மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மே 4, சனிக்கிழமை நடைபெற்ற 2024 சர்வதேச மே தின இணையவழி பேரணியில், இலங்கையில் IYSSE உறுப்பினரான டிலக்ஷன் மகாலிங்கம் பின்வரும் உரையை ஆற்றினார்.

2024 சர்வதேச மே தினம் இணையவழி கூட்டம்

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவில் உள்ள எமது தோழர்களுடனான நெருக்கமான ஒத்துழைப்புடன் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பானது தொழிலாளர்களதும் இளைஞர்களதும் ஒரு சர்வதேச வெகுஜன போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப போராடி வருகின்றது. இந்த இயக்கமானது ஏகாதிபத்திய போரையும் பேரழிவுமிக்க அணு ஆயுத மூன்றாம் உலகப் போரையும் நிறுத்தும் வல்லமை கொண்ட ஒரே ஒரு சமூக சக்தியான சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். அதே நேரம் அது சர்வதேச சோசலிச கொள்கைளால் வழிநடத்தப்பட வேண்டும்.

எமது பிரச்சாரம், காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் இனப்படுகொலை, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோவின் போர் அத்தோடு சீனாவுக்கு எதிரான அமெரிக்கப் போர் தயாரிப்புகளையும் நிறுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. காஸா இனப்படுகொலைக்கு எதிராக அமெரிக்கா முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர் போராட்டங்கள் மீது பைடென் நிர்வாகத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கொடூரமான பொலிஸ் அடக்குமுறையை நாம் கடுமையாக கண்டிக்கிறோம். இந்த இனப்படுகொலைக்கு எதிராக போராடும் அனைவரையும் பாதுகாக்க அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களை அணிதிரளுமாறு அழைப்புவிடுக்கின்றோம்.

ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக இளைஞர்களையும் மாணவர்களையும் அணிதிரட்டுவதற்கான எமது போராட்டத்தில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உட்பட பல்வேறு மாணவர் அமைப்புகளின் அரசியல் செல்வாக்கை எதிர்த்து ஐ.வை.எஸ்.எஸ்.இ. போராடுகிறது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அவர்களின் போராட்டத்தில் மாணவர்கள் தொழிலாளர்கள் பக்கம் திரும்புவதை தடுப்பதற்கும் மாணவர்களை பிற்போக்கு முதலாளித்துவ அரசியல் கட்டமைப்புக்குள் அடைத்து வைப்பதற்கும் செயற்படுகின்றன. 

போலி-இடது முன்னிலை சோசலிச கட்சியால் கட்டுப்படுத்தப்படும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது, காஸா இனப்படுகொலை மற்றும் ஏகாதிபத்தியப் போரின் வளர்ந்துவரும் ஆபத்துகள் பற்றி மாணவர்களை இருட்டிலேயே வைத்திருக்கின்றது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் பிரச்சாரங்களை நிறுத்த வன்முறையோடு தலையிடுகின்றது.

களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்-அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய குழுவினர் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் போர்-எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு இடையூறு செய்ய முற்பட்ட போது. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தால் இலவச கல்வி மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலுக்கு எதிராக மாணவர்களின் கோபம் அதிகரித்து வருகையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மாணவர்களின் கோபத்தை கட்டுப்படுத்த பயனற்ற போராட்டங்களை ஏற்பாடு செய்து வருவதோடு, அத்தகைய நடவடிக்கைகள் அரசாங்கத்தை பின்வாங்க நிர்ப்பந்திக்கும் என்ற மாயையைப் பரப்பி, அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் போராட்டங்களாக அதை மட்டுப்படுத்துகின்றது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறுவதற்கு மாறாக, இலவசக் கல்வி மீது விக்கிரமசிங்க அரசாங்கம் நடத்தும் தாக்குதல்கள், சர்வதேச நாணய நிதியம் வழங்கிய 3 பில்லியன் டொலர் பிணையெடுப்பு கடனுக்கு ஈடாக, அதனால் கட்டளையிடப்பட்டுள்ள கடுமையான சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பாகம் ஆகும். விக்கிரமசிங்க அரசாங்கமோ அல்லது எதிர்காலத் தேர்தல்களைத் தொடர்ந்து வரும் வேறு எந்த அரசாங்மோ சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தில் இருந்து விலகி இருக்க முடியாது.

தொழிலாளர் வர்க்கத்தை நோக்கி திரும்புவதற்கும், அரசாங்கத்துக்கு எதிராகவும் சோசலிச கொள்கைக்காகவும், மாணவர்களை அணிதிரட்டி, தொழிலாளர்கள் தலைமையிலான ஒன்றிணைந்த அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப மாணவர்கள் மத்தியில் ஐ.வை.எஸ்.எஸ்.இ. முன்னெடுக்கும் அரசியல் போராட்டத்துக்கு, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முற்றிலும் விரோதமாக நிற்கின்றது. அத்தகைய தொழிலாளர்-வர்க்க இயக்கத்தால் முதலாளித்துவ ஆட்சியை துாக்கிவீசி ஸ்தாபிக்கப்படுகின்ற, சோசலிச கொள்கைகளுக்காக அர்ப்பணித்துக்கொண்ட, ஒரு தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தின் ஊடாக மாத்திரமே இலவசக் கல்வியைப் பாதுகாக்க முடியும்.

15 ஜூன் 2023 அன்று கொழும்பில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு வெளியில் சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதி. 

யாழ்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் காஸா இனப்படுகொலை சம்பந்தமாக மௌனம் காக்கின்றது. உலக சோசலிச வலைத் தளத்துக்கு பதில் அளித்த அதன் தலைவர் கே. துவாரகன், “நாம் சர்வதேச அபிவிருத்திகள் பற்றி கவலைப்படுவதில்லை. நாம் எமது பிரச்சினை பற்றி அதாவது தமிழ் மக்கள் பிரச்சினை பற்றியே அக்கறையாக உள்ளோம்,” என்றார்.

காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் இனப்படுகொலை சம்பந்தமாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மௌனம் காப்பது, பிறபோக்குத் தமிழ் தேசியவாத்தின் அடிப்படையில் ஆகும். அது நெருக்கமாக உறவு வைத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவ தேசியவாதக் கட்சிகளின் ஏகாதிபத்திய-சார்பு அரசியலில் இருந்தே இந்த மௌனம் தலைதூக்குகின்றது. இந்தக் கட்சிகள், சீனாவுக்கு எதிரான அமெரிக்க-இந்திய இராணுவ மூலோபாய தாக்குதலுடன் முழுமையாக அணிசேர்ந்து நிற்கின்றன. அத்தோடு தமிழ் உயரடுக்கிற்கு சில சலுகைகளை உறுதிப்படுத்தும் அதிகார-பகிர்வு உடன்படிக்கையை பெறுவதற்கு கொழும்பை நெருக்குவதற்காக, ”சர்வதேச சமூகம் என்று அழைக்கப்படும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளுக்கு அவை வேண்டுகோள் விடுக்கின்றன.

முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் ஏனைய அனைத்துக் கட்சிகளையும் போலவே, தமிழ் முதலாளித்துவ கட்சிகள் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்த முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறக் கூடிய சாத்தியக் கூறுகளின் கீழ், தமிழ் உயரடுக்கின் சலுகைகளை உறுதிப்படுத்திக்கொள்ள எந்த வேட்பாளரை ஆதரிக்கலாம் என அவை சிந்தித்து வருகின்றன.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வி. விக்னேஸ்வரன், தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளை மக்களுக்கும் ஏனைய நாடுகளுக்கும் தெரியப்படுத்துவதற்கும், ஏனைய வேட்பாளர்கள் என்ன தருவார்கள் என அவர்களிடம் பேரம் பேசுவதற்கும், தமிழ் வேட்பாரை நிறுத்துவதற்கு ஆதரவளிக்கின்றார். தமிழ் கூட்டமைப்பின் ஆர். சம்பந்தனும் எம்.ஏ. சுமந்திரனும் பிரதான கட்சிகளின் வேட்பாளருக்கு ஆதரவு வழங்க முன்நிற்பதோடு, இதுவரைக்கும் யாரை ஆதரிப்பது என தீர்மானிக்கவில்லை. ஒரு தமிழ் வேட்டபாளரை நிறுத்தினாலும் அல்லது பிரதான கட்சியின் வேட்பாளரை ஆதரித்தாலும், தமிழ் உயரடுக்கின் நலன்களை உறுதிப்படுத்த எது சிறந்த வழி என்பதைப் பற்றி மட்டுமே பல்வேறு தமிழ் முதலாளித்துவ கட்சிகள் கணக்குப் போடுகின்றன.

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தினது அனைத்துக் கட்சிக்ளின் பிற்போக்கு அரசியலையும் போலி-இடது அடிவருடிகளையும் நிராகரிக்க வேண்டும். நீங்கள்,  சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம் என்ற வகுப்புவாத பிவினைகளைக் கடந்து, இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டி, முதுலாளித்துவ ஆட்சி முறையை துாக்கி வீசி, சோசலிச கொள்கைளுக்காக அர்ப்பணித்துக்கொண்ட, தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக தொழிலாளர் வர்க்கத்தின் ஒன்றிணைந்த புரட்சிகர இயக்கத்துக்காக போராடுவது அவசியம்.

ஐ.வை.எஸ்.எஸ்.இ. அந்த புரட்சிகர பாதையின் வழியில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை அணிதிரட்ட, அவர்கள் மத்தியில் போராடுகின்றது. ஐ.வை.எஸ்.எஸ்.இ.யில் இணைந்து, சோசலிசத்துக்கான இந்தப் போராட்டத்தை முன்னோக்கி கொண்டுசெல்ல, இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். 

Loading