தனியார்மயப்படுத்தலுக்கும் அரசாங்க அடக்குமுறைக்கும் எதிராக இலங்கை சோ.ச.க. கொழும்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி, கடந்த வியாழன் அன்று மத்திய கொழும்பில் உள்ள இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் (இ.கா.கூ.) தலைமையகத்திற்கு வெளியே, கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களை நிர்வாகம் வேட்டையாடுவதையும், அரச நிறுவனங்களை தனியார்மயமாக்கும் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் திட்டங்களையும் எதிர்த்து ஒரு பலம்வாய்ந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

15 ஜூன் 2023 அன்று கொழும்பில் உள்ள இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு வெளியே சோ.ச.க. மற்றும் IYSSE நடத்திய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதி.

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அத்தோடு, ஜூலை 6, வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பில் உள்ள பொது நூலக கேட்போர் கூடத்தில் பொதுக்கூட்டம் ஒன்றையும் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

பல தொழிற்சங்கங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து வியாழன் மதிய உணவு நேரப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்த காப்புறுதி பொது ஊழியர் சங்கத்தின் (கா.பொ.ஊ.ச.) பொதுச் செயலாளர் திவாகர அதுகலவின் அழைப்பின் பேரில் சோசலிச சமத்துவக் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

அதுகல, கா.பொ.ஊ.ச. இன் ஊடக செயலாளர் நயோமி ஹெட்டியாராச்சிகே ஆகியோர் கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக முன்னதாக எதிர்ப்பு போராட்டங்களை ஏற்பாடு செய்ததை தொடர்ந்தே, நிர்வாகத்தால் சமீபத்தில் பழிவாங்கப்பட்டு பலவந்தமாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தனியார்மயமாக்கல் மற்றும் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு அதன் தொடர்ச்சியான எதிர்ப்பின் காரணமாக, இ.கா.கூ. தொழிலாளர்கள் மத்தியில் கட்சி வலுவான ஆதரவைப் பெற்றுள்ளதால், கா.பொ.ஊ.ச. நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு சோசலிச சமத்துவக் கட்சிக்கு அத்துகல அழைப்பு விடுத்தார். சோசலிச சமத்துவக் கட்சி இந்த நடவடிக்கையில் இணைந்துகொள்ள முடிவு செய்த போதிலும், அதன் சொந்த பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் கோஷங்களின் கீழ் பங்குபற்றவும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வேலைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சங்கங்களில் இருந்து தன்னைக் வேறுபடுத்திக்கொள்ளவும் தீர்மானித்தது.

கொழும்பில் உள்ள இ.கா.கூ. தலைமையகத்தில் பணியாற்றிய அதுகல மற்றும் ஹெட்டியாராச்சிகே, முறையே கொழும்பில் இருந்து 127 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கலவானைக்கும் 28 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாணந்துறைக்கும் பலவந்தமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இ.கா.கூ. நிர்வாகமானது 'தொழிற்சங்க விவகாரங்களுக்காக நிறுவனத்தின் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தியதற்காக' அவர்களை தண்டித்துள்ள போதிலும், கூட்டுத்தாபனத்தில் இயங்கும் 15 வெவ்வேறு தொழிற்சங்கங்கள் அவற்றின் தேவைக்கு நிறுவன மின்னஞ்சல்களை நீண்டகாலமாக பயன்படுத்தி வந்துள்ளன. 

பெப்ரவரி 15 அன்று கொழும்பு தலைமை அலுவலகத்திற்குள் புதிய, பணவீக்கத்திற்குக் குறைவான மூன்று ஆண்டு கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 50 போராளி ஊழியர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கைக் கடிதங்களை அனுப்பியுள்ளது.

வியாழன் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் 'அத்துகல மற்றும் ஹெட்டியாராச்சிகேயின் தண்டனை இடமாற்றங்களை விலக்கிக்கொள்', 'அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் அகற்று,' 'நடவடிக்கை குழுக்களின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை கட்டியெழுப்புவோம்' மற்றும் 'உலக சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்புவோம்' என்ற சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர். 'அனைத்து வெளிநாட்டு கடன்களையும் தள்ளுபடி செய்,' 'கருத்து சுதந்திரத்தை தணிக்கை செய்யாதே,' 'தனியார்மயமாக்கல் மற்றும் வணிகமயமாக்கலை நிறுத்து,' 'வேலைகள் மற்றும் ஊதியங்களை வெட்டாதே”, 'அடக்குமுறை சட்டங்களை விலக்கிக்கொள்' போன்ற சுலோகங்களை அவர்கள் கோஷமிட்டனர்.

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் வியாழக்கிழமை காலை 7.00 மணி முதல் கூட்டுத்தாபன தலைமையகத்திற்குள் நுழைந்த இ.கா.கூ. ஊழியர்களுக்கு 'காப்புறுதி கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு எதிரான அரச அடக்குமுறையை நிறுத்து' என்ற தலைப்பில் நூற்றுக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் உதவிச் செயலாளர் சமன் குணதாச சிங்களத்தில் உரையாற்றினார். அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கோரிக்கைகளில் ஒன்றான தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் அவர்களின் பங்கு காரணமாகவே அத்துகல மற்றும் ஹெட்டியாராச்சிகே இடமாற்றம் செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

'இந்த பழிவாங்கலுக்கு எதிரான போராட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்திற்கு எதிரான போராட்டத்துடன் பிணைந்துள்ளது. ஆனால் விக்கிரமசிங்க அரசாங்கத்தைப் போலவே, அனைத்து எதிர்க்கட்சிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் உடன்படுவதோடு முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட போலி-இடது கட்சிகளிடம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு மாற்றீடு இல்லை.

'தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடனும் அரசாங்கத்துடனும் சரவதேச நாணய நிதியத்தின் திட்டத்தைப் பாதுகாக்க ஒரு குழுவாக வேலை செய்வதால் எங்களுக்கு ஒரு புரட்சிகர வேலைத்திட்டம் தேவை. எனவே, அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் பிணைந்திருந்தால் தொழிலாள வர்க்கம் வெற்றிபெற முடியாது. அது சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும். எனவே, இ.கா.கூ. ஊழியர்களுக்கு அவர்களின் சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்,” என்று குணதாச கூறினார்.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன ஊழியர்கள் 8 டிசம்பர் 2022 அன்று கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா உட்பட உலகெங்கிலும் இதேபோன்ற சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை சுட்டிக் காட்டிய குணதாச, உலகளவில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியத்தை நிலைநாட்டுமாறு இலங்கை தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். .

தீவு முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் நடவடிக்கைக் குழுக்களில் இருந்து ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட, ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டிற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தில் இ.கா.கூ. தொழிலாளர்கள் சேர்ந்துகொள்ள வேண்டும், என அவர் மேலும் கூறினார். இந்த மாநாட்டின் நோக்கம், சோசலிச மற்றும் சர்வதேசிய கொள்கைகளின் அடிப்படையில், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காக போராடுவதற்கு கிராமப்புற ஏழைகளை ஒன்றிணைத்துக்கொண்டு, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தை கட்டியெழுப்புவதே ஆகும், என்று அவர் தெரிவித்தார்.

பெரும்பாலான பிரதான இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்தன. எவ்வாறாயினும், ஜூன் 15 அன்று டெய்லி மிரர் பத்திரிகையானது சோசலிச சமத்துவக் கட்சி இன்று கொழும்பில் 'அரச சொத்துக்கள் தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிராகவும் வேலைகள் மற்றும் ஊதியங்களைப் பாதுகாப்பதற்கும் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது' என்று ஒரு செய்தியையும் எட்டு புகைப்படங்களையும் வெளியிட்டது. தனியார் தொலைக்காட்சியான தெரண, சோசலிச சமத்துவக் கட்சி ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக கூறிய போதும், வீடியோ காட்சிகள் எதையும் ஒளிபரப்பவில்லை.

தொழிற்சங்க அதிகாரிகள் வேண்டுமென்றே தங்கள் எதிர்ப்பை சில டஜன் இ.கா.கூ. ஊழியர்களுக்கு மட்டுப்படுத்தியதுடன் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களை அணிதிரட்டுவதற்கு அழைப்பு விடுக்கவில்லை. மொத்தத்தில், சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்கேற்பை உள்ளடக்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 பேர் இருந்தனர்.

தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் போராட்டத்தை ஏற்பாடு செய்ததன் நோக்கம், அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்ட நிரலுக்கும் ஏனைய சிக்கன நடவடிக்கைகளுக்கும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் அதிகரித்து வரும் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதும் சிதறடிப்பதுமே ஆகும். இது அரசாங்கம் அதன் போக்கை மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர்களின் கோஷங்கள் மற்றும் உரைகளில் பிரதிபலித்தது. 'திவாகராவின் அநியாய இடமாற்றத்தை நிறுத்து,' 'அரச நிறுவன ஆணைக்குழுவை கலைத்திடு,' 'காப்புறுதி தொழிற்சங்கங்கள் மீதான அடக்குமுறையை நிறுத்து' மற்றும் 'காப்புறுதியை இரண்டாகப் பிரிப்பதை நிறுத்து,' ஆகிய கோரிக்கைகளே அவர்களின் பதாகைகளில் எழுதப்பட்டிருந்தன.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க இணைப்பாளர் சிந்தக பண்டார, அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் (ATEU) தலைவர் ஜகத் குருசிங்க மற்றும் தொழிற்சங்க மையத்தின் தலைவர் ரவி குமுதேஷ் உட்பட தொழிற்சங்க அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

ஊடகங்களிடம் பேசிய பண்டார, “நாங்கள் ரணில் விக்ரமசிங்கவை [தனியார்மயமாக்கும்] முடிவைத் விலக்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில், எங்கள் 8,000,000 அரச, அரை அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களை வீதிக்குக் கொண்டுவரும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்,” என கூறினார்.

இந்த வெற்றுப் பேச்சுக்களுடன் 'ஜனநாயகம் மேலோங்குவதற்கும் [மற்றும்] நாட்டை நடத்துவதற்கு பொருத்தமான ஒரு தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான அடித்தளத்தை உருவாக்குவதற்கும்' இடமளிக்க வேண்டும் என்று விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுப்பதும் சேர்த்துக்கொள்ளப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் அதிகரித்து வரும் எதிர்ப்பை, ஒரு மாற்று முதலாளித்துவ அரசாங்கத்திற்கான பிரச்சாரத்தின் பின்னால் திசைதிருப்பிவிட வேண்டும் என்பதே ஆகும்.

இந்தக் கூற்றுக்களுக்கு மாறாக, விக்கிரமசிங்க அரசாங்கமும் சரி வேறு எந்த முதலாளித்துவ ஆட்சியும் சரி, எப்போதும் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், இந்த நிதியப் பேரழிவின் முழுச் சுமையும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள். மீது சுமத்தப்பட வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை ஈவிரக்கமின்றி நிறைவேற்ற முயற்சிக்கும். 

வியாழன் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய அனைத்து டெலிகொம் ஊழியர் சங்கத் தலைவர் குருசிங்க, இலங்கை நீதித்துறை சம்பந்தமாக மாயைகளை ஊக்குவித்தார். ஸ்ரீலங்கா டெலிகொம் தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிராக, அவரும் மற்றுமொரு தொழிற்சங்கமும் தாக்கல் செய்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்களைப் பற்றி குறிப்பிட்ட அவர், தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்கள் சட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார். அன்றைய தினம் இரு மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்தது.

காப்புறுதி பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திவாகர அதுகல, கொழும்பில் உள்ள இ.கா.கூ. தலைமையகத்திற்கு வெளியே ஜூன் 15 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினார்.

பழிவாங்கப்பட்ட இ.கா.கூ. அதிகாரி திவாகர அத்துகல, இந்த ஆர்ப்பாட்டம் 'ஒரு ஆரம்பம் மட்டுமே' என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முன் கூறியதோடு, தனியார்மயமாக்கலை நிறுத்துவதற்காகன நடவடிக்கைகள் 'எதிர்காலத்தில்' தீவிரப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார். எவ்வாறாயினும், இதை அடைய என்ன அரசியல் வேலைத்திட்டம் தேவை என்பதை அவர் விவரிக்கவில்லை.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் தொழிற்சங்கத்தின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலரிடம் பேசினர். தனியார்மயமாக்கலைத் கைவிடுவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற தொழிற்சங்கத் தலைமையின் கூற்றுக்களை நீங்கள் நம்புகிறீர்களா என்று கேட்ட போது, 'அத்தகைய முறைகளால் எந்தப் பயனும் இல்லை என்பதை நான் புரிந்துகொள்கிறேன்' என ஒரு இ.கா.கூ. தொழிலாளி பதிலளித்தார்.

தனியார்மயமாக்கல் குறித்து போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் கூறியதாவது: “இந்த நாட்களில் ரயில், சுகாதாரம், இ.கா.கூ., தொலைத்தொடர்பு போன்ற துறைகளை தனியார் மயமாக்குவது ஒரு பிரபலமான தலைப்பாக மாறியுள்ளது. இந்தத் துறைகள் தனியார்மயமாக்கப்பட்டால் வாழ்வதற்கான உரிமை பறிக்கப்படும்.”

மற்றொரு இளைஞன் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை பற்றி பேசினார்: 'இந்தப் போர் உலகம் முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகிப்பதன் காரணமாக குறிப்பாக ஐரோப்பாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்ந்துள்ளதால் இலங்கையும் போரினால் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு உலகளாவிய நிகழ்வு. தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி இந்த ஊழல் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். வரலாற்றில் நீண்ட காலமாகவே முதலாளித்துவம் தோல்வியடைந்தது என்பதை நிரூபித்துள்ளது. இதற்கு வேறு உதாரணம் தேவையில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

புதிய தொழில் சட்டங்களுக்கான அரசாங்கத்தின் திட்டங்களைப் பற்றி கருத்து தெரிவித்த ஒரு இளம் பெண், 'இந்த தொழிலாளர் சட்டங்கள், முதலாளிகளுக்கு சாதகமாக, வாரத்தில் மூன்று நாள் வேலை மற்றும் மேலதிக நேர வேலையை குறைக்கும் வகையில் சீர்திருத்தப்படவுள்ளன,' என்றார்.

சோசலிசத்தின் அவசியத்தைப் பற்றி கருத்து கேட்டபோது, 'தொழிலாளர்கள் ஒரு பொதுவான நோக்கத்திற்காக ஒன்றுபட வேண்டும்... போராட்டங்கள் இருக்க வேண்டும் ஆனால் அவற்றுக்கு ஒரு பொதுவான நோக்கம் இருக்க வேண்டும். உங்கள் வேலைத் திட்டத்தை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் [முதலாளித்துவத்தின் கீழ்] இளைஞர்களுக்கு எதிர்காலம் இல்லை,” என்று அவர் பதிலளித்தார்:

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் எஜமான் WSWS கட்டுரையை மேற்கோள் காட்டி, இணையத்தளங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டாம் என, தொழிற்சங்கத் தலைவர்களை எச்சரிக்கின்றார்

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன ஊழியர்கள் வேட்டையாடப்படுவதை எதிர்த்திடு!

'தொழில் சட்ட சீர்திருத்தம்' பற்றி கலந்துரையாட இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்பை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது

Loading