முன்னோக்கு

கோவிட்-19 மூடிமறைப்பு: இறப்புக்களைப் பற்றி கேட்காதீர்கள், இறப்புக்களைப் பற்றி பார்க்காதீர்கள், இறப்புக்களைப் பற்றி பேசாதீர்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 நோயால் அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இறக்கின்ற நிலையில், பைடென் நிர்வாகம், ஊடகப் பிரச்சாரம் மற்றும் தரவுகளை கையாளுவதன் மூலம் தொற்றுநோய் செய்திகளை மூடிமறைப்பதற்கும், மக்களை வெகுஜன மரணங்களுக்கு நிரந்தரமாக பழக்கப்படுத்துவதற்கும் பிரச்சாரங்களை நடத்தி வருகிறது.

மார்ச் 24, 2021, புதன்கிழமை அன்று, பிரேசிலின் டியூக் டி காக்சியாஸில் உள்ள சாவோ ஜோஸ் நகராட்சி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கோவிட்-19 நோயால் இறந்தவரது உடல் சடலப்பையில் வைக்கப்பட்டுள்ளது. (AP Photo/Felipe Dana)

கடந்த வாரத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2,700 அமெரிக்கர்கள் கோவிட்-19 ஆல் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். இது, ஒவ்வொரு நாளும் ஏழு போயிங் 777 பயணிகள் விமானங்கள் கடலில் விழுந்து நொறுங்கி அதில் பயணித்த அனைவரும் இறந்தால், அல்லது ஒவ்வொரு நாளும் இரண்டு டைட்டானிக் கப்பல்கள் கடலில் மூழ்கினால் அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களுக்கு சமமாக நோயால் இப்போது உயிரிழப்புக்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

உத்தியோகபூர்வ இறப்பு அறிக்கையின்படி, இன்றுவரை 900,000 க்கும் அதிகமான அமெரிக்கர்கள் கோவிட்-19 நோயால் இறந்துள்ளனர், ஆனால் உண்மையில், எக்னாமிஸ்ட் பத்திரிகையால் தொகுக்கப்பட்ட ‘அதிகப்படியான இறப்பு’ புள்ளிவிபரங்களின்படி இந்த எண்ணிக்கை ஏற்கனவே 1 மில்லியனுக்கும் அதிகமாகும்.

ஆனால் பாரிய தொற்று மற்றும் பாரிய மரணத்தைத் தடுக்க எதையும் செய்யாமல், அமெரிக்க அரசாங்கம் கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கைவிடுவதற்கான சாக்குபோக்காக பெரிதும் பரவக்கூடிய ஓமிக்ரோன் மாறுபாட்டின் தோற்றத்தை பயன்படுத்தியுள்ளது.

இது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் எதிர்காலத்தில் காலவரையறையின்றி கோவிட்-19 நோயால் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுவதற்கு அனுமதிக்கிறது, இதன் பொருள் என்னவென்றால் ஒரு தடுக்கக்கூடிய நோயால் ஒவ்வொரு ஆண்டும் நூறாயிரக்கணக்கான மக்கள் இறக்கக்கூடும், மேலும் மில்லியன் கணக்கானவர்கள் நெடுங்கோவிட் நோயால் நிரந்தரமாக முடக்கப்படுவார்கள்.

தொற்றுநோயின் ஆபத்துக்கள் குறித்து தொடர்ந்து அதிக அக்கறை கொண்டுள்ள பொதுமக்கள் மீது பாரிய நோய்தொற்று கொள்கையை திணிப்பதற்காக, அமெரிக்க அரசாங்கமும் ஊடகங்களும் ஊடக இருட்டடிப்பு மற்றும் தரவுகளைக் கையாளுதல் மூலம் பாரிய இறப்பு எண்ணிக்கையை மூடிமறைக்க ஒரு முறையான மற்றும் வேண்டுமென்ற முயற்சியைத் தொடங்கியுள்ளன.

இதன் குறிக்கோள்: இறப்புக்களைப் பற்றி கேட்காதீர்கள், இறப்புக்களைப் பற்றி பார்க்காதீர்கள், இறப்புக்களைப் பற்றி பேசாதீர்கள். ஆனால் மக்கள் தொடர்ந்து இறக்கிறார்கள்.

இந்தக் கொள்கை விஞ்ஞானத்தால் இயக்கப்படவில்லை, மாறாக அமெரிக்காவின் நிதிய தன்னலக்குழுவின் சமூக நலன்களால் இயக்கப்படுகின்றன. அமெரிக்கக் கொள்கையின் பேரழிவுகரமான கண்டனத்திற்கு சமமாக, உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இந்த வாரம் எச்சரித்தார்:

தடுப்பூசிகள் காரணமாகவும், மற்றும் ஓமிக்ரோனின் மிகுந்த பரவும் தன்மை மற்றும் குறைந்த தீவிரத் தன்மை காரணமாகவும், நோய்தொற்று பரவுவதைத் தடுப்பது இனி சாத்தியமில்லை, இனி அவசியமில்லை என்ற விளக்கம் சில நாடுகளில் பின்பற்றப்படுவது குறித்தே நாங்கள் கவலைப்படுகிறோம். உண்மைக்கு அப்பால் எதுவும் இல்லை.*

“அரை டஜன் நிர்வாக அதிகாரிகள்” உடனான நேர்காணல்களின் அடிப்படையில், “இவ்வளவு காலம், ஓமிக்ரோன்: தொற்றுநோயின் அடுத்த கட்டத்தை வெள்ளை மாளிகை கவனிக்கிறது,” என்ற தலைப்பில் Politico இல் வெளியான கட்டுரையில் பைடென் நிர்வாகத்தின் உத்தி விளக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 “உடன் வாழ அமெரிக்கர்களை நிர்ப்பந்திப்பதை” நோக்கமாகக் கொண்டு “தொற்றுநோயின் புதிய கட்டத்தைப் பற்றி பைடென் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது” என்று Politico கூறியுள்ளது. “வைரஸ் பரவலாக இருக்கும் ஒரு சூழலை மக்கள் தங்களுக்கு வசதியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நனவான செய்தியை அவர்களுக்கு வழங்க” பைடென் நிர்வாகம் திட்டமிடுகிறது.

Politico கூறுவதன்படி, மாற்றம் என்பது “புதிய இயல்பு,” என்று அழைக்கப்படும், இது கடந்த மாதம் அமெரிக்க மருத்துவ சங்கத்தின் சஞ்சிகையில் ஜனவரி 6 அன்று பிரசுரமான தொடர்ச்சியான கட்டுரைகளில் பைடெனின் முன்னாள் ஆலோசகர் எசேக்கியேல் இமானுவல் முன்னிலைப்படுத்திய கோஷமாகும்.

பொது உணர்வை “கட்டுப்படுத்தவும்” மற்றும் தொற்றுநோயைப் பற்றி பொதுமக்களை “வித்தியாசமாக உணர வைக்கவும்”, “ஒவ்வொரு நாளும் செய்திகளில் ஆதிக்கம் செலுத்துவது சிறந்த அரசியல் உத்தி அல்ல,” என்று பைடென் நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக Politico குறிப்பிட்டது.

கோவிட்-19 நோயை நிரந்தரமானதாக ஏற்றுக்கொள்ள “அமெரிக்கர்களை நிபந்தனைக்குட்படுத்துவதை” பைடென் நிர்வாகம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று Politico தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைப் போல உலகின் வேறு எந்த நாட்டிலும் ஊடகங்கள் அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லை. இமானுவல் “புதிய இயல்பு,” என்று அறிவித்த மாதத்தில் இருந்து, கோவிட்-19 பற்றிய அறிக்கைகள் அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கைக்கு சரியாக நேர் மாறான விகிதத்தில் புள்ளிவிபரங்களை குறைத்துக் காட்டின.

ஜனவரி தொடக்கத்தில், 7 நாள் சராசரி இறப்பு எண்ணிக்கை 1,500 க்கும் குறைவாக இருந்ததால், தொற்றுநோய் பற்றிய செய்திகள் வழமையாக இரவில் மட்டும் வெளியிடப்பட்டன. ஆனால் இறப்பு எண்ணிக்கை 2,000 ஐ எட்டியதால், அது இரண்டாவது, பின்னர் மூன்றாவது, பின்னர் நான்காவது இடத்திற்கு சரிந்தது. மாத இறுதிக்குள், இரவு நேர செய்திகளின் முதல் பாதியில் தொற்றுநோய் பற்றிய எந்த செய்தியும் வழமையாக வெளியிடப்படவில்லை, மேலும் பெரும்பாலும், கூகுள் செய்திகளின் “தலைப்புச் செய்திகள்” பிரிவில் தொற்றுநோயைப் பற்றி ஒன்றும் வெளிவரவில்லை.

வியாழனன்று, NBC இன் “Nightly News” பகுதியில் முழு ஒளிபரப்பின் போது தொற்றுநோய் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஒரே நாளில் 3,000 பேர் இறந்துபோன செய்தியை விட, மூன்று அங்குல பனிப்படிவு பற்றிய செய்திகள் நூறுமுறை ஒளிபரப்பப்பட்டன.

ஆனால் பொது உணர்வை “நிபந்தனைக்குட்படுத்தும்” மற்றும் பொதுமக்களை “வித்தியாசமாக உணர வைக்கும்” முயற்சியை ஊடகங்களை கையாளுவதன் மூலம் மட்டும் சாதிக்க முடியாது. இந்த காரணத்திற்காக, கோவிட்-19 நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்கள் பற்றிய செய்திகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முறையான பிரச்சாரம் உள்ளது.

புதன்கிழமை, அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை (HHS) கோவிட்-19 இறப்புக்களின் எண்ணிக்கையை அறிக்கை செய்யும் மருத்துவமனைகளுக்கான திட்டத்தை உத்தியோகபூர்வமாக கைவிட்டது, இது, ஒரு கூட்டாட்சி சுகாதார இரகசிய செய்தி வெளியீட்டாளர், “கூட்டாட்சி மட்டத்தில் ஒரே சீரான, நம்பகமான மற்றும் நடைமுறையில் உள்ள தரவுத் தொகுப்புக்களை வெளியிடும் ஒரே ஊடகம்” உலக சோசலிச வலைத் தளம் (WSWS)” மட்டும் தான் என்று கூறியதை முடிவுக்குக் கொண்டுவந்தது.

கோவிட்-19 இறப்புக்கள் பற்றிய செய்திகள் எஞ்சியிருக்கும் ஒரே ஆதாரமான coroner system மூலம் மட்டுமே வெளியாகின்றன, இது அரசியல் கையாளுதலுக்கு உட்பட்டது என்பதுடன், ஒன்றன் பின் ஒன்றாக எண்ணிக்கைகளை குறைத்துக் காட்டும் மாநிலங்களில் இருந்து பெறப்படும் புள்ளிவிபரங்களை ஒன்றுதிரட்டுகிறது.

இந்த மூடிமறைப்பு சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. புதன்கிழமை, அதாவது மருத்துவமனைகளில் நிகழும் கோவிட்-19 இறப்புக்கள் பற்றி தினசரி அறிக்கை செய்வதை DHHS நிறுத்திக்கொண்ட அதே நாளில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சனின் நிர்வாகம், கோவிட்-19 நோய்தொற்றுக்கள் பற்றி நாளாந்தம் அறிக்கை வெளியிடப்படுவதை, மிக முன்னதாக அல்லாமல், ஈஸ்டருக்குள் முடிவுக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

ஆனால் எண்ணிக்கைகளை குறைத்துக் காட்டுவது மட்டும் போதாது. பரிசோதனைகள் கூட பாதிக்கப்பட்டுள்ளன. வியாழனன்று கனேடிய மாகாணமான Saskatchewan, அது “பொதுமக்களுக்கான கோவிட்-19 PCR பரிசோதனையை நிறுத்தப் போவதாகவும், அதன் மூலம் சமூகத்தில் வைரஸ் பரவுவதைக் கண்டறியும் பெரும்பாலான முயற்சிகளை நிறுத்தப் போவதாகவும்,” அறிவித்தது என பத்திரிகையாளர் Zak Vescera குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த வைராலஜிஸ்ட் ஏஞ்சலா ராஸ்முசென், “நீங்கள் கெட்ட செய்திகளைப் பார்க்க விரும்பாததால், உங்கள் கண்களைப் புடுங்குவதற்கு சமமான பொதுச் சுகாதாரம் இது” என்று எச்சரித்தார்.

ஆனால் இமானுவலின் கோரிக்கைக்கு இணங்க மாகாணம் செயற்படுகிறது, இவர் ஜனவரி 26 அன்று விரைவு பரிசோதனைகளுக்கு ஆதரவாக PCR பரிசோதனைகளை நிறுத்துமாறு அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்தார். PCR பரிசோதனைகளை போலல்லாமல், விரைவு பரிசோதனைகளை கோவிட்-19 தொடர்புத் தடமறிதலுக்கு பயன்படுத்த முடியாது என்பதுடன், நாளாந்த நோய்தொற்றுக்களின் எண்ணிக்கைகளையும் அது வழங்குவதில்லை, இதன் பொருள் PCR பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்படாத நேர்மறை கோவிட்-19 நோய்தொற்றுக்கள் திறம்பட காணாததாக்கப்படும்.

நிதிய தன்னலக்குழுவின் நலனுக்காக பரிந்து பேசும் அமெரிக்க அரசாங்கம், ஆண்டுக்கு ஆண்டு நூறாயிரக்கணக்கான மக்கள் இறப்பது ஏற்கக்கூடியது தான் என்ற முடிவுக்கு வந்துள்ளது. விகிதாசாரத்தில் இறப்பவர்கள் முதியவர்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் ஏழைகளாக இருப்பார்கள் என்ற நனவுடன், சார்லஸ் டிக்கென்ஸின் ஸ்க்ரூஜ் “உபரி மக்கள்தொகையை குறைத்தல்” என்று அழைத்தது அரசாங்கக் கொள்கை மூலம் நிறைவேற்றப்படுகிறது.

கோவிட்-19 ஐ நிரந்தரமாக்குவதற்கான பிரச்சாரம் மக்கள் மீதான போர் பிரகடனமாகும், இது முற்றிலும் குற்றமான பாரிய கொலைபாதகச் செயலாகும்.

ஆளும் வர்க்கத்தின் பாரிய நோய்தொற்று கொள்கைக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. கோவிட்-19 நோயிலிருந்து உயிர்களைப் பாதுகாப்பதற்கான பொது சுகாதார நடவடிக்கைகளை பொதுமக்கள் தொடர்ந்து விரும்புவதாக அடுத்தடுத்த கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. மிக சமீபத்திய YouGov கருத்துக்கணிப்பு, அமெரிக்க மக்கள், மிக கணிசமான வித்தியாசத்தில், “பொருளாதாரத்தை” பாதுகாப்பதை விட “கொரோனா வைரஸ் வெடிப்பின் சுகாதார விளைவுகளிலிருந்து அமெரிக்கர்களைப் பாதுகாப்பதை” ஆதரிக்கின்றனர் என்பதைக் காட்டியது.

உலகெங்கிலும், தொழிலாள வர்க்கம் ஆளும் வர்க்கத்தின் வெகுஜன அழிவுக் கொள்கைக்கு எதிராக அணிதிரளத் தொடங்கியுள்ளது என்பதுடன், கோவிட்-19 ஐ முற்றிலும் ஒழிக்கக் கோருகிறது. சர்வதேச சோசலிசத்தின் முன்னோக்கின் அடிப்படையில் வளர்ந்து வரும் இயக்கத்திற்கு அரசியல் தலைமையை வழங்குவதே மைய அரசியல் பணியாகும். மேலும் மக்களின் மரணம் மற்றும் துயரத்தில் இலாபமீட்டும் முதலாளித்துவ அமைப்பு முறையை முடிவுக்குக் கொண்டுவருவதே இவ்வியக்கத்தின் மைய நோக்கமாக இருக்க வேண்டும்.

Loading