தொற்று நோய், முதலாளித்துவத்தி பூகோள நெருக்கடி, வர்க்கப் போராட்டங்களின் மீள் எழுச்சி மற்றும் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகள் -பகுதி 2

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பகுதி ஒன்று - பகுதி இரண்டு - பகுதி மூன்று

2022 மே 14-16 வரைஇணையவழியாக நடைபெற்ற இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) மூன்றாவது தேசிய மாநாட்டில ்ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதான தீர்மானத்தின் இரண்டாவது பகுதி இதுவாகும். இது மூன்று பகுதிகளாக வெளியிடப்படுகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி மாநாட்டில், 'இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான வெகுஜன எழுச்சியும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்' என்ற தலைப்பிலான அவசரத் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை ஆளும் வர்க்கத்தின் நெருக்கடியும் சர்வதிகார ஆட்சியை நோக்கிய நகர்வும் வர்க்க போராட்டங்களும்

30. உலகின் ஒவ்வொரு மூலையிலும் போலவே, கோவிட்-19 தொற்றுநோய் இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தினதும் ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ அரசாங்கத்தினதும் நெருக்கடியை கூர்மையாக தீவிரப்படுத்தியுள்ளது. பல பிரச்சினைகள் அதன் பொருளாதாரத்தைப் பாதித்துள்ள அதேவேளை, தமது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக அனைத்து சமூகங்களினதும் தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கோபம் பெருகி வருகின்றது. சீனாவுக்கு எதிராக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதன் கூட்டாளிகளுடன் சேர்ந்து அமெரிக்காவால் துண்டிவிடப்பட்டுள்ள பூகோள போட்டியானது இலங்கை ஆளும் உயரடுக்கின் உக்கிரமடைந்து வரும் அரசியல் நெருக்கடிக்கு பிரதான காரணி ஆகும்.

31. இராஜபக்ஷ அரசாங்கம், 2020 ஆரம்பத்தில் தொற்றுநோய் தலைதூக்கத் தொடங்கியதில் இருந்தே, நாடு தானாகவே இந்த நிலைமையை சமாளிக்க முடியும் என்ற தேசியவாத வாய்ச்சவடால் விடுத்து, இலங்கையில் தொற்று நோயின் தாக்கத்தை குற்றவியல்தனமாக அலட்சியம் செய்தது. மார்ச் 20 அன்று அரசாங்கம் நாட்டை முடக்குவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட போதிலும், சர்வதேச நிதி மூலதனம் மற்றும் பெரு வணிகங்களின் சார்பில் ஒரு மாதத்திற்கு பின்பு பொருளாதாரத்தை மீண்டும் திறக்கத் தொடங்கியது. அப்போதிருந்து, தொற்றுநோயின் புதிய அலைகள் வெடிக்கும் போதெல்லாம் கடுமையான சுகாதார நடவடிக்கைகளை விதிக்குமாறு சுயாதீன சுகாதார வல்லுனர்கள் விடுத்த அழைப்பை நிராகரித்து வந்த அரசாஙகம், மட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை மட்டும் மீள அமுல்படுத்தியது. டெல்டா மாறுபாடு ஆயிரக்கணக்கான உயிர்களை காவுகொள்ளத் தொடங்கியதோடு சீரழிந்துபோன சுகாதார சேவை மேலும் சரியத் தொடங்கிய போதே, அரசாங்கம் 2021 ஆகஸ்ட்டில் இருந்து ஆறு வார முடக்கத்தை அமுல்படுத்தியது. 2021 செப்டெம்பர் தொடக்கம் அக்டோபர் முடிவு வரை, மரண எண்ணிக்கை 9,400 இல் இருந்து 13,600க்கும் மேலாக உயர்ந்தது. 2021 ஒக்டோபர் 25 அன்று, மரணங்கள் 13,640 ஆகவும் தொற்றுக்கள் 536,645 ஆகவும் இருந்தன. கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பாரியளவில் வீழ்ச்சியடைந்து வந்துள்ள பொதுச் சுகாதார முறைமையை சீர்படுத்த அராசங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2021 மற்றும் 2022 வருடங்களுக்கான சுகாதார சேவைக்கான வரவு-செலவு ஒதுக்கீடு, முறையே 30 மற்றும் 6 பில்லியனாக வெட்டப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றால் மரணித்தவர்களின் சடலங்கள் கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன [Photo: WSWS]

32. இராஜபக்ஷ, “சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்” கொள்கையைப் பின்பற்றினார். 2020 டிசம்பரில், நாட்டின் வணிக மாநாட்டில் பேசிய அவர், அரசாங்கமானது ஒரு புறம் “வைரஸைக் கட்டுப்படுத்துவதிலும் மறுபுறம் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்வதை உறுதிப்படுத்துவதிலும்” சமநிலை செய்துவருகின்றது, “நாம் அனைவரும் இந்தப் புதிய வழமையை ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என தெரிவித்தார். மனித உயிர்களை விட இலாபங்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற கொள்கையைப் பின்பற்றும் அரசாங்கம், 2020 ஏப்ரல் மத்தியில் இருந்து, அத்தியாவசியமற்ற சேவைகளைக் கூட திறந்துவிட்டது. “தடுப்புசி மட்டுமே ஒரே தீர்வு” என அவர் அறிவித்தார். ஒக்டோபர் 7 அன்று, “புதிய வழமை”யுடன் வாழ நாடு பழக வேண்டும் என உயர் அரச அதிகாரிகளுக்கு இராஜபக்ஷ மீண்டும் கூறியதோடு, தனது அடுத்த மூன்று வருட பதவிக் காலத்தில், பொருளாதாரத்தை புத்துயிர் பெறச்செய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறினார். பின்னர், அரசாங்கம், 12 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு தடுப்புசி கூட போடாமல் பாடசாலைகளை மீண்டும் திறக்கத் தொடங்கியது.

தொழிலாள வர்க்கம், உலக நிதிய அதிசெல்வந்த குழுக்களாலும் நாட்டின் பெருவணிகத்தாலும் உத்தரவிடப்பட்டுள்ள “தொற்று நோயுடன் வாழுதல்” என்ற கொள்கையை நிராகரிக்க வேண்டும். தனது சகோதர கட்சிகளின் வழியில், இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி, பேரழிவுக்கு ஒரே தீர்வாக இருக்கின்ற, தொற்று நோயை இல்லாதொழிப்பதற்கான விஞ்ஞான-அடிப்படையிலான கொள்கைக்காகப் போராடுகின்றது.

33. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முன்னால் அமெரிக்க-சார்பு ஐக்கிய அரசாங்கத்துக்கு எதிரான வெகுஜன அதிருப்தியை சுரண்டிக்கொண்டே இராஜபக்ஷ 2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு ஆட்சிகளின் முப்பது வருட தமிழர்-விரோத உள்நாட்டு யுத்தத்தின் கொடூரமான முடிவை மேற்பார்வையிட்டவருமான முன்னாள் கேர்னல் இராஜபக்ஷ, கடுமையான அரசியல் நெருக்கடியில் உள்ள ஆளும் வர்கத்துக்கு “ஸ்திரமான” மற்றும் “பலமான” அரசாங்கத்தை உருவாக்குவதாக உறுதியளித்தார். ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதரவிலான இஸ்லாமிய அதிதீவிரவாதிகள், 2019 உயிர்த்த ஞாயிறு அன்று நடத்திய, நுற்றுக்கணக்கானவர்களை காவுகொண்ட பயங்கரவாதத் தாக்குதலை பற்றிக்கொண்ட இராஜபக்ஷவும் அவருடைய ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியும் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), “தேசிய பாதுகாப்புக்கு முதலிடம்” என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். முஸ்லீம்-விரோத பிரச்சாரத்தையும் தமிழ் சிறுபாண்மையினருக்கு எதிரான இனவாதப் பிரச்சாரத்தையும் கிளறிவிட்ட இராஜபக்ஷ, பாசிச சிங்கள-பௌத்த குழுக்களையும் இராணுவத்தினுள் சில பகுதியினரையும் அணிதிரட்டிக்கொண்டார். சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), நவ சம சமாஜக் கட்சி (ந.ச.ச.க.), ஐக்கிய சோசலிசக் கட்சி (யு.எஸ்.பி.), முன்னிலை சோசலிச கட்சி (மு.சோ.க.) உட்பட “இடது” கட்சிகளின் துரோகத்தின் காரணத்தால் அவர் தேர்தலில் வென்றார். அவர்கள், முன்நாள் ஆட்சிக்கு விரோதமான சமூக எதிர்ப்பை, தேர்தல் மற்றும் எதிர்ப்பு அரசியல் என்ற அழுகிப்போன வரம்புக்குள் திசைதிருப்பிவிட உதவி செய்தனர். சோசலிச சமத்துவக் கட்சியால் மட்டுமே முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேலைத் திட்டமான, முதலாளித்துவ வர்க்க ஆட்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கான போராட்டத்துக்கு எதிராகவே, அவர்கள் இந்த திசைதிருப்பலைச் செய்தனர்.

34. ஜனாதிபதி இராஜபக்ஷவின் முயற்சிகள், ஜனாதிபதி சர்வதிகாரத்தை பலப்படுத்துவதை இலக்காகக் கொண்டதாகும். பாதுகாப்புச் செயலாளராக ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி கமால் குணரத்தினவின் நியமனம் உட்பட, உயர்மட்ட பதவிகளில் முன்நாள் மற்றும் சேவையில் உள்ள தளபதிகளை நியமித்து, அரச நிர்வாகத்தை இராணுவயமாக்கத் தொடங்கினார். அரசாங்கத்தின் பெரு-வணிக சார்பு கொள்கைகளை அமுல்படுத்தும் நோக்கில், கோவிட்-19 சம்பந்தமாக நடவடிக்கைச் செயலணி இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் கீழ் அமைக்கப்பட்டது. 2020 ஒக்டோபரில், ஆளும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு., 1978 அரசியலமைப்பின் எதேச்சதிகார நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி அதிகாரங்களை மீள ஸ்தாபிக்கின்ற 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. தற்போது, ஜனாதிபதியின் கைகளில் அதிக அதிகாரங்களை ஒன்றுகுவிக்கக் கூடிய ஒரு புதிய அரசியலமைப்பு தயார்படுத்தப்படுகின்றது. பொது பல சேனா என்ற பேர்போன முஸ்லிம்-விரோத அதிதீவிரவாத கருவியின் தலைவரான, பௌத்த பிக்கு கலகொட அத்தே ஞானசார தலைமையில், நாட்டின் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் பேரில் “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியை ஸ்தாபிக்க அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டமையும், இனவாத ஆத்திரமூட்டல்களையும் சர்வாதிகாரத்தையும் கிளறிவிடுவதை நோக்கிய ஒரு அடியெடுப்பாகும்.

35. முதலாளித்துவத்தின் மோசமான உலகலாவிய நெருக்கடியால் பாதிக்கப்பட்டு நெருக்கடியில் உள்ள பொருளாதாரத்தை “புத்துயிர் பெறச் செய்வதே” அரசாங்கத்தின் பிரதான அக்கறை ஆகும். 2020 இல் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியின் வளர்ச்சி, 1948 சுதந்திரத்தில் இருந்து முன்கண்டிராத அளவு, 3.6 சதவீதம் மறைப் பெறுமானத்தில் வீழ்ச்சியடைந்தது. சுற்றுலாத்துறை முழுமையாக சரிந்துள்ளதுடன் ஏற்றுமதி மற்றும் புலம்பயர் தொழிலாளர் மூலம் வரும் வருமானங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. இப்போது நாடு வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்த இயலாமையின் விளிம்பில் உள்ளது. தற்போதய கடன்களை மீள செலுத்துவதற்கு மேலதிக கடன்களை பெறுகின்ற அதேவேளை, மத்திய வங்கி அரச வருமான வீழ்ச்சியை சமாளிக்க கடந்த 18 மாதங்களில் 2 ரில்லியன் ரூபாய்க்கும் அதிமான நிதியை அச்சிட்டுள்ளது. இது பணவீக்கத்தை சடுதியாக உயர்த்தியதுடன் உத்தியோகப்பூர்வமாக 2020 ஜனவரிக்குக்குப் பின்னர் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் மதிப்பை 13 சதவீதம் வீழ்ச்சியடையச் செய்துள்ளது. 2021 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதத்துக்கு வளர்ச்சி “மீளும்” என உலக வங்கி முன்னறிவித்திருந்தாலும், நிச்சயமின்மை மேலோங்கி இருப்பதாக சமிக்ஞை செய்துள்ளது.

36. அரசாங்கம் பெரிய கம்பனிகளை ஊக்கப்படுத்த தொடர்ச்சியான நடவடிக்கைகளை ஆரம்பித்தது. இது மத்திய வங்கியினூடாக, வர்த்தக வங்கிகளின் கடன்கொடுக்கும் கொள்ளவை அதிகரிப்பதற்கு 278 பில்லியன் ரூபாய்களை விடுவித்தது. பல மாதங்களாக இது வங்கி வீதங்களை சுமார் 4 தசவீதமாக குறைத்ததோடு பிணையுறுதி இல்லாமல் கடன்கள் விநியோகிக்கப்பட்டதுடன், மீள் செலுத்தப்படாத தொகைக்கான செலவை அரசு ஏற்றுக்கொண்டது. வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதற்காக மேலதிக சலுகைகளை அறிவித்த அரசாங்கம், வரி விலக்குகள் வழங்கியதோடு பங்கு இலாபங்களின் பரிமாற்றத்துக்கும் அனுமதியளித்த அதேவேளை, மலிவு உழைப்பு நிலைமைகளை ஆழப்படுத்தியது.

37. இதற்கு நேர்மாறாக, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் பாரிய சமூக நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கை தொழிற்படையின் சுமார் 68 சதவீமானவர்கள், முறைசாராத்துறையில் வேலை செய்கின்றனர். அவர்கள் சமூகப் பாதுகாப்பு இன்றி ஆபத்தான வேலைகளில் ஈடுபடுகின்றனர். இந்த தொழிலாளர்களில் 1.5 மில்லியன் பேர் வறுமைக்குள் வீழும் உயர்ந்த ஆபத்தை முகங்கொடுப்பதாக கொள்கை கற்கைகளுக்கான நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. பல தொழிற்சாலைகளில் சட்டரீதியான 8 மணி நேரத்துக்கும் மேலாக வேலை நாட்கள் விரிவாக்கப்பட்டுள்ள அதேவேளை, சம்பளங்கள் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளன. நெருக்கடியின் விளைவாக 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக உலக வங்கி கணிப்பிட்டுள்ளது. இந்த நெருக்கடி, “3.20 டொலர் வறுமை கோட்டை, 2019 இல் 9.2 சதவீதத்தில் இருந்து 2020 இல் 11.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

38. அரசாங்கம் புதிய சிக்கன நடவடிக்கையை கட்டவிழ்த்து விடுவதை தொடங்கியது. செப்ரம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் அரிசி, கோதுமை மா, பால் மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து போன்றவற்றுக்கான நீண்ட கால விலைக் கட்டுப்பாடுகளை அது நீக்கியதால், இப் பொருட்களின் விலைகள் 10 வீதத்தில் இருந்து 80 சதவீதமாக அதிகரித்தன. இது 1977 இல் ஏழைகளுக்கான சமூக பாதுகாப்புகளை வெட்டிச் சரித்து நாட்டை அமெரிக்கத் தலைமையிலான பூகோள முதலாளித்துவ பொருளாதாரத்துடன் ஒருங்கிணைத்த போது ஆரம்பிக்கப்பட்ட, விலைவாசியை சந்தைச் சக்திகள் தீர்மானிக்க அனுமதிப்பதன் புதிய கட்டம் ஆகும். உழைக்கும் மக்களின் உண்மையான ஊதியத்தையும் சொற்ப வருமானத்தையும் கீழிறக்கத் தூண்டுகின்ற ஊதிப்பெருக்கும் பணவீக்கத்தை அனுமதிக்கும் இந்த கொடூரமான கொள்கை, நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும் இலாப நலன்களை சேமிப்பற்குமான மலிவு உழைப்பு நிலைமைகளை ஆழப்படுத்துவதை இலக்காகக் கொண்டதாகும். துறைமுகம், மின்சாரம் மற்றும் எரிசக்தி வளங்கள் போன்ற பிரதான துறைகளை மேலும் தனியார்மயமாக்குவது முடுக்கிவிடப்பட்டுள்ளது. கொழும்புத் துறைமுகத்தக்கு அருகில் புதிதாக உருவாக்கப்பட்ட நிலத்தில் அமைக்கப்படும் சீன நிதியிலான கொழும்பு துறைமுக நகரம், ஏறத்தாழ நாட்டின் சட்ட முறைமையில் இருந்து முற்றிலும் சுதந்திரமான வகையில், முதலாவது பொருளாதார வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

39. புலம்பெயர் தொழிலாளர்கள் சம்பந்தமாகவும் அதிகாரிகள் அதே கொடூரமான அனுகுமுறையையே பின்பற்றினர். தொற்றுநோய் காரணமாக வீடு திரும்ப விரும்பியவர்கள், குறிப்பாக மத்திய கிழக்கில் உழைப்பவர்கள், நாடு திரும்புவதை அவர்கள் மட்டுப்படுத்தினர். வெளிநாட்டு வருமானங்களை பெறுவதற்கான ஏக்கத்தில், இராஜபக்ஷ ஆட்சியானது வீடு திரும்பும் அவர்களது எதிர்பார்ப்பை கைவிடச் செய்தது. பல மில்லியன் கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் மத்தியில் உள்ள ஒரு மில்லியன் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள், இந்த நாடுகளில் சர்வதிகார ஆட்சியாளர்களின் கீழ் ஈவிரக்கமின்றி சுரண்டப்படுகின்றனர்.

40. வர்க்கப் போராட்டங்களின் உலகளாவிய மீள் எழுச்சியின் ஒருங்கிணைந்த பகுதியாக, இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர் வர்கத்தின் எதிர்ப்பின் புதிய நிலை ஆரம்பித்துள்ளது. கடந்த பத்து மாதங்களில் சுகாதாரம், கல்வி துறைமுகங்கள், தபால் மற்றும் புகையிரதம் போன்ற அரச துறைகளில் எதிர்ப்புகளும் போராட்டங்களும் வெடித்தன. ஒக்டோபர் இறுதி வாரம் தொழிற்சங்கங்களினால் காட்டிக் கொடுக்கப்படும் வரை 250,000க்கும் அதிகமான ஆசிரியர்கள் சம்பள உயர்வுக்காக தமது நீண்ட போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். பத்தாயிரக் கணக்கான அரச சுகாதாரத் தொழிலாளர்கள் பாதுகாப்பான வேலை நிலைமைகள் மற்றும் வசதிகளைக் கோரி தொடர்சியான போராட்டங்களில் ஈடுபட்டனர். தேயிலை மற்றும் இறப்பர் பெருந்தோட்டங்களில் வாழும் தொழிலாளர்கள் சம்பள வெட்டுக்கள், பாரிய வேலைச் சுமைகள், மற்றும் பொலிஸ் அடக்குமுறையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பற்ற வேலை நிலைமைகள், சம்பள மற்றும் தொழில் வெட்டுக்கள், அதிகரித்த வேலை மணித்தியாலங்கள் போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆடை தொழிலாளர்கள் மத்தியிலும் அமைதி இன்மை அபிவிருத்தி அடைந்து வருகின்றது.

41. நெல், மரக்கறி, மற்றும் சிறு தானிய விளைச்சலை கடுமையாகப் பாதித்த உர இறக்குமதி மீதான அரசாங்கத்தின் தடைக்கு எதிராக, செப்ரம்பரில் இருந்து இலங்கையின் கிராமப்புறங்களில் நாடுதழுவிய பரந்த போராட்ட இயக்கம் வெடித்தது. இந்த அமைதியின்மையானது வறுமை, வேலையின்மை, கடன்கள் மற்றும் அடத்தடுத்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்களின் ஆசிர்வாதத்துடன் வட்டிக்காரர்கள், வங்கிகள், மற்றும் பல்தேசிய கம்பனிகளின் சுரண்டல்களால் ஒடுக்கப்பட்ட கிராமப்புற வெகுஜனங்கள் மத்தியில் ஆண்டாண்டு காலமாக ஒன்றுதிரண்ட ஆழமான கோபத்தை சுட்டிக்காட்டுகின்றது. நகரங்களுக்கு இடம்பெயர்ந்த பல இஞைர்கள் வேலைகளை இழந்துள்ளதால், கிராமப்புற பிரதேசங்களில் இளைஞர் வேலை வாய்ப்பின்மையை அதிகரித்துள்ளது. ஏழை மீன் பிடி சமூகமும் கடன் சுமை மற்றும் வியாபாரிகளின் சுரண்டல் மற்றும் மீன் பிடி துறையினுள் பல்தேசிய கம்பனிகளின் தலையீடு போன்றவற்றை முகங்கொடுக்கின்றனர். பாரியளவு வேலையற்ற தொழிலாளர்கள் கிராமப்புறங்களில் உருவாகியுள்ளனர். தொற்று நோய் இந்த அனைத்து துறைகளிலும் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது.

20 செப்டெம்பர் 2020 அன்று அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக உடரதல்ல தோட்டத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய மறியல் போராட்டம் (WSWS Media)

கிராமப்புற உழைப்பாளர்கள் மத்தியில் நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதானது ஏழை விவசாயிகளை அணிதிரட்டி, அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முதலாளித்துவக் கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிகளை தோற்கடித்து, அவர்களை முதலாளித்துவ ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக தொழிலாளர வர்க்கத்தின் பக்கம் வென்றெடுக்கும் மையமாக இருக்கும். கிராமப்புற ஏழைகளையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் முதலாளித்துவத்தின் பிடியிலிருந்து விடுவித்து, சோசலிசத்திற்கான அதன் போராட்டத்தில் அவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான களத்தைத் தயார்படுத்தக்கூடிய ஒரே புரட்சிகர சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமேயாகும். முதலாளித்துவத்தின் ஒவ்வொரு கன்னையில் இருந்தும் பிரிந்து, சுயாதீனமான அரசியல் சக்தியாக நிற்பதன் மூலம் மட்டுமே, தொழிலாள வர்க்கத்தால் கிராமப்புற ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அத்தகைய தலைமைத்துவத்தை வழங்க முடியும்.

42. இந்த தொற்றுநோய் பேரழிவுகரமானது என ஆரம்பத்தில் இருந்தே எச்சரித்ததுடன் இதனை தொழிலாளர் வர்க்கம் தனது சர்வதேச சகாக்களை ஒன்றிணைத்துக்கொண்டு முன்னெடுக்கும் அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என எச்சரித்த இலங்கையில் உள்ள ஒரே அரசியல் கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும். அனைத்துலகக் குழுவின் ஆய்வை அடிப்படையாகக் கொண்டு, சோசலிச சமத்துவக் கட்சி, உலக சோசலிச வலைத் தளத்தின் ஊடாக 21 மார்ச் 2020 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. “மோசமடைந்து வருகின்ற பேரழிவுக்கு எதிராகப் போராடுவதற்கு சகல விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளங்களையும், பாரிய நிதி வளங்களையும் சர்வதேச ரீதியில் அணிதிரட்டுவது அவசியமாவதோடு அனைவருக்கும் இலவச சுகாதார வசதி கிடைத்தல் வேண்டும்… உலகப் பொருளாதாரத்தை சோசலிச முறையில் மறு ஒழுங்கு செய்வதன் அடிப்படையில் மட்டுமே, தேசிய எல்லைகளைக் கடந்து பகுத்தறிவான முறையில் திட்டமிடல்களைச் செய்ய முடியும்,” என அந்த அறிக்கை விளக்கியது. இந்தப் போரட்டத்தின் பகுதியாக, சோசலிச சமத்துவக் கட்சி, உலகளாவிய சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான வேலைத் திட்டத்தை முன்வைக்கின்றது.

43. பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதையும் பாதுகாப்பற்ற தொழிற்சாலைகள் மற்றும் வேலைத்தளங்களுக்குள் இலட்சக்கணக்கான தொழிலாளர்களை மீண்டும் அனுப்புவதற்கும் எதிராக சோசலிச சமத்துவக் கட்சி எச்சரித்தது. பொதுச் சுகாதார சேவைகளின் அபிவிருத்திக்கு பில்லியன் கணக்கான ரூபாய்களை கோரிய கட்சி, இந்தக் கோரிக்கைகளுக்காகப் போராடுவதற்கு தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, தமது சொந்த தொழிற்சாலை மற்றும் வேலைத்தள நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும்” என தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது. (“இலங்கை: பாதுகாப்பற்ற தொற்றுநோய் நிலைமையில் வேலைக்கு திரும்புவதை எதிர்த்திடுவோம்! தொழில் அழிப்பு செய்யாதே!” 16 மே 2020). சோசலிச சமத்துவக் கட்சியின் எச்சரிக்கையை மெய்ப்பிக்கும் வகையில், வேலைத் தளங்கள், குறிப்பாக ஆடைத் தொழிற்சாலைகள் கொரோனா வைரஸின் மையமாக மாறின. தொழிற்சாலைகளில் கட்டாய வேலை வாங்குவதை எதிர்த்தும், கம்பனிகளுக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவளிப்பதைக் கண்டித்தும் கட்சி தொடர்ந்து முன்னெடுத்த பிரச்சாரம், தொழிலாளர்களின் பரந்த கவனத்தை ஈர்த்தது.

44. அதிகரித்துவரும் வர்க்கப் போராட்டங்கள் பற்றி விழிப்புடன் உள்ள இராஜபக்ஷ ஆட்சி, 2021 மே மாதம் அத்தியவசப் பொதுச் சேவைகள் சட்டத்தையும் ஆகஸ்ட்டில் அவசரகாலச் சட்டத்தையும் அமுல்படுத்தியது. கொடூரமான அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் கீழ், வேலை நிறுத்தங்கள் உட்பட தொழிற்சங்க நடவடிக்கைகளை அரசாங்கம் தடை செய்தது. இந்த அடக்குமுறை சட்டத்தை மீறுவது அல்லது மீறுவதற்குத் தூண்டுவது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். உணவுப் பற்றாக்குறை மற்றும் பதுக்குதலைத் தடுக்கவும் மற்றும் விலைக் கட்டுப்பாட்டை பேணவும் என்ற போலிச் சாக்கில் இந்த கொடூரமான அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இலங்கை ஆளும் உயரடுக்கு, தொழிலாளர் போராட்டங்களை நசுக்கவும் கொடூரமான தமிழர்-விரோத உள்நாட்டு யுத்தத்தையும் கிராமப்புறப் படுகொலைகளை மேற்கொள்ளவும், சுதந்திரம் பெற்றதில் இருந்து 75 வருடங்களில் 40 ஆண்டுகள் இந்த அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்திய சரித்திரத்தைக் கொண்டுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் மட்டுமே, கடந்த காலத்தில் இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடி, இந்த அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான வேலைத்திட்டத்தை முன்வைத்தது. அதேபோல், சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இந்த மீண்டும் புதுப்பிக்கபட்ட ஆபத்துக்கள் பற்றி விளக்கியதோடு சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளின் ஆதரவுடன், இந்த அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக போராடுவதற்கு ஒரு வேலைத்திட்டத்தை முன்வைத்தது.

45. ஆளும் கட்சி, எதிர்க் கட்சிகள் மற்றும் அவற்றின் சிங்களப் பேரினவாத அமைப்புகள், தொழிலாளர் வர்க்கத்தைப் பிளவுபடுத்தவும் பலவீனமாக்கவும் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபாண்மையினருக்கு எதிராக இனவாத பிரச்சாரங்களை தீவிரப்படுத்துகின்றன. இஸ்லாமிய அதிதீவிரவாதக் குழுவால் 2019 ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்கதல்கள், முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. வைரஸைப் பரப்புவதாக அவர்கள் மீது பழி சுமத்தியதோடு கோவிட்-19 வைரஸால் மரணித்த முஸ்லிம்களின் சடலங்கள் பலாத்காரமாக தகனம் செய்யப்பட்டு, அவை இன குழப்பங்களுக்கு எரியூட்ட பயன்படுத்தப்பட்டன. “ஐ.எஸ்.ஐ.எஸ். அடிப்படைவாதம் இருக்கும் வரை எந்தவொரு முஸ்லீம் இளைஞனும் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த முடியும்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரால் சரத் வீரசேகர, செப்ரம்பர் 22 அன்று பாராளுமன்றில் தெரிவித்தார். “தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதம் மீள் உருவாக்கப்படுவதாக” தமிழர்களுக்கு எதிராக ஒரு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. 2020இல் இருந்தே கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கட்சித் தலைவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் இளம் கவிஞர் அஹ்னப் ஜஸீம் மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் உட்பட பல நுற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இந்த விஷமத்தனமான இனவாத ஆயுதம், 1948 இல் இருந்தே தனது நெருக்கடியின் ஒவ்வொரு கட்டத்திலும் இலங்கை ஆளும் வர்க்கத்தால் பயன்படுத்தபட்டு வந்துள்ளதோடு அது 1983 இல் தொடங்கிய முப்பது வருடகால உள்நாட்டு யுத்தத்தில் உச்ச கட்டத்தை அடைந்தது. புலிகளுக்கு எதிரான யுத்தம், நாட்டில் சொல்ல முடியாத அழிவுகளை ஏற்படுத்தி, பத்தாயிரக் கணக்கான பொது மக்கள் படுகொலையுடன் 2009 மே மாதம் முடிவடைந்தது. எவ்வாறாயினும் தனது நெருக்கடியின் ஒவ்வொரு புதிய கட்டத்திலும் முன்னெப்போதுமில்லாத வகையில் ஆளும் வர்க்கத்துக்கு இனவாத விஷம் தேவைப்படுகின்றது.

46. பிராந்தியத்தில் பூகோள அரசியல் போட்டியால் இராஜபக்ஷ அரசாங்கத்தினதும் ஆளும் கும்பலதும் அரசியல் நெருக்கடி மோசமாக்கப்பட்டுள்ளது. இந்த புவிஅரசியல் பதட்டங்களின் மையத்தில் இருப்பது சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் ஆகும். அமெரிக்கவும் இந்தப் பிராந்தியத்தில் அதன் கூட்டாளியான இந்தியாவும் இலங்கையை தங்களது மூலோபாய நலன்களின் வழியில் பயணிக்குமாறு கோருகின்றன. கோடாபய இராஜபக்ஷ, மேலும் மேலும் பெய்ஜிங்கிடம் இருந்து நிதி உதவியை நாடியதில் இருந்து, அவரை சீனாவுடன் கூட்டு வைக்க வேண்டாம் என வாஷிங்டன் எச்சரித்தது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவை எதிர்த்து நிற்பதற்கு, பெய்ஜிங் தனது பெல்ட் அன்ட் ரோட் இனிஷியேடிவ் திட்டத்தின் பாகமாக கருதும் சீன-நிதியிலான கொழும்புத் துறைமுக நகரத்தை கட்டுவதற்கு கொழும்பு திட்டமிட்ட போது, வாஷிங்டன், உள்நாட்டு யுத்தத்தின் இறுதி மாதங்களுடன் தொடர்புடைய யுத்தக் குற்றப் பிரச்சினைகளை எழுப்பி, மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் (யு.என்.எச்.ஆர்.சி.) ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தது. இது பெய்ஜிங் உடனான உறவுகளை துண்டிப்பதற்கு கொழும்பு மீது அமெரிக்கா கொடுக்கும் அழுத்தத்தின் ஒரு பாகமாகும். ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், யுத்தக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக தண்டனைகளை முன்னெடுக்குமாறு அங்கத்துவ நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். 2015 இல் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க இலங்கையின் யுத்தக் குற்றங்களை பயன்படுத்திய அமெரிக்கா, அவர் சீனாவிடம் இருந்து விலகத் தவறியதால், அவரைப் அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கு ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையை திட்டமிட்டது. சோசலிச சமத்துவக் கட்சி தொடர்ச்சியாக விளக்கிதுபோல, எண்ணிடலங்கா யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்பான அமெரிக்கா மற்றும் ஏனைய பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கு இலங்கையில் அல்லது வேறு எந்த நாட்டிலும் மனித உரிமைகள் சம்பந்தமாக எந்தக் கவலையும் கிடையாது, அவை தமது மூலோபாய நலன்களை முன்னெடுப்பதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றன.

வாசிங்டனை சாந்தப்படுத்தும் முயற்சியில், முன்னைய ஆட்சியின் போது தொடங்கிய அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளையகத்தினுடனான இலங்கை இராணுவத்தின் தொடர்பை கொழும்பு பேணிவருகின்றது. சமீபத்தில், இராஜபக்ஷ அரசாங்கம், பிரதான துறைகளில் பாரிய அளவில் முதலீடு செய்ய அமெரிக்காவை அனுமதித்தது. சீனாவுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான ஆக்கிரோச நடவடிக்கைகள், யுத்த அச்சுறுத்தலை தீவிரமடைவதை சுட்டிக் காட்டுகிறது. இதை சர்வதேச தொழிலாள வர்க்கத்தினால் மட்டுமே தடுக்க முடியும்.

47. தொற்றுநோய் சம்பந்தமான அரசாங்கத்தின் குற்றவியல் கொள்கைள், எதேச்சதிகார ஆட்சியை நோக்கிய நகர்வுகள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் மீது பொருளாதார நெருக்கடியின் சுமைகளை திணித்தல் ஆகியவற்றுடன் இலங்கை எதிர் கட்சிகள் எந்த வேறுபாடுகளையும் கொண்டிருக்கவில்லை. அரசாங்கத்தின் மீதான இந்தக் கட்சிகளின் தரப்படுத்தப்பட்ட விமர்சனங்களின் நோக்கம் சமூக எதிர்ப்பை திசை திருப்புவதும் அடக்குவதுமே ஆகும். ஐ.தே.க., ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி. மற்றும் முஸ்லீம் கட்சிகளும் மற்றும் பெருந்தோட்ட தொழிற் சங்கங்களும், 2020இல் பிரதமரால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டஙகளில் கலந்துகொண்டதோடு பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கு தமது உதவி மற்றும் ஆதரவினை வழங்கிய அதேவேளை, கோவிட்-19 வைரஸ் சம்பந்தமாக ஜனாதிபதியின் பிரதிபலிப்பை பாராட்டின. அவர்கள், இராஜபக்ஷ தனது நிர்வாகத்தை இராணுவமாக்குவதை எதிர்க்கவோ அல்லது சிறுபான்மையினருக்கு எதிரான அதன் இனவாதப் பிரச்சாரத்தை சவால் செய்யவோ இல்லை. இன பாகுபாடுகளைக் கடந்து தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் சமூக கோபங்கள், முதலாளித்துவத்தை அச்சுறுத்தும் என்பதையிட்டு ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகள் பொதுவாக பீதியடைந்துள்ளன. இந்த எதிர்க் கட்சிகள், கொழும்பு துறைமுக நகர செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் போது, வாஷிங்டனின் நலன்களின் வழியில் நின்று தமது சீன-விரோத நிலைப்பாட்டை வெளிப்படுத்தின. ஐ.ம.ச. மற்றும் அவ்வப்போது தமது ஏகாதிபத்திய-விரோத வாய்ச்சவாடல்களை வீசி எறிகின்ற ஜே.வி.பி.யும், “நாட்டுக்குள் சீன பிராந்தியத்தை அனுமதித்தமைக்கு” அரசாங்கத்தை வெளிப்படையாக விமர்சித்தன. தொழிலாளர்களால், தமது ஜனநாயக மற்றும் சமூக அபிலாசைகளைப் பாதுகாக்கும் இயக்கமாக இந்தக் கட்சிகளில் எதையும் காண முடியாது.

48. இலங்கையில் முதலாளித்துவ வர்க்கத்தின் வரலாற்று நெருக்கடி, ஐ.தே.க. மற்றும் ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) ஆகிய பாரம்பரிய முதலாளித்துவக் கட்சிகளின் வீழ்ச்சியால் கூர்மையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவை 1948 இல் இருந்து நாட்டை தொடர்சியாக மாறி மாறி ஆண்டு வந்துள்ளன. கடந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.க. ஒரு ஆசனத்தை மட்டுமே வெல்ல முடிந்ததோடு அதன் தேசிய வாக்குகள் 250,000 ஆக வீழ்ச்சியடைந்தது. 2020 பெப்ரவரி மாதம் ஐ.தே.க. பிளவுபட்டது. அதன் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கினர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ.ல.சு.க. முற்றிலும் செயலற்றுப் போனது. அது ஸ்ரீ.ல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒரு பகுதியினரால் 2016 இல் அமைக்கப்பட்ட ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உடன் ஒரு கூட்டணியில் உள்ளது. சிங்கள பேரினவாதத்தில் மூழ்கியுள்ள இந்தக் கட்சிகள், அவற்றின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்கள், தமிழர்-விரோத இனவாதம் மற்றும் யுத்தம் போன்றவற்றுக்கு பொறுப்பானவை என்பதால், வெகுஜனங்களின் மத்தியில் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளன. அரசியல் ஸ்திரத்தன்மைக்கு மத்தியில், ஆளும் வர்க்கத்தின் ஒரு பெரும் பகுதி, தொழிலாள வர்க்கத்தை தோற்கடிப்பதற்கு பயன்படுத்தும் எதிர்பார்ப்பில், சர்வதிகார ஆட்சிக்கு ஆதவு கொடுப்பதற்காக இராஜபக்ஷ மற்றும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பக்கம் திரும்பின.

தமிழ் வெகுஜனங்களுக்கு எதிராக இலங்கையின் சிங்கள முதலாளித்துவ தட்டு முன்னெடுத்த மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின் மத்தியில், 2006 இல் யாழ்ப்பாணத்தில் இலங்கை படையினர் ரோந்து செல்கின்றனர். (AP Photo/Eranga Jayawardena, File)

49. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட தமிழ் முதலாளித்துவ தேசியவாத கட்சிகள், தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் மேலும் வலது பக்கம் திரும்பியுள்ளன. அவை, சீனாவுக்கு எதிரான அமெரிக்க மூலோபாய சுற்றுவட்டத்தின் கீழ் உறுதியாக கொழும்பை கொண்டுவருவதற்கான வாஷிங்டனின் புதிய நகர்வுகளுடன் அணி வகுத்துள்ளன. இதன் பாகமாக, தமிழ் கூட்டமைப்பின் தலைமையில் அவை யு.என்.எச்.ஆர்.சி. இல் 2021 மார்ச் மாதம் அமெரிக்க-அனுசரணையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவளித்தன.

2002 இல் அமைக்கப்பட்ட தமிழ் கூட்டமைப்பு, புலிகளின் வாஷிங்டனுக்கான வேண்டுகோளை ஆதரித்தது. அது 2015 இல் மஹிந்த இராஜபக்ஷவை அகற்றுவதற்கான அமெரிக்க-தலைமையிலான ஆட்சி மாற்ற செயற்பாட்டுக்கு ஆதரவளிப்பதற்காக ஐ.தே.க. உடன் கூட்டுச் சேர்ந்ததோடு, அமெரிக்க-சார்பு சிறிசேன-விக்கிரமசிங்க ஆட்சி 2019 வரை அதிகாரத்தில் இருப்பதற்கு ஆதரவளித்தது. கூட்டமைப்பின் பிரதான பங்காளியான இலங்கை தமிழரசுக் கட்சி, சிங்கள ஆளும் கும்பலின் தமிழர்-விரோத கொள்கைக்கு பதிலிறுப்பாக 1949இல் ஸ்தாபிக்கப்பட்டதுடன் தன்னை தமிழ் தேசியவாதத்தின் பாதுகாவலனாக காட்டிக்கொண்டது. அது கொழும்பில் அடுத்தடுத்து பதிவிக்கு வந்த ஆட்சிகளுடன் அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்களை தக்க வைத்துக்கொள்ள முயிற்சிக்கும் இழிவான வரலாற்றைக் கொண்டுள்ளது. வர்க்க ஒற்றுமையைக் காட்டிய கூட்டமைப்பு, இராஜபக்ஷவின் எதேச்சதிகார நகர்வுகளை எதிர்ப்பதில்லை. கொழும்பு ஆட்சி மற்றும் ஆளும் கும்பலைப் போலவே, வர்க்கப் போராட்டத்தில் வெளிப்படுகின்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் புறநிலை ஐக்கியத்தைப் பற்றி தமிழ் கட்சிகள் மரண பீதியடைந்துள்ளன. அவற்றின் தேசியவாத அரசியலானது தொழிலாள வர்க்கத்தை இனவாத ரீதியில் பிளவுபடுத்தி கொழும்பு அரசாங்கத்தின் இனவாத ஆத்திரமூட்டல்களுக்கு சேவை செய்வதையே இலக்காகக் கொண்டுள்ளது. இந்த தமிழ் கட்சிகளில் எவையும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவி-மூலோபாய நலன்களுக்கே சேவை செய்ய முயற்சிக்கின்றன. அதன் ஊடாக தமது சலுகைகளை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றன.

50. மே 2009 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை அடிப்படையில் இராணுவப் பிரச்சினை அல்ல, மாறாக அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட பெரும் வல்லரசுகளின் ஆதரவை நம்பி, இனப் பிரத்தியேகவாதத்தை அடிப்படையாகக் கொண்ட, தனி அரசு ஒன்றை அமைக்கும் அதன் திவாலான தேசிய பிரிவினைவாதக் கொள்கையின் விளைவாகும் என்று சோசலிச சமத்துவக் கட்சி விளக்கியுள்ளது. பிரிவினைவாதக் குழுக்களை தனது புவிசார் அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்தும்போது அவற்றை ஆதரிப்பதில் வாஷிங்டனுக்கு தயக்கமில்லை. எவ்வாறாயினும், வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு சுதந்திரமான தமிழ் அரசை உருவாக்கும் புலிகளின் அழைப்பை வாஷிங்டன் எதிர்த்ததுடன், அதன் பிரிவினைவாதம் வாஷிங்டனின் மூலோபாய நட்பு நாடான இந்தியாவை சீர்குலைக்கும் என்ற புவிசார் அரசியல் கணக்கீடுகளின் அடிப்படையில் அதை நசுக்குவதற்கு ஆதரவளித்தது.

51. விடுதலைப் புலிகள் போன்றே, தமிழ் கட்சிகளின் கொள்கைகள் 'சுய நிர்ணய உரிமையை' அடிப்படையாகக் கொண்டவை. விடுதலைப் புலிகள் தனிநாடு அமைக்கப்பட வேண்டும் என்று நேரடியாகக் கோரிய அதேவேளை, 2009இல் அது தோல்வியடையும் வரை அதற்கு ஆதரவளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய கட்சிகளும், இப்போது கொழும்பு ஆட்சியுடன் அதிகாரப் பகிர்வு அல்லது அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாட்டைக் கோருகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பானது இதை 'உள்ளக சுயநிர்ணய உரிமை' என்று விளக்குவதோடு அதை தொடர்ந்து மறுப்பதானது 'வெளிப்புற சுயநிர்ணயத்தை”, அதாவது தனி அரசுக்கான கோரிக்கையை, சட்டப்பூர்வமாக்கும்' என்று எச்சரிக்கிறது. அதன் வடிவம் எதுவாக இருந்தாலும், அதன் சுயநிர்ணய உரிமை என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை ஆதரிப்பதன் மூலம் அதன் ஆதரவைப் பெறுவதுடன் பிணைந்துள்ளது.

ஐக்கிய சோசலிசக் கட்சி (யு.எஸ்.பி.) மற்றும் நவ சமசமாஜக் கட்சி (ந.ச.ச.க.) போன்ற இலங்கையின் போலி இடது கட்சிகளும் சில முன்னாள் தீவிரவாதிகளும், சுயநிர்ணய உரிமை உட்பட தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஆதரிப்பதன் பெயரில், தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் இந்த ஏகாதிபத்திய சார்பு பிரச்சாரத்தை ஆதரிக்கின்றன. போலி இடது யு.எஸ்.பி. மற்றும் ந.ச.ச.க., லெனினை பொய்யாக தூக்கிப் பிடித்து, இந்த ஆதரவை நியாயப்படுத்த முயல்கின்றன. தமிழ்க் கட்சிகளைப் போலவே இந்தக் குழுக்களும், சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் போர்க் குற்றவாளியும் ஜனநாயக உரிமைகளை மீறுவதில் முதலிடத்திலும் உள்ள அமெரிக்காவின் போலியான மனித உரிமைப் பிரச்சாரத்தை ஆதரிப்பதில் ஆச்சரியமில்லை.

52. சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கைகள் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற தமிழ் கட்சிகள் மற்றும் மத்தியதர வர்க்க குழுக்களின் கூற்றுக்களை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது. அந்த மத்தியதர வர்க்க குழுக்களின் கூற்றுகளுக்கும் மார்க்சியத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. 1998 இல் வெளியிடப்பட்ட பூகோளமயமாக்கமும் சர்வதேச தொழிலாள வர்க்கமும் என்ற அறிக்கை உட்பட ஒரு தொடர் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகளில், உற்பத்தியின் பூகோளமயமாக்கல் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள கூர்மையான மாற்றங்கள், அனைத்து தேசிய அடிப்படையிலான வேலைத் திட்டங்களுக்கும் குழிபறித்துள்ளதுடன் அனைத்து தேசியவாத அமைப்புகளையும் மேலும் வலது பக்கம் நகரச் செய்துள்ளது, என அனைத்துலகக் குழு விளக்கியது. மேலும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட இத்தகைய 'தேசிய விடுதலை இயக்கங்கள்', அனைத்து இன சமூகங்களின் ஐக்கியத்துக்காகவும் அவற்றின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் ஒருபோதும் முன்நின்றதில்லை.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மேற்கண்ட அறிக்கையில் விளக்கியது போல், “லெனினைப் பொறுத்தவரை, தேசிய சுயநிர்ணய உரிமை என்பது ஒரு அர்த்தத்தை, ஒரே ஒரு அர்த்தத்தை மட்டுமே கொண்டிருந்தது. இந்த உரிமை – அதாவது தனியான, சுதந்திரமான அரசை உருவாக்கும் உரிமை ஆகும். போல்ஷிவிக் கட்சியைப் பொறுத்தவரை, இந்த உரிமையானது ஒரு “எதிர்மறை” அர்த்தத்தை கொண்டுள்ளது. அதாவது இந்த உரிமையை அங்கீகரிப்பதில், போல்ஷிவிக்குகள் தேசிய பிரிவினைவாதத்தை விருப்பமான நடவடிக்கையாக பரிந்துரைக்கவில்லை,” என அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

லெனின் தனது முடிவுகளை எடுத்த அதே வரலாற்றுப் பொருள்முதல்வாத வழிமுறையின் அடிப்படையில், ஒரு வேறுபட்ட வரலாற்று காலகட்டத்தில் தேசிய சுயநிர்ணயத்தின் அர்த்தத்தை அனைத்துலகக் குழு விளக்கியது:

“மார்க்சிச இயக்க வரலாற்றில், சூத்திரங்களும் சுலோகங்களும், ஒரு காலத்தில் முற்போக்கான மற்றும் புரட்சிகரமான உள்ளடக்கம் கொண்டவையாகவும் இன்னொரு காலகட்டத்தில் முற்றிலும் மாறுபட்ட அர்த்தத்தை கொண்டவையாகவும் அடிக்கடி இருந்து வந்துள்ளன. தேசிய சுயநிர்ணயம் அத்தகைய ஒரு நிகழ்வை முன்வைக்கிறது.

“சுய நிர்ணய உரிமை என்பது எண்பது ஆண்டுகளுக்கு முன்பு லெனின் வரையறுத்த விதத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றைக் குறிக்கிறது. சுயநிர்ணய உரிமையை மேம்படுத்தியவர்கள் மார்க்சிஸ்டுகள் மட்டுமல்ல. மாறாக, பின்தங்கிய நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவ வர்க்கமும் ஏகாதிபத்தியவாதிகளும் கூட அதை பிரேரித்துள்ளனர். முதலாம் உலகப் போரின் முடிவில் இருந்து, இந்த 'உரிமையானது' நடப்பில் உள்ள பிரதேசங்களை கூறுபோடுவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை நியாயப்படுத்த, ஏதாவதொரு ஏகாதிபத்திய சக்தியால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.”

53. 1996 இல் சோசலிச சமத்துவக் கட்சியாக மாறிய புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே, இலங்கையில் இந்த பகுப்பாய்வை அடித்தளமாகக் கொண்டு அதன் வேலைத் திட்டத்தை அபிவிருத்தி செய்கின்றது. சோசலிச சமத்துவக் கட்சியாக / புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், இடைவிடாமல் யுத்தத்தை எதிர்த்ததோடு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக் கோரியதுடன் இன எல்லையைக் கடந்து தொழிலாளர்களின் சர்வதேச மற்றும் சோசலிச ஐக்கியத்துக்காகப் போராடியது. இந்தப் போராட்டம், தெற்காசிய சோசலிசக் குடியரசு ஒன்றியத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கும் மற்றும் சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்து, “இலங்கையின் நிலைமையும், புரட்சிக் கம்யுனிஸ்ட் கழகத்தின் அரசியல் பணிகளும்” என்ற தலைப்பில், 1987 நவம்பர் 19 அன்று வெளியான அனைத்துலகக் குழுவின் அறிக்கையின் அடிப்டையில் அபிவிருத்தி செய்யப்பட்டதாகும்.

54. இலங்கையில் வர்க்க போராட்டங்களின் மீள் எழுச்சியானது தொழிலாளர் வர்க்கத்துக்குள் குறிப்பாக அதன் பிரதான பகுதியினர் மத்தியில் தனது தளத்தை அபிவிருத்தி செய்வதற்கு சோசலிச சமத்துவக் கட்சியின் திட்டமிட்ட மற்றும் செயலூக்கமான அரசியல் தலையீட்டை கோருகின்றது. இந்த போராட்டங்கள், தொழிற்சங்கங்களை மீறி அல்லது அவற்றுக்கு எதிராக அபிவிருத்தியடைகின்றன. உலகம் முழுதும் உள்ள அவற்றின் சமதரப்பினரைப் போல், இலங்கைத் தொழிற்சங்கங்களும் அரச மற்றும் நிதி மூலதனத்தின் கருவியாக மாற்றமடைந்துள்ளன. தொற்றுநோயால் தூண்டிவிடப்பட்டுள்ள வளர்ந்துவரும் சமூக எதிர்ப்புகளைக் கண்டு அவை பீதியடைந்துள்ளன. கொழும்புத் துறைமுகத்தில், தனியார் மயமாக்கலுக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டத்தை இந்திய-விரோதப் பிரச்சாரத்துக்குள் திசை திருப்பிவிடுவதற்காக, தொழிற்சங்கங்கள் இனவாதக் குழுக்களுடன் நேரடியாக இணைந்துள்ளதுடன், தொழிலாளர்களின் போராட்டங்களைத் தோற்கடிக்க அரசாங்கத்துடன் உடன்பாட்டுக்குச் சென்றுள்ளன. பெருந்தோட்டங்களில் உள்ள தொழிற்சங்கங்கள், வேலைச் சுமைகளை அதிகரிக்கவும், சம்பளம் மற்றும் தொழில் வெட்டுக்களைத் திணிக்கவும் தொழிலாளர்களின் போர்க்குணத்தை அடக்கவும் கம்பனிகளுடன் நேரடியாக வேலை செய்கின்றன. பொருளாதாரத்தை மீளத் திறப்பதிலும் பாதுகாப்பற்ற நிலைமைகளில் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அனுப்புவதிலும் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தை முழுமையாக ஆதரித்தன. தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், போராட்டங்களைத் தடுக்கின்ற அதே வேளை, தொழில்கள் மற்றும் சம்பளங்களை வெட்டிக் குறைப்பதற்கு அரச அதிகாரிகளுடனும் கம்பனி முதலாளிகளுடனும் கலந்துரையாடுவதற்காக தொடர்ந்தும் அவர்களுடன் அமர்ந்திருக்கின்றனர். சமூக மற்றும் வாழ்கைக்கை நிலைமைகள் மீதான தாக்குதல்கள் உலகளாவிய நெருக்கடியால் உருவாக்கப்பட்டதும் சர்வதேச மூலதனத்தால் தூண்டிவிடப்படுவதும் ஆகும். முதலாளித்துவ வர்க்கத்தினதும் அரசினதும் இத்தகைய முகவர்களிடம் இருந்து பிரிவதற்கும், வர்க்கப் போராட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை அமைக்கும் பதாதையின் கீழ், வேலைத் தளங்களில் தமது சொந்த நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்பவும் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக சோசலிச சமத்துவக் கட்சி அதன் போராடத்தை ஆழப்படுத்த வேண்டும்.

55. சர்வதேச முன்னெடுப்பின் ஒரு பாகமாக, இலங்கையில் உள்ள போலி இடது குழுக்களின் வலது நோக்கிய நகர்வை தொற்று நோய் நெருக்கடி அம்பலப்படுத்தியுள்ளது. இந்த நகர்வின் தீவிர வெளிப்பாடு ந.ச.ச.க. ஆகும். வலது சாரி ஐ.தே.க. உடனான தசாப்த கால நெருக்கமான உறவின் பின், அதன் வேட்பாளர் பட்டியலில் இந்த போலி இடது குழு 2020 பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. சர்வதேச பப்லோவாதிகள் குழு -நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகம்- அதன் உத்தியோகபூர்வ பிரிவாக இருக்கும் ந.ச.ச.க. இன் துரோக அரசியலை ஆதரித்தது. ஏறக்குறைய ஆறு தசாப்தங்களுக்கு முன்னர், பப்லோவாதிகள், லங்கா சம சமாஜக் கட்சியின் (ல.ச.ச.க.) காட்டிக்கொடுப்பைத் தயார் செய்தனர், அது சர்வதேச சோசலிசக் கோட்பாடுகளை முற்றிலுமாக கைவிட்டு, சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைந்துகொண்டது. இந்தக் காட்டிக் கொடுப்பு, 30 வருட இனவாத யுத்தம் உட்பட அடுத்தடுத்து தொழிலாளர் வர்க்கத்தக்கு பேரழிவைக் கொண்டு வந்தது. ந.ச.ச.க. இன் சீரழிவானது உலகளவில் ஏகாதிபத்தியத்தின் முகவரான பப்லோவாதிகளின் வகிபாகத்தை பண்புமயப்படுத்துகின்றது. (போலி-இடது நான்கம் சர்வதேச செயலகம், ந.ச.ச.க.இன் இடை நீக்கத்தை அறிவிக்கின்றது.) 25 நவம்பர் 2020). இந்த மதிப்பிழந்த மற்றும் சீரழிந்த கட்சியை கைவிட்ட பின்னர், பப்லோவாத செயலகமானது இப்போது ந.ச.ச.க. இல் இருந்து பிரிந்து சென்ற குழவான லெஃப்ட் வொயிஸ் (இடது குரல்) எனப்படுவதை அதன் இலங்கைப் “பகுதியாக” பட்டியலிட்டுள்ளது. இது முதலாளித்துவத்துக்கு எதிராக இப்போது போராட்டத்துக்கு வந்துகொண்டிருக்கினற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை திசை திருப்புகின்ற மற்றும் அவர்கள் ட்ரொட்ஸ்கிசத்தை நோக்கித் திரும்புவதைத் தடுக்கின்ற நோக்குடன் ஒழுங்கமைப்பட்டதாகும்.

56. போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி. முதலாளித்து ஆட்சிக்கு தனது ஒத்துழைப்பைக் காட்டியுள்ளதுடன் அதி வலதுசாரி பேரினவாத பாசிச சக்திகளுடன் அணிசேர்கின்றது. 2020 ஏப்ரலில், “வேறுபாடுகள் இருந்தாலும்” தொற்று நோய்க்கு எதிராக போராடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு கட்சியின் ஆதரவை வழங்கி, பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை வரைந்தது. பொருளாதாரத்தை மீளத் திறப்பதற்கு ஆதரவளித்த பின்னர், முன்னிலை சோசலிசக் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் துமிந்த நாகமுவ, தொற்று நோய் காரணமாக “தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்” பற்றி கலந்துரையாட, தொழில் அமைச்சரைச் சந்தித்ததுடன், அவற்றைத் தீர்ப்பதற்கு அமைச்சர் தயாராக இருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். 2021 ஆரம்பத்தில், இந்திய நிறுவனம் ஒன்றுக்கு அதன் பங்குகளின் பெரும்பகுதியை விற்று துறைமுகத்தின் ஒரு முணையத்தை தனியார்மயமாக்குவதற்கு எதிராக, துறைமுகத் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கிய போது, தனியார்மயமாக்கலுக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டத்தை திசைதிருப்ப, இந்திய-விரோத பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக, துறைமுக தொழிற்சங்கங்கள் மற்றும் சிங்கள-பௌத்த பேரினவாதக் குழுக்களுடன் முன்னிலை சோசலிசக் கட்சி இணைந்துகொண்டது.

தமது நாடுகளின் தொழிலாளர் வர்க்கத்தை காட்டிக்கொடுத்த, கிரேக்கத்தில் சிரிசா மற்றும் ஸ்பெயினில் பொடேமொஸ் போன்றவற்றை முன்னிலை சோசலிசக் கட்சி போற்றியதோடு அதே பாதையைப் பின்பற்றுகின்றது. கடந்த பல மாதங்களாக இந்தக் கட்சி, இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியின் பங்காளர்களான ஸ்ரீ.ல.சு.க., ல.ச.ச.க. மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியுடனும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. முன்னிலை சோசலிசக் கட்சி கட்டுப்பாட்டிலான அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஐ.ம.ச. உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. புரட்சிகர அபிவிருத்திகள் பற்றி விழிப்படைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சி, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு குழிதோண்டுவதற்காக, முதலாளித்துவ மற்றும் முதலாளித்துவ-சார்பு கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் பரந்த கூட்டணியை அமைக்க முயற்சிக்கின்றது.

மேலும் படிக்க

Loading