ரஷ்யா மீதான அமெரிக்க/நேட்டோ போரின் பின்னால் மத்திய கிழக்கு நட்பு நாடுகளை கொண்டு வர பிளிங்கென் நகர்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கென், மத்திய கிழக்கு தலைவர்களுடன் ஒரு அசாதாரண சந்திப்பை நடத்துவதற்காக வார இறுதியில் மத்திய கிழக்குக்கு சென்றார்.

ஈரானுடனான பிராந்தியத்தின் உறவுகளைப் பற்றி விவாதிப்பதே அவரது வெளிப்படையான நோக்கமாக இருந்தது, ஆனால் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க/நேட்டோ போர் உந்துதலுக்கு முழு ஆதரவைப் பெறுவதே அவரது முக்கிய பணியாக இருந்தது.

நெகேவ் உச்சிமாநாட்டில் பிளிங்கென் (மூன்றாவது வலதுபுறம்) (Source: Secretary Antony Blinken Twitter)

அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), பஹ்ரைன், மொராக்கோ மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர், அவர்கள் அனைவரும் 2020 இல் இஸ்ரேலுடன் ஆபிரகாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர், கூட்டத்தை இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் தொகுத்து வழங்கினார். இது இஸ்ரேலின் நெகேவ் பாலைவனத்தில் உள்ள Sde Boker நகரில் நடைபெற்றது. இஸ்ரேலின் புதிய நட்பு நாடுகளுக்கு ஜெருசலேம் மிகவும் சர்ச்சைக்குரிய இடமாக இருந்திருக்கும், இன்னும் பல தசாப்தங்களாக நீடிக்கும் இஸ்ரேல்/பாலஸ்தீன மோதலுக்கு, 'இரு நாடுகளின் தீர்வுக்கு' உறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நெகேவ் உச்சிமாநாடு அமெரிக்க மேலாதிக்கத்தை வலியுறுத்தும் முயற்சியில் ரஷ்யாவிற்கு எதிரான பைடென் நிர்வாகத்தின் போர் உந்துதலில், அதன் நீண்டகால மத்திய கிழக்கு நட்பு நாடுகள் உறுதியாக இல்லை என்ற அமெரிக்க கவலையின் மத்தியில் நடைபெற்றுள்ளது.

செவ்வாயன்று, பிளிங்கென் மொரோக்கோவின் மன்னர் ஆறாம் முகமது மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் ஆகியோரை ரபாத்தில் சந்தித்தார். UAE பல ரஷ்ய தன்னலக்குழுக்களை நடத்துகிறது, ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கியுள்ளது, ஆரம்பத்தில் ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பைக் கண்டிக்க மறுத்தது, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானத்தில் இருந்து விலகி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனின் அழைப்புகளை நிராகரித்தது. ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரகசியப் போரில் இருந்து ரஷ்ய உதவியுடன் தப்பிய சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை, அபுதாபிக்கு அரசுமுறைப் பயணமாக அது வரவேற்றது வாஷிங்டனைக் கோபப்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களின் பாதுகாவலராக பல ஆண்டுகளாக செயல்பட்ட போதிலும், டெல் அவிவ் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த தீவிரமாக முயன்றது.

இஸ்ரேல், ரஷ்யா மற்றும் உக்ரேன் ஆகிய இரு நாடுகளிலிருந்தும் பல குடியேறியவர்களின் தாயகமாக உள்ளது, அதன் உயர் தொழில்நுட்பத் வேலைகளுக்கு மலிவான கூலி உழைப்பின் ஆதாரமாக அதை நம்பியிருக்கிறது. உக்ரேனில் அமெரிக்க/நேட்டோ போர் உந்துதலை முறையாக ஆதரித்துள்ளது, ஆனால் பென்னட் தனது அமைச்சரவையை இந்த விவகாரத்தில் மௌனமாக இருக்கும்படி கட்டளையிட்டதுடன், 'ரஷ்யா' அல்லது 'புட்டின்' என்று பகிரங்கமாக குறிப்பிட மறுத்தது அல்லது உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை விமர்சிக்க மறுத்தது. மூத்த அமெரிக்க அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இஸ்ரேலை 'மதில்மேல் உட்கார்ந்து கொண்டிருப்பதாக' விமர்சித்துள்ளனர்.

அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளரான விக்டோரியா நுலாண்ட், பென்னட் தனது 'ஆறுதல் மண்டலத்திலிருந்து' வெளியே வருமாறும், புட்டினுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளில் சேரும்போது உக்ரேனுக்கு இராணுவ உதவிகளை வழங்குமாறும் அழைப்பு விடுத்தார், இஸ்ரேல் 'புட்டினின் போர்களைத் தூண்டும் அழுக்குப் பணத்திற்கான கடைசி புகலிடமாக மாறுவதை' அமெரிக்கா விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேல் உக்ரேனுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பியுள்ள நிலையில், அமெரிக்கா தயாரித்த விமான எதிர்ப்பு ஸ்டிங்கர் ஏவுகணைகள் அல்லது ட்ரோன்கள் உட்பட ஆயுதங்களை உக்ரேனுக்கு அனுப்ப அல்லது இஸ்ரேலிய ஆயுத நிறுவனமான NSO இன் Pegasus ஸ்பைவேர் மூலம் அதை வழங்குமாறு கியேவின் கோரிக்கைகளை அது மறுத்துவிட்டது. உக்ரேன் ஆக்கிரமிப்பிற்குப் பின்னர் புட்டினைச் சந்தித்த முதல் மேற்கத்தியத் தலைவர் என்ற முறையில் மாஸ்கோவிற்கு ஒரு பறக்கும் விஜயம் செய்தாலும், ரஷ்யாவை பகைத்துக் கொள்வதைத் தவிர்க்க பென்னட் முயன்றார். உக்ரேனுக்கு இஸ்ரேல் இராணுவ உதவியை வழங்குவதை விட நிதித் தடைகளில் இணைவது முக்கியமானது என நுலாண்ட் வலியுறுத்திய போதிலும், அவர் ரஷ்யா அல்லது ரஷ்ய தன்னலக்குழுக்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க மறுத்துவிட்டார்.

ஒரு உக்ரேனிய அதிகாரி, 'இஸ்ரேல், உக்ரேனுக்கு இராணுவ உதவியை வழங்குவதைத் தவிர்க்க அல்லது ரஷ்யா மீதான தடையில் சேருவதை நியாயப்படுத்த' பென்னட் தனது மத்தியஸ்தர் நிலையை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.
அதேவேளை போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நிபந்தனைகளை ஏற்குமாறு உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கிக்கு அழுத்தம் கொடுத்தார் என்றார் — பென்னட் இந்த கூற்றை மறுத்துள்ளார்.

30 முதல் 40 ரஷ்ய தன்னலக்குழுக்கள் இஸ்ரேலில் வசிக்கின்றனர், அங்கு பலர் இஸ்ரேலிய குடியுரிமை பெற்றுள்ளனர். புதிய புலம்பெயர்ந்தோர் என்பதால், அவர்கள் 10 வருட காலத்திற்கு தங்கள் வருமான மூலத்தைப் பற்றி தெரிவிக்க வேண்டியதில்லை, அதே சமயம் கல்வி, கலாச்சார மற்றும் பிற பொது நிறுவனங்களுக்கான தொண்டு நன்கொடைகள் பொது அரங்கில் அவர்களின் நலன்களைப் பாதுகாக்க உதவுகின்றன. உண்மையில், இஸ்ரேலிய-ரஷ்ய கோடீஸ்வரரான ரோமன் அப்ராமோவிச்சை, பொருளாதாரத் தடைகளில் சேர்க்க வேண்டாம் என அமெரிக்காவிடம் செய்த முறையீடு தோல்வியடைந்த பின்னர், இஸ்ரேலின் ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகமான யாட் வாஷெம் (Yad VaShem), அப்ராமோவிச்சிடம் இருந்து வந்த மில்லியன் கணக்கான டாலர்களை நிராகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இஸ்ரேலின் தற்போதைய கூட்டணி அரசாங்கத்தில் குறைந்தது ஐந்து கேபினட் அமைச்சர்கள், பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ், நாடாளுமன்றத்தின் சபாநாயகரும் சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் அரசியல் கைதியுமான யூலி எடெல்ஸ்டீன், நிதியமைச்சர் அவிக்டோர் லீபர்மேன், வீட்டுவசதி அமைச்சர் ஜீவ் எல்கின் மற்றும் நீதி அமைச்சர் கிதியோன் சார் உட்பட பலருக்கு இஸ்ரேலின் ரஷ்ய தன்னலக்குழுக்களுடன் தொடர்பு உள்ளது.

இஸ்ரேல், ரஷ்யாவுடனான தனது வர்த்தகம் மற்றும் முதலீட்டு இணைப்புகளை பெரிதும் நம்பியுள்ளது, ஆண்டுதோறும் சுமார் 1 பில்லியன் டாலர்கள் ரஷ்ய நிலக்கரி, கோதுமை, வைரங்கள் மற்றும் பிற பொருட்களை இறக்குமதி செய்கிறது, மேலும் 2020 இல் ரஷ்யாவிற்கு சுமார் 718 மில்லியன் டாலர்கள் விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.

முக்கியமாக, இஸ்ரேல் சிரியா மீதான அதன் நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை ரஷ்யாவுடன் ஒருங்கிணைக்கிறது, சுன்னி வளைகுடா நாடுகள், துருக்கி மற்றும் சிஐஏ ஆகியவற்றால் ஆயுதம் ஏந்திய மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அசாத் ஆட்சியைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்த லெபனானின் ஹெஸ்பொல்லா மற்றும் ஈரானியப் படைகளுக்குச் சொந்தமான அரசாங்க நிலைகள் மற்றும் போராளிகள் மற்றும் வசதிகளைத் தாக்குகிறது.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்கு டெல் அவிவ் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிப்பதானது, பாலஸ்தீனியப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை எதிர்க்கும் பாலஸ்தீனியத் தலைமையிலான புறக்கணிப்பு, விலக்கல் மற்றும் தடைகள் இயக்கம் மற்றும் அதன் 15 ஆண்டுகால முற்றுகை மற்றும் மேற்குக் கரையின் இராணுவ ஆக்கிரமிப்பு உட்பட 2014 இல் காசா மீதான இஸ்ரேலின் கொடூரமான தாக்குதலின் போது சந்தேகத்திற்குரிய குற்றங்களை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிரான அதன் சொந்த இராஜதந்திர பிரச்சாரங்களுடன் முரண்படுவதாக இருக்கும். இந்த காரணங்களுக்காகவே, முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெத்தெனியாகு, பிரேசில், ஹங்கேரி, உக்ரேன், இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட தீவிர வலதுசாரி மற்றும் எதேச்சாதிகார அரசாங்கங்களுடன் ஆதரவுக்காகவும் வர்த்தகத்திற்காகவும் திரும்பியிருந்தார்.

வளைகுடாவில் உள்ள பெட்ரோ-மன்னர்களும் பைடென் நிர்வாகத்தின் போர் உந்துதலில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் சம்பவங்களால் புண்படுத்தப்பட்டிருந்தனர்:

  • 2011 இல் எகிப்திய புரட்சியின் போது எகிப்திய ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கிற்கு வாஷிங்டனின் ஆதரவு இல்லாதது.
  • சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான பினாமிப் போரை வெளிப்படையாக நடத்தியதில் அதன் தோல்வி.
  • யெமனில் ரியாத்தின் வெறுக்கப்பட்ட பொம்மையை வீழ்த்திய ஹூதிகளுக்கு எதிரான சவூதி தலைமையிலான போருக்கு வெளிப்படையான ஆதரவின்மை, ஜனாதிபதி அப்த்ரப்பு மன்சூர் ஹாடி, அந்த நாட்டை உலகின் மிகப்பெரிய மனிதாபிமான பேரழிவாக மாற்றியிருந்தார்.
  • ஈரான் மற்றும் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டி, 2017 இல் கட்டாருடன் வளைகுடா நாடுகளின் பகிரங்கப் பிளவில் இருந்து அது விலகி இருந்தமை.
  • 2018 ஆம் ஆண்டு சவூதி ஆட்சியின் ஆதரவாளராக இருந்து எதிர்ப்பாளராக மாறிய ஜமால் கஷோகியை இஸ்தான்புல் தூதரகத்தில் சவூதி அரேபிய ஆட்சியாளர் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை கொலைக்கு உத்தரவிட்டதற்காக அன்னியராக நடத்தியமை.

மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக:

  • சீனா மற்றும் ரஷ்யாவுடனான அதன் 'பெரும் சக்தி போட்டி' கொள்கைக்கு ஆதரவாக, பல ஆண்டுகளாக லெபனான், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள பிராந்திய போர்களில் சவூதி அரேபியாவும் ஈரானும் எதிரெதிர் தரப்பினரை ஆதரித்து வந்ததில் இருந்து ஜனாதிபதி ஜோ பைடெனின் வெளிப்படையான அரசியல் விலகல்; மற்றும்
  • ஈரானுடனான 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க அவரது முயற்சிகளை, அது அவர்களின் சொந்த அமைதியற்ற ஷியா மக்களை ஆதரிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

வளைகுடா நாடுகள் அமெரிக்காவை நம்பியிருப்பதை முடிவுக்குக் கொண்டு வர முனைகின்றன, மேலும் வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்காக ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கி திரும்பியுள்ளன. உலகச் சந்தையில் விலையைக் குறைக்க எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை அவர்கள் நிராகரித்துள்ளனர்.

இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையை (IRGC) ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்ததை நீக்க வேண்டும் என்ற ஈரானின் கோரிக்கைக்கு வாஷிங்டன் உடன்படாது என அமெரிக்கா அவர்களை சமாதானப்படுத்த முயன்றது. அமெரிக்காவும் தெஹ்ரானை அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்காது.

உக்ரேன் போரின் பேரழிவுகரமான பொருளாதார தாக்கத்தின் மத்தியில், ஏற்கனவே அதிருப்தி, ஏழ்மை மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றால் கொதித்தெழுந்து கொண்டிருக்கும் ஒரு பிராந்தியத்தில் உக்ரேன் மற்றும் ரஷ்யாவிலிருந்து கோதுமை மற்றும் பிற பொருட்களின் பற்றாக்குறையால் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கையில், அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்குமிடையே இடைவெளி அதிகரித்து வருகிறது.

மேற்குக் கரையில் பாலஸ்தீனிய அதிகாரசபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸைச் சந்தித்த பிளிங்கென், பின்னர் ரபாத்திற்குச் சென்றார், அங்கு அவர் மேற்கு சஹாராவின் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாடினார். அங்கு, செவ்வாயன்று UAE இன் நடைமுறை ஆட்சியாளருடனான அவரது சந்திப்பில், யெமனில் ஈரானுடன் இணைந்த ஹூதி குழுவின் தாக்குதல்களைத் தடுக்க வாஷிங்டனின் உறுதியை வளைகுடா மன்னர்களுக்கு உறுதியளிக்க முயன்றார்.

அடுத்த நாள் அண்டை நாடான அல்ஜீரிய தலைநகர் அல்ஜியர்ஸுக்கான தனது பயணத்தை பற்றி முன்கூட்டியே பேசுகையில், 'இந்த [போர்] மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள மக்கள் மீது சுமத்தும் சுமையை எவ்வாறு குறைப்பது' என அவர் கலந்துரையாட இருப்பதாக கூறினார். இதன் மூலம் எரிசக்தி தேவைகளுக்காக தனது கூட்டாளிகள் மாஸ்கோவில் சார்ந்திருப்பதை குறைக்கும் வகையில், எரிவாயு விலையை குறைக்க முயற்சிக்கிறது. இது அல்ஜீரியாவை ரஷ்யாவிற்கு மாற்று எரிவாயு விநியோகஸ்தராக மாற்ற முயற்சிப்பதற்கான குறியீடாக இருந்தது.

Loading