இ.தொ.கா. ஊதிய கோரிக்கை மீதான தோட்டத் தொழிலாளர்களின் கோபத்தை கட்டுபடுத்த கொழும்பில் நடத்திய போராட்டம்

ஏப்ரல் 19 அன்று, இலங்கையின் பிரதான தோட்டத் தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), தோட்டத் தொழிலாளர்களின் மறியல் போராட்டம் ஒன்றை கொழும்பில் நடத்தியது. ஏப்ரல் 10 அன்று, சம்பள நிர்ணய சபையில் நடைபெற்ற சம்பளப் பேச்சுவார்த்தைக்கு பெருந்தோட்ட உரிமையாளர்கள் வருகை தராததைக் கண்டித்தே இந்த மறியல் போராட்டம் நடத்தப்படுவதாக அது கூறியது.

ஏப்பிரல் 19 இ.தொ.கா. நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதி

இந்த அவசர மறியல் போராட்டம், வாழ்க்கைச் செலவு வானளவு உயர்ந்து வருவது சம்பந்தமாக தேயிலை மற்றும் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களிடையே வளர்ந்து வரும் கோபத்தை திட்டமிட்டு கட்டுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாகும். சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கு ஏனைய பிரிவு தொழிலாளர்க மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பைப் பற்றி விழிப்புடன் இருக்கும் அரசாங்கம், தற்போதைய 1,000 ரூபாய் ஊதியத்திற்கு 700 ரூபாய் அற்ப ஊதிய உயர்வை முன்மொழிந்தது.

இந்த முன்மொழிவைக் பற்றிக்கொண்ட அரசாங்கப் பங்காளியாக இருக்கும் இ.தொ.கா., தோட்டத்த தொழிலாளர்கள் ஏப்ரல் மாதம் முதல் 1,700 ரூபா ஊதியத்தைப் பெறுவார்கள் என உறுதியளித்தது. பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கம் இந்த ஊதியக் கோரிக்கையை நிராகரித்த நிலையில், இந்த வறிய மட்டத்திலான ஊதிய உயர்வுக்கான வாக்குறுதியின் போலித் தன்மை நிரூபிக்கப்பட்டது. பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கம் மீண்டும் பேச்சுவார்த்தையை புறக்கணித்தது.

ஏப்ரல் 30 அன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் தினசரி அடிப்படை சம்பளத்தை 350 ரூபா அற்பத் தொகையால் அதிகரித்தும், கொடுப்பனவாக 350 ரூபா அதிகரித்தும் விசேட வர்த்தமான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டது. மேலதிக கொடுப்பனவுகளை கம்பனிகள் உற்பத்தித் திறனுடனுடனும் வருகையுடனும் பிணைத்துக்கொள்வதை வழமையாகக் கொண்டுள்ளன.

கொட்டகலையில் நடைபெற்ற இ.தொ.காவின் மே தினக் கூட்டத்தில் பங்குபற்றிய விக்கிரமசிங்க, இந்த அற்ப ஊதிய அதிகரிப்பை பற்றி பெருமை பேசினார். அத்துடன் இ.தொ.கா தலைவர் ஜீவன் தொண்டமான், தனது வாக்குறுதியை முழுமையாக பூர்த்தி செய்துள்ளதாக கூறிக்கொண்டார்.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் செயலை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் நிராகரித்ததுடன், அது பற்றி தங்களுடன் கலந்துரையாடல் எதுவும் நடக்கவில்லை என்று கூறியதோடு, வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஊடகங்களுக்கு அறிவித்தது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, 2021 ஏப்ரலில், தோட்டத் தொழிலாளர்களின் அதிக ஊதியத்துக்கான போராட்டமொன்றை திசைதிருப்புவதற்காக, இராஜபக்ஷ அரசாங்கம் 1,000 ரூபாய் ஊதிய அதிகரிப்பை அறிவித்தது. இது கோவிட் 19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரினால் தீவிரமடைந்த, உள்நாட்டு மற்றும் உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பல மடங்கு அதிகரித்த வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடும்போது, இந்த ஊதிய உயர்வால் எந்தப் பயனும் இருக்கவில்லை.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராகவும் உயர்ந்த சம்பள அதிகரிப்புக்கான கோரிக்கைக்காகவும் தொழிலாளர்களின் போராட்டங்கள் அதிகரித்து வந்த நிலைமையிலேயே இ.தொ.கா. கொழும்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் அதை தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் மற்றும் சில தொழிலாளர்களுடன் சில நூறு பேருக்கு மட்டுப்படுத்தியது.

மத்திய பெருந்தோட்ட மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் எவரும் மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதில் 500க்கும் குறைவானவர்களே பங்குபற்றினர். இ.தொ.காவால் பிரதானமாக யட்டியந்தோட்டை, பொல்ஹாவெல மற்றும் தெற்கில் உள்ள இங்கிரிய போன்ற பிரதேசங்களில் உள்ள ரப்பர் தோட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களும் டசின் கணக்கான தொழிற்சங்க அதிகாரிகளுமே இதில் பங்கேற்றனர்.

அதன் ஆதரவுத் தளத்தைப் தக்கவைத்துக்கொள்ளும் ஏக்கத்தில் பங்கேற்பாளர்களுக்கு “இ.தொ.கா. மக்கள் சக்தி” என்ற வாசகங்களுடன் கருப்புத் தலை பட்டிகள் வழங்கப்பட்டன. கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு அவநம்பிக்கையான முயற்சியில், “பெருந்தோட்டம் எங்கள் தேசிய சொத்து, அதைப் பாதுகாக்கவும்”, “சர்வதேச அமைப்புகள் எங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் இ.தொ.கா. அலுலவர்களால் போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

மறியல் போராட்டத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய இ.தொ.கா. தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், தோட்டக் கம்பனிகளிடம் பின்வருமாறு மன்றாடினார். “எனவே ‘அன்பான முதலாளிமார் சம்மேளன நண்பர்களே’, இன்றைய நிலைமையையும் பொருளாதார நிலைமையையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். எனவே, எங்களுக்கு 1,700 ரூபாய் கொடுக்க வேண்டும். ‘இது நியாயமான ஊதியம்’.”

பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது என்று நிறுவனங்களுக்கு சமிக்ஞை செய்த அவர்: “ஏப்ரல் 24 அன்று, நீங்கள் அந்த ஊதியத்தை வழங்கவில்லை என்றால், நீங்கள் ஒரு தீர்வுக்கு வரவில்லை என்றால், தேவையற்ற பிரச்சனை மற்றும் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படும். பல்வேறு வழிகளில் தொழிற்சங்க நடவடிக்கை எடுப்போம்”, என எச்சரித்தார்.

எவ்வாறாயினும், இ.தொ.கா., தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் இன்றி போராட முடியும் என்று ஊக்குவித்து, ஞாயிறு விடுமுறையில் தோட்ட நகரங்களில் இதேபோன்ற சிறிய ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தது. சுமார் ஒரு மணி நேரம் கடைகள் மூடப்பட்டன.

தோட்டக் கம்பனிகளின் இலாபத்திற்கு சேவை செய்வதற்கான இ.தொ.கா.வின் தயார்நிலையை வெளிப்படுத்திய சக்திவேல், “நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வோம். நாங்கள் அரசாங்கத்தை ஆதரிக்கிறோம்; நாங்கள் பொருளாதார பக்கத்தை ஆதரிக்கிறோம். தயவு செய்து எங்களுடன் சேர்ந்து வாருங்கள்,” என்று அழைப்பு விடுத்தார்.  

“நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்”, “பொருளாதார பக்கத்தை ஆதரித்தல்” ஆகியவை எந்தவொரு தொழிலாளர் பிரிவினரின் விருப்பத்திற்கும் முற்றிலும் எதிரானவை. சக்திவேலின் வேண்டுகோளின் உண்மையான அர்த்தம், வரி அதிகரிப்பு, வேலை அழிவு, ஊதியக் குறைப்பு, தனியார்மயமாக்கல் மற்றும் வேலைச் சுமை அதிகரிப்பு மூலம் அது கொடுத்த பிணை எடுப்பு கடனை திருப்பிச் செலுத்த சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனைகளாகும். அவற்றை அமுல்படுத்த ஒத்துழைப்பதாகவே சக்திவேல் உறுதியளிக்கின்றார்.

பெருந்தோட்டக் கம்பனிகளின் இலாபத்தைப் பாதுகாப்பதில் இ.தொ.கா.வின் இழிவான பங்கை தூக்கிப் பிடித்த சக்திவேல், “கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம். நாங்கள் எங்கள் நாட்டையும் தேயிலைத் தொழிலையும் பாதுகாத்தோம்” என்று சுட்டிக்காட்டினார். மற்ற தொழிற்சங்கங்களின் ஆதரவுடன், இ.தொ.கா., தொற்றுநோய் முடக்கம் என்று அழைக்கப்பட்ட காலத்தில் தோட்டத் தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பியதுடன் பெருந்தோட்ட மாவட்டங்களில், நூற்றுக்கணக்கான மக்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டதோடு மற்றும் டசின் கணக்கானோர் பலியாகினர்.

இந்த காலகட்டத்தில், தொற்றுநோய் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தினால் வேலை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதை இ.தொ.கா. மேற்பார்வையிட்டது.

பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் 1,200 ரூபா நாளாந்த சம்பளத்தை முன்மொழிந்தன, அதில் 200 ரூபாய் வருகையுடன் பிணைக்கப்பட்டது. 1,300 ரூபா என்பது, நாள் சம்பளமான மற்றொரு திட்டமாகும், அது, அதிக உற்பத்தித்திறன் விகிதத்துடன், கொழுந்து பறிக்கும் இலக்கை 20 கிலோவாக அதிகரிப்பதாகும்.

எந்தவொரு ஊதிய உயர்வும், உற்பத்தித்திறனுடன் பிணைக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை, அதாவது அது ஊதிய வெட்டே அன்றி, அதிகரிப்பு அல்ல. தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் இலக்கு அதிகரிக்கப்படுவதை எதிர்கொள்வதோடு, அவர்களின் வருகைக்கு ஏற்ப அவர்களின் கொடுப்பனவும் கூட்டி குறைக்கப்படக் கூடும்.

தற்போது, பல தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள், பருவமில்லாத காலத்தில் கொழுந்துகள் பற்றாக்குறை காணப்படுவதால், தங்களது தினசரி இலக்கான 18 கிலோவை பறிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். பல தோட்டங்களில், நிர்வாகங்கள் கூடையின் எடைக்கு கழித்தல் என்ற பெயரில் 2 அல்லது 3 கிலோவை வெட்டுவது வாடிக்கை ஆகும்.

ஏனைய பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள், போலியான நடவடிக்கைகளுக்காக இ.தொ.காவை விமர்சிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. மற்றொரு தோட்ட தொழிற்சங்க முன்னணியான தமிழ் முற்போக்கு கூட்டணி (த.மு.கூ.), உண்மையான போராட்டத்தில் இணைய தயாராக இருப்பதாக அறிவித்தது. இதற்கு பிரதிபலித்த இ.தொ.கா. ,அதன் ஆர்ப்பாட்டக்காரர்களை த.மு.கூ. பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமாருக்கு எதிராக ஆத்திரமூட்டல் செய்ய தூண்டிவிட்டது.

இருப்பினும், த.மு.கூ. எந்த போராட்டத்தையும் ஏற்பாடு செய்யவில்லை. சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக தோட்டங்களைப் பகிர்ந்தளித்து, தோட்டத் தொழிலாளர்களை தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டுமென த.மு.கூ. தலைவர் ப. திகாம்பரம் வலியுறுத்தியுள்ளார். இ.தொ.கா.வும் விக்கிரமசிங்க அரசாங்கமும் ஏற்கனவே அத்தகைய குத்தகை விவசாய முறையை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளன. இதன் கீழ் நிலம் நிறுவனங்களுக்குச் சொந்தமாக இருப்பதோடு முழுத் தொழிலாளர் குடும்பமும் கொழுந்துகளைப் பறித்து நிறுவனம் நிர்ணயித்த விலைக்கு அதற்கு விற்க வேண்டும். இந்த முறையின் கீழ் தொழிலாளர்கள் ஓய்வூதிய நலன்களை இழக்க நேரிடும்.

தொழிலாள வர்க்கம், தங்கள் அன்றாட வாழ்க்கை மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க, கம்பனிகளுக்கு தொழில்துறை பொலிசாகச் செயல்படும் தொழிற்சங்கங்களை நம்பியிருக்க முடியாது, என்பதையே இந்தப் பட்டினி நிலை ஊதிய உயர்வு காட்டுகிறது. இலங்கையிலும் சர்வதேச அளவிலும் சோசலிசக் கொள்கைகளுக்காக அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கு தொழிற்சங்கங்களில் இருந்து விலகி, சுயாதீனமாக அணிதிரள்வதோடு, அவர்களது சொந்த நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவதுமே தோட்டத் தொழிலாளர்களுக்குள்ள ஒரே முன்னோக்கிய பாதை.

Loading