இலங்கை: வேலைநிறுத்தம் செய்யும் கல்விசாரா பல்கலைக்கழக ஊழியர்களைப் பாதுகாத்திடு! கண்ணியமான ஊதிய உயர்வுக்காக போராடு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் உள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் கொடுப்பனவுகளுக்கான வேலைநிறுத்தம் அதன் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அரசாங்கமும் பல்கலைக்கழக அதிகாரிகளும் தொழிற்துறை நடவடிக்கையை நசுக்குவதற்கு தயாராகி வருகின்றனர்.

7 மே 2024 அன்று கொழும்பில் இலங்கை உயர்கல்வி அமைச்சுக்கு அருகில் கல்விசாரா ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி பிரபாத் ஏகநாயக்கவினால், பல்கலைக்கழகத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கல்விசாரா ஊழியர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று கண்டி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. தற்போதைய வேலைநிறுத்தத்தை தடை செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தை அவர் நாடியுள்ளார்.

இந்த நீதிமன்ற வழக்கானது ஏனைய பல்கலைக்கழகங்களில் இதே போன்ற அடக்குமுறை நடவடிக்கைகளுக்கான ஒரு பரிசோதனை வழக்கு ஆகும். அரசாங்க ஊதுகுழலான தினமின பத்திரிகையில் மே 24 அன்று வெளியான ஆசிரியர் தலையங்கம், நீதிமன்ற வழக்குக்கு தனது ஆதரவை அறிவித்து வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களைத் தாக்கியது. “இப்போது கல்வி சாரா தொழிலாளர்கள் ஒரு தலைவலியாக மாறியுள்ளனர்” இது “செய்யாத தவறுக்காக மாணவர்களின் வாழ்க்கையை வீணாக்க வழிவகுத்துள்ளது” என்று அது கூறியது.

மே 19 அன்று சண்டே டைம்ஸ், “பல்கலைக்கழக மாணவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையின் தாக்கத்தை தொடர்ந்து எதிர்கொள்கின்ற நிலையில், தற்போது வேலைநிறுத்தத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கையை அமுல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக,” அறிவித்தது. ஏனெனில்.” குறிப்பாக சகல பீடங்களின் பீடாதிபதிகளும் சகல சேவைகளும் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அது அழைப்பு விடுத்துள்ளது.

கட்டுரையின்படி, வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் சம்பளத்தை வெட்ட அனுமதிக்கும் 2007 சுற்றறிக்கை நடைமுறையில் இருப்பதாக அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) வெளியிட்டுள்ள அடக்குமுறை சுற்றறிக்கையில், எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபடும் பல்கலைக்கழக ஊழியர்களின் வேலை நாட்கள் ஊதியம் கொடுக்காத நாட்களாக கருதப்படும் என்று அறிவிக்கிறது.

4 ஜூன் 2007 அன்று, நாட்டின் 15 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். எவ்வாறாயினும், வேலைச்சுமையை அதிகரிப்பதற்கும் வருகையை சரிபார்க்க கைரேகை இயந்திரங்களை அறிமுகப்படுத்துவதற்குமான நிர்வாகத்தின் தீர்மானத்திற்கு எதிராக கொழும்பு பல்கலைக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர். பல்கலைக்கழக அதிகாரிகள் பல தொழிலாளர்களை இடைநீக்கம் செய்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் பேர்போன சுற்றறிக்கையின் அடிப்படையில், வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்களின் ஒன்பது நாட்கள் ஊதியத்தை வெட்டினர்.

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பும், கல்வி சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை ஒடுக்குவதற்கான தயாரிப்புகளை கடுமையாகக் கண்டிப்பதோடு அவர்களைப் பாதுகாக்க அனைத்து தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கிறது. அனைத்து பல்கலைக்கழகங்களில் இருந்தும் சுமார் 13,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக கல்வி சாரா தொழிற்சங்கக் கூட்டமைப்பு (UNATUA) முன்வைத்துள்ள வரையறுக்கப்பட்ட கோரிக்கைகளை, வானளாவ உயர்ந்துள்ள வாழ்க்கைச் செலவை சமாளிக்க முற்றிலும் போதுமானதாக இல்லை. எவ்வாறாயினும், இந்த சிறிய தொகைகளை கூட அரசாங்கம் நிராகரிப்பது, சர்வதேச நாணய நிதியம் (IMF) கட்டளையிட்டுள்ள சிக்கன திட்டத்தில் இருந்து அது விலகாது என்பதைக் காட்டுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் பேசுகையில், சம்பள உயர்வுக்கு பல்வேறு கோரிக்கைகள் உள்ளன, ஆனால் 2024 இல் அவற்றை நடைமுறைப்படுத்தும் அளவுக்கு அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கவில்லை, அவற்றை 2025 இல் மட்டுமே பரிசீலிக்க முடியும், என்றார். வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதிலும் பெருவணிக இலாபங்களை அதிகரிப்பதிலும் மட்டுமே அக்கறை காட்டும் விக்கிரமசிங்கவின் கூற்றுகளில் தொழிலாளர்கள் நம்பிக்கை வைக்கக்கூடாது. 

அரசாங்கத்தின் அடக்குமுறையை தோற்கடிப்பதற்கும், ஒழுக்கமான ஊதிய உயர்வை வென்றெடுப்பதற்கும் மற்றும் பொதுக் கல்விக்கான வெட்டுக்களை எதிர்ப்பதற்குமான கல்விசாரா ஊழியர்களின் அரசியல் போராட்டத்திற்கு, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைமையே பிரதான தடையாக உள்ளது. தொழிற்சங்கங்களின் தற்போதைய ஊதியக் கோரிக்கை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு முன்வைத்த அதே அளவு கோரிக்கையாளவே உள்ளது. மே 1 அன்று கல்வி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், “உறுப்பினர்களின் அழுத்தம்” காரணமாகவே வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

வேலைநிறுத்தத்தின் போது, ​​கல்வி சாரா தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியின் (NUJC) தலைவர் மங்கள டபரேரா, அரசாங்கத்தால் சம்பள உயர்வை வழங்க முடியாது என்பதை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன என்பதை தெளிவுபடுத்தினார். மே 14 அன்று ஒளிபரப்பான அத தெரன செய்திக்கு அவர் கூறுகையில். “நாட்டில் நிதி நெருக்கடி இருப்பதை நாங்கள் அறிவோம், எனவே பணம் கிடைக்கும்போது அவர்கள் [அரசாங்கம்] சம்பள உயர்வை வழங்க முடியும் என்று நாங்கள் கூறினோம். சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை”, எனத் தெரிவித்தார்.

“மோசமான வானிலை” காரணமாக, நேற்று கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தை தொழிற்சங்கங்கள் கைவிட்டன. உண்மையில், தொழிற்சங்க எந்திரம் அரசாங்கத்துடன் எந்த மோதலையும் தவிர்த்துக்கொள்ள உறுதியுடன் உள்ளது.

இந்த நீடித்த போராட்டத்தை முதலாளித்துவ ஆதரவு தொழிற்சங்க அதிகார வர்க்கத்தின் கையில் விட்டுவிட்டால், அது காட்டிக்கொடுக்கப்படும். சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), வேலைநிறுத்தம் செய்யும் கல்விசாரா தொழிலாளர்களுக்கு, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதன் மூலம், தொழிற்சங்கங்கள் மற்றும் அவை இணைந்திருக்கும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளில் இருந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதன் மூலம் விடயங்களைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறது.

இந்த நடவடிக்கைக் குழுக்கள் விக்கிரமசிங்க அரசாங்கம் மற்றும் அதன் அரச அடக்குமுறையைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஒரு அரசியல் போராட்டத்தை நடத்துவதற்கு மாணவர்கள், கல்வித்துறை ஊழியர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர் பிரிவினரை நோக்கித் திரும்ப வேண்டும். அரசாங்கம் ஏற்கனவே பல தொழில்துறைகளில் கடுமையான சேவை உத்தரவுகளை விதித்துள்ளதுடன் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்களை வன்முறையாக தாக்க ஆயுதபாணியாக்கப்பட்ட  பொலிஸை நிலைநிறுத்தியுள்ளது.

தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஜனவரி மாதம் மூன்று நாள் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட 62 இலங்கை மின்சார சபை ஊழியர்களை, அரசாங்கத்தின் ஆதரவுடன், நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளது. அவர்கள் ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் வேலை இழப்பை எதிர்கொள்கின்றனர்.

7 பெப்ரவரி 2024 அன்று 66 தொழிலாளர்கள் அரசாங்கத்தால் பழிவாங்கப்பட்டதற்கு எதிராக இ.மி.ச. ஊழியர்கள் களனி திஸ்ஸ ஆலைக்கு அருகில் ஆர்ப்பாட்டம் செய்தனர். [Photo by CEB workers]

எல்லா இடங்களிலும் உள்ள உழைக்கும் மக்கள் தங்கள் வேலைகள், ஊதியங்கள், வேலை நிலைமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளில் ஆழமான சீரழிவை எதிர்கொள்கின்றனர். சர்வதேச நாணய நிதியம் மற்றும் பெருவணிகத்தின் கோரிக்கைகளால் உந்தப்படுகின்ற விக்கிரமசிங்க அரசாங்கம், முதலாளித்துவ நெருக்கடிக்கு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளை விலைகொடுக்க வைப்பதில் உறுதியாக உள்ளது.

கல்வி சாரா தொழிலாளர்கள் போராடுவதற்கு தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ள போதிலும், உறுதியும் போர்க்குணமும் மட்டும் போதுமானது அல்ல. சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக, தொழிலாளர்களின் தொழில்துறை மற்றும் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி, முழு தொழிலாள வர்க்கத்தையும் உள்ளடக்கிய ஒரு போராட்டத்தை நடத்துவது அவசியமானதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முதலாளித்துவ அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக ஒரு அரசியல் பொது வேலைநிறுத்தத்துக்கு தயார் செய்வது அவசியமாகும்.

தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான போராட்டம் வெளிநாட்டுக் கடனை நிராகரிப்பதோடு, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் பெரு நிறுவனங்கள், பெரிய தோட்டங்கள் மற்றும் வங்கிகளை தேசியமயமாக்கும் போராட்டத்துடன் நெருக்கமாக பிணைந்துள்ளது.

அரசாங்கமும் ஆளும் வர்க்கமும், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை நாட்டை விட்டு வெளியேறி இராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்த 2022 ஏப்ரல்-ஜூலை  வெகுஜன எழுச்சியால் பீதியடைந்துள்ளன. ஆயினும்கூட அனைத்து பாராளுமன்றக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டுறவும் அவர்களின் துரோகமும் விக்கிரமசிங்கவை ஆட்சிக்கு வரச் செய்தது. எதிர்க்கட்சிகளால் முன்மொழியப்பட்ட மற்றொரு முதலாளித்துவ அரசாங்கம் அவசியமில்லை, மாறாக பெரும்பான்மையான மக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் ஒன்றே அவசியமாகும்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே இதை முன்னெடுத்துச் செல்ல முடியும். பிரதான முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலாளர்களும் தங்கள் ஊதியங்கள் மற்றும் வேலைகளைப் பாதுகாக்கும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, உலகளவில் இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைக்க, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை கட்டியெழுப்புவதை தொடக்கி வைத்துள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களுக்கு நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதற்கு ஆலோசனை வழங்கவும் எமது அரசியல் வேலைத்திட்டத்தைப் பற்றி கலந்துரையாடுவதற்கும் தயாராக உள்ளது.

0773562327 என்ற எண்ணில் தொலைபேசி மூலமாகவோ அல்லது கீழ்வரும் முகவரிக்கு எழுதுவதன் மூலமாகவோ எங்களைத் தொடர்பு கொள்ளவும்:

சோசலிச சமத்துவக் கட்சி

716 1/1, கோட்டே வீதி,

அதுல் கோட்டே

கோட்ட

Loading