முன்னோக்கு

கலிஃபோர்னியாவின் “நிரந்தர நோய் திட்டம்” முடிவில்லாத கோவிட்-19 நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களுக்கு களம் அமைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கிட்டத்தட்ட ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கமும் இப்போது, கோவிட்-19 நோய் பரவலை மெதுவாக்குவதான அனைத்து எஞ்சிய தணிப்பு நடவடிக்கைகளையும் கைவிடுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியில் இறங்கியுள்ளன. அவர்களில் பலர், வைரஸ் “நிரந்தர” நோயாக மாறிவிட்டது, அதனால் கவலைப்பட ஒன்றுமில்லை என்று பொய்யான கூற்றுக்களை பரப்பி அதைச் செய்கின்றனர்.

ஜனவரி 10, 2022 அன்று, கலிஃபோர்னியாவின் சாக்ரமெண்டோவில் நடந்த செய்தி மாநாட்டின் போது கலிஃபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம் பேசுகிறார். (AP Photo/Rich Pedroncelli, File) [AP Photo/Rich Pedroncelli]

பல கோட்பாட்டு ரீதியான தொற்றுநோயியல் நிபுணர்களும் மற்றும் பிற விஞ்ஞானிகளும் “நிரந்தரமானது” (endemic) என்ற வார்த்தையின் அரசியலாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது, குறிப்பிட்ட புவியியல் பிராந்தியத்தில் நோயின் கணிக்கக்கூடிய மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய அளவைக் குறிக்கிறது. ஆனால் இதற்கு நேர்மாறாக, தொற்றுநோய் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கூட கோவிட்-19 நோயின் பரவல் முன்கணிக்க முடியாததாகவும், முற்றிலும் கட்டுப்பாடற்றதாகவும் மற்றும் உலகளவில் பரவுவதாகவும் உள்ளது.

அமெரிக்காவில், தொற்றுநோய் முடிந்துவிட்டதாக அறிவிப்பதற்கான பிரச்சாரத்திற்கு வெள்ளை மாளிகை ஏற்பாடு செய்து வருகிறது, எனவே இது வாரந்தோறும் மாநில ஆளுநர்களை சந்திக்கிறது. பொலிட்டிகோவின் வார்த்தைகளில் சொல்வதானால், கோவிட்-19 பரவுவதைத் தடையின்றிப் பரவ அனுமதிப்பதன் அடிப்படையில் அமெரிக்க பொதுமக்களை ஒரு 'புதிய இயல்புக்கு' 'பழக்கப்படுத்த' வெள்ளை மாளிகை முயன்று வருகிறது.

இந்த பரவலான பிரச்சாரம் விஞ்ஞானத்தால் இயக்கப்படவில்லை, மாறாக பெருநிறுவனங்கள் மற்றும் நிதிய உயரடுக்கின் கோரிக்கைகளால் இயக்கப்படுகிறது. “இயல்பு நிலைக்குத் திரும்புதல்” என்ற போர்வையில் இலாபகரமான உற்பத்தியை பெருக்குவதற்காக, கோவிட்-19 பாதிப்பில்லாதது என்ற கட்டுக்கதையை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாகும்.

புதன்கிழமை அன்று, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) இயக்குநர் டாக்டர் ரோச்செல் வாலென்ஸ்கி, “முகக்கவசம் அணிவது போன்ற கட்டுப்பாடுகளிலிருந்து மக்களுக்கு ஒரு இடைவெளி கொடுக்க நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறி, CDC அதன் அனைத்து முகக்கவச பரிந்துரைப்புக்களையும் விரைவில் நீக்கும் என்பதை சமிக்ஞை செய்தார்.

கோவிட்-19 நோயை “நிரந்தமானது” என்று அறிவிக்கும் பிரச்சாரத்தின் முன்னணி செய்தித் தொடர்பாளர்களில் கலிஃபோர்னியாவின் ஜனநாயகக் கட்சி ஆளுநர் கவின் நியூசோம் ஒருவராவார், அவரது முழு அரசியல் வாழ்க்கைக்கும் மாநிலத்தின் ஆளும் உயரடுக்கால் நிதியளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 12, 2022 அன்று, 128,757 கலிஃபோர்னியர்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக உத்தியோகபூர்வமாக பதிவுசெய்யப்பட்டது, மேலும் அன்றைய தினம் ஓமிக்ரோன் அலையின் உச்சமாக மருத்துவமனை அனுமதிப்புக்களும் விரைந்து அதிகரித்துக் கொண்டிருந்தன, இந்நிலையில், மாநிலம் “இந்த யதார்த்தமான தொற்றுநோய் சூழலை எதிர்கொள்ள அல்ல, ஆனால் இந்த யதார்த்தத்தின் நிரந்தர தொற்று மற்றும் எதிர்கால மாறுபாடுகளுடன் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு அது தயாராகிறது” என நியூசோம் கூறினார். மேலும் அவர், “அடுத்த சில வாரங்களில் அந்த விரிவான உத்திகளை நாங்கள் பகிரங்கப்படுத்துவோம்” என்றும் கூறினார்.

எந்த அமெரிக்க மாநிலத்தையும் விட உச்சபட்ச எண்ணிக்கையில் நோய்தொற்றுக்களையும், இரண்டாவது அதிக இறப்பு எண்ணிக்கையையும் கலிஃபோர்னியா பதிவு செய்த நாளான வியாழனன்று, “SMARTER” என்ற சுருக்கப் பெயர் கொண்ட உத்தியோகபூர்வ “நிரந்தர நோய் திட்டத்தை” நியூசோம் வழங்கினார், அதாவது இது தடுப்பூசிகள் (shots), முகக்கவசங்கள் (masks), விழிப்புணர்வு (awareness), தயார்நிலை (readiness), பரிசோதனை (testing), கல்வி (education) மற்றும் சிகிச்சைகள் (Rx) ஆகியவற்றை குறிக்கிறது. இது மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் “விஞ்ஞானபூர்வ” திட்டம் என்று பெருநிறுவன ஊடகங்களால் பாராட்டப்பட்டது, உண்மையில் இது தொற்றுநோய்க்கு முழுமையாக சரணடைவதாகும் என்பதுடன், முடிவற்ற பாரிய நோய்தொற்றுக்களையும் இறப்புக்களையும் இயல்பாக ஏற்றுக்கொள்வதாகும்.

திட்டத்தை வெளியிடுவதற்கான செய்தியாளர் கூட்டத்தில், “நாம் நெருக்கடி கட்டத்தை படிப்படியாகக் கடந்து இப்போது வைரஸூடன் இணைந்து வாழக்கூடிய ஒரு கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கிறோம்” என்று நியூசோம் அறிவித்தார்.

“இதற்கு முடிவு தேதி என்பது இல்லை, மேலும் நாம் அதை வெற்றி கொண்டதாக அறிவிக்கும் தருணத்திற்கும் வாய்ப்பில்லை என்ற யதார்த்தத்தை நெருக்கடியின் தொடக்கத்தில் புரிந்து கொள்ளாததை இப்போது நாம் அனைவரும் புரிந்து கொண்டுள்ளோம்,” என்று அவர் கூறியதுடன், “இந்த தொற்றுநோய்க்கு வரையறுக்கப்பட்ட முடிவு இருக்காது. மேலும் இறுதிக் கோடு எதுவும் இல்லை” என்றும் அச்சுறுத்தும் வகையில் கூறினார்.

30 பக்க ஆவணம் இந்த கருப்பொருட்களை உள்ளடக்கிய திட்டத்தை சுருக்கமாக விவரிப்பதுடன், “மில்லியன் கணக்கான கலிஃபோர்னியர்கள் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டதான தீவிர ஓமிக்ரோன் மாறுபாட்டின் எழுச்சியில் இருந்து நாங்கள் மீண்டு வருகிறோம். இந்த வைரஸ் நிரந்தரமாக அல்லாமல், இன்னும் சிறிது காலம் நம்முடன் இருக்கும் என்பது தெளிவாகிறது” என்று குறிப்பிட்டு தொடங்குகிறது.

புதிய வைரஸ் மாறுபாடுகள் தவிர்க்க முடியாமல் தோன்றி, நோய்தொற்றுக்கள், மருத்துவமனை அனுமதிப்புக்கள் மற்றும் இறப்புக்களை விளைவிக்கும் சமயம் “இலக்குவைக்கப்பட்ட” நடவடிக்கைகளை செயற்படுத்த ஏதுவாக முகக்கவசங்கள் மற்றும் பிற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் (PPE) கையிருப்பை உருவாக்குவதற்கு பதிலாக, முகக்கவச கட்டுப்பாடுகள் போன்ற குறிப்பிட்ட கொள்கைகளுடன் கோவிட்-19 சுகாதார அளவீடுகளை இணைப்பதை அகற்றுவதே திட்டத்தின் மைய அம்சங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ள மொத்த மாநில நிதி 3.2 பில்லியன் டாலர் மட்டுமே. தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து டெஸ்லா தலைமை நிறைவேற்று அதிகாரியும் மற்றும் கலிஃபோர்னிய குடியிருப்பாளர் எலோன் மஸ்க் உம் திரட்டிய 200 பில்லியன் டாலரில் இது தோராயமாக 1.5 சதவீதமாகும், மேலும் அடுத்த ஆண்டிற்கு பைடென் கோரும் 770 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட இராணுவ வரவு-செலவுத் திட்டத்தில் இது 0.5 சதவீதத்திற்கும் குறைவானதாகும்.

முகக்கவச கட்டுப்பாட்டைப் பொறுத்தவரை, “முகக்கவசத்தை பயன்படுத்த விரும்புபவர்கள்தான் அதன் பயன்பாட்டை ஆதரிக்க வேண்டும்” என்று கூறி, அது தனிப்பட்ட விருப்பத்தைச் சார்ந்தது என்று இந்த பிரச்சினையை திட்டம் கட்டுப்படுத்துகிறது. இந்நிலையில், “நிரந்தரநோய் திட்டம்,” வெளியிடப்படுவதற்கு முந்தைய நாளான புதனன்று, மாநில அளவிலான முகக்கவச கட்டுப்பாட்டை கலிஃபோர்னியா நீக்கியது.

பள்ளிகளைப் பொறுத்தவரை, இந்த திட்டம் “மாணவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து பள்ளிகள் மாறுவதற்கு” பரிந்துரைப்பதுடன், “மாணவர்கள் கோவிட்-19 க்கு தங்களை பழக்கப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு பள்ளிகளில் பாதுகாப்பாக இருக்க முடியும்” என்கிறது. மேலும் பிப்ரவரி 28 அன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதான “உலகளவில் பள்ளிகளில் முகக்கவச கட்டுப்பாடு நீக்கப்படவுள்ள மாற்றத்திற்கு தயாராகுங்கள்” என்று பெற்றோர்களை இது எச்சரிக்கிறது.

குறிப்பிடத்தக்க வகையில், நியூசோமின் திட்டத்தை எசேக்கியேல் இமானுவல் பாராட்டினார், அவர் அதை “கலிஃபோர்னியா மாநிலத்தை கோவிட்-19 இன் அடுத்த கட்டத்திற்கு வழிநடத்தும் ஒரு விரிவான மூலோபாய திட்டம்” என்று விவரித்தார். அவர் மேலும், “பல விஷயங்களைப் போலவே, கலிஃபோர்னியாவின் SMARTER திட்டமும் நாட்டின் மற்ற பகுதிகளும் புதிய இயல்பு நிலைக்கு மாற உதவும்” என்று கூறினார். உண்மையில், கலிஃபோர்னியா திட்டம் ஜனநாயகக் கட்சி தலைமையிலான மற்ற மாநிலங்களால் பிரதிபலிக்கப்படும் என்று மற்றவர்கள் கணித்துள்ளனர்.

கோவிட்-19 காரணமான நோய்தொற்றுக்கள், மருத்துவமனை அனுமதிப்புக்கள் மற்றும் இறப்புக்களின் அனைத்து வகை கண்காணிப்புக்களையும் முடிவுக்குக் கொண்டு வந்து ஒரு “புதிய இயல்புநிலை” க்கு மாற முதன்முதலில் பரிந்துரைத்ததான ஒரு கட்டுரையை இமானுவல் வெளியிட்டு ஒரு மாதத்திற்கு சற்று கூடுதலான காலத்திற்குப் பின்னர் நியூசோம் திட்டம் வெளியிடப்பட்டது. ஊடகங்களால் பாராட்டப்பட்ட இந்த பரிந்துரைப்புக்கள், வெள்ளை மாளிகையின் ஆதரவுடன் சீராக செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

இமானுவல் நீண்டகாலமாக ஆயுட்காலம் மற்றும் சுகாதாரச் செலவினக் குறைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார், மேலும் அவரது தத்துவத்தை கருணையியல் வாதமாக விவரிக்கலாம். தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியர் ஜெனிஃபர் ஏ. ஃப்ரேயின் வார்த்தைகளில் கூறுவதானால், இமானுவல் “ஊனமுற்றோர் மற்றும் வயோதிகர்களை பயனற்றவர்களாகவும் திறனற்றவர்களாகவும் கருதுகிறார்.”

இமானுவல், நியூசோம், பைடென் மற்றும் கிட்டத்தட்ட முழு அரசியல் ஸ்தாபகமும் பரிந்துரைத்த “புதிய இயல்பு” என்பது, தடுப்பூசிகள் மிகக் குறைந்த பாதுகாப்பையே வழங்கும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள குறைந்த பட்சம் 7 மில்லியன் மக்களுக்கும், அத்துடன் பல மல்லியன் வயோதிகர்களுக்கும் நனவான ஆபத்தை விளைவிக்கும்.

திங்களன்று ஒரு போட்காஸ்ட் பதிவில் பேசிய நோயெதிர்ப்பு நிபுணர் டாக்டர் கிறிஸ்டியன் ஆண்டர்சன், அடுத்த 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக, “பெரும்பாலான மக்கள் ஒரு வருடத்திற்கு இரண்டு முறை நோய்தொற்றுக்கு ஆளாவதையும், மேலும் அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 200,000 முதல் 250,000 வரையிலும் அல்லது அதற்கு மேலும் இறப்புக்கள் நிகழப் போவதையும் நாம் எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார். அதிலும் பெரும்பாலான இறப்புக்கள் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் மற்றும் வயோதிகர்கள் மத்தியல் நிகழும், மேலும் ஆளும் உயரடுக்கு ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் இறப்புக்களின் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தேவையற்ற பாதிப்புகள் மற்றும் இறப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பெரும்பாலான மக்கள் தீவிரமாக முனைந்து கொண்டிருக்கும் நிலையில், தொற்றுநோயை தணிக்கும் நடவடிக்கைகளை நீக்குவது மிகவும் வெறுக்கத்தக்கது.

UC Berkeley Institute of Governmental Studies நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி, கலிஃபோர்னியாவில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் வெறும் 20 சதவீதம் பேர் மட்டுமே பொது இடங்களில் முகக்கவச கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதை ஆதரிக்கின்றனர், இதில் 6 சதவீத ஜனநாயகக் கட்சியினரும், 46 சதவீத குடியரசுக் கட்சியினரும் மட்டுமே அடங்குவர். அமெரிக்கா முழுவதும் CBS News-YouGov மேற்கொண்ட கருத்துக்கணிப்பு, 56 சதவீத அமெரிக்கர்கள் உட்புற அரங்குகளில் முகக்கவசம் அணிவதன் தேவையை ஆதரிப்பதாக கண்டறிந்துள்ளது.

கோவிட்-19 பரவலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, ஆளும் உயரடுக்குகளும், மற்றும் அவர்களது அரசியல் மற்றும் ஊடகப் பேச்சாளர்களும், தொற்றுநோய் முடிந்துவிட்டதாகக் காட்டும் வகையில் செய்திகளை பரப்ப முனைகின்றனர், மேலும் நெருக்கடி கடந்துவிட்டதாக எண்ண வைத்து சமூகத்தை முன்னோக்கிச் செல்லவும் செயலாற்றவும் வற்புறுத்துகின்றனர்.

உண்மையில், தொற்றுநோய் மிகுந்த அபாயகரமான நிலையில் உள்ளது. உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் BA.2 ஓமிக்ரோன் துணை மாறுபாட்டால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை செய்து வருகின்றனர், மேலும் உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த மாறுபாட்டின் தனித்துவமான பண்புகள் காரணமாக அதற்கு ஒரு தனி கிரேக்க கடிதம் கொடுக்க வேண்டும் என்று பலர் அழைப்பு விடுத்துள்ளனர். ஜப்பானில் நடந்த ஒரு முக்கிய ஆய்வின் முன்பதிவு இந்த வாரம் வெளியிடப்பட்டது, BA.2 மாறுபாடு, BA.1 ஐ விட தோராயமாக 1.4 மடங்கு அதிகம் தொற்றக்கூடியது, டெல்டா மாறுபாட்டிற்குச் சமமான கடுமையான நோய்களை ஏற்படுத்தக்கூடியது, மற்றும் ஏற்கனவே கொடுக்கப்படும் சிகிச்சைகளின் பயனைத் தவிர்க்கக்கூடியது என்பதையெல்லாம் இது காட்டுகிறது.

தொழிலாள வர்க்கம், கடந்த இரண்டு ஆண்டுகளின் அனுபவங்கள் மற்றும் தொற்றுநோய் முடிந்துவிட்டதாக அறிவித்து மக்களை நிராயுதபாணியாக்க முயலும் ஆளும் வர்க்கத்தின் தீவிர முயற்சிகள் ஆகியவற்றில் இருந்து தேவையான முடிவுகளை வகுக்க வேண்டும். அதாவது, உலகளாவிய ஒழிப்பு மூலோபாயத்துடன் ஆயுதபாணியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்டுவது மட்டுமே தொற்றுநோய்க்கான ஒரே சாத்தியமான தீர்வாகும்.

தற்காலிக இழப்பீட்டுடன் கூடிய பூட்டுதல்கள், பாரிய பரிசோதனை, தொடர்புத் தடமறிதல், உலகளவில் உயர்தர முகக்கவசங்களை வழங்குதல், மற்றும் உலகளவில் ஏனைய அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் செயற்படுத்துதல் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே, தொற்றுநோயை சில வாரங்களில் முடிவுக்குக் கொண்டு வந்து மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் என்பது ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். தீர்க்க முடியாத உள்நாட்டு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அமெரிக்க ஆளும் வர்க்கம் பெருகிவரும் உள் பதட்டங்களை வெளிப்புறமாக திசை திருப்ப முயல்வதுடன், ரஷ்யாவுடனான போரை நோக்கி முன்னேறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட்-19 ஆல் கிட்டத்தட்ட 1 மில்லியன் அமெரிக்கர்கள் இறந்துள்ளதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, விரைவில் வெடிக்கவிருக்கும் மூன்றாம் உலகப் போரில் பல மில்லியன் பேர் பலியிடப்படுவதை ஏற்கவும் அவர்கள் முழுமையாக தயாராக உள்ளனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மட்டுமே உலகில் தொற்றுநோயையும், போருக்கான உந்துதலையும் தடுத்து நிறுத்தப் போராடக்கூடியதான ஒரே அரசியல் போக்காகும். இன்று தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்கொள்ளும் முக்கிய பணி என்னவென்றால், அவர்கள் ஒருங்கிணைந்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையாக கட்டியெழுப்புவதாகும்.

Loading