பசிபிக் பகுதியில் ஏகாதிபத்திய பிடியை வலுப்படுத்த அமெரிக்க தலைமையிலான முயற்சி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மாட்ரிட்டில் நேட்டோ உச்சிமாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, சீனாவை எதிர்கொண்டு போருக்கான தயாரிப்பில் அதனை சுற்றி வளைக்க அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளின் ஒரு குழு பசிபிக் பகுதியில் ஒரு புதிய 'ஒருங்கிணைப்பு பொறிமுறையை' அறிவித்தது.

அமெரிக்க இந்தோ பசிபிக் ஒருங்கிணைப்பாளர் குர்ட் காம்ப்பெல் [இடது] சாலமன் தீவுகளின் எதிர்க்கட்சித் தலைவர் மத்தேயு வேல் இனை ஏப்ரல் 2022 இல் ஹோனியாராவில் சந்தித்தார் (Image: Twitter - Dr Anna Powles@AnnaPowles)

இப்பகுதியில் இரக்கமற்ற காலனித்துவத்தின் நீண்ட வரலாறுகளைக் கொண்டுள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரித்தானியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய 'நீல பசிபிக் கூட்டாளிகள்' என்று அழைக்கப்படுபவை 'வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள பிராந்திய விதிகள் அடிப்படையிலான ஒழுங்கிற்கான' ஒரு பரந்த 'கொள்கை' திட்டத்தை அறிவித்தது. உலகளவில் விதிகளை உருவாக்கிய வாஷிங்டனால் ஊக்குவிக்கப்பட்ட இந்த ஒழுங்கு பற்றிய சொற்றொடர், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அமெரிக்காவால் நிறுவப்பட்ட 'ஒழுங்கமைப்பை' குறிக்கிறது.

சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் யீ இன் சுற்றுப்பயணத்தில் கிட்டத்தட்ட ஒரு டஜன் பசிபிக் நாடுகளுடன் பல இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சொலமன் தீவுகளும் சீனாவும் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கையை இறுதி செய்தன. இது வாஷிங்டன் மற்றும் கான்பெராவின் அச்சுறுத்தல்களை தூண்டி, பிரதம மந்திரி மனாசே சோகவரேவின் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு சாத்தியமான 'ஆட்சி மாற்றத்திற்கான' நடவடிக்கையை தூண்டியது.

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான பினாமிப் போருக்கு மத்தியில் இந்த அறிவிப்பு நேட்டோ உச்சிமாநாட்டின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இருந்தது. இது அட்லாண்டிக் இராணுவக் கூட்டணியை ஆசியா-பசிபிக் பகுதிக்கு நீட்டிப்பதை சைகை காட்டியது. ஜப்பான், தென் கொரியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் தலைவர்கள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு, கூட்டத்தில் உரையாற்றி மற்றும் 'ஆசியா-பசிபிக் நான்கு' என்று அழைக்கப்படும் ஒரு தொடக்க கூட்டத்தை நடத்தினர்.

'நீல பசிபிக்' முயற்சியில் இந்த நான்கு நாடுகளும் பிரித்தானியாவும் அடங்கும். பிரான்ஸும் ஆரம்பத்தில் ஈடுபட்டிருந்தபோதும் ஆனால் முறையாக சேர விரும்பவில்லை. திட்டத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, ஐந்து நாடுகளின் ஒப்பந்தம் 'நெருக்கமான, அதிக நோக்கமுள்ள மற்றும் அதிக இலட்சியமான ஒத்துழைப்பை' வழங்கும். 'பெரும்பாலும், எங்கள் முயற்சிகள் ஒருங்கிணைக்கப்படாமல், சில சந்தர்ப்பங்களில் இரட்டை வேலைகளையும் மற்றவற்றில் இடைவெளிகளையும் உருவாக்குகின்றன' என்று அது அறிவித்தது.

பசிபிக் தீவுகள் மன்றத்தை 'பலப்படுத்துதல்', வழக்கமான ஈடுபாடு மற்றும் உரையாடலை எளிதாக்குதல் மற்றும் 'இழந்த வாய்ப்புகளை' தவிர்க்க எதிர்கால நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அறிக்கை கூறுகிறது. இது காலநிலை மாற்றம், கடல்சார் பாதுகாப்பு (அதாவது சீனாவின் மீன்பிடிப்படை), சுகாதாரம், கல்வி மற்றும் 'உள்கட்டமைப்புக்கான சிறந்த அணுகல்' போன்ற பகுதிகளை குறிவைக்கிறது. சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கின் முக்கிய அங்கமாக உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான நிதியளிப்பு உள்ளது.

வாஷிங்டனை தளமாகக் கொண்ட மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் நடத்திய ஜூன் 23 விவாதத்தில் வெள்ளை மாளிகையின் இந்தோ-பசிபிக் ஒருங்கிணைப்பாளர் குர்ட் காம்ப்பெல் இந்த முயற்சியை அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்விற்கு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் தூதரகங்கள் ஆதரவு அளித்தன. மற்றும் பிஜி, சமோவா மற்றும் மார்ஷல் தீவுகளின் தூதர்கள் அடங்கிய குழுவை உள்ளடக்கியது.

அமெரிக்காவிற்கு பிராந்தியம் முழுவதும் அதிக இராஜதந்திர மையங்கள் தேவை என்றும், சில சமயங்களில் 'குறைவான கவனத்தைப் பெறும்' பசிபிக் தீவு நாடுகளுடன் அதிக தொடர்பு தேவை என்றும் காம்ப்பெல் கூறினார். அவர்: 'நாங்கள் முன்னோக்கிச் செல்லும்போது அதிக அமைச்சரவை மட்டத்திலான மற்றும் அதிக மூத்த அதிகாரிகள் பசிபிக் பகுதிக்குச் செல்வதை நீங்கள் காண்பீர்கள் என்று நான் நினைக்கிறேன்... உண்மையில், இராஜதந்திர பிரசன்னத்தை வேறு எதனாலும் பிரதியீடு செய்யமுடியாது என்பதை உணர்ந்துகொள்வீர்கள்' என்றார்.

வாஷிங்டன் பசிபிக் உடன் 'கூட்டாக' வேலை செய்யும் என்று கூறிய காம்ப்பெல், 'பசிபிக் இல்லாமல் பசிபிக் பகுதியில் ஒன்றும் இருக்காது என்பதே எங்கள் மந்திரம் ... இந்த இணைப்புகளை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை' என்றார். தீவுவாசிகளின் தேவைகளை வாஷிங்டன் எப்போதும் போதுமான அளவு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்ற 'பார்வைகள்' இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

உண்மையில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் மேம்படுத்தப்பட்ட 'ஈடுபாடு' பசிபிக் அரசாங்கங்கள் கூறுவதையோ அல்லது அப்பிராந்திய மக்கள் கூறவதையோ 'கேட்பதற்கும்' எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இது தங்கள் புவி மூலோபாய மேலாதிக்கத்தை ஆக்கிரோஷமாக மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் உள்ளது.

ஏப்ரலில் சொலமன் தீவுகளுக்கு விஜயம் செய்த காம்ப்பெல், நாட்டில் நடைமுறையில் சீன நிரந்தர இராணுவப் பிரசன்னம் குறித்த எந்த அறிவிப்புக்கும் வாஷிங்டன் 'அதற்கேற்ப பதிலளிக்கும்' என்று அச்சுறுத்தும் அறிக்கையை வெளியிட்டார். இது சொலமன் தீவுகளின் மீதான அமெரிக்க இராணுவப் படையெடுப்பைக் குறிக்கிறதா என்று நேரடியாகக் கேட்டதற்கு, ஒரு வெளியுறவுத்துறை அதிகாரி அதனை மறுக்கவோ அல்லது தெளிவுபடுத்தவோ மறுத்து, பைடென் நிர்வாகத்தின் நோக்கங்களில் எந்த சந்தேகத்தையும் விட்டுவைக்கவில்லை.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கென் பிஜிக்கு விஜயம் செய்தபோது வாஷிங்டன் இப்போது சொலமன் தீவுகளில் ஒரு தூதரகத்தைத் திறப்பதை விரைவுபடுத்தும் என அறிவித்தார். இது நான்கு தசாப்தங்களில் வெள்ளை மாளிகையின் உயர்மட்ட தூதரின் அந்த நாட்டிற்கான முதல் பயணமாகும்.

அமெரிக்க ஈடுபாட்டின் முக்கிய 'மையங்களில்' பிஜியும் ஒன்றாக இருக்கும் என்று தான் கருதுவதாக காம்ப்பெல் கூறினார். பப்புவா நியூ கினியாவிற்கு அடுத்ததாக பசிபிக் நாடுகளில் இரண்டாவது பெரிய நாடான பிஜி ஒரு முக்கிய மூலோபாயப் பங்கை வகிக்கிறது. பிரதம மந்திரி பைனிமராமாவின் 2006 இராணுவ சதியைத் தொடர்ந்து, அவர் தனது ஆட்சியை தனிமைப்படுத்தும் கான்பெரா மற்றும் வெலிங்டனின் நகர்வுகளை எதிர்கொள்ள சீனா மற்றும் ரஷ்யாவை நோக்கி நகர்ந்தார். அவர் ஏனைய பசிபிக் நாடுகளையும் மேலும் 'சுதந்திரமான' நிலைப்பாட்டை எடுக்க ஊக்குவித்தார்.

கடந்த மாதம் சுவாவிற்கு 'எச்சரிக்கையான' விஜயத்தில், அமெரிக்க கடற்படையின் செயலாளர் கார்லோஸ் டெல் டோரோ, பிஜியின் இராணுவ தளபதி ஜெனரல் லோகவடோ கலோனிவாய், கடற்படை தளபதி ஹம்பெரி தவகே மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் நில அமைச்சர் ஜோன் உசாமேட் ஆகியோரை சந்தித்தார். ஆஸ்திரேலியாவுக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கரோலின் கென்னடியும் இணைந்தார். பிஜியில் கடற்படை தளத்தை திறப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக ஊகங்கள் பரவி வருகின்றன.

பைடென் நிர்வாகம் ஏற்கனவே இந்தோ-பசிபிக் பகுதிக்கு கூடுதல் ஆதாரங்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. மே மாத இறுதியில் நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னுடனான சந்திப்பைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். சீன செல்வாக்கு அதிகரித்திருப்பது அமெரிக்கா, வெலிங்டன் மற்றும் பிற பிராந்திய நட்பு நாடுகளுக்கு இடையில் 'புதிய தெளிவுபடுத்தலும், நெருக்கமான ஒத்துழைப்பும்' தேவை என்று அது அறிவித்தது.

நீல பசிபிக் கூட்டாண்மையில் சேரும் நாடுகள் அனைத்தும் சீனாவினை இலக்குவைத்து வேகமாக வளர்ந்து வரும் 'கட்டமைப்பில்' ஈடுபட்டுள்ளன. இதில் ஆசியான் (ASEAN), நாற்கர (Quad -அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் நடைமுறை இராணுவக் கூட்டணி), IPEF வர்த்தக முகாம் மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான இராணுவ ஒப்பந்தம் (AUKUS) ஆகியவை அடங்கும். AUKUS ஆனது ஒலியைவிட வேகமான ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா பெற்றுக்கொள்வதையும் உள்ளடக்கியது.

நேட்டோ ஐரோப்பாவில் அதன் இராணுவப் பிரசன்னத்தை பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில், பசிபிக் பகுதியில் அமெரிக்கா தலைமையிலான விரிவாக்கங்கள் வேகமாகச் செல்கின்றன. கடந்த மாதம் பென்டகன் பலாவ் அருகே முதன்முதலில் பேட்ரியாட் ஏவுகணை நேரடி துப்பாக்கிச் சூட்டை வெற்றிகரமாக நடத்தியது. அதே நேரத்தில் மைக்ரோனேசியா முழுவதும் பெரிய புதிய தளங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த மாதம் அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளை தனது மிகப்பெரிய பசிபிக் வளைய (RIMPAC 2022) போர் பயிற்சிகளை ஹவாய் கடல் பகுதியில் நடத்தத் தொடங்கியுள்ளது. இது 26 நாடுகளைச் சேர்ந்த 38 கப்பல்கள், 4 நீர்மூழ்கிக் கப்பல்கள், 170 விமானங்கள் மற்றும் 25,000 இராணுவத்தினர் கடற்படை பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதைக் காண்கிறது. அதே நேரத்தில் 9 நாடுகளின் தரைப்படை பிரிவுகள் தரையிலும் நீரிலும் இறங்கும். RIMPAC பங்கேற்பாளர்களில் நாற்பது சதவீதம் பேர் நேட்டோவில் உள்ளனர் அல்லது நேட்டோவுடன் உறவுகளைக் கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், பசிபிக் பகுதியில் தனது சொந்த இராணுவ பிரசன்னத்தின் ஒரு முக்கிய படியாக, ஜப்பான் அதன் 'கடல் தற்காப்புப் படை' என்று அழைக்கப்படுவதை 11 இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு அனுப்பியுள்ளது. இந்த கடற்படை அணியில் தற்போது நடைமுறை விமானம் தாங்கி கப்பலாக மேம்படுத்தப்பட்டுள்ள வானூர்திகளை ஏந்தி செல்லும் கப்பலான இசுமோ இரண்டு நாசகாரிகள், ஒரு நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் வான்வழி பிரிவுகள் அடங்கும். இந்த பயணம் அக்டோபர் 28 வரை நடைபெறும்.

பசிபிக் தீவு அரசாங்கங்களும் தங்கள் பங்கிற்கு, தீவிரமடைந்து வரும் புவிசார் மூலோபாய போட்டி மற்றும் பிராந்தியத்தில் இராணுவமயமாக்கல் ஆகியவற்றில் அதிக அக்கறை கொண்டுள்ளன. பசிபிக் நாடுகளின் உச்ச இராஜதந்திர அமைப்பான பசிபிக் தீவுகள் மன்றம் (PIF), முதல் முறையாக இந்த மாதம் சுவாவில் நடைபெறும் தலைவர்கள் வாரத்தில் தனிப்பட்ட உரையாடல்களுக்கான நேரடி சந்திப்பை நடத்தாது. சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிற நாடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட இதிலிருந்து விலக்கப்பட்டிருக்கும்.

Loading