங்காங்கில் 'ஜனநாயகம்', ஜின்ஜியாங்கில் 'மனித உரிமைகள்', மற்றும் தென் சீனக் கடலில் 'சுதந்திரம்' ஆகியவற்றை மேற்கோள் காட்டி, அமெரிக்கா சர்வதேச உறவுகளை சீர்குலைத்து, உலகத்தை உலகப் போருக்கு ஆபத்தான முறையில் நெருக்கமாக கொண்டு வந்துள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் அரசியல் தேவைகள் மற்றும் சீனாவின் பொருளாதார எழுச்சியைக் கட்டுப்படுத்துவதற்கான அதன் முயற்சிகளுக்கு மேலதிகமாக, இப் பிரச்சாரம் உள்நாட்டு அரசியல் நோக்கங்களையும் கொண்டுள்ளது. 800,000 பேர் இறந்த தொற்றுநோய்க்கு வாஷிங்டனின் பதிலின் அதிர்ச்சியூட்டும் குற்றவியல் தன்மை! சீனாவின் பூஜ்ஜிய கோவிட் கொள்கையால் முற்றிலும் அம்பலமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இது தொடர்வது, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அவர்களின் அரசாங்கங்கள் தங்கள் வாழ்க்கைக்கு எதிராக சதி செய்து வருகின்றன என்பதை இது வெளிப்படுத்துகிறது.

நவம்பர் முழுவதும், நியூ யோர்க் டைம்ஸ் தலைமையில் சர்வதேச ஊடகங்களில் ஒரு ஆக்ரோஷமான பிரச்சாரம் நடத்தப்பட்டது. அது, சீனா அதன் 'தனிமைப்படுத்தலுக்கு' முடிவுகட்ட வேண்டும் மற்றும் 'திறக்கப்பட வேண்டும்' என்று கோரியது. பூஜ்ஜிய கோவிட் தொடர்ந்து பேணப்படமுடியாது என்று அதில் உறுதியாகக் கூறப்பட்டது.

விரைவாக பரவும் ஓமிக்ரோன் மாறுபாட்டின் கண்டுபிடிப்பும் மற்றும் முன்னணி முதலாளித்துவ சக்திகள் ஒரு விஞ்ஞானரீதியான ஒழிப்புக் கொள்கையை ஏற்க மறுத்ததன் மூலம் உலகில் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த பிறழ்வானது இந்த பிரச்சாரத்தை தற்காலிகமாக அமைதிப்படுத்தியுள்ளது. பைடெனின் வெள்ளை மாளிகை வேறு நடவடிக்கைகளை நோக்கி திரும்பியுள்ளது. அவர் மனித உரிமைகள் என்ற பெயரில், குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிப்பதாக அறிவித்து, சீனாவை இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

சீனா அமெரிக்காவின் கட்டளைகளைப் பின்பற்றி அதன் பூஜ்ஜிய கோவிட் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவந்து, வைரஸ் பரவுவதற்கு நாட்டை திறந்தால், சந்தேகத்திற்கு இடமின்றி பல்லாயிரக்கணக்கான வீகர்கள் உட்பட மில்லியன் கணக்கானவர்கள் இறந்துவிடுவார்கள். வெள்ளை மாளிகை இதைப் பற்றி கவலைப்படவில்லை. அமெரிக்க அரசாங்கம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பற்றிப் பேசும் அதே வேளையில், பாரிய மரணத்திற்கான அதன் கொள்கையை ஒவ்வொரு அரசாங்கமும் ஏற்க வேண்டும் என்று கோருகிறது.

Loading