இலங்கை: வேலை சுமை அதிகரிப்பு, சம்பள வெட்டு மற்றும் ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடுவதற்கு பெருந்தோட்டங்கள் முழுவதும் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பு

ஓல்டன் ,கிளனுகி, எபோட்சலி தோட்டத் தொழிலாளர்களின் நடவடிக்கை குழுவின் அழைப்பு

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

தோட்டத் தொழிலாளர்கள் சகிக்கமுடியாத வேலைச்சுமை, சம்பள வெட்டு மற்றும் ஜனாதிபதி கோட்டபாய இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்ற பெருந்தோட்டக் கம்பனிகள் முன்னெடுக்கும் ஒடுக்குமுறை என்பவற்றுக்கு முகம் கொடுப்பதோடு அத்தியாவசிய பொருட்களின் வானளாவிய விலை ஏற்றத்தினால் பட்டினி நிலமையை எதிர்கொள்கிறார்கள்.

கோவிட்-19 தொற்று நோயினால் துரிதப்படுத்தப்பட்ட பூகோள நெருக்கடி இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள கூர்மையான பாதிப்பை பற்றிக்கொண்டு, கம்பனிகள் தொழிலாளர்கள் மீது ஈவிரக்கமற்ற சுரண்டல் முறைகளை திணிக்கின்றன. இத்தாக்குதலுக்கு எதிராக, கம்பனி மற்றும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது பெருந்தோட்டங்களில் பரந்த கோபம் அதிகரித்து வருகின்றது.

தொற்று நோயின் மத்தியில் மிகப்பெரிய இலாபத்தைக் குவிக்கும் 22 பெருந்தோட்டக் கம்பனிகளினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற எதாவது ஒரு தோட்டத்திலேனும் வேலை நிறுத்தமோ அல்லது எதிர்ப்பு போராட்டமோ இல்லாத நாளோ கிடையாது.

கடந்த பலவாரங்களாக நாங்கள் கண்ட வேலை நிறுத்தங்கள் பின்வருமாறு.

* அக்கரப்பத்தனை தோட்டக் கம்பனியினால் நிர்வகிக்கப்படும் 12 தோட்டங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை சுமை மற்றும் சம்பள வெட்டுக்கு எதிராகவும் 1,000 ரூபாய் நாள் சம்பளத்தை வலியுறுத்தியும் டிசம்பர் 13 முதல் 7 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.

* அதற்கு முதல்நாள் டயகம, தலவாக்கலை, கொட்டகலை மற்றும் லிந்துலை ஆகிய இடங்களில் பல தோட்டங்களில் 1,000 ரூபாய் சம்பளம் கோரியும் வேலை சுமைக்கு எதிராகவும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தை நடத்தினார்கள்.

* நவம்பர் 19 அன்று, மஸ்கெலியா கிளனுகி தோட்டத்தின் டீசைட் பிரிவைச் சேர்ந்த 300 தொழிலாளர்கள் உற்பத்தி இலக்கை அதிகரிப்பதற்கும் நிர்வாகத்தின் துன்பறுத்தலுக்கும் எதிராக வேலை நிறுத்தம் செய்தனர். இதற்கு முன்பு கிளனுகி தோட்டத்தின், டீசைட் மற்றும் கிளனுகி பிரிவுகளை சேர்ந்த 500 தொழிலாளர்கள் செப்டெம்பர் 21 முதல் 15 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.

* செப்டெம்பரில். தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்தை சேர்ந்த 130 தொழிலாளர்கள் சகிக்க முடியாத வேலைச் சுமை மற்றும் சம்பள வெட்டுக்கு எதிராக வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். கம்பனி நிர்வாகம் 11 தொழிலாளர்களை கைது செய்ய பொலிஸை ஏவிவிட்டு தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையாடலை முன்னெடுத்ததுடன் ஏணைய தொழிலாளர்களுக்கு டிசம்பர் வரை வேலை கொடுக்கவில்லை.

இத்தகைய போராட்டங்களுக்கு முடிவில்லை. தொழிலாளர்களின் போராட்டங்கள் நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் கண்டி ஆகிய சகல பெருந்தோட்ட மாவட்டங்களிலும் நடைபெற்றன.

செப்டெம்பர் 28, 2021 அன்று போராட்டத்தில் ஈடுபட்ட டீசைட் தோட்டத் தொழிலாளர்கள் [Photo: K. Kishanthan]

தொழிலாளர்கள் சுமார் ஒரு தசாப்த காலமாக 1,000 ரூபாய் நாட் சம்பளத்திற்காக போராடி வருகின்றார்கள். அத்தியாவசியப் பொருட்களின் விலை எல்லையற்று உயர்கின்ற போதும் தொழிற்சங்கங்கள் கோரிக்கையை இதுவரை அற்ப தொகைக்கு மட்டுப்படுத்தி வைத்துள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ 1,000 ரூபாய் நாட்சம்பளத்தை ஏப்பிரலில் அறிவித்தார். இந்த அறிவிப்பு தொழிலாளர்களின் மோசமான நிலமைகள் சம்பந்தமான அனுதாபத்தினால் அன்றி, பெருந்தோட்டங்களில் வளர்ச்சியடைந்து வந்த கோபத்தை தணிப்பதற்கே ஆகும். மேலும் தொழிலாளர்களின் நடவடிக்கைகளை அடக்குவதற்கு ,தொழிற்சங்கங்களை, குறிப்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸை (இ.தொ.கா) தம்பக்கம் வைத்திருக்க வேண்டியது அரசாங்கத்தினது தேவையாகும்.

கம்பனிகள் இராஜபக்ஷவின் கட்டளையை நிராகரித்ததுடன், 1,000 ரூபாய்க்கு நாட் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமாயிருந்தால், தொழிலாளர்கள் உயர்ந்த வேலை சுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் –அதாவது பறிக்கப்படும் தேயிலைக் கொழுந்தை 2 கிலோவில் இருந்து 4 கிலோ வரை அதிகரித்து 20 கிலோவாக உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஏனய களவேலைகளும் அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தின.

பெருந் தோட்டங்களில் வருமானப் பங்கீட்டு முறையை அமுல்படுத்துவதே கம்பனிகளின் நீண்டகால திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், தொழிலாளியின் முழுக் குடும்பத்தின் உழைப்பை சுரண்டுவதற்கு கம்பனி 1,000 தேயிலைச் செடிகளைக் கொண்ட ஒரு பகுதி நிலத்தை ஒவ்வொரு தொழிலாளிக்கும் குத்தகைக்கு வழங்கும். உள்ளீடுகளை கம்பனியே கொடுக்கும். முடிவில் அறுவடையை கம்பனி கொள்வனவு செய்யும். கம்பனியின் செலவுகளையும் இலாபத்தையும் கழித்துக்கொண்ட பின்னர், மிகுதியாக இருப்பதை மட்டுமே உழைத்து உற்பத்தி செய்த தொழிலாளிக்கு கிடைக்கும்.

தொழிலாளர்களை சுரண்டுவது அதிகரிக்கின்ற அதே நேரம், ஊழியர் சேமலாப நிதி மற்றும் அற்ப சமூக உரிமைகளையும் நீக்குகின்ற இந்த நடவடிக்கையை தொழிலாளர்கள் நிராகரித்துள்ளார்கள்.

இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும் கம்பனி வேலைச் சுமையை அதிகரிக்கும், வேலையை முடிக்காதவர்களின் சம்பளம் வெட்டப்படும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), மலையக மக்கள் முன்ணனி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் ஜே.வி.பி. தலைமையிலான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய தொழிற்சங்கள் போராட்டங்களை தனிமைப்படுத்தி, குழிபறித்து இறுதியில் காட்டிக் கொடுத்தன.

எப்பொழுதும் அரசாங்கத்துடனும் கம்பனிகளுடனும் கூட்டுச் சேர்ந்துள்ள தொழிற்சங்கங்கள் மீது சந்தேகம் இருப்பதனால், தொழிலாளர்கள் பெரும்பாலும் சுயாதீனமாகவே பல போராட்டங்களை முன்னெடுக்கின்றார்கள். எப்படியிருந்த பொழுதிலும், போராட்டங்கள் வெடிக்கின்ற போது தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கன்ற போர்வையில் கம்பனியின் சார்பாக போராட்டத்தை அடக்குவதற்காக உடனடியாக தலையிடுகின்றன.

அண்மையில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொருளாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ராமேஸ்வரன் தமது கட்சியின் நிலைப்பாட்டை ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், “எங்களுடைய தொழிலை பாதுகாக்க வேண்டுமெனில் தோட்டங்கள் இருக்க வேண்டும். வழக்கமாக ஒவ்வொரு சம்பள பேச்சுவார்த்தையின் பின்னரும் (கம்பனியினால்) உற்பத்தி இலக்கு அதிகரிக்கப்படுவது வழமைதான்” என அறிவித்தார். அதன் கருத்து எந்த நிபந்தனைகளை கம்பனிகள் விதித்தாலும் தொழிலாளர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதே ஆகும்.

கூட்டு ஒப்பந்தத்தை தொழிலாளர்களின் கோரிக்கையாக அறிமுகப்படுத்தி அப்படி ஒன்று கைச்சாத்திடப்பட வேண்டும் என்று இ.தொ.கா.வும் ஏனைய தொழிற்சங்கங்களும் வலியுறுத்துகின்றன. எனினும், கம்பனிகளும் அரசாங்கமும் தொழிற் சங்கங்களுடன் சேர்ந்து மிகவும் அற்ப சம்பள உயர்வுடன் உயர்ந்த வேலைச்சுமையை தொழிலாளர்கள் மேல் திணிக்கும் அவர்களது சர்வாதிகார நடவடிக்கைக்கே கடந்த காலத்தில் கூட்டு ஒப்பந்தம் பயன்படுத்தப்பட்டது.

தொழிற்சங்கள், தொழிற்துறை பொலிஸ்காரர்களாக செயற்படுகின்றன. ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்கான வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கிய பின்னர், தோட்ட நிர்வாகம் ஆத்திரமூட்டல்களை தூண்டியது. இந்த ஆத்திரமூட்டல்களில் ஒன்றை பயன்படுத்திக்கொண்ட கம்பனி நிர்வாகம், பொலிசாருடன் கூட்டுச் சதிசெய்து அடக்கு முறையை கட்டவிழ்த்துவிட்டது.

பொலிஸ் 29 தொழிலாளர்களை கைது செய்ததுடன் எந்த ஒரு தோட்டத்திலும் தோட்டத் தொழிலாளரின் போராட்டத்தை கொடூரமாக அடக்குவதற்கு “பாடம் கற்பிக்கும்” நோக்கில், கம்பனி 38 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ததது. இ.தொ.கா., ஆரம்பத்திலிருந்தே கம்பனி-பொலிசின் கூட்டுச் சதிக்கு ஆதரவு கொடுத்து வந்தது.

இதேபோல், கம்பனி நிர்வாகத்தின் ஆத்திரமூட்டல் ஒன்றை அடுத்து, வெலிஓயா தோட்டத்தில் 13 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக பொலிஸ் வழக்கு தாக்கல் செய்துள்ளது. அவர்களில் 9 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், 4 தொழிலாளர்கள் மட்டுமே மீண்டும் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். ஆனால் 5 தொழிலாளர்கள் இன்னும் இடை நிறுத்தப்பட்டுள்ளார்கள். தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்களும் இதே நிலமையையே முகம் கொடுக்கின்றார்கள்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான இந்த வேட்டையாடல், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதலினதும் ஒடுக்குமுறையினதும் ஒரு பகுதியாகும். சகல தொழிற்சங்கங்களும் அந்த தொழிலாளர்களை பாதுகாக்க முன்வர மறுத்துள்ளன. சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மாத்திரமே அந்த தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக இலங்கையிலும் உலகம் முழுதும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட போராடுகின்றது.

இந்த வேட்டையாடலுக்கு எதிராகவும் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் சிறந்த வாழ்க்கை நிலமைகளுக்காகவும் போராடுவதற்கு சோசலிச சமத்துவக் கட்சியின் உதவியுடன் ஓல்டன், கிளனுகி, எபோட்சிலி ஆகிய தோட்டங்களில் நடவடிக்கை குழுக்களை நாங்கள் அமைத்துள்ளோம்.

கிளனுகி மற்றும் ஓல்டன் தொழிலாளர் நடவடிக்கை குழு அங்கத்தவர்கள் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரதிநிதிகள் பங்குபற்றி அக்டோபர் 24 நடத்திய கூட்டத்தில், கிளனுகி தொழிலாளர்களின் போராட்ட படிப்பினைகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. பாதிக்கப்பட்ட ஓல்டன் தொழிலாளர்களை பாதுகாக்கவும் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

ஓல்டன் தொழிலாளர்களின் எதிர்ப்புக்கு பின்னர், கம்பனிகள் அரசாங்கத்திடம் தோட்டங்களில் “வன்முறையை” தடுப்பதற்கு பாதுகாப்பு கோரின. இதனை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் பொலிசையும் பாதுகாப்பு படைகளையும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக நிறுத்தியுள்ளது. அக்கரப்பத்தனையில் உள்ள ஹென்போல்ட் தோட்டத்தில் பொலிஸ் காவல் அரண் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. ஓல்டன் தோட்டத்தின் எல்லையில் பொலிஸ் காவல் அரண் அமைப்பதற்கு பொருத்தமான இடத்தை தேடிக்கொண்டிருக்கின்றார்கள். பெருந் தோட்டத்தின் பிரதான மையமான கொட்டகலையில் இராணுவ முகாம் ஒன்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் உரிமையை பாதுகாப்பதில்லை. ஏற்கனவே கூறியது போல், அவை தொழிலாளர்களுக்கு எதிராக தொழிற்துறை பொலிஸ்காரர்களாக செயற்படுகின்றன.

எங்களுக்கு தெரியும் ஒவ்வொரு தோட்டத்திலும் எமது சக தொழிலாளர்கள் தொழிற்சங்கள் மீது வெறுப்பும் அதிருப்தியும் அடைந்துள்ளார்கள். தொழிற்சங்க அதிகாரிகள் பதவிக்கு வரும் அரசாங்கங்களுடனும் கம்பனிகளுடனும் திரைக்குப் பின்னால் கொடுக்கல் வாங்கல்களை செய்து சலுகைகளை பெற்று கொழுத்துள்ளார்கள். எல்லா தொழிற்சங்களின் உயர்மட்ட அதிகாரிகளும் அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை அனுபவித்துள்ளார்கள். இ.தொ.கா. தலைவர் ஜீவன் தொண்டமான் தற்போது இராஜாங்க அமைச்சராக உள்ளார்.

தொழிற்சங்களின் வரலாற்று ரீதியான சீரழிவுபற்றி தொழிலாளர்கள் விளங்கிக் கொள்வது தீர்க்கமானதாகும். தொழிற்சங்கள் பூகோளரீதியாக முதலாளித்துவ அமைப்புக்குள் வேரூன்றி வலது பக்கம் சென்றுள்ளன.

தொழிலாளர்களுக்கு வாழ்க்கை செலவு உயர்வுக்கு ஏற்ப பொருத்தமான சம்பள உயர்வு, ஓய்வு ஊதியம், பாதுகாப்பான வேலை நிலமைகள், பொருத்தமான வீடு, சுகாதார வசதிகள், பிள்ளைகளுக்கு பொருத்தமான கல்வி அவசியம்.

நாம் கோவிட்-19 தொற்று நோயின் மத்தியில் வாழ்கின்றோம். பெருந் தோட்டக் கம்பனிகளும் அரசாங்கமும் “வைரஸ் உடன் வாழவேண்டும்” என்ற கொள்கையின் அடிப்படையில், எங்களை பாதுகாக்க பொருத்தமான எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதுவே, அரசாங்கமும் முழு முதலாளித்துவ வர்க்கமும் நாட்டில் முன்னெடுக்கும் கொள்கையாகும். அவற்றுக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவளிக்கின்றன.

சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் எமது நண்பர்கள், இலங்கை மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கமே ஆகும். எங்களுடைய போராட்டத்தில் நாம் அவர்களுடன் இணைய வேண்டும்.

தொழிற்சங்களிலிருந்து சுயாதீனமாக ஒவ்வொரு தோட்டத்திலும் நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். அதன் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படவேண்டும். இவை தொழிற்சங்கள் போன்று அல்லாமல், ஜனநாயக அமைப்புகளாக இருக்கும். நாங்கள் பெருந்தோட்டங்களில் நடவடிக்கை குழுக்களின் வலை அமைப்பை அமைத்துக்கொண்டு இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் இதேபோன்ற நடவடிக்கை குழுக்களுடன் இணைய வேண்டும்.

இத்தகைய குழுக்களை அமைப்பதற்கான விபரங்களை பெறுவதற்கு தொடர்பு கொள்க.

Loading