பிரான்ஸ் முழுவதும் வேலைநிறுத்த அலைக்கு மத்தியில், ரஷ்யாவிற்கு எதிராக மீண்டும் ஆயுதம் ஏந்துமாறு மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்களன்று, ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பிரான்சை போர்க்கால அடிப்படையில் நிறுத்தவும், இராணுவ செலவினங்களை அதிகரிக்கவும், தொழிலாளர்கள் மீது வேகத்தை திணிக்கவும் உறுதியளித்தார்.

பாரிஸில் நடந்த யூரோஸட்டோரி (Eurosatory) இராணுவ கண்காட்சி நிகழ்ச்சியில் பேசிய மக்ரோன், பிரான்சும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) 'போர் பொருளாதாரத்தில் உள்ளன [அதற்காக] நாம் நிரந்தரமாக நம்மை ஒழுங்கமைக்க வேண்டும்' என்றார். உக்ரேனில் ரஷ்யாவுடனான நேட்டோவின் போரை மேற்கோள் காட்டி, 'தற்போதைய புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு இராணுவ வரவு-செலவுத் திட்ட சட்டத்தின் மறுமதிப்பீட்டை வரும் வாரங்களில் மேற்கொள்ளுமாறு நான் [பாதுகாப்பு] அமைச்சகம் மற்றும் பொது ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்' என்றார்.

பிரான்சின் இராணுவ வரவு-செலவுத் திட்டமான 40.4 பில்லியன் யூரோக்கள் 2025 ஆம் ஆண்டளவில் 50 பில்லியன் யூரோக்களாக அதிகரிக்கும் என மக்ரோன் கூறினார்: “நாம் கடந்து வரும் ஆழமான மாற்றங்களுக்கு எதிர்வினையாற்ற இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. இந்த முயற்சிகளின் அவசரத்தை சந்தேகிக்கும் எவரும் மீண்டும் உக்ரேனைப் பார்க்க வேண்டும், அதன் வீரர்கள் தரமான ஆயுதங்களைக் கோருகிறார்கள் மற்றும் எங்களிடமிருந்து பதிலுக்கு தகுதியானவர்கள். (...) நாங்கள் முதலீடு தொடர்பான முடிவுகளை எடுப்போம், அவற்றுடன் செல்லும் கோரிக்கைகளையும் முன்னெடுப்போம்.'

வேலைநிறுத்தங்கள் பிரான்ஸ் முழுவதும் பரவிய நிலையில், ஏப்ரலில் நவ-பாசிச வேட்பாளர் மரின் லு பென்னுக்கு எதிராக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்ற சிறிது நேரத்திலேயே, ரஷ்யாவுடனான நேட்டோ போருக்கான தனது ஆதரவை மக்ரோன் இரட்டிப்பாக்குகிறார். மருத்துவமனை மற்றும் விமான நிலையத் தொழிலாளர்கள் கடந்த வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர், மேலும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றால் அதிகரித்து வரும் கோபத்திற்கு மத்தியில் வெகுஜன போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் லாரி ஓட்டுனர்கள் அடுத்த வாரம் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். இந்த வார இறுதியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் முதல் சுற்றில் ஜோன்-லூக் மெலோன்சோனின் புதிய ஜனரஞ்சக சுற்றுச்சூழலியல் மற்றும் சமூக ஒன்றியம் (NUPES) மூலம் மக்ரோனின் கட்சி இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

பிரான்சின் 'செல்வந்தர்களின் ஜனாதிபதி' எப்படி ஒரு அவநம்பிக்கையான, வெறுக்கப்படும் அரசாங்கம், உள்நாட்டில் வர்க்கப் போராட்டத்தை கழுத்தை நெரிப்பதற்கு வெளிநாடுகளில் இராணுவ சாகசங்களைப் பயன்படுத்துகிறது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணத்தை வழங்குகிறார். உக்ரேனில் ரஷ்யாவுடன் நேட்டோ தொடங்கியுள்ள போரைப் பயன்படுத்தி, இராணுவச் செலவு அதிகரிப்பு, 80 பில்லியன் யூரோக்கள் சமூக வெட்டுக்கள், மற்றும் மூலோபாயத் தொழில்களில் தொழிலாளர்கள் மீது வேகத்தை சுமத்துதல் போன்ற பிற்போக்குத்தனமான நிகழ்ச்சி நிரலை நியாயப்படுத்த மக்ரோன் முயற்சிக்கிறார்.

மக்ரோன் பேசியது போல், இராணுவ திட்டமிடல் அதிகாரிகள் Le Monde க்கு ஒரு கடுமையான புதிய சட்டத்தின் வரைவுகளை வெளிப்படுத்தினர், இது தொழில்துறை உற்பத்தியை கோருவதற்கு அரசை அனுமதிக்கிறது மற்றும் பாதுகாப்பு தொடர்பான எந்த தொழிலிலும் வேலையின் வேகத்தை ஆணையிடுகிறது. ஆயுதங்களுக்கான பொது இயக்குநரகம் (DGA) இத்திட்டத்தை Thales அல்லது Dassault போன்ற பெரிய பிரெஞ்சு பாதுகாப்பு நிறுவனங்களுடனும் அவற்றின் உதிரி பாகங்கள் வழங்குபவர்களுடனும் ஒருங்கிணைக்கிறது.

Le Monde இதை விவரித்தது, 'பிரான்ஸ் முறையாக போரில் ஈடுபடாவிட்டாலும், சட்டம் தற்போது குறிப்பிடுவது போல, பொதுமக்கள் நிறுவனங்களின் பொருள் அல்லது திறன்களை கோருவதற்கு அனுமதிக்கும் ஒரு மசோதா. … எடுத்துக்காட்டாக, பாதுகாப்புத் துறையில் வேலை செய்யாத துல்லியமான இயக்கவியலில் நிபுணத்துவம் பெற்ற நடுத்தர அளவிலான வணிகத்தை ஒரு பாதுகாப்பு ஒப்பந்தக்காரருக்குக் கிடைக்கச் செய்வதற்கும் அதன் அசெம்பிளி லைனில் வேலைகளை விரைவுபடுத்துவதற்கும் அரசு கேட்கலாம்.

DGA தலைவர் Alexandre Lahousse, உக்ரேன் போருக்கு தேவையான முக்கிய உபகரணங்களான 'எறிகணைகள், ஏவுகணைகள், பீரங்கிகள் மற்றும் தரைப்படை வீரர்களுக்கான ஆயுதங்களை' உற்பத்தி செய்வதற்கான பிரான்சின் திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக Le Monde இடம் கூறினார். இது டைட்டானியம், எஃகு மற்றும் அரிதான பூமி கூறுகள் அல்லது குறைக்கடத்திகள் (semiconductors) போன்ற முக்கியமான பாகங்கள் உட்பட பாரிய அளவிலான முக்கியமான மூலப்பொருட்களைக் கோருகிறது. 'வாஷிங்டன் தனது சொந்த படைகளுக்கு இந்த பொருட்களை கோரும் என்று பல நிறுவனங்கள் அஞ்சுகின்றன' என அந்த செய்தித்தாள் குறிப்பிட்டது.

இது ஐரோப்பாவில் வேகமாக வளர்ந்து வரும் உலகப் போரின் அபாயம் மட்டுமல்ல, நேட்டோவில் உள்ள முக்கிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான - குறிப்பாக வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சக்திகளுக்கு இடையே உள்ள கசப்பான மூலோபாய மற்றும் பெருநிறுவன போட்டிகளும் மக்ரோனின் பொறுப்பற்ற இராணுவத் திட்டமிடலைத் தூண்டுகின்றன.

குறிப்பாக ஜேர்மனி இராணுவ மறுசீரமைப்புக்கு 100 பில்லியன் யூரோக்கள் சிறப்பு நிதியை அறிவித்துள்ளது, ஏனெனில் அது நாஜி ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் அது ஏற்றுக்கொண்ட இராணுவக் கட்டுப்பாட்டு கொள்கையை நிராகரித்து மீண்டும் ஐரோப்பாவின் மேலாதிக்க இராணுவ சக்தியாக வெளிப்பட முற்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டில் பிரான்சுக்கும் ஜேர்மனிக்கும் இடையே நடந்த இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர், ஜேர்மனியின் வெடிக்கும் மறுஆயுதமயமாக்கல், பிரெஞ்சு இராணுவ படிநிலையின் குறிப்பிடத்தக்க பிரிவுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை.

ஜனாதிபதித் தேர்தல்களின் போது, நவ-பாசிச வேட்பாளர் மரின் லு பென் ஜேர்மனியை 'பிரான்சின் மூலோபாய அடையாளத்தின் முழுமையான எதிர்மறை' என்று கண்டித்தார். உக்ரேன் போர் முடிவுக்கு வந்தவுடன் 'நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு மூலோபாய நல்லிணக்கத்திற்கு' அவர் அழைப்பு விடுத்தார் மற்றும் சீனா மீதான அமெரிக்க வெளியுறவுக் கொள்கை 'மிகவும் ஆக்கிரோஷமானது' என்று விமர்சித்தார். ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிராக வெளித்தோற்றத்தில் ஆக்கிரமிப்பு குறைவாக இருந்தாலும், லு பென் அல்ஜீரியாவை அச்சுறுத்தவும், ஆபிரிக்காவில் அதன் முன்னாள் காலனித்துவ சாம்ராஜ்யத்தில் பிரான்சின் ஏகாதிபத்திய போர்களை வளர்க்கவும் அழைப்பு விடுத்தார்.

எவ்வாறாயினும், பேர்லினுடன் வளர்ந்து வரும் மோதல்கள் இருந்தபோதிலும், வாஷிங்டனுக்கு எதிர் எடையாக ஐரோப்பிய ஒன்றியத்தை கட்டியெழுப்ப அதனுடன் இணைந்து செயல்பட முயற்சிக்கும் பிரெஞ்சு முதலாளித்துவ சக்திகளுக்காக மக்ரோன் பேசுகிறார். அவர் பேர்லினைக் கண்டிக்கவில்லை, ஆனால் அதன் 100 பில்லியன் யூரோ சிறப்பு நிதியை, புதிய டாங்கி மற்றும் புதிய பிராங்கோ-ஜேர்மன் போர் விமானத்திற்கான திட்டங்களைக் காட்டிலும் அதிகமான அமெரிக்க ஆயுதங்களான F-35 போர் விமானங்கள் மற்றும் சினூக் ஹெலிகாப்டர்களை வாங்கியதற்காக மறைமுகமாக அதை விமர்சித்தார்.

'கடந்த கால தவறுகளை மீண்டும் முன்னோக்கி நகர்த்த வேண்டாம்: வேறு இடத்தில் பொருட்களை வாங்குவதற்கு நிறைய செலவு செய்வது நல்ல யோசனையல்ல' என்று மக்ரோன் கூறினார். 'ஐரோப்பிய தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது. (...) நாம் தொழில்துறையை வலுப்படுத்த வேண்டும் மற்றும் மிகவும் வலுவான மற்றும் அதிக தேவைப்படும் ஐரோப்பிய பாதுகாப்பு தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப தளத்தை வலுப்படுத்த வேண்டும், இல்லையெனில் நாம் நாளைய புதிய சார்புகளை மட்டுமே உருவாக்குவோம்.'

மக்ரோனின் போர்வெறிக் சொல்லாட்சி முதலாளித்துவ அமைப்பின் மரண நெருக்கடியை பிரதிபலிக்கிறது. கோவிட்-19 தொற்றுநோயின் முதல் இரண்டு ஆண்டுகளில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் டிரில்லியன் கணக்கான யூரோக்கள் மற்றும் டாலர்களை பெரும் பணக்காரர்களைக் காப்பாற்ற வங்கி பிணையெடுப்புகளில் கொட்டினர், அதே நேரத்தில் தொற்றுநோயைத் தடுக்க விஞ்ஞான ரீதியாக வழிநடத்தப்பட்ட போராட்டத்திற்கு பணம் இல்லை என்று வலியுறுத்தினர். இந்த வங்கி பிணையெடுப்புகள் பணவீக்கத்தை தூண்டிவிட்டன, அது இப்போது தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை நாசமாக்குகிறது மற்றும் வளர்ந்து வரும் வேலைநிறுத்த அலையைத் தூண்டுகிறது.

மற்ற நேட்டோ நாட்டுத் தலைவர்களைப் போலவே, மக்ரோனும் ரஷ்யாவுடன் போரைத் தூண்டிவிட்டு, தேசப் பாதுகாப்புப் போருக்குத் தயாராகி வருவதாக மோசடியான சாக்குப்போக்கில், அவசரகால நிலை அல்லது இராணுவச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கிறார். ஆனால் பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான அச்சுறுத்தல் ரஷ்யாவிடமிருந்து வரவில்லை, மாறாக நேட்டோ ஏகாதிபத்திய அரசாங்கங்களின் பொறுப்பற்ற சமூக மற்றும் இராணுவக் கொள்கைகளில் இருந்து வருகிறது.

ஏப்ரல் மாதம் மக்ரோனுக்கும் லு பென்னுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று ஜனாதிபதித் தேர்தலின் போது, சோசலிச சமத்துவக் கட்சி (PES) இரண்டாவது சுற்றை புறக்கணிக்கவும், இரு வேட்பாளர்களையும் நிராகரிக்கவும், எந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அதற்கு எதிரான இயக்கத்திற்குத் தயாராகவும் தொழிலாள வர்க்க பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுத்தது. மக்ரோன் லு பென்னுக்கு மாற்றாக இருக்க மாட்டார் என்றும், சர்வாதிகாரம் மற்றும் போரை நோக்கி அணிவகுத்து செல்வார் என்றும் அது வலியுறுத்தியது. பிரான்சை போர்க்கால அடிப்படையில் நிலைநிறுத்த மக்ரோனின் அழைப்புகள், இந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்துகின்றன.

மக்ரோனுக்கு எதிராக, மெலோன்சோன் மற்றும் NUPES முன்வைத்த மூலோபாயத்தையும் இது அம்பலப்படுத்துகிறது. இது மெலோன்சோனை பிரதம மந்திரியாக்கும் தேசிய சட்டமன்றத்தில் NUPES க்கு பெரும்பான்மையை வழங்க வாக்காளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. அத்தகைய ஏற்பாடு, வெளியுறவுக் கொள்கையின் மீது முழுக் கட்டுப்பாட்டையும் ஜனாதிபதியாக மக்ரோனே வைத்திருப்பார். இது, மக்ரோனை இராணுவ மறுசீரமைப்பை சுமத்தவும், ஊதியங்கள் மற்றும் சமூக செலவினங்களில் வெட்டுக்களுக்கு அழுத்தம் கொடுக்கவும், ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களை அதிகரிப்பதற்கான மெலோன்சோனின் வாக்குறுதிகளை கிழித்து எறியவும் அனுமதிக்கும்.

மக்ரோன் மற்றும் முதலாளித்துவ செய்தி ஊடகத்தின் ரஷ்யா மீதான கண்டனங்களின் வெள்ளத்தில் தன்னை இணைத்துக் கொள்ள மெலன்சோனின் முடிவு ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்: அவரும் பிரெஞ்சு தொழிற்சங்க அமைப்புகளும் போர் முயற்சியை ஊக்குவிப்பதற்காக வாழ்க்கைத் தரத்தை குறைப்பதற்கான மக்ரோனின் அழைப்புகளுக்கு அடிபணிவார்கள்.

மக்ரோனுக்கு எதிரான ஊதியங்கள் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பது என்பது, ரஷ்யாவுடனான ஒரு முழுமையான நேட்டோ போரைத் தடுப்பதற்கான போராட்டம் போலவே, அது பணவீக்கம் மற்றும் போருக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான மற்றும் சர்வதேச இயக்கத்தைச் சார்ந்துள்ளது.

Loading