வடக்கு மீனவரின் மரணத்தில் இலங்கை கடற்படை சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜனவரி 11 அன்று, இரண்டு பிள்ளைகளின் தந்தையான எட்வேட் மரியசீலன், வயது 31, தலையில் பலத்த காயத்துடன் யாழ்ப்பாணம், மாதகல் கடற்கரை அருகில் சடலமாக உள்ளுர் மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டார்.

எட்வர்ட் மரியசீலன்

அவரின் படகு கடற்கரையில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் மூழ்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஊடக செய்திகளின் படி, முதல் நாள் அவர் மீன் பிடிப்பதற்கு சென்றுள்ளதோடு, அன்று இரவு 7.30 மணிக்கு அவரிடம் இருந்து கடைசி தொலைபேசி அழைப்பு அவரின் சகோதருக்கு கிடைத்துள்ளது. அதன் பின் அவரிடம் இருந்து எந்த தொடர்பும் கிடைக்காததால் பீதியடைந்த உறவினர்கள் அவரை தேடியபோது மறுநாள் காலையில் அவரின் உடல் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இவரின் கொடூரமான மரணம் சம்பந்தமாக இலங்கை கடற்படையை உள்ளுர் மீனவர்கள் மற்றும் அவரின் உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். கடற்படையின் படகு மரியசீலனின் படகை வேண்டுமென்றே மோதியுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எவ்வாறாயினும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த கடற்படை, இந்திய மீனவர்களின் விசைப் படகே மரியசீலனின் படகை மோதியுள்ளதாக கூறியது. ஆனால், கரைக்கு மிக அண்மையில் பவளப்பாறைக் தொடர் உள்ள பிரதேசத்திற்குள் அத்தகைய பெரிய படகு நுழைய முடியாது, என உள்ளுர்வாசிகள் கூறுகின்றனர். 

உயிரிழந்தவரின் மைத்துனி ஊடகத்துக்கு தெரிவிக்கையில், மரியசீலனின் உடல் கண்டெடுக்கப்பட்ட போது சம்பவ இடத்தில் கடற்படை இருந்ததாகவும், உடலைக் கரைக்கு கொண்டுவந்தவர்களை அவர்கள் பின்தொடர்ந்து வந்ததாகவும் தெரிவித்தார்.

“கடற்படையைத் தவிர நான் வேறு யாரையும் சந்தேகிக்கவில்லை” என     மற்றொரு உறவினர் தெரிவித்தார். “நிச்சயமாக கடற்படையே அவரின் படகை மோதியது” என அவர் தொடர்ந்தார்.

மரியசீலன், பலரும் அறிந்த சமூக ஆர்வலர். உள்ளுர்வாசிகள் மற்றும் பல ஊடக செய்திகளின் படி, இலங்கை கடல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடமாடுகின்ற இந்திய விசைப் படகுகளை கண்காணித்தல் என்னும் பெயரில் மாதகலில் உள்ள கடற்படைத் தளத்தை விஸ்தரிப்பதற்காக, அங்குள்ள இலங்கை கடற்படையினர், காணிகளை அபகரிப்பதற்கு எதிராக நடந்த சமீபத்திய ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில் நின்றுள்ளார். இதுவே மரியசீலனை கடற்படை இலக்கு வைக்க பிரதான காரணமாக இருக்கலாம் என உறவினர்கள் நம்புகின்றனர்.

தமிழ் மக்களுக்கு எதிரான 30 வருட இனவாத யுத்தத்தில் மீனவர்களைத் துன்புறுத்துதல் மற்றும் கொலைசெய்ததில் இலங்கை கடற்படை இழிவான சரித்திரத்தைக் கொண்டுள்ளது. 

ஜனவரி 13 அன்று, மரியசீலனின் இறுதி சடங்கினைத் தொடர்ந்து மாதகல் கடல் தொழிலாளர் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள் மற்றும் கிராமத்தவர்களால் அவரின் இறப்புக்கு நீதி கோரி இலங்கை கடற்படைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ப்பட்டது. மரியசீலனின் இறப்பு மற்றும் வடக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான துன்புறுத்தல்கள் சம்பந்தமாக மீனவர்கள் மத்தியில் வளரும் கோபத்தை தமிழ் கட்சிகள் சுரண்டிக்கொள்ள முயற்சிக்கின்றன. 

தமிழ் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் இந்தப் போராட்டத்தில் கடற்படையை குற்றம் சாட்டி, “உங்கள் இன அழிப்பை நிறுத்துங்கள் இல்லாவிடில் உங்கள் அடாவடியை தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்“ எனத் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “இந்தக் கொலைக்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒற்றுமையுடன் நிற்கின்றோம்” என ட்வீட் செய்தார்.

இந்தக் கட்சிகளுக்கு மரியசீலனின் கொலை சம்பந்தமாகவோ கொழும்பு அரசாங்கங்கள் மற்றும் அரச படைகளினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான துன்புறுத்தல்கள் சம்பந்தமாகவோ எந்த கவலையும் கிடையாது. அவர்கள் தமிழ் முதலாளித்துவத்தின் நலன்கள் மீது மட்டுமே அக்கறை கொண்டுள்ளனர். அவர்கள், கொழும்பு மற்றும் புதுடில்லி அரசாங்கங்கள் இரண்டும் முன்னெடுக்கும் இதேபோன்ற தாக்குதல்களுக்கு எதிரான ஒற்றுமையை தடுப்பதற்கு, ஒருவருக்கு ஒருவரை எதிராக நிறுத்தி, இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையில் ஒரு மோதலை கிளறி விடவும் முயற்சிக்கின்றனர்.

உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்களிடம் பேசிய மரியசீலனின் மனைவி அன்ரலீனா, தனது கணவரின் காயங்கள் மற்றும் படகு சேதமாக்கப்பட்டுள்ள முறையினையும் குறிப்பிட்டு, இது கடற்படையால் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகத் தெரிவித்தார். இந்தக் கொலைக்கு எதிரான போராட்டத்திலும் கூட கடற்படையினர் தம்மை காணொளிப் பதிவு செய்ததாகவும் தமது உயிருக்கும் கூட அச்சுறுத்தல் இருக்கலாம் என அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.

மரியசீலனின் இறப்பினைத் தொடர்ந்து, தனது ஆனாதரவான நிலையை அவர் விளக்கினார். “நாம் ஏற்கனவே கடினமாக நிலைமைகளிலேயே வாழ்ந்து வருகின்றோம். எதிர்காலத்தில் கணவரின்றி எனது மகனுடன் எப்படி உயிர் வாழப் போகிறேன் என்பதை நினைத்தும் பார்க்க முடியவில்லை. இதைப் பற்றி நினைப்பதே கொடூரமாக உள்ளது” என அவர் கூறினார்.

“நாம் தொழிலை மேம்படுத்துவதற்கு வாங்கிய பாரிய கடனைச் செலுத்த வேண்டி உள்ளது. வீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டை ஒன்பது வருடத்துக்குப் பின்னரும் கூட கட்டி முடிக்க முடியவில்லை” என அவர் மேலும் தொடர்ந்தார்.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இரத்தளரி யுத்தத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் பொதுமக்கள் மீது கொடூரமான தாக்குதலை இலங்கை இராணுவம் முன்னெடுத்தது. ஐ.நா. மதிப்பீட்டின் படி, யுத்தத்தின் இறுதி மாதங்களில் மட்டும் குறைந்தது 40,000 தமிழ் மக்கள் இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களால் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகள், காணாமல் ஆக்குதல்கள் மற்றும் துன்புறுத்தல்களும் 2009ல் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட தொடர்ந்தன. வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்புகளும் மக்களுக்கு எதிரான கொடூர துன்புறுத்தல்களும் இப்போதும் தொடர்கின்றன.

யுத்தகாலத்தின்போது, 2007 மார்ச்சில், சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரின் நண்பர் சிவநாதன் மதிவதனன் ஆகியோர் கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த வேலணையில் காணாமல் ஆக்கப்பட்டனர்.

மரியசீலனின் மரணம் போன்ற இன்னொரு சம்பவத்தில் 2017 ஒக்டோபரில் இலங்கை கடற்படைப் படகு மோதியதில் காரைநகரை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கணபதிபிள்ளை கேதீஸ்வரன் கொல்லப்பட்டதோடு தவராசா சத்தியராஜ் காயமடைந்தார்.

இந்திய மீனவர்கள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் சம்பந்தமாகவும் இலங்கை கடற்படை மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. கடந்த வருடம் ஜனவரி 19 அன்று, இலங்கை கடற்படையின் தாக்குதலில் நான்கு தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டதோடு, அக்டோபர் இறுதியில் இலங்கை கடற்படையின் படகு மீனவப் படகுடன் மோதிய பின்னர் இந்திய மீனவரான ராஜ்கிரன் கொல்லப்பட்டு அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அண்மைய மாதங்களில் கடல் அட்டை பிடிப்பதில் ஈடுபட்ட மீனவர்கள் தொடர்சியாக கடற்படையால் தாக்கப்பட்டுள்ளனர். இராணுவ ஆக்கிரமிப்புள்ள வடக்கில் 30 மீனவர்களை இலங்கை கடற்படை கொடூரமாக கைது செய்தது.

யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் தாங்கள் அனுபவித்த அடக்குமுறைகளை மரியசீலனின் மாமனார் விளக்கினார். “கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக நாம் அச்சுறுத்தலின் கீழே வாழ்தோம். யுத்தம் காரணமாக 1992ல் எனது குடும்பம் இடம்பெயர்ந்த பின்னர், மீண்டும் குடியேறி, இன்று வரைக்கும் இங்கு தான் வாழ்கின்றோம்.” யுத்த காலத்தின் போது இலங்கை படையால் தனது மகன் மோசமாகத் தாக்கப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார். “அந்தக் காலத்தில் அவர்கள் எம்மை ‘புலிகள்’ எனக் குற்றஞ் சாட்டினர். ஆனால், இப்போது எப்படி எம்மை முத்திரை குத்தப் போகின்றனரோ தெரியவில்லை.”

யாழ்ப்பாண மாநகரில் இருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள மாதகலில் பல மீனவர்கள் இன்னும் உள்நாட்டு யுத்தத்தின் வடுக்களையும் அதன் தாக்கங்களயும் சுமந்துகொண்டே வாழ்கின்றனர். இங்கு பலர் மீன்பிடித்தலையும், கருவாடு உற்பத்தியையுமே வாழ்வின் பிரதான வருமானமீட்டும் தொழிலாக மேற்கொள்கின்றனர்.

அவர்கள், அடுத்தடுத்த ஆட்சிக்கு வந்த முதலாளித்துவ அரசாங்கங்களால் தொடர்ச்சியாக ஒடுக்கப்படுகின்றனர். இந்தப் பகுதியில் பல மீனவர்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக மரியசீலனின் சகோதரன் தெரிவித்தார். “அவர்களால் போதுமான விலையில் மீன்களை விற்கமுடியவில்லை அவற்றை விற்பதற்கான சரியான சந்தை வாய்ப்புக்கள் இல்லை. தொற்று நோய் காரணமாக அவர்களின் வருமானம் சரி அரைவாசியா குறைந்துள்ளது.” என அவர் கூறினார்.

அதிகரித்துவரும் பொருட்களின் விலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களின் தட்டுப்பாடுகள் போன்றவற்றால் மீன்பிடி தொழில் அதிக செலவுள்ளதாக மாறியுள்ளது. பல மீன்பிடித் தொழிலாளர்கள் கடன் பாதாளத்தினுள் வீழ்கின்றனர். அவர்களுக்கு சரியான சந்தை வாய்ப்பும் போதுமான இலாபமும் கிடைப்பதில்லை. இந்த நிலையில் கடல்-உணவு தாயரிக்கும் நிறுவனங்கள் இவர்களின் உற்பத்திகளை (இறால், நண்டு) குறைந்த விலைக்கு கொள்வனவு செய்து சுரண்டுவதோடு, தொழிலாளர்களை குறிப்பாக பெண் தொழிலளார்களை குறைந்த சம்பளத்துடன் இந்த நிறுவனங்கள் வேலைக்கு    அமர்த்தியுள்ளன.

இரண்டு வருட, கோவிட்-19 தொற்று நோயை அடுத்து இந்தச் சமூகப் பிரச்சினைகள் மேலும் மோசமடைந்துள்ளன. எரிபொருள் விலை உயர்வு, அவர்களின் மீன்பிடியில் ஈடுபடுவதற்குப் போதுமான பணமின்மை, மோசமான காலநிலை, மீன்பிடி உபகரணங்களின் விலை அதிகரிப்பு, இலங்கை - இந்திய கடல் எல்லையில் படைகளின் துன்புறுத்தல்கள் ஆகியவை இந்த இன்னல்களில் அடங்கும். கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக அவர்கள் முகங்கொடுக்கும் நெருக்கடிகளுக்கு நிவாரனம் வழங்கப்படுவதில்லை.

கடல் தொழில் அமைச்சினால் கட்டுபடுத்தப்படுகின்ற சகல கடல் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களால் இந்த ஏழை மீனவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைக் கூட தீக்க முடியாது. இந்த அமைப்புகளும் தமிழ் தேசியவாத கட்சிகளையே ஆதரிக்கின்றன.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்கின்ற தமிழ் கட்சிகளுக்கும் ஏழை மீனவர்கள் மீது எவ்வித கரிசனையும் இல்லை. இந்தக் கட்சிகள் ஒடுக்கப்பட்டவர்களின் வாக்குகளைப் பெறுவதை மட்டுமே கருத்தில் வைத்துள்ளன, என மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். அனைத்துக்கும் மேலாக இந்தக் கட்சிகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் அதனது இந்தப் பிராந்தியத்தில மூலோபாய பங்காளியான இந்தியாவினதும் புவி-அரசியல் நலன்களுக்கு சேவை செய்கின்றன.

சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாளர்களை அணிதிரட்டும் போராட்டத்தின் பாகமாக, சகல வேலைத் தளங்களிலும் அயல் பிரதேசங்களிலும் தொழலாளர்களை முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களிடம் இருந்து பிரிந்து, சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வலியுறுத்துகின்றது. நாம் ஏனைய பிரதேசங்களில் வாழும் ஏனைய ஏழைகளையும் அணிதிரட்டி இதே போன்ற நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புமாறு கடல் தொழிலில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரப்பானது தமிழ் மக்களை அடக்குவதற்கும் தொழிலாள வர்க்கத்தை இன ரீதியில் பிளவுபடுத்தவும் கொழும்பு ஆட்சிகள் பயன்படுத்தும் பிரதான ஆயுதமாகும். அதனாலேயே, சோசலிச சமத்துவக் கட்சி, வடக்கு கிழக்கில் இருந்து அரச படைளை நிபந்தைனையின்றி வெளியேற்றப் போராடுமாறு தொழிலாளர்களை கோருகின்றது. மரியசீலனின் இறப்பு, இந்த உண்மையை முன்நிலைப்படுத்துகின்ற மற்றொரு கொடூரமான சம்பவம் ஆகும்.

கடல் தொழிலாளர்களின் நீண்டகால பிரச்சினைகள், முதலாளித்துவத்துடன் பின்னிப் பிணைந்துள்ள பிரச்சினையாகும். சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற வடிவில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கும் சோசலிசக் கொள்கைகளுக்காகவும் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் மூலம் மட்டுமே அவை தீர்க்கப்பட முடியும்.

Loading