முன்னோக்கு

ஐரோப்பிய தேர்தல்களில் அதிதீவிர வலதுசாரிகளின் வாக்குகள் ஏன் உயர்ந்து வருகின்றன?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐரோப்பிய தேர்தல்களில், அதிதீவிர வலதுசாரிகளுக்கும் மற்றும் நவ-பாசிச கட்சிகளுக்குமான வாக்குகளில் கூர்மையான உயர்வைக் கண்டுள்ளன. இத்தாலிய (FdI) சகோதரத்துவக் கட்சியின் தலைமையிலான ஐரோப்பிய பழமைவாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகள் (ECR), பிரெஞ்சு தேசிய பேரணியின் அடையாளம் மற்றும் ஜனநாயகக் (ID) கூட்டணி மற்றும் ஜேர்மனிக்கான மாற்றுக் கட்சி ஆகியவை மொத்தம் 146 இடங்களை இத்தேர்தலில் வென்றுள்ளன. இது, ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உள்ள 720 இடங்களில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமாகவும், 2019 ஐரோப்பிய தேர்தல்களில் அதிதீவிர வலதுசாரிகளுக்கு முந்தைய சாதனை வாக்குகளில் இருந்து 28 இடங்கள் அதிகமாகவும் உள்ளது.

தேர்தல் நடந்த அன்றிரவு, கட்சியின் தலைமையகத்தில் பிரெஞ்சு அதிதீவிர வலதுசாரித் தலைவர் மரீன் லு பென் பேசும்போது, பிரெஞ்சு அதிதீவிர வலதுசாரி தேசிய பேரணியின் தலைவரான ஜோர்டான் பார்டெல்லா கேட்டுக்கொண்டிருக்கிறார். (AP Photo/Lewis Joly)

இந்தத் தேர்தலின் முடிவு, ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தும் தற்போதைய சமூக ஜனநாயக மற்றும் தாராளவாத கட்சிகளின் வாக்காளர்கள் அவமானகரமாக முறையில், அவர்களை நிராகரித்து உள்ளனர் என்பதைக் காட்டுகின்றன.  

இந்தக் கட்சிகள், பல தசாப்தங்களாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளின் பாதுகாவலர்களாகவும், காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையை ஆதரிப்பவர்களாகவும், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் பாரிய விரிவாக்கத்தை ஊக்குவிப்பவர்களாகவும் பிரச்சாரம் செய்து வந்தன. ஜேர்மன் சான்ஸ்லர் ஓலாஃப் ஷோல்ஸ் சமீபத்தில், ரஷ்யாவை நேட்டோ ஏவுகணைகள் மூலம் குண்டு வீசும் திட்டங்களை அறிவித்தார். மேலும், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ரஷ்யாவை எதிர்த்துப் போரிட உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்பும் அளவிற்கு நகர்ந்தார்.

ஷோல்ஸ்சினுடைய ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) 13.9 சதவீத வாக்குகளைப் பெற்றது. பிஸ்மார்க்கின் சோசலிச எதிர்ப்புச் சட்டங்களின் கீழ், இளம் சமூக ஜனநாயகக் கட்சியின் நடவடிக்கைகள் பெருமளவில் தடைசெய்யப்பட்ட 137 ஆண்டுகளில், இதற்கு கிடைத்த மிக மோசமான தேர்தல் முடிவு இதுவாகும். அவர்களின் பசுமைக் கூட்டணி பங்காளிகள் 8.6 சதவீத புள்ளிகளை இழந்து 11.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்தனர். சுதந்திர ஜனநாயகக் கட்சியின் 5.2 சதவீதத்துடன் சேர்ந்து, ஜேர்மன் அரசாங்கக் கட்சிகள் வெறும் 31 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளன. அதிதீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றுக் கட்சி (AfD) 15.9 சதவீத வாக்குகளுடன் 15 இடங்களைப் பெற்றுள்ளது. இந்தக் கட்சி, வலதுசாரி கிறிஸ்தவ-ஜனநாயகவாதிகளுக்கு (30 சதவீதம்) பின்னால் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

பிரான்சில், 31.4 சதவீத வாக்குகளுடன், மரின் லு பென்னின் நவ பாசிஸ்ட்டுக்களின் கட்சியான தேசிய பேரனி (RN) ஜனாதிபதி மக்ரோனின் கட்சியை தோற்கடித்துள்ளது. மக்ரோனின் கட்சி 14.6 சதவீத வாக்குகளுடன் வீழ்ச்சியடைந்துள்ளது. சோசலிஸ்ட் கட்சி (PS) 13,9 சதவீத வாக்குகளையும் மற்றும் ஜோன் லூக் மிலோன்சோனுடைய அடிபணியாத பிரான்ஸ் கட்சி (LFI) 9.9 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன.

மக்ரோன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென பாராளுமன்றத்தை கலைத்து ஜூன் 30 முதல் ஜூலை 7 வரை முன்கூட்டியே பாராளுமன்ற தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தார். மரின் லு பென்னின் தேசிய பேரனி, குறிப்பிடத்தக்க ஆதாயங்களைப் பெறவும், பிரான்சில் முதலாவது நவ-பாசிச அரசாங்கத்தை அமைக்கவும் தயாராக உள்ளது.

அதிதீவிர வலதுசாரிக் கட்சிகளின் விரைவான வளர்ச்சிக்குப் பின்னால் என்ன அரசியல் ஆற்றல் உள்ளது? இது, நாசிக்களின் “மண்நிற சட்டைகள்”, இத்தாலிய பாசிச “கருப்பு சட்டைகள்” அல்லது பிரெஞ்சு நாசி-ஒத்துழைப்புவாத கூலிப்படைப் பிரிவுகள் போன்ற நடுத்தர வர்க்க பாசிச இயக்கங்களின் தோற்றம் பற்றியது அல்ல. அத்தோடு, ஐரோப்பிய அதிதீவிர-வலதுசாரிகளுக்கான அலையானது, தொழிலாள வர்க்கத்திலோ அல்லது பொது மக்களிடமோ பாசிச உணர்வின் விளைபொருளும் அல்ல.

உண்மையில், இராணுவ ஆக்கிரமிப்பு, இனப்படுகொலை மற்றும் ஐரோப்பிய பாசிசத்தால் முன்வைக்கப்பட்ட கொள்கைகள் பாரிய எதிர்ப்பை சந்தித்திருக்க வேண்டும். 68 சதவீத பிரெஞ்சு மக்களும், 80 சதவீத ஜேர்மனியர்களும், 90 சதவீத போலந்து மக்களும் ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரேனுக்கு படைகளை அனுப்ப வேண்டும் என்ற மக்ரோனின் அழைப்பை எதிர்க்கின்றனர் என்று கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. ஐரோப்பா முழுவதும் எதிர்ப்புகளைத் தூண்டியுள்ள காஸா இனப்படுகொலைக்கான மக்கள் எதிர்ப்பு மிகவும் ஆழமானது. இஸ்ரேலை ஆயுதபாணியாக்கும் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் கூட நடந்துகொண்டிருக்கும் படுகொலைகள் குறித்து சில பாசாங்குத்தனமான மற்றும் நேர்மையற்ற விமர்சனங்களை வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

அதிதீவிர வலதுசாரிகளின் எழுச்சி, ஊடகங்களும் ஆளும் வர்க்கமும் “இடதுகள்” என ஊக்குவித்துவரும் தேசியவாத, அதிகாரத்துவ அமைப்புகளால் தொழிலாளர்களின் முறையான உரிமையை மறுத்ததன் விளைவாக ஏற்பட்டது. தற்போதுள்ள அரசியல் அமைப்பின் மீதான பாரிய அதிருப்தியை சுரண்டிக் கொள்ள முயற்சி செய்து, இது தேசத்திற்கு எதிரான சதி என்று கண்டித்து, ரஷ்யாவுடனான கட்டுப்பாடற்ற போரைப் பற்றிய ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அதிதீவிர வலதுசாரிகளைப் போலல்லாமல், இந்த “இடதுகள்” வசதியான நடுத்தர வர்க்கத்தின் பகுதிகளிலுள்ள மனநிறைவையும் சுய திருப்தியையும் வெளிப்படுத்திக் கொள்கின்றன.

அணு ஆயுத சக்திகளுக்கு இடையேயான போர், இனப்படுகொலை மற்றும் பொலிஸ் அரசின் எழுச்சி மற்றும் பாசிச ஆட்சி வடிவங்களுக்கு இடையேயும் கூட இந்த “இடது” அமைப்புகளானது, முதலாளித்துவ அரசாங்கத்தின் கட்சிகள் மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் பலவீனமான கூட்டணிகளுடன் மக்கள் எதிர்ப்பு பிணைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இவர்கள் மீது அதிதீவிர வலதுசாரிகள் என்ன விமர்சனம் செய்தாலும், அவர்கள் ட்ரொட்ஸ்கிசத்திற்கும், சோசலிசத்திற்காக ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கும் மிகவும் குரோதமாக உள்ளனர்.

நேற்று, உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், கிரேக்கத்தின் சிரிசா (SYRIZA) அரசாங்கத்தின் (”தீவிர இடதுகளின் கூட்டணி”) முன்னாள் நிதியமைச்சர் யானிஸ் வரூஃபாகிஸ், தனது “தனிப்பட்ட தோல்வி” குறித்த புகார்களுக்கு பதிலளித்தார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

“பாசிச வலதுசாரிகளின் மீள் எழுச்சிக்கான அவரது [வருஃபாகிஸ்] அரசியல் பொறுப்பையும், போலி-இடது போக்குகளின் பொறுப்பையும் ஆராய்வது பொருத்தமாக இருக்குமல்லவா? சிரிசா, பொடெமோஸ், கோர்பினிசம் மற்றும் பலரின் காட்டிக்கொடுப்புகள் அதி தீவிர வலதுசாரிகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளன” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

2015ல் ஆட்சிக்கு வந்த சிரிசா, ஐரோப்பிய ஒன்றிய சிக்கனக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்து, அதன் வாக்குறுதிகளை அப்பட்டமாக காட்டிக்கொடுக்கும் வகையில் அதன் துரோகம் உருவகப்படுத்தப்பட்டது.

அதிதீவிர வலதுசாரி சுதந்திர கிரேக்கர்கள் (ANEL) கட்சியுடன் சிரிசா அரசாங்கக் கூட்டணியை உருவாக்கி, வாழ்க்கைத் தரங்களைக் வெட்டிக் குறைக்கும் புதிய ஐரோப்பிய சிக்கனப் பொதியை ஏற்றுக்கொண்டதோடு, அகதிகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய சிறை முகாம்களையும் கட்டியெழுப்பியது. 2019 வரை அதிகாரத்தை இழிவுபடுத்திய பிறகு, சிரிசா இப்போது பொருத்தமாக, முன்னாள் கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) வங்கியாளர் ஸ்டெபனோஸ் கஸ்ஸெலாகிஸால் வழிநடத்தப்படுகிறது.

அனைத்து நாடுகளிலும் பல்வேறு வடிவங்களில் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படும் இத்தகைய காட்டிக்கொடுப்பு மற்றும் அதன் மலட்டுத்தன்மை, அதிதீவிர வலதுசாரிகளுக்கு ஒரு பாதையைத் திறக்கிறது. நீண்ட காலமாக, ஜேர்மனியின் இடது கட்சி, SPD தலைமையிலான அரசாங்கத்திற்கு ஒரு இடதுசாரி அத்தி இலையாக சேவை செய்தது. வெறும் வாய்மொழி விமர்சனத்தை வெளிப்படுத்திய இடது கட்சி, தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலையும், போரையும் ஆதரிக்கிறது.  இன்று, ஐரோப்பிய தேர்தலில் 2.7 சதவீத வாக்குகளுடன், அதன் மோசமான முடிவை அடைந்துள்ளது. துரிங்கியா மாகாணத்தில் இன்னும் பிரதமராக இருக்கும் போடோ ரமேலோ கூட, 5.7 சதவீத வாக்குகளையே இத்தேர்தலில் பெற்றார்.

இடது கட்சியில் இருந்து உருவான Sahra Wagenknecht (BSW) கூட்டணியானது, உக்ரேனில் நடந்துவரும் போர் பற்றிய மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்கள், இனவெறி மற்றும் சமூகப் பரப்புரை வாய்வீச்சுடன் இணைத்து சோசலிசத்தை வெளிப்படையாக நிராகரிக்கிறது. இது, நாடு முழுவதும் 6.2 சதவீத வாக்குகளையும், ஸ்ராலினிச கிழக்கு ஜேர்மன் ஆட்சியின் முன்னாள் பிரதேசத்தில் 13.9 சதவீத வாக்குகளையும் பெற்றது.

பிரான்சில், ஜோன் லூக் மிலோன்சோனுடைய அடிபணியாத பிரான்ஸ் கட்சி (LFI) 2022 ஜனாதிபதித் தேர்தலில், பிரான்சின் அனைத்து பெரிய நகரங்களிலும், தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களிலும் 20 சதவிகித வாக்குகளை பெற்று பெரும்பான்மையாக இருந்தபோதிலும், இந்த தேர்தலில் பாதியை இழந்துள்ளது. கடந்த ஆண்டு மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான பாரிய வேலைநிறுத்தங்களின் போதும் கூட, மக்ரோனுக்கு எதிரான ஒரு பொது வேலைநிறுத்தம் மூலம் பொருளாதாரத்தை முடக்குவதற்கு பிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தெரிவித்தபோதும், வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் தனது வாக்காளர்களை அணிதிரட்டுவதற்கான எந்த வேண்டுகோளையும் LFI தொடர்ந்தும் நிராகரித்து வந்தது. அத்தோடு, காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்கள், பாராளுமன்றத்தில் LFI உறுப்பினர்களின் சூழ்ச்சிகளை ஆதரிக்கும் முன்னோக்கின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தி வந்தது.

LFI முற்றிலும் பிரான்சின் பொலிஸ் அரசு சர்வாதிகார கட்டமைப்பிற்குள் செயல்பட்டு வருகிறது. 2022 தேர்தல்களின் போது, மக்ரோன் அல்லது ஒரு நவ-பாசிச ஜனாதிபதியின் கீழ் பிரதம மந்திரியாக பணியாற்ற மெலன்சோன் உறுதியளித்தார். இந்தத் தேர்தல்களில், LFI ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியுடனும், உக்ரேன் போருக்கு ஆதரவான சோசலிசக் கட்சி வேட்பாளர் ரஃபேல் க்ளக்ஸ்மேனுடனும் கூட்டணி அமைத்தது. காஸாவுடனான ஒற்றுமை அறிக்கைகளை LFI விடுத்ததுக்காக, மக்ரோன் அரசாங்கம் அதன் உறுப்பினர்கள் மீது வழக்குத் தொடரப்போவதாக அச்சுறுத்தியபோதும், அது வாய்மொழி புகார்களை மட்டுமே வெளியிட்டது. 

ஐரோப்பிய அரசியலில் அதிதீவிர வலதுசாரிகளின் இந்த தொடர்ச்சியான எழுச்சியிலிருந்து முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். தொழிலாள வர்க்கத்திற்குள் மார்க்சிய-சர்வதேச புரட்சிகர தலைமை இல்லாத நிலையில், வேலைநிறுத்தங்கள் மற்றும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியிலும் கூட நவ-பாசிஸ்டுகள் தடையின்றி வளர்ந்து வருகின்றனர்.

போர், இனப்படுகொலை மற்றும் முதலாளித்துவத்தின் நெருக்கடியான காலகட்டத்தில், ஏகாதிபத்தியத்தின் தேவைகளை மிகக் கூர்மையாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்துவதால் அதிதீவிர வலதுசாரிகள்,  முதலாளித்துவ ஊடகங்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் சக்திவாய்ந்த பிரிவுகளின் ஆதரவைப் பெறுகிறது.

இவர்கள் தேசியவாதத்தை ஊக்குவித்து, பொலிஸ் அரசு ஆட்சியில் தொழிலாளர்களை தேசிய அளவில் பிரித்து, இராணுவவாதத்தை சட்டப்பூர்வமாக்கி, சோசலிசத்திற்கு எதிரான வன்முறையை ஊக்குவித்து வருகின்றனர். ரஷ்யா போர் மீதான பிரெஞ்சு RN கட்சியின் மாற்றம் (குறிப்பாக உக்ரேனுக்கான இராணுவ உதவிக்கு எதிராக வாக்களிப்பதில்லை என்ற அதன் முடிவு) தெளிவுபடுத்துவது போல, நவ-பாசிஸ்டுகள் ஏகாதிபத்திய போரை எதிர்க்கவில்லை. மாறாக, நேட்டோ தயாரித்து வரும் இராணுவ விரிவாக்கத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள தயாராகி வருகின்றனர்.

அதி தீவிர வலதுசாரிகளின் எழுச்சியை நிறுத்துவதற்கு ஐரோப்பா முழுவதிலும் உள்ள நாடுகளில் மார்க்சிச ட்ரொட்ஸ்கிச புரட்சிகரக் கட்சிகளை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, ஏகாதிபத்தியப் போர் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான ஒரு இயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும், சோசலிசம் மற்றும் தொழிலாளர் அதிகாரத்திற்காகவும் போராடி வருகிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவு இந்த முன்னோக்கைப் பாதுகாப்பதற்காக அதன் சொந்தப் பட்டியலைக் கொண்டு ஐரோப்பிய தேர்தல்களில் பங்கேற்றது. அதன் தேர்தல் அறிக்கையில், சோசலிச சமத்துவக் கட்சி (SGP) பின்வருமாறு எழுதியது:

அரசாங்கங்களுக்கு முறையிடுவதன் மூலம், மூன்றாம் உலகப் போரைத் தடுத்து நிறத்தவும், ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக தேட்டங்களை பாதுகாக்கவும் முடியாது. மிகப்பெரும்பான்மையினரின் நலன்கள், ஆளும் வர்க்கத்தின் இலாபத்திற்கான பேராசை மற்றும் ஏகாதிபத்திய வெறி ஆகியவற்றுடன் இனி சமரசம் செய்து கொள்ள முடியாது. போரையும் சமத்துவமின்மையையும் முடிவுக்குக் கொண்டுவர, மக்கள் அரசியல் செயல்பாட்டில் சுயாதீனமாகத் தலையிட்டு, வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் அதிகாரத்தை உடைத்து, அவற்றை ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்.

வரவிருக்கும் தவிர்க்க முடியாத வர்க்கப் போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் தயார்படுத்துவதில் SGP இன் பிரச்சாரம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பேரணிகள், துண்டுப் பிரசுரங்கள், WSWS ன் கட்டுரைகள் மற்றும் சமூக ஊடகங்களில் காணொளிகள் மூலம் நூறாயிரக்கணக்கானோருக்கு அதன் சோசலிச வேலைத்திட்டத்தை SGP அறிமுகம் செய்துள்ளது. இப்போது, ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கட்சியையும் பிரிவுகளையும் தீவிரமாகக் கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானதாகும். போர், சுரண்டல் மற்றும் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக வழிநடத்துவதற்கு இதுதான் ஒரேயொரு வழியாகும். 

மேலும் படிக்க

Loading