கொலன்னாவ மக்கள் வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள கடினமான நிலைமை குறித்து WSWS உடன் பேசுகின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தீவின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. களு, களனி, ஜிங், நில்வளா மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால், கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள நிலைமை உருவாகியுள்ளது. இதன் காரணமாக அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் இடம்பெயர்ந்து அவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 5 காலை நிலவரப்படி, கனமழையால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்கள் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. தகவல்களின்படி, 40 வீடுகள் முற்றாக அழிந்துள்ளன; 4,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. வியாழன் காலை அறிக்கைகளின்படி, சீரற்ற காலநிலையால் 66,900 குடும்பங்களைச் சேர்ந்த 253,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் மழை காரணமாக பேரிடர் எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ பிரதேசம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் ஒன்றாகும். கனமழை காரணமாக களனி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியில் உள்ள தாழ்நிலப் பகுதிகள் பெருமளவு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வறிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் செறிந்து வாழும் இப்பிரதேசத்தில் புவக்வத்தை, சிங்கபுர, எகொட கொலன்னாவ, வடுகொடவத்தை, வென்னவத்தை, சாலவத்தை, பிரந்தியாவத்தை, குமாரதாச இடம், ராகுல வித்தியாலயத்திற்கு முன்பகுதி போன்ற பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் அப்பகுதியில் உள்ள ஆலயத்தில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொலன்னாவ மீதொட்டமுல்ல பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் உலக சோசலிச வலைத் தள (WSWS) செய்தியாளர்கள் கலந்துரையாடினர். பன்சால் ஹேன வீதியில் பொத்துவில் கும்புர கால்வாய்க்கு அருகில் உள்ள தாழ்வான பகுதியில் வசிக்கும் சுமார் முன்னூறு குடும்பங்களின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

2016 ஆம் ஆண்டும் இப்பகுதி கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதுடன், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்கின்ற போதிலும், இந்த நிலையைத் தடுக்க எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அம்பலமாகியுள்ளது. சில உள்ளூர்வாசிகள் குறிப்பிடுவது போல், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை கூட தங்கள் சொந்த செலவில் ஈடுகட்ட வேண்டும்.

4 ஜூன் 2024 அன்று, கொலன்னாவவில் வெள்ளத்தில் மூழ்கிய தனது வீட்டிற்கு முன்னால் மெர்சி பீரிஸ்

இந்த பகுதிக்கு உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்கள் செவ்வாய்கிழமை சென்ற போது நீர்மட்டம் உயர்ந்து வருவதைக் கண்டனர். மெர்சி பீரிஸ் என்ற வயோதிப பெண்ணின் வீட்டின் அடித்தளம் மூன்று நாட்களாக நீரில் மூழ்கியுள்ளது. மாற்றுத்திறனாளி மகளுடன் வசிக்கும் அவர், வெள்ளம் தொடங்கியபோது, ​​மகளை தெரிந்தவர்கள் வீட்டில் தங்க வைத்துள்ளார். வீட்டில் உள்ள உடமைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பீரிஸ் அவ்வப்போது வீட்டிற்கு வருகை தருகிறார்.

“2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் எனது வீட்டில் இருந்த இலட்சக்கணக்கு பெறுமதியான உபகரணங்கள் சேதமடைந்தன. அவற்றையெல்லாம் நாம் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. உதவிகள் கிடைத்தது, ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்ல. இங்குள்ள கால்வாயை சுத்தப்படுத்த பலமுறை மாநகர நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் எதுவும் செய்யப்படவில்லை. தற்போது கால்வாய் நிரம்பி நீரில் மூழ்கியுள்ளது”, என பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கையில் அடுத்தடுத்து வந்த முதலாளித்துவ அரசாங்கங்கள் அனர்த்தத்திற்கு முந்தைய திட்டமிடல் மற்றும் வெள்ளம் போன்ற அனர்த்தங்களுக்கு பிந்தைய பேரழிவுகளை நிர்வகிப்பதற்கான சரியான பொறிமுறையை நிறுவவில்லை. இதனால் இந்த பேரழிவுகளில் பாதிப்பின் அளவு அதிகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் அப்போதைக்கு சமாளிக்கும் வகையிலேயே இந்த நிலைமைக்கு பிரதிபலிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் இராணுவத்தை ஈடுபடுத்தியுள்ளமை, இராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கை ஆகும்.

இதைத் தவிர, எதிர்காலத்தில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்கவோ, வெள்ளத்தால் ஏற்படும் பேரிடரைச் சமாளிக்கவோ எந்த விஞ்ஞானப்பூர்வமான திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மழையால் நீர்மட்டம் உயர்வதை தடுக்க கால்வாய்களை சுத்தம் செய்தல், சீரமைத்தல் மற்றும் அகலப்படுத்துதல் போன்ற திட்டங்கள் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகளின் செலவினக் குறைப்பால் முற்றிலுமாக முடங்கியுள்ளன. இது குறித்து புகார் தெரிவிக்கும் நபர்களுக்கு எந்த பதிலும் அளிக்காமல் இருப்பது சகஜமாகி விட்டது.

4 ஜூன் 2024 வடுகொடவத்தை - கொலன்னாவ வடிகாலமைப்பு, வெள்ளத்திற்குப் பின் குப்பைகளால் அடைபட்டு உள்ளது

கனமழையால் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக தேங்கி நிற்கின்றது. ராகுல வித்யாலயத்துக்கு முன்னால் தொடங்கும் பக்கவாட்டு பாதையில், கால்வாய்க்கு அருகில் உள்ள வீடுகள் மற்றும் பிரதேசங்களின் பகுதிகள் தண்ணீரில் மூழ்கியதை WSWS செய்தியாளர்கள் பார்த்தனர்.

ஒரு தொலைபேசி சேவை நிறுவனத்தில் பணிபுரியும் உள்ளூர் தொழிலாளி ஒருவர், WSWS செய்தியாளர்களிடம் பேசுகையில், “2016 இதைவிட அதிக வெள்ளத்தில் மூழ்கியது. தற்போது மீண்டும் வந்துள்ளது. இந்த வெள்ள நிலையை தடுத்து நிறுத்த அரசாங்கங்களிடம் எந்த வேலைத் திட்டமும் இல்லை. இங்கு தண்ணீர் நிரம்புகிறது என்று கேள்விப்பட்டு வேலைக்கு நடுவே வந்து பார்த்தேன். இதன் சுமையை நாமே சுமக்க வேண்டும்” என்றார்.

கொழும்பு கொலன்னாவ மீதொட்டமுல்லவில் ஒரு வாரமாக அசுத்தமான வெள்ளத்தினால் வீடுகள் மூழ்கியுள்ளன -04 மே 2024

மூன்று சிறு பிள்ளைகளைக் கொண்ட ஒரு தாய், நிறம் மாறிய வெள்ள நீரை சுட்டிக்காட்டி, கழிவறை கழிவுகள் கூட பெருக்கெடுத்து ஓடும் நீரில் கலந்துவிட்டதாக கூறினார்.

‘’கழிவறை கழிவுகளுடன் வெள்ளம் வடிந்தாலும், பல மாதங்களாக துர்நாற்றம் வீசும். முந்தைய வெள்ளத்தின் போது பிள்ளைகளுக்கு புண் வந்தது. கால்களில் சொறி வந்தது. கடந்த மழைக்குப் பிறகு, இரண்டு பிள்ளைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து மிகவும் சிரமப்பட்டு காப்பாற்றப்பட்டனர்.

வெள்ளத்துடன் எலிக்காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் ஏற்படுவது குறித்து சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளது. ஆனால், இதுபோன்ற நோய்கள் பரவாமல் தடுக்க அரசாங்கம் அறிவிப்புகளை வெளியிடுவதைத் தாண்டி எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

இந்த வெள்ளத்தை பற்றிய அரசாங்கத்தின் அலட்சியத்தை கண்டனம் செய்த அவர், “அரசியல்வாதிகளுக்கு இந்த விஷயங்களில் என்ன செய்வது என்று தெரியவில்லை. பொதுமக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று அவர்கள் பார்ப்பதே இல்லை” என்றார். “இரண்டு நாட்கள் பசியோடு இருந்தோம். “நேற்றுதான் எங்களுக்கு உணவு கிடைத்தது, வீட்டில் உள்ள ஐந்து பேருக்கும் இரண்டு வேளைதான் உணவு கிடைத்தது,” என்று அவர் மேலும் கூறினார்.

முறைசாரா நகரமயமாக்கல் காரணமாகவே வெள்ளப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அதே பிரதேசத்தில் வசிக்கும் திலின குமார தெரிவித்தார். “அரசாங்கத்தால் நிலத்தை விற்பதற்காக வசிக்கும் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். கொலன்னாவ எண்ணெய் விநியோக நிலையத்திற்கு எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் செல்வதாக கூறி அருகில் வசிக்கும் மக்கள் அகற்றப்பட்டனர். சிலருக்கு வீடுகள் வழங்கப்பட்டன. அவர்கள் வாழ்வதற்கு ஏற்றவை அல்ல. சிலர் இப்படி வாழ தகுதியற்ற இடங்களில் குடியேறினர்,” என அவர் கூறினார்.

கொலன்னாவ நகரசபையானது அசுத்த நீரை அகற்றுவதற்கான முறையான அமைப்பை ஏற்படுத்தாமையினால், மழைக்காலங்களில் வீடுகளில் உள்ள கழிவறைகள் நிரம்பி வழிவதாக பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.

இப்பகுதியில் மல கழிவுகளை அகற்ற அரசினால் அசுத்த தண்ணீர் அகற்றும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஒரு வீட்டில் கழிவறை அகற்றும் கட்டமைப்பை இணைப்பதற்கு 5,000 ரூபா அறவிடப்பட்ட நிலையில் தற்போது அது 65,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். அதற்காக மாதந்தோறும் 500 ரூபாய் வசூலிக்கப்பட்டும் எந்தப் பயனும் இல்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விஷான் தேயிலை பொது செய்யும் நிறுவனத்தின் தற்காலிக பணியாளரான வசந்தி சில்வாவின் சிறிய பலகை வீடும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வறுமை காரணமாக அப்பகுதி மக்கள் இவ்வாறான சிறிய வீடுகளில் வாழ்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவரது வீடு தற்போது வெள்ளத்தினால் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. “நான் எனது இரண்டு பிள்ளைகளுடன் வசிக்கிறேன். சில நாட்களாக வேலைக்குச் செல்ல முடியாததால், வருமானம் நின்று விட்டது’' என தெரிவித்த அவளின் ஒரு நாள் சம்பளம் 1,200 ரூபாய் அற்பத் தொகையாகும்.

இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் கூலி வேலை, ஒப்பந்த வேலைகள் போன்ற தினசரி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்களின் வருமானம் சரிந்துள்ளதாக WSWS செய்தியாளர்களிடம் அவர்கள் தெரிவித்தனர்.

அரசாங்கத்தின் அலட்சியம் சம்பந்தமாக வெகுஜன எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி விக்ரமசிங்க வெள்ளத்தால் மூழ்கிய சேதவத்தை பிரதேசத்திற்கு விஜயம் செய்தார். கொழும்பில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைக்கான மூல காரணங்களை கண்டறிந்து, எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் மீள ஏற்படாதிருக்க முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அவர் அமைச்சரவைக்கு பொய்யான யோசனையை வழங்கினார்.

இது குறித்து அதிருப்தி தெரிவித்த நகராட்சி ஒப்பந்த ஊழியர் ஒருவர், “இவற்றை சுத்தம் செய்ய போதுமான பணியாளர்கள் நகராட்சியில் இல்லை. மாநகர சபை அதன் பொறுப்பை அலட்சியம் செய்துள்ள அதே நேரம், அரசாங்கம் “டெங்குவை இனப்பெருக்கம் செய்வதாக குடியிருப்பாளர்களைக் குற்றம் சாட்டுகிறது” என்று கூறினார்.

மக்கள் நாகரீகமாக வாழ்வதற்கு ஏற்ற வீடுகளை வழங்குவதும், வெள்ளம், மண்சரிவு போன்ற பேரிடர்களை நிர்வகிப்பதும், அந்த அனர்த்தங்களினால் ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். எவ்வாறாயினும், கொலன்னாவை பிரதேசவாசிகளின் அனுபவங்களின் ஊடாக, முதலாளித்துவ அரசாங்கங்கள் அந்த பொறுப்புகளை ஏழை மக்களிடம் ஒப்படைத்து கை கழுவிக்கொள்கின்றன என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளம் போன்ற பேரிடர்களைத் தடுக்க, நீர்ப்பாசனம், வடிகாலமைப்பு, வானிலை, புவியியல் ஆராய்ச்சி, நிலம், வீடு கட்டுதல் போன்ற துறைகளில் பகுத்தறிவுடன் திட்டமிடப்பட்ட பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். நவீன தொழில்நுட்பத்துடன் மேற்கண்ட நிறுவனங்களைச் சீர்படுத்துவது அதற்கு முன்நிபந்தனையாக உள்ளது. ஆனால் முதலாளித்துவ இலாப நலன்கள் அத்தகைய திட்டத்திற்கு முற்றிலும் எதிராக இருக்கின்றன.

இப்பகுதி மக்கள், முதலாளித்துவ அமைப்பின் தீமைகள் பற்றிய சக்திவாய்ந்த அனுபவத்தைக் கொண்டுள்ளனர். 2017 மீதொட்டமுல்ல குப்பை மலை சரிந்ததனால் ஏற்பட்ட பாரிய பேரழிவில் 32 பேர் பலியாகியதுடன் டசின் கணக்கான வீடுகள் தரைமட்டமாகின.

முதலாளித்துவ அமைப்பு இருக்கும் வரை இது போன்ற பேரழிவுகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும். முதலாளித்துவ இலாபத்திற்கு பதிலாக, மனித நலன்களுக்காக சமூகத்தை மறுசீரமைக்கும், ஒரு சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்திற்காகப் போராடுவதே இதற்கான ஒரே வழி ஆகும்.

Loading