இலங்கை சுகாதார ஊழியர்கள் போராட்டத்துக்கு வருவதை தாம் சிரமப்பட்டு கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக தொழிற்சங்க தலைவர்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

நாடளாவிய ரீதியில், மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில்,நடந்த சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை, 18 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான சுகாதார தொழில் வல்லுனர்களின் கூட்டமைப்பு (சு.தொ.வ.கூ.) எந்தவொரு கோரிக்கையையும் வென்றெடுக்காமல் மற்றொரு காட்டிக்கொட்ப்புடன் முடிவுக்குக் கொண்டுவந்தது.

இடை மருத்துவ பணியாளர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட சுமார் 50,000 பேர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், திடீர் அழைப்பு சேவைகள் கொடுப்பனவு, மேலதிக நேர ஊதியத்தை உயர்த்துதல் உட்பட ஏழு கோரிக்கைகளை வென்றெடுக்க நீண்ட காலமாக அவர்கள் போராடி வருகின்றனர்.

ஒரு அடையாள வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், அரசாங்கம் தொடர்ந்தும் கோரிக்கைகளை புறக்கணிப்பதால் அதன் உறுப்பினர்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்தின் எதிரில் வேலைநிறுத்தத்தை தொடர்வதாக சு.தொ.வ.கூ. பின்னர் அறிவித்தது. எவ்வாறாயினும், அதிகாரிகளுடன் ஏதாவது ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதே தொழிற்சங்கத் தலைவர்களின் இலக்காக இருந்தது. அன்றைய தினம் சுகாதார அமைச்சின் முன் நடத்தப்படவிருந்த எதிர்ப்பு போராட்டத்தை சு.தொ.வ.கூ. இரத்து செய்தது.

மார்ச் 3 அன்று மாலை, சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச். முனசிங்க, சு.தொ.வ.கூ. தலைவரக்ளுடன் நடத்திய அவசர சந்திப்பின் பின்னர், 10 நாட்களுக்கு வேலைநிறுத்தம் இடைநிறுத்தப்படுவதாக சு.தொ.வ.கூ. அறிவித்தது.

அமைச்சின் செயலாளருடனான பேச்சுவார்த்தையின் பின்னர் போராட்டத்தை நிறுத்தியமைக்கான காரணத்தை கூறி சு.தொ.வ.கூ. வெளியிட்ட ஊடக அறிக்கை, குறித்த தொழிற்சங்க கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு சார்பாக இருந்து ஆற்றும் பங்கை வெளிப்படுத்தியது.

“சுகாதார செயலாளர் கூட்டிய அவசரக் கூட்டத்திற்கு பிரதிபலிக்கும் வகையிலும், மின்சாரம் மற்றும் எண்ணெய் நெருக்கடியால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் துயரத்தை கவனத்தில் எடுத்தும், வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது” என்று கூறும் அந்த அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

“அமைச்சின் செயலாளருடனான கலந்துரையாடலில் சில சாதகமான முன்னேற்றங்களை நாம் கண்டோம்... நாம் வேலைநிறுத்தம் செய்தே முன்செல்ல வேண்டியதில்லை.... (அரசாங்க சார்பு) மொட்டு தொழிற்சங்கம் மட்டும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி பல்வேறு விடயங்களை பெற்றுக்கொண்டதாக கூறுகின்றது. எனினும், உறுப்பினர்களை நிர்வகித்து, இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள எம்மால் இயலும், ஆனாலும், எம்மை மீண்டும் மீண்டும் வேலைநிறுத்தங்களுக்குள் தள்ளுகின்றனர்.

அமைச்சின் செயலாளருடனான கலந்துரையாடலின் போது, வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருமளவுக்கு தாக்கம் செலுத்திய, தொழிற்சங்கத் தலைவர்கள் கண்ட 'சாதகமான சூழ்நிலை' என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. தொடர் வேலைநிறுத்தம் செய்வதாக காலையில் முடிவெடுத்தபோது, 'மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடியால் மக்கள் படும் இன்னல்களை' கண்டுகொள்ளவில்லை. அமைச்சின் செயலாளருடனான கலந்துரையாடலின் பின்னரே அவர்களுக்கு பொதுமக்கள் குறித்து அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது!

சாதகமான சூழல், மக்கள் படும் துன்பம் போன்ற கருத்துக்கள் பச்சை பொய்யாகும். அவர்கள் உண்மையில் செய்து கொண்டிருப்பது என்னவென்றால், சுகாதாரப் பணியாளர்கள் போராட்டத்திற்குள் நுழைவதை 'நிர்வகிப்பதே' ஆகும். இந்த நிர்வாகிக்கும் சூத்திரத்தின் உண்மையான அர்த்தம் என்னவெனில், தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் போராட்டத்திற்கு வருவதை தடுக்க வேலை செய்வதாகும். மற்ற தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமின்றி, தங்களையும் பேச்சுவார்த்தையில் இணைத்துக்கொண்டு உறுப்பினர்களை ஒழுங்குபடுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்குமாறு அவர்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றனர்.

மே 2 அன்று, கொழும்பு புதிய நகர மண்டபத்தில், 'அத்தியாவசிய சேவை உத்தரவுகள் மற்றும் தொழிற்சங்க அடக்குமுறைக்கு எதிரான பொது உரையாடல்' என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில், அரசாங்க தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் (அ.தா.உ.ச.) தலைவர் ரத்னப்பிரிய, தன்னுடன் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்த சு.தொ.வ.கூ. வெளியிட்டுள்ள அறிக்கையில், மேல் கூறிய கருத்துக்கள் மேலும் நன்கு தெளிவாகின்றது.

அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கலாநிதி அத்துலசிறி சமரகோன், வதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினரான ஷிரால் லக்திலக, அனித்தா பத்திரிகையின் ஆசிரியர் கே.டி. ஜனரஞ்சன மற்றும் இலங்கை வர்த்தக தொழிற்துறை மற்றும் பொது தொழிலாளர் சங்கம் (சி.எம்.யு.) மற்றும் இன்னும் பல தொழிற்சங்கங்கள் சேர்ந்து நடத்திய இந்த கூட்டத்தில், சு.தொ.வ.கூ. முன்னெடுக்கின்ற காட்டிக்கொடுக்கும் வேலைத்திட்டத்தை மூடி மறைப்பதே பிரதான நோக்கமாக இருந்தது.

'அரசாங்கத்துக்கு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளை தீர்ப்பது எவ்வாறு என்பது புரியாத காரணத்தினால் வேலைநிறுத்தங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன” என தெரிவித்த ரத்னப்பிரிய, நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, இலட்சக்கணக்கான ரூபா சம்பளத்தை அல்லது கொடுப்பனவை தாம் கேட்கவில்லை எனவும் தெரிவித்தார். “நிதி அல்லது பணப்பிரச்சினை இருந்தால் பிறகு பார்த்துக்கொள்வோம், ஆனால் எமக்கு உரிய இடத்தை கொடுக்கவேண்டும்… என்று நாம் அரசாங்கத்திடம் கூறினோம். எத்தகைய அனர்த்தம் ஏற்பட்டாலும் மக்களோடு மக்களாக இருந்தவர்கள் என்ற வகையில், வேலைநிறுத்தம் செய்வதில்லை என நாங்கள் தீர்மானித்தோம். உறுப்பினர்களை நிர்வகிப்பதற்காகவே, நவம்பர் முதல், 11 மாகாண ரீதியான அடையாள வேலைநிறுத்தங்கள் நடத்தப்பட்டன.”

இந்த கருத்துக்களுக்கு விளக்கம் தேவையில்லை என்று ரத்னபிரிய தெளிவாக கூறுகிறார்: “அரசாங்கத்திடம் பணம் இல்லையென்றால், சம்பள உயர்வு வேண்டாம். பணம் இருக்கும்போது அதை பார்த்துக் கொள்வோம். வேலைநிறுத்தம் செய்வதில்லை என நாம் முடிவு செய்தோம். உறுப்பினர்களை நிர்வகிப்பதற்கே 11 மாகாண ரீதியான அடையாள வேலைநிறுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

உறுப்பினர்களின் எதிர்ப்பை அலட்சியம் செய்து சுகாதார ஊழியர்களின் போராட்டங்களை தடுப்பதற்கு திட்டமிட்டு செயற்பட்டனர் என்பது குமுதேஷ் மற்றும் ரத்னப்ரியவின் கதைகளில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

இது வெறுமனே சு.தொ.வ.கூ. சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல. அதுவே இலங்கையிலும் சர்வதேச அளவிலும் தொழிற்சங்கங்களின் வகிபாகம் ஆகும். அவர்கள், முதலாளித்துவ அரசாங்கம் மற்றும் முதலாளிகளுக்காக தொழிலாளர்களை ஒழுங்குபடுத்தும் மற்றும் அவர்களின் போராட்டங்களை நாசப்படுத்தும் ஒரு தொழில்துறை பொலிஸ் படையாக செயல்படுகிறார்கள்.

அத்தியாவசிய சேவை விதிகள் மற்றும் நீதிமன்ற தடை உத்தரவுகளுக்கு எதிராக தான் 'போராடுவதாக' புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ரத்னப்பிரியா கதை அளந்தார். அதை எப்படி செய்வது என்று அவர் சொல்லவில்லை. தனது தொழிற்சங்கத்திற்கு எதிரான நீதிமன்ற தடை உத்தரவை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டுள்ள அ.தா.உ.ச. தலைவர் சமன் ரத்னப்பிரிய, தனது தொழிற்சங்க உறுப்பினர்களை சமீபகாலமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடுத்தவில்லை.

பல்வேறு வடிவங்களில் தயார் நிலையில் இருக்கும் இந்த அரச அடக்குமுறையை, அரசாங்கம் மற்றும் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை வழிநடத்துவதன் மூலம் மட்டுமே தோற்கடிக்க முடியும். தொழிலாளர்களை போராட்டத்திற்கு இட்டுச் செல்வது முதலாளித்துவ ஆட்சியுடன் மோதலுக்கு வழிவகுக்கும் என்பதை நன்கு அறிந்துள்ள அவர்கள், அதைத் தடுக்கின்றனர். அவர்கள் அதை 'உறுப்பினர்களை நிர்வகிப்பது’ என்று அழைக்கிறார்கள்.

ஊதியம் மற்றும் வேலை நிலைமைகள் தொடர்பாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் வேலைநிறுத்தங்கள், பேரணிகள் மற்றும் பேரணிகளுடன் சுகாதார ஊழியர்கள் தங்கள் போராட்டங்களை மீண்டும் மீண்டும் முன்னெடுத்துள்ளனர். பெப்ரவரி 7 முதல் 16 வரை 65,000க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களை உள்ளடக்கிய தொடர் போராட்டத்தை காட்டிக் கொடுத்த தொழிற்சங்கத் தலைவர்கள், 'நெருக்கடியை' தீர்க்க தலையிடுமாறு ஜனாதிபதி இராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

உலகளாவிய தொற்றுநோயால் தீவிரமாக்கப்பட்டுள்ள ஆழமான பொருளாதார நெருக்கடியின் மத்தியில், தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு கோரிக்கையையும் சகித்துக் கொள்ள இராஜபக்ஷ அரசாங்கம் தயாராக இல்லை. இச்சூழலில், தொழிலாளி வர்க்கம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன ஒழிய குறையவில்லை. 'தற்போதைய சூழலில், ஊதிய உயர்வுக்கான கோரிக்கைகளை ஒத்திவைப்பதற்கு தொழிற்சங்கங்கள் முன் வந்துள்ளதன் மூலம், அவை, முதலாளித்துவ அரசாங்கம் மற்றும் முதலாளிகளின் தாக்குதல்களை தொழிலாளர்களை தாங்கிக்கொள்ள செய்துள்ளனர்.

தொழிற்சங்கங்களின் கூற்றுப்படி, இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது அதிக அழுத்தத்தை பிரயோகிப்பதன் மூலமோ, அல்லது ஜனாதிபதியிடம் முறையிடுவதன் மூலமோ, தொழிலாள வர்க்கம் தனது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியாது. உரிமைக்கான போராட்டத்தை அவர்கள் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவதன் மூலமும், அத்தகைய நடவடிக்கைக் குழுக்களின் சர்வதேச கூட்டணியின் மூலம் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஒற்றுமையை நிலைநாட்டுவதன் மூலமும் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

சுகாதார தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் இந்தப் போராட்டத்தை வழிநடத்துகின்றன.

உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய சுகாதார ஊழியர்கள், அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

யாழ்ப்பாண வைத்தியசாலையின் சுகாதார ஊழியர் ஒருவர் பின்வருமாறு கூறினார்: “அனைத்து தொழிற்சங்கங்களும் அவர்களின் நிகழ்ச்சி நிரலின் படியே செயற்படுகின்றன. முருத்தெட்டுவே ஆனந்தாவின் தொழிற்சங்கம் இராஜபக்ஷ அரசாங்கத்துடன் உள்ளது. அ.தா.உ.ச. ஆனது ஐ.தே.க. உடன் சேர்ந்து இருக்கின்றது. அவர்கள் உறுப்பினர்களை ஏமாற்றுகிறார்கள். அரசாங்கம் இனவாதத்தை தூண்டி தொழிலாளர்களை பிளவுபடுத்துகிறது. ஒன்றுபட்டு போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதே எமது தேவை. அதேபோன்று சில ஊடகங்களும் எமக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுகின்றன. கோவிட் 19 தொற்றை நேரடியாக நாம் எதிர்கொள்கிறோம். தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை கூட அரசாங்கம் வழங்குவதில்லை. பொருட்களின் விலை ஏற்றம் தாங்க முடியாதது.”

கண்டி தேசிய வைத்தியசாலையின் கதிரியக்க நிபுணர் ஒருவர் கூறியதாவது: “எங்களுக்கு தொழிற்சங்கங்கள் மீது இப்போது நம்பிக்கை இல்லை. தொழிற்சங்கத் தலைவர்கள் போராட்டங்ளைக் காட்டிக் கொடுத்து கிடைக்கும் வரப்பிரசாதங்களில் செல்வந்தர்கள் ஆகியுள்ளனர். தொழிற்சங்கங்களில் எந்த ஜனநாயக கலந்துரையாடலும் இல்லை. ஒரு போராட்டத்தின் ஆரம்பம், முடிவு, கோரிக்கைகள் மற்றும் கோஷங்களை அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். உறுப்பினர்கள் அவர்களது பிரேரணகளுக்கு கை தூக்க வேண்டும். எந்த ஒரு சுதந்திரமான கருத்து தெரிவிப்புக்கும் இடமில்லை. அத்தியாவசிய சேவைச் சட்டங்களுக்கு எதிராகப் போராடுவது ஒரு பிரதான விடயமாக இருந்தாலும், அது பற்றி எந்த தலையீடும் இல்லை.

“வாழ்வதற்கு தேவையான ஊதியத்துக்காகவே போராட வேண்டும். அன்றி ஆசிரியர்களை விட அதிக சம்பளத்திற்காக அல்ல. தொழிற்சங்கங்களை தொழிலாளர்களை தொடர்ந்தும் காட்டிக் கொடுக்க முடியாது. உறுப்பினர்களின் கோபம் விரைவில் வெடிக்கும். அப்போது நீங்கள் முன்வைக்கும் நடவடிக்கைக் குழு மாற்றாக உருவாகும். நான் சுகாதார நடவடிக்கை குழுவில் சேர விரும்புகிறேன். வேலைநிறுத்தம் காட்டிக்கொடுக்கப்பட்டது பற்றி உலக சோசலிச வலைத் தளத்தில் கட்டுரைகளை விநியோகிப்பதன் மூலம் எனது சக ஊழியர்களுக்கும் விழிப்பூட்டுகிறேன்,” என்று அவர் கூறினார்.

Loading