உக்ரேனில் “சிறப்பு இராணுவ நடவடிக்கையை” ரஷ்யா அறிவித்ததன் பின்னர், அமெரிக்கா “ரஷ்யாவை பொறுப்பேற்கச் செய்யும்” என்று பைடென் அறிவிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வியாழக்கிழமை மாஸ்கோ நேரம் காலை 5.50 மணிக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரேனில் “சிறப்பு இராணுவ நடவடிக்கையை” தொடங்கினார்.

தலைநகர் கியேவ், கிழக்கு நகரமான கார்கோவ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளும் உட்பட உக்ரேனில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.00 மணியளவில் குண்டுவெடிப்புக்கள் நிகழ்ந்ததாக பதிவாகியுள்ளன. கியேவ் மற்றும் கார்கோவில் உள்ள இராணுவத் தளங்கள் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக உக்ரேனிய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. பின்னர் வியாழக்கிழமை காலை, உக்ரேனிய அதிகாரி ஒலெக்ஸி அரெஸ்டோவிச் (Oleksiy Arestovych), 40 உக்ரேனிய சிப்பாய்கள் மற்றும் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், டஜன் கணக்கான சிப்பாய்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.

ரஷ்ய தலைமை ஊடக சேவை வெளியிட்டதான, பெப்ரவரி 24, 2022, வியாழக்கிழமை, ரஷ்யாவின் மாஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் வீடியோவில் இருந்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது (Russian Presidential Press Service via AP)

ரஷ்ய துருப்புக்கள் ஒடெசாவில் தரையிறங்கியதாகவும், கார்கோவ் எல்லையைத் தாண்டி வந்ததாகவும் உக்ரேன் அரசாங்கம் குற்றம் சாட்டியது. இந்த தகவலுக்கு முரணாக, தரைப்படைகள் எதுவும் காணப்படவில்லை என்று CNN செய்தி வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்களில், கியேவில் இருந்து தப்பிக்க நெடுஞ்சாலைகளில் கார்கள் கடும் வேகத்தில் பறப்பதைக் காட்டும் காட்சிகள் பகிரப்பட்டன.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உக்ரேன் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்று கூறி மறுத்ததோடு, இராணுவ உள்கட்டமைப்பு மட்டுமே குறிவைக்கப்பட்டது என்று வலியுறுத்தியது. பின்னர், “உக்ரேனிய இராணுவ விமானத் தளங்களில் உள்ள இராணுவ உள்கட்டமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது” என்று அது அறிவித்தது.

இச்சூழ்நிலையில், வோலோடிமிர் செலென்ஸ்கியின் உக்ரேனிய அரசாங்கம், என்ன விதமான கட்டுப்பாடுகள் இருக்கும் என்று குறிப்பிடாமல், இராணுவச் சட்டத்தை அறிவித்துள்ளது.

உக்ரேன் அரசாங்கம் ஏற்கனவே அவசரகால நிலையை அறிவித்தது வியாழக்கிழமை முதல் அமலுக்கு வரும். இது, வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊடகங்களில் ‘உறுதியற்ற’ தகவல்களை உருவாக்கி பரப்புதல் ஆகியவற்றை தடை செய்வதுடன், சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் குறிப்பிடப்படாத கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

ரஷ்யா, கிழக்கு உக்ரேன் மற்றும் ரஷ்ய பிராந்தியங்களில் உள்ள உக்ரேன் எல்லைகள் வழியான விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளது. உக்ரேனின் எல்லைக்கு அருகிலுள்ள முக்கிய ரஷ்ய நகரமான டோனில் உள்ள ரோஸ்டோவ் விமான நிலையம் முற்றிலும் மூடப்பட்டுள்ளது. உக்ரேனிய அரசாங்கம், கிழக்கு உக்ரேனில் உள்ள கார்கிவ் (Kharkiv), ட்னெப்ர் (Dnepr), சபோரோஜ் (Zaporozhe) மற்றும் கெர்சன் (Kherson) உட்பட பல சர்வதேச விமான நிலைங்களை ஏற்கனவே மூடிவிட்டது. இப்போது தனது ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்தையும் நிறுத்தியுள்ளது.

அமெரிக்க நேரப்படி புதன்கிழமை இரவு செலென்ஸ்கியுடன் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், ரஷ்ய துருப்புக்களின் நிலைநிறுத்தம் “தேர்ந்தெடுக்கப்பட்ட முன்கூட்டியே திட்டமிடப்பட்ட போர் நடவடிக்கையாகும், இது பேரழிவுகரமான உயிரிழப்புக்களையும் மனித துயரத்தையும் விளைவிக்கும்” என்று கண்டனம் செய்தார். அவர் இன்று நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார்.

கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் 'மக்கள் குடியரசுகள்' என்று அழைக்கப்படும் பிரிவினைவாதத் தலைவர்கள் கிரெம்ளினிடம் இராணுவ ஆதரவைக் கோரிய பின்னரே, ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. திங்களன்று பிரிவினைவாத பகுதிகளின் சுதந்திரத்தை புட்டின் அங்கீகரித்திருந்தார்.

ரஷ்யாவின் Rossiya 24 அரசு தொலைக்காட்சி புதன்கிழமை இரவு, உக்ரேனிய ஆயுதப்படைகள் லுகான்ஸ்க் எல்லையைத் தாண்டியதாகவும், Nikolaevka (Mykolaivka) நகரத்தின் மீது பீரங்கித் தாக்குதலை நடத்தியதாகவும் அறிவித்தது.

டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகியவை ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளால் 2014 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டன, இது ரஷ்ய சார்பு அரசாங்கத்தை அகற்றியதான கியேவில் நடந்த அமெரிக்க ஆதரவு தீவிர வலதுசாரிகளின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடர்ந்து ஒரு உள்நாட்டுப் போர் வெடித்ததன் பின்னர் நிகழ்ந்தது.

வியாழன் காலை புட்டின் தனது உரையில், கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் விரிவாக்கத்தையும், மத்திய கிழக்கு மற்றும் யூகோஸ்லாவியாவில் அமெரிக்க போர்களையும் கண்டித்து, இவ்வாறு அச்சுறுத்தினார்: “நமது நாட்டுக்கும் நமது மக்களுக்கும் அச்சுறுத்தல்களை உருவாக்குவதற்கு எங்களில் தலையிட முயற்சிக்கும் எவரும், அல்லது இன்னும் அதிகமாக, ரஷ்யாவின் பதில் உடனடியாக இருக்கும் என்பதையும், உங்கள் வரலாற்றில் இதுவரை நீங்கள் அனுபவித்திராத அத்தகைய விளைவுகளுக்கு உங்களை இட்டுச் செல்லும் என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும்” என்றார்.

ரஷ்யா உக்ரேனை ‘ஆக்கிரமிக்க’ விரும்பவில்லை, மாறாக அது ‘இராணுவத்தை அப்பகுதியிலிருந்து அகற்றவும்’, ‘நாஜிமயமற்றதாக்கவும்’ மட்டுமே இதைச் செய்கிறது என அவர் கூறினார்.

மாஸ்கோ பங்குச்சந்தை, வியாழனன்று அதிகாலையில் குறியீட்டு எண் 11 சதவீதம் சரிந்ததை அடுத்து வர்த்தகத்தை நிறுத்தியது. ரூபிள் மதிப்பு விரைந்து சரிவைக் கண்டது.

புதன்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியவுடன் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் பெருமளவில் சரிந்தன, குறிப்பாக இலண்டனில் FTSE-100 2.34 சதவீதமும், ஃபிராங்பேர்ட்டில் Dax 3.62 சதவீதமும், மற்றும் பாரிஸில் CAC-40 3.36 சதவீதமும் சரிவை சந்தித்தன. ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலர்களை தாண்டியது. பாரிஸில், கோதுமை விலை ஒரே இரவில் 10 சதவீதம் உயர்ந்து ஒரு டன் கோதுமை விலை 300 யூரோக்களுக்கு மேல் உயர்ந்துள்ளது.

Loading