போர் எதிர்ப்பாளர்களைத் தணிக்கை செய்வதை நிறுத்து!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான நேட்டோ பினாமிப் போரில் ஜேர்மன் அரசாங்கம் பங்கேற்பதை எதிர்த்து ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்ட காணொளியைச் சனிக்கிழமை பேஸ்புக் நீக்கி விட்டது.

“மூன்றாம் உலகப் போர் வேண்டாம்! உக்ரேன் போர், நேட்டோவின் ஆக்ரோஷம் மற்றும் ஜேர்மன் மீள்ஆயுதமேந்தலுக்கு எதிராக!” என்று தலைப்பிட்டிருந்த அந்த காணொளி, உக்ரேன் மோதலை வரலாற்று அரசியல் உள்ளடக்கத்தில் நிறுத்துகிறது. அது நீக்கப்படுவதற்கு முன்னரே அதை 20,000 பேர் பார்த்திருந்தனர்.

அந்த காணொளியை உருவாக்கிய ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) பேஸ்புக்கின் நடவடிக்கைகளை விளக்குமாறு கோரி அதற்குக் கடிதம் எழுதியது. இதுவரை SGP க்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

ரஷ்யர்களுக்கு எதிராக வன்முறைச் செயல்களுக்குப் பகிரங்கமாக அழைப்பு விடுத்த சில நாடுகளின் பயனர்களை அனுமதிக்கும் வகையில், இந்த போரின் ஆரம்பத்தில், அதன் வழிகாட்டி நெறிமுறைகளை மாற்றிய ஒரு நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு அப்பாவித்தனமான விளக்கம் எதுவும் இருக்க முடியாது. இது, போர் மற்றும் இராணுவவாதத்தை எதிர்க்கும் எவரொருவருக்கு எதிராகவும் திருப்பி விடப்பட்ட அரசியல் தணிக்கை நடவடிக்கையாகும்.

உக்ரேன் போர், 'ரஷ்ய எதேச்சாதிகாரத்திற்கு' எதிராக 'மேற்கத்திய ஜனநாயகத்தை' பாதுகாப்பதற்கானது என்ற உத்தியோகபூர்வ சொல்லாடலை பேஸ்புக்கின் நடவடிக்கைகள் ஒரு பொய் பிரச்சாரமாக அம்பலப்படுத்துகின்றன. உண்மையில் ஏகாதிபத்திய நாடுகளின் ஆளும் வர்க்கம் அதிகரித்தளவில் அடக்குமுறை நடவடிக்கைகளை நாடி வருகிறது, ஏனென்றால் பணக்காரர்களின் நலனுக்கேற்ற அதன் கொலைபாதக கொள்கைக்குத் தொழிலாள வர்க்கத்தில் எதிர்ப்பு அதிகரித்து வருவதைக் குறித்து அது அஞ்சுகிறது.

போர் எதிர்ப்பாளர்களை அடக்குவது ஜேர்மனியில் ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பிராங்கோ-ஜேர்மன் போரின் போது, இரண்டு தொழிலாளர் தலைவர்கள் ஆகுஸ்ட் பெபல் (August Bebel) மற்றும் வில்ஹெல்ம் லிப்னெக்ட் (Wilhelm Liebknecht) ஆகியோர் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் இணைக்கப்படாமல் சமாதானத்திற்கு அழைப்பு விட்டதற்காக 1870 டிசம்பரில் சிறையில் அடைக்கப்பட்டனர். முதலாம் உலகப் போரின் போது, ரோசா லுக்செம்பேர்க் மற்றும் கார்ல் லிப்க்னெக்ட் ஆகியோர் நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்தனர். ஜேர்மன் இராணுவவாதத்தின் முக்கிய எதிர்ப்பாளரான கார்ல் வான் ஒஸிட்ஸ்கி (Carl von Ossietzky) ஏகாதிபத்திய இராணுவம் (Reichswehr) இரகசியமாக மீள்ஆயுதமேந்த செய்யப்பட்டதை அம்பலப்படுத்தியதற்காக, ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, 1932 இல் 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான நாஜி பயங்கரவாதத்தின் மற்றொரு ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், நாஜிக்கள் ஒரு புதிய உலகப் போரைத் தொடங்கினர், இது மனித வரலாற்றில் மிகப்பெரிய குற்றங்களுக்கு வழிவகுத்தது.

நேட்டோ சக்திகள் நடைமுறையளவில் போரில் இருப்பதால், ஜேர்மனியின் போர் எதிர்ப்பவர்கள் இப்போது மீண்டும் தணிக்கை செய்யபடுகிறார்கள். அந்த தணிக்கை செய்யப்பட்ட காணொளி காட்டுவது போல, நேட்டோ நீண்ட காலமாகவே உக்ரேனில் ஒரு போர்க் கட்சியாக இருந்து வருகிறது. அது வேண்டுமென்றே பிற்போக்குத்தனமான ரஷ்யப் படையெடுப்பைத் தூண்டிவிட்டதுடன், ரஷ்யாவுக்கு எதிரான அதன் ஆக்ரோஷமான அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. 'ரஷ்யாவுடனான நேட்டோவின் மோதலை முன்னெடுப்பதற்காக உக்ரேனிய மக்கள் பகடைக் காய்களாக பலியிடப்படுகிறார்கள். விரைவில் ஓர் அணுஆயுத போருக்கு இட்டுச் செல்லக்கூடிய இந்த மோதல், இப்போது மூச்சடைக்க வைக்கும் வேகத்தில் தீவிரமடைந்து வருகிறது,” என்று அந்த காணொளி கூறுகிறது.

அந்த காணொளி நீக்கப்பட்ட வாரயிறுதியில், அமெரிக்க ஜனாதிபதி பைடென் 'தசாப்தங்கள்' நீடிக்கும் 'சண்டை' குறித்து அறிவித்ததுடன், ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை செய்வதே அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் இலக்கு என்பதை பகிரங்கமாக குறிப்பிட்டார். ஜேர்மன் சான்ஸ்லர் ஓலாஃப் ஷோல்ஸ் ஞாயிறுக்கிழமை தொலைக்காட்சியில் ஜேர்மன் இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை மூன்று மடங்காக அதிகரிப்பதைப் பாதுகாத்த போது இதேபோன்ற ஒரு கருத்தை வழங்கினார், ஜேர்மனி மீண்டும் ரஷ்யாவுக்கு எதிராக போர் நடத்தக் கூடியதாக இருக்க வேண்டும் என்றவர் கூறினார். நேட்டோ சக்திகள் உலகப் போரை நோக்கி தலைதெறிக்க ஓடும் வேகம் மூச்சடைக்க வைக்கிறது.

அந்த காணொளி உத்தியோகபூர்வ பிரச்சாரத்தை உடைத்து, இந்த போரின் பின்னணி மற்றும் சூழ்நிலைகளை விளக்குவதால், அது ஆளும் உயரடுக்கை உறுத்துகிறது. முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளே ஏகாதிபத்திய சக்திகளது போர்க் கொள்கையின் முக்கிய காரணங்கள் என்பதை அது எடுத்துக் காட்டுகிறது.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், அமெரிக்கா அதன் உலகளாவிய மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயன்றது. ஈராக், யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பல நாடுகளின் மீது நடத்தப்பட்ட எண்ணற்ற போர்களில், அமெரிக்க மேலாதிக்கத்திற்கான எந்தவொரு அச்சுறுத்தலும் அகற்றப்படுவதாக இருந்தது என்பதை அந்த காணொளி விளக்கியது. ஜேர்மன் ஏகாதிபத்தியம் அதன் பங்கிற்கு, இராணுவவாதத்திற்குத் திரும்பி எதிர்வினையாற்றியது மற்றும் இப்போது பேரார்வத்துடன் தன்னை ஆயுதமயப்படுத்தி வருகிறது. இந்தக் கொள்கையின் விளைவு தான் மிகக் கடுமையான மூன்றாம் உலகப் போர் அபாயமாக உள்ளது.

போருக்கு எதிரான போராட்டத்திற்கு அதன் மூலவேரான முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம் தேவைப்படுகிறது என்று அந்த காணொளி இறுதி செய்தது. 'முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கத்தால் மட்டுமே ஒரு பேரழிவைத் தடுக்க முடியும்' என்று அது விளக்குகிறது.

போருக்கு எதிரான இத்தகைய ஒரு சோசலிச முன்னோக்கு ஜேர்மனியில் தடுக்கப்பட்டு வருகிறது. எங்கும் பரவி உள்ளதும் மற்றும் காதைச் செவிடாக்கும் போர் பிரச்சாரத்தை எதிர்ப்பவர்கள் மவுனமாக்கப்படுகிறார்கள். ஆனால் வரலாற்றில் எப்போதும் போல, இத்தகைய ஒரு எதிர்வினை பலத்தின் வெளிப்பாடு அல்ல, மாறாக பலவீனத்தின் வெளிப்பாடாகும். போர் எதிர்ப்பாளர்கள் மீதான தணிக்கை, போர் வெறிக்கு தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் எதிர்ப்புக்குக் காட்டப்படும் ஓர் அவநம்பிக்கையான விடையிறுப்பாகும்.

போர் முனைவானது எல்லா சமூக முரண்பாடுகளையும் அதிகப்படுத்துகிறது. உக்ரேன் போர் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் விளைவாக உணவு மற்றும் எரிபொருள் விலைகள் ஏற்கனவே வேகமாக அதிகரித்து வருகின்றன. விநியோகச் சங்கிலிகள் தொந்தரவுக்கு உள்ளாவதால் ஜேர்மன் தொழிற்துறையில் தற்காலிக பணிநீக்கங்கள் மற்றும் குறைப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆளும் வர்க்கம் இந்த பெருந்தொற்றில் அதன் 'உயிரை விட இலாபங்களே' என்ற ஈவிரக்கமற்ற கொள்கையைத் தீவிரப்படுத்துகிறது, கோவிட்-19 கட்டுக்கடங்காமல் பரவட்டும் என்று விட்டுவிட்டு, அரசாங்கங்கள் போரை நோக்கி திரும்பி இருப்பதை இது காண்கிறது. இத்தகைய ஒரு கொள்கை ஜனநாயக உரிமைகளுக்குப் பொருந்தாது, இதனால் தான் தணிக்கை மற்றும் ஒடுக்குமுறை அதிகரிக்கப்படுகிறது.

தொழில்நுட்ப நிறுவனங்கள் மிகப் பெரிய ஏகாதிபத்திய சக்திகளின் அரசாங்கங்கள் மற்றும் அரசு எந்திரத்துடன் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன. ஃபேஸ்புக் மட்டுமே அதன் தளத்தில் வரும் பதிவுகளைக் கண்காணிக்கவும் தணிக்கை செய்யவும், 20,000 க்கும் அதிகமான பணியாளர்களை அதன் பாதுகாப்பு மற்றும் அமலாக்கக் குழுவில் நியமித்துள்ளது. அவர்களில் பலர் 'முன்னாள் உளவுத்துறை மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள்' என்பதை ஜனவரி 2018 இல் பேஸ்புக்கின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தலைவர் மொனிக்கா பிகெர்ட் ஒப்புக் கொண்டார்.

ஜேர்மனியில், பேஸ்புக்கில் உள்ள கருத்துக்களைக் கண்காணிக்க 1,000க்கும் அதிகமானவர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். அரசாங்கத்துடனான ஒத்துழைப்பு குறிப்பாக நெருக்கமாக உள்ளது. வலையமைப்பு அமலாக்கச் சட்டத்தின் மூலம் (Network Enforcement Act), கூட்டாட்சி அரசு மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை நடைமுறையளவில் இணையத்தின் நீதிபதிகளாக மாற்றியுள்ளது, இவை கருத்துக்களைத் தணிக்கை செய்வதைச் சுதந்திரமாக முடிவு செய்து கொள்வதுடன், அதிக அபராதம் விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தலுடன் குறைவாக அல்ல அதிக கருத்துக்களை நீக்கவும் கூட ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த சட்டத்தின் அடிப்படையில் ஏற்கனவே நூறாயிரக் கணக்கான பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

SGP இன் போர்-எதிர்ப்பு காணொளியை தற்போது தணிக்கை செய்திருப்பது, SGPயையும், அதனுடன் சேர்ந்து, எந்தவொரு சோசலிச முன்னோக்கையும் குற்றகரமாக்கும் கூட்டாட்சி அரசாங்கத்தின் முயற்சியுடன் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது.

2018 இல் மத்திய உள்துறை அமைச்சகம், ஜேர்மனியின் இரகசிய சேவையான Verfassungsschutz இன் அறிக்கையில் முதல்முறையாக SGP ஐ இணைத்து, கட்சியை இடதுசாரி தீவிரவாத கட்சியாக இழிவுபடுத்தியது. SGP இன் 'ஜனநாயக, சமத்துவ, சோசலிச சமுதாயத்திற்கான போராட்டம்' மற்றும் ''ஏகாதிபத்தியம்' மற்றும் 'இராணுவவாதம்' எனக் கூறப்படுவதற்கு எதிரான கிளர்ச்சி' ஆகியவை அரசியலமைப்புக்குப் புறம்பானவை என்ற அடிப்படையில் அந்த நடவடிக்கை பின்னர் நியாயப்படுத்தப்பட்டது. பேர்லின் நிர்வாகத்துறை நீதிமன்றம் கடந்தாண்டு டிசம்பரில், Verfassungsschutz அறிக்கையில் SGP ஐ உள்ளடக்கியதற்கு எதிராக அது கொண்டு வந்த ஒரு சட்ட மனு மீதான அதன் முதல்-நிலை தீர்ப்பில் இந்த ஜனநாயக விரோத வாத நிலைப்பாட்டைப் பின்பற்றியது. சில மாதங்களுக்குப் பின்னர், ஏற்கனவே இராணுவவாத எதிர்ப்பு காணொளிகள் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன.

இத்தகைய அபிவிருத்திகள் ஜேர்மனியில் மட்டும் இல்லை. 2017 இல், கூகுள் அறிவிக்கையில் எதிர்கால தேடல் முடிவுகளில் 'உத்தியோகபூர்வத் தளங்களுக்கே' அது முன்னுரிமை வழங்க இருப்பதாக அறிவித்தது. அதே நேரத்தில், சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு வலைத் தளங்கள், குறிப்பாக உலக சோசலிச வலைத் தளம், தணிக்கை செய்யப்பட்டு தேடுபொறியின் தேடல் முடிவுகளிலிருந்து தடை செய்யப்பட்டன. ICFI இன் பக்கங்கள் மற்றும் உள்ளடக்கத்தை முடக்க கடந்தாண்டு பேஸ்புக் இரண்டு முறை முயன்றது, ஆனால் பெரும் எதிர்ப்பு எழுந்ததால் அதன் நடவடிக்கைகளைத் திரும்ப பெற நிர்பந்திக்கப்பட்டது.

எதேச்சதிகார மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் ICFI இன் சோசலிச முன்னோக்கை மட்டும் இலக்காகக் கொண்டிருக்கவில்லை, மாறாக கொள்கை ரீதியான ஒவ்வொரு போரை எதிர்ப்பாளரையும் இலக்கில் வைத்துள்ளன. நேட்டோ அதிகாரங்கள் இழைத்த போர்க்குற்றங்களை வெளிக்கொணர்ந்த ஒரு துணிச்சலான பத்திரிகையாளரான ஜூலியன் அசான்ஜ், உச்சபட்ச பாதுகாப்பு கொண்ட பெல்மார்ஷ் சிறையில் தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார், மேலும் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டால் மரணமடையும் அச்சுறுத்தலில் உள்ளார். அமெரிக்க தலைமையிலான போர்களுக்கு ஓர் எதிர்ப்பாளராக தனக்கென ஒரு பெயர் எடுத்துள்ள விமர்சனப்பூர்வ பத்திரிகையாளர் கிறிஸ் ஹெட்ஜஸ் (Chris Hedges), யூடியூப்பில் 'Onn Contact” என்ற அவர் நிகழ்ச்சிகளின் அனைத்து பாகங்களும் அவருக்குத் தெரிவிக்கப்படாமலேயே அழிக்கப்பட்டு விட்டதாக திங்கட்கிழமை அறிவித்தார்.

தணிக்கை மற்றும் ஈவிரக்கமற்ற போர்க் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் மூன்றாம் உலகப் போருக்கு எதிரான பாரிய எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அது தொழிலாள வர்க்கத்தில் நிலவும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான ஆழ்ந்த விரோதப் போக்கிற்கு ஒரு குரலை மற்றும் ஒரு சோசலிச முன்னோக்கை வழங்க வேண்டும். இந்தக் கட்டுரையைப் பரவலாகப் பரப்புமாறும், எல்லா சமூக ஊடக சேனல்களிலும் தணிக்கைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்குமாறும் நாங்கள் எங்கள் வாசகர்கள் அனைவரையும் உறுதியாக வலியுறுத்துகிறோம். பேஸ்புக் மூலம் தணிக்கை செய்யப்பட்ட காணொளியை விநியோகிக்க #defendSGP, #StopCensoringSocialism மற்றும் #SpeakOutAgainstWW3 என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தவும்.

Loading