இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் பகிரங்க கூட்டம்- விக்கிரமசிங்கவின் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக எவ்வாறு போராடுவது என்பதை பற்றி கலந்துரையாடியது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் ஜூலை 6 அன்று சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தால் அமுல்படுத்தப்படும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான அரசியல் மூலோபாயம் பற்றி கலந்துரையாட பலம்வாய்ந்த பகிரங்க கூட்டமொன்றை நடத்தின.

6 ஜூலை 2023 அன்று கொழும்பில் சோசலிச சமத்துவக் கட்சியின் பகிரங்க கூட்டம்.

கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துறைமுகங்கள், சுகாதாரம், புகையிரதம் மற்றும் பெருந்தோட்டத் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட நூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கொக்கல சுதந்திர வர்த்தக வலயம், கறுவா தொழில் மற்றும் ஹோட்டல் தொழிலாளர்களும் இலங்கையின் தெற்கில் இருந்து இதில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்தனர்.

“இலங்கை அரசாங்கம் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்திடு! வேலைகள் மற்றும் ஊதியங்களுக்காக போராட தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு” என்ற தலைப்பில் நடந்த இந்த நிகழ்வு 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கிய பின்னர் சோ.ச.க. ஏற்பாடு செய்த முதலாவது அரங்க நிகழ்வாகும். இந்த கூட்டம் சோ.ச.க.யின் முகநூல் பக்கத்திலும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. நேற்று 1,500க்கும் மேற்பட்டோர் இதை பார்வையிட்டனர்.

சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் W.A. சுனில் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார், கோவிட் தற்காப்பு நடவடிக்கைகளை பின்பற்றிய பார்வையாளர்களுக்கு அவர் நன்றி கூறினார். கூட்டத்தில் பார்வையாளர்களைப் பாதுகாக்க புற ஊதா கதிர் விளக்கு சாதனம் பயன்படுத்தப்பட்டது மற்றும் கிட்டத்தட்ட அனைத்து பார்வையாளர்களும் முகக் கவசங்களை அணிந்திருந்தனர்.

கோவிட் தொற்றுநோய் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசாங்கமும் ஊடகங்களும் கூறிக்கொள்வதை சோ.ச.க. நிராகரித்ததாக சுனில் கூட்டத்தில் கூறினார். சோ.ச.க. கொரோனா வைரஸை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்று கூறிய சுனில், “வைரஸ் இன்னும் முடிவடையவில்லை, மாறாக இன்னும் புதிய வகைகளில் பரவுகிறது” என்று எச்சரித்தார்.

விக்கிரமசிங்க அரசாங்கம் அரசுக்கு சொந்தமான 430 நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கு தொழிலாள வர்க்க எதிர்ப்பு அதிகரித்து வருகின்ற போதிலும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் இந்த எதிர்ப்பு தடுக்கப்படுவதாக சுனில் கூறினார். சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் வெடிப்பை பற்றியும் அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய அரசாங்கங்கள் உலகப் போரை நோக்கி முன்நகர்வதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

“இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள, நமது கட்சிகள் தொழிலாள வர்க்கத்தை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தில் அணிதிரட்டவும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் உலகளாவிய போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்பவும் வேலை செய்கின்றன. அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஏனைய நடவடிக்கைகளுக்கு எதிராக போராட முன்வரும் இலங்கைத் தொழிலாளர்கள் தமது சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்பட்டு சோசலிச முன்னோக்கிற்காகப் போராட வேண்டும்” என்று சுனில் தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய சோ.ச.க.யின் அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ், தொழிற்சங்கங்கள் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) போன்ற போலி இடது குழுக்களின் துரோக அரசியல் பாத்திரம் குறித்து கவனம் செலுத்தினார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ்.

இந்த அமைப்புகள் கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூலையில் இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான பாரிய தொழிலாள வர்க்க எழுச்சியைக் காட்டிக்கொடுத்து, அதை ஒரு முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவாக திசை திருப்பிவிட்டன. இதன் மூலம் விக்கிரமசிங்கவால் ஆட்சிக்கு வரவும், இப்போது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பாரிய சமூக தாக்குதல்களை கட்டவிழ்த்து விடவும் முடிந்தது, என அவர் தெரிவித்தார்.

“இந்தத் தாக்குதல்களை நிறுத்தும் போர்வையில், இந்தத் தொழிற்சங்கங்கள் இப்போது இந்த சிக்கனத் திட்டத்தைத் முன்னெடுக்கும் அதே அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றன,” என்று அவர் கூறினார்.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் தனியார் மயமாக்கப்பட்டதன் பின்னர் ஊழியர்களுக்கு பங்குகளை வழங்குமாறு நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுக்கும் கடிதம் ஒன்றை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் சில தொழிற்சங்கத் தலைவர்கள் அனுப்பியுள்ளதாக பீரிஸ் கூட்டத்தில் தெரிவித்தார். தொழிற்சங்கங்கள் சாராத நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புவது மூலம் மட்டுமே தொழிலாளர்கள் தங்கள் வேலையைப் பாதுகாக்கவும் உரிமைகளுக்காகப் போராடவும் முடியும், என்று அவர் கூறினார்.

சோ.ச.க.யின் அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமையை ஆய்வு செய்தார். தோட்டத் தொழிற்சங்கங்கள், ஏனைய துறைகளில் உள்ள அவற்றின் சமதரப்பினரைப் போன்று, தொழிற்துறை பொலிஸ் படையாக மாறியுள்ளதாக கூறிய அவர், ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான தொடர்ச்சியான அடக்குமுறைகள் பற்றியும் சுட்டிக் காட்டினார்.

ஓல்டன் தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்கான போராட்டத்தை முன்னெடுத்தபோது, நிர்வாகமும் தொழிற்சங்க அதிகாரத்துவமும் பொலிசுடன் சேர்ந்து சதி செய்து 22 தொழிலாளர்களை கைது செய்ததுடன் 34 பேரை வேலை நீக்கம் செய்தன. “தோட்டத் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழு இந்த அடக்குமுறையை எதிர்த்துப் போராடுவதுடன் தொழிற்சங்க அதிகாரத்துவத்திலிருந்து சுயாதீனமாக தொழிலாளர்களை அணிதிரட்டுகிறது,” என்று அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தினால் திணிக்கப்பட்ட சமூகப் பேரழிவிற்கு எதிராக கடந்த வருடம் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராடியதாக தேவராஜா சுட்டிக்காட்டினார். “தமிழ் தேசியவாத கட்சிகள், இனவாத கோரிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலம் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த முயல்கின்றன, கொழும்பில் உள்ள முதலாளித்துவ கட்சிகள் போலவே, அவையும் தொழிலாளர்களை பலவீனப்படுத்த விரும்புகின்றன” என்று அவர் கூறினார்.

தொழிலாளர் வர்க்கத்தை ஒரு ஐக்கியப்பட்ட சக்தியாக சுயாதீனமாக அணிதிரட்டுவது அவசரமானது, அதனால்தான் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவதற்கு அழைப்பு விடுக்கும் சோசலிச வேலைத்திட்டத்தை நாங்கள் முன்வைக்கிறோம் என்று தேவராஜா விளக்கினார்.

சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் சார்பாகப் பேசிய சகுந்த ஹிரிமுத்துகொட, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களின் பெருவணிகக் கொள்கைகள் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் நெருக்கடியை எவ்வாறு மேலும் மோசமாக்கியது என்பதையும் நாடு முழுவதும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் காளான்கள் போன்று வளர வழிவகுத்தது என்பதையும் விளக்கினார்.

சகுந்த ஹிரிமுத்துகொட

ஹிரிமுத்துகொட, கிரீன்வே ஏசியா (Greenway Asia) அறிக்கையை மேற்கோள் காட்டி, இலங்கையில் 5 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களில் 6 சதவீதம் பேர் பாடசாலைக்குச் செல்லவில்லை என்பதை வெளிப்படுத்தினார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் அற்பத் தொகையான 5,000 ரூபா மஹாபொல மாதாந்தக் கடன் செலுத்தப்படவில்லை எனவும் அத்துடன் ஏனைய சிக்கன நடவடிக்கைகளுடன் சேர்ந்து பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலை மாணவர்களை கடுமையாகப் பாதிக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார். உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ இராணுவ மோதலை எதிர்த்து ஐ.வை.எஸ்.எஸ்.இ. மேலும் போர் எதிர்ப்பு கூட்டங்களை நடத்தும் என்று கூறிய அவர், இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறு பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் துணை தேசிய செயலாளர் சமன் குணதாச இறுதி உரையை ஆற்றினார்.

கடந்த ஆண்டு வெகுஜன எழுச்சியின் போது தொழிற்சங்கங்கள் ஆற்றிய துரோக பாத்திரத்தை சுட்டிக் காட்டிய குணதாச, “தொழிலாளர்கள் இப்போது அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரானப் போருக்கு வந்து கொண்டிருக்கும் வேளையில், அவை காட்டிக்கொடுக்கப்படுவதைத் தடுப்பதற்கும், வளர்ச்சியடைந்து வரும் இந்த போராட்டங்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றி கலந்துரையாடவும் இந்தக் கூட்டம் அழைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் துணை தேசிய செயலாளர் சமன் குணதாச.

70 வீதமான இலங்கையர்கள் பயங்கரமான சமூக நிலைமைகளை எதிர்நோக்கியுள்ளதாகவும், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தங்கள் குடும்பங்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவை வழங்க முடியாத நிலையில் இருப்பதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது என்றும் பேச்சாளர் கூறினார்.

“தனியார்மயமாக்கல் என்பது அனைத்து அரசு நிறைவனங்களையும் முதலீட்டாளர்களுக்கு இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்பதே ஆகும். வேலைகள் மற்றும் ஊதியங்கள் குறைக்கப்படும் மற்றும் வேலைச்சுமை அதிகரிக்கப்டும். பொது சுகாதார சேவையைப் பயன்படுத்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக பணம் செலுத்த வேண்டும். சர்வதேச நிதி மூலதனத்திடம் பெற்ற கடனைத் தொழிலாளர்களிடம் இருந்து வசூலிப்பதன் மூலம் அரசாங்கம் திருப்பிச் செலுத்தும்,” என அவர் கூறினார்.

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியப் போரைப் பற்றி குறிப்பிட்ட குணதாச, இந்த மோதலின் செலவு தொழிலாள வர்க்கத்திடம் இருந்தே கறந்தெடுக்கப்படும் என்றார். இந்த சமூகத் தாக்குதல்கள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கப் போராட்டங்களுக்குத் தூண்டுகோலாக உள்ளன என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு இலங்கையில் உள்ள எதிர்கட்சி பாராளுமன்றக் கட்சிகள் அல்லது போலி-இடது குழுக்கள் எவற்றுக்கும் மாற்று வேலைத்திட்டம் இல்லை என்று பேச்சாளர் சுட்டிக்காட்டினார். சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்புக் கடனைக் கோரும் போது தமது நிர்வாகம் நல்ல நிலைமைகளை பற்றி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நடவடிக்கைகள் பேரம் பேச முடியாதவை என்று சுட்டிக்காட்டிய குணதாச, இந்தக் கூற்றுக்கள் பொய்யானவை மற்றும் மக்களை ஏமாற்றுவதற்காக கூறப்படுபவை எனத் தெரிவித்தார்.

“மக்கள் விடுதலதை முன்னணியும் (ஜே.வி.பி) சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்த உறுதிபூண்டுள்ளது. இருப்பினும், அதன் தலைவர்கள் இப்போது வெகுஜன கோபத்தை சுரண்டிக்கொள்வதன் பேரில், அதன் திட்டத்தை எதிர்ப்பதாக பாசாங்கு செய்ய முயற்சிக்கின்றனர். அதேவேளை, தாங்கள் ஆட்சியில் இருந்தால் சரிந்து போன பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு மக்கள் தியாகம் செய்ய வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்” என குணதாச கூறினார்.

போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி, பாராளுமன்றத்திற்கு வெளியே அதிகாரத்தை கட்டியெழுப்புவதாக அது கூறும் “மக்கள் சபைகளை” நிறுவுவதற்கான பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த சபைகளின் அரசியல் நோக்கம் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தில் தொழிலாளர்களை சுயாதீனமாக அணிதிரட்டுவது அல்ல, மாறாக “முதலாளித்துவ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதும் சலுகைகளுக்காக கெஞ்சுவதும் ஆகும்” என்று பேச்சாளர் கூறினார்.

கடந்த ஆண்டு வெகுஜன எழுச்சி மற்றும் அதன் காட்டிக்கொடுப்பின் போது சோ.ச.க. அபிவிருத்தி செய்த வேலைத்திட்டத்திற்காக போராடுவதற்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அணிதிரள வேண்டியதன் அவசரத்தை குணதாச விளக்கினார்.

“தொழிலாளர்கள் ஒவ்வொரு தொழிற்சாலையிலும், வேலைத் தளத்திலும், பெருந்தோட்டங்களிலும், சுற்றுப்புறங்களிலும் போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்கும், கிராமப்புற மக்களைத் திரட்டிக்கொள்வதற்கும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும். இந்தக் குழுக்கள் புதிய வடிவில் உள்ள தொழிற்சங்கங்கள் அல்ல. இந்தக் குழுக்களில், தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் பிற உழைப்பாளிகள் தங்கள் வேலைத்திட்டம் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட முடியும்,” என அவர் தெரிவித்தார்.

“ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகளின் அடிப்படையில் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டைக் கூட்டவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இந்த அதிகார மையத்தை கட்டியெழுப்புவதானது, விக்கிரமசிங்க ஆட்சியை வீழ்த்துவதற்கும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காக போராடுவதற்கும் மக்களை அணிதிரட்ட வழி வகுக்கும்.

“பெரிய நிறுவனங்கள், பெந்தோட்டங்கள் மற்றும் வங்கிகளையும் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவதே அதன் பணியாக இருக்கும். பணக்காரர்களின் பாரிய சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட வேண்டும், மேலும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டம் போன்ற பிற அடக்குமுறைச் சட்டங்களுடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையும் இல்லாதொழிக்கப்பட வேண்டும்” என்று குணதாச கூறினார். இந்த முன்னோக்கிற்காக போராட சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யில் சேருமாறு அவர் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் வலியுறுத்தினார்.

கேள்வி-பதில் அமர்வின் போது, ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் ஒருவர், தனது ஓய்வூதியத் தொகையை நிறுத்தி வைப்பதன் மூலம் வெட்டுக்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும், இந்த வகையான தாக்குதல் பற்றி சோ.ச.க. என்ன நினைக்கிறது என்பதை அறிய விரும்புவதாகவும் கூறினார்.

ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல்கள் தொழிலாள வர்க்கத்தின் மீதான பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும் என்றும், “முன்னெப்போதும் இல்லாத இந்த நெருக்கடியின் சுமையை வெகுஜனங்கள் மீது சுமத்துகின்ற ஆட்சியாளர்களிடம் முறையிடுவதன் மூலம் இவற்றை தோற்கடிக்க முடியாது என்றும் சுனில் விளக்கினார். சோ.ச.க. விளக்குவது போல், தொழிலாளர்கள் நடவடிக்கைக் குழுக்களை அமைத்து சுயாதீனமாகப் போராட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

கொழும்பில் இருந்து தெற்கே 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரை நகரமான ஹிக்கடுவையைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, மாற்றுத் வேலைத்திட்டத்தைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக இந்த கூட்டத்திற்கு வந்ததாகக் கூறினார். “தனியார்மயமாக்கல் திட்டம் நமது பொருளாதார பிரச்சனைகளை அதிகரித்து, வாழ்க்கையை கடினமாக்கும். மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணம் அதிகரித்ததால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவே மற்றவர்களுக்கும் உள்ள பிரச்சனையாகும்,’' என அவர் தெரிவித்தார்.

கொழும்பு பொதுக் கூட்டத்தில் சோ.ச.க. இலக்கியங்களை வாங்குவதில் வந்திருந்தவர்கள் உற்சாகமான ஆர்வம் காட்டினர்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பலர், ஓல்டன் தோட்டத்தின் 22 தொழிலாளர்கள் மற்றும் இரண்டு தோட்டப்புற இளைஞர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள வழக்குகளை விலக்கிக்கொள்ளக் கோரி தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் மனுவில் கையெழுத்திட்டனர். கூட்டத்தின் போது சோ.ச.க.யின் இலக்கிய மேசையில் சுமார் 7,500 ரூபா பெறுமதியான சோசலிச இலக்கியங்கள் விற்கப்பட்டன, மேலும் கட்சியின் அபிவிருத்தி நிதிக்கு 9,600 ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டது.

இலங்கை அரசாங்கம் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்திடு! தொழில் மற்றும் ஊதியத்துக்காகப் போராட தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பு!

தனியார்மயப்படுத்தலுக்கும் அரசாங்க அடக்குமுறைக்கும் எதிராக இலங்கை சோ... கொழும்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

தொழில் சட்ட சீர்திருத்தம்பற்றி கலந்துரையாட இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்பை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது

Loading