மக்ரோன் பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார்: பிரெஞ்சு ஏகாதிபத்தியம் போரையும் சர்வாதிகாரத்தையும் நோக்கி அணிவகுத்துச் செல்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ரஷ்யாவிற்கு எதிராக போரை நடத்த உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்புமாறு அவர் அழைப்பு விடுத்த ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரத்திற்குப் பிறகு, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஞாயிற்றுக்கிழமை மாலை ஐரோப்பா முழுவதும் அதிதீவிர வலதுசாரிக் கட்சிகளுக்கு பெரும் வெற்றியைத் தொடர்ந்து பாராளுமன்றத்தை கலைத்தார். இது ஒரு வெடிப்பார்ந்த நெருக்கடியைத் தூண்டியுள்ளது. அரசியல் ஸ்தாபகம் அதிவலது கூட்டணிகள் குறித்து, அல்லது, வரலாற்றுரீதியில் ஸ்ராலினிசத்துடன் தொடர்புபட்ட கன்னைகளுக்கு இடையில், நாடாளுமன்றத்தில் அதிவலது எதிர்பார்க்கும் ஆதாயங்களை மட்டுப்படுத்துவதற்கான ஒரு தேர்தல் “மக்கள் முன்னணி” குறித்து பரபரப்புடன் விவாதித்து வருகிறது.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில், பரந்த மற்றும் அதிகரித்து வரும் கோபம் உள்ளது. நேற்று, பிரான்சில் காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களின் மீளெழுச்சிக்கு மத்தியில், மக்ரோன் அரசியல் முன்முயற்சியை அதிதீவிர வலதுசாரிகளிடம் கையளிப்பதற்கு எதிராக பல உயர்நிலைப் பள்ளிகளில் போராட்டங்கள் வெடித்தன. ஏகாதிபத்திய போர், இனப்படுகொலை மற்றும் பாசிசத்திற்கு எதிராக ஒரு சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு இந்த வளர்ந்து வரும் எதிர்ப்பை நோக்குநிலைப்படுத்துவதே தீர்க்கமான பணியாகும்.

மக்ரோன் ஐந்து நிமிட முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட காணொளியில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதையிட்டு சம்பிரதாய பூர்வமாக அறிவித்தார். அதிவலது கட்சிகளை, உக்ரேனுக்கான இராணுவ உதவி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வங்கி பிணையெடுப்புகளுக்கான அச்சுறுத்தல்களாக விமர்சித்த பின்னர், அவர் “நமது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை, இறையாண்மை கொண்ட மக்கள் பேச வேண்டும், இதை விட ஜனநாயகம் எதுவும் இல்லை. அனைத்து தில்லுமுல்லுகள், ஆபத்தான தீர்வுகளை விட தேர்தல் முடிவு சிறப்பாக இருக்கும். இது ஒரு தவிர்க்க முடியாத தெளிவுக்கான நேரம் ஆகும்” என்று அவர் கூறினார். 

மக்ரோன் ஜனநாயகத்தைப்பற்றி பிரார்த்தனை செய்வது ஒரு பொய்யாக இருக்கிறது: அதாவது அவர் மக்களுக்காக ஆட்சி செய்யவில்லை, மாறாக அவர்களுக்கு எதிராக ஆட்சி செய்கிறார். கடந்த ஆண்டு, பெரும் மக்கள் எதிர்ப்பு மற்றும் பொலிஸ் கொடூரமாக தாக்கிய பாரிய வேலைநிறுத்தங்களுக்கு இடையே, பாதுகாப்பு செலவினங்களை அதிகரிப்பதற்கு நிதியாதாரம் திரட்ட அவர் ஓய்வூதிய வெட்டைத் திணித்தார். ரஷ்யாவுக்கு எதிரான போரின் ஒரு மிகப் பெரியளவிலான பொறுப்பற்ற தீவிரப்பாட்டை ஆதரிப்பதற்கும், பிரான்சிலும் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் பரந்த பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பை ஒடுக்குவதற்கும், அங்கே ஸ்திரமான பெரும்பான்மை இல்லாத இப்போதைய நாடாளுமன்றத்தை நடைமுறைச் சாத்தியமான ஒரு நாடாளுமன்ற பெரும்பான்மையைக் கொண்டு பிரதியீடு செய்வதற்கு இப்போது அவர் நோக்கம் கொண்டுள்ளார்.

ஜூலை 7 இல் முடிவடையும் மக்ரோன் அழைப்பு விடுத்த இந்த திடீர் தேர்தல்கள், பிரிட்டனில் சமீபத்தில் அழைப்பு விடுக்கப்பட்ட ஜூலை 4 உடனடி தேர்தல்கள் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ இராணுவத் தலையீட்டிற்கான பைடென் நிர்வாகத்தின் திட்டங்களை அங்கீகரிப்பதற்காக வாஷிங்டனில் ஜூலை 9 அன்று நடைபெறவிருக்கும் நேட்டோ போர் உச்சிமாநாட்டிற்கு சற்று முன்னதாக வருகின்றன. ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோவின் ஜனநாயக-விரோத போர்க் கொள்கையை நடைமுறைப்படுத்த, ஜனநாயக சட்டபூர்வமான தன்மையைக் கொண்டிருப்பதாக அவர் கூறிக்கொள்ளும் ஒரு நிலையான ஸ்திரமான அரசாங்கத்தை கொண்டிருக்க மக்ரோன் உத்தேசித்துள்ளார்.

ஆளும் வர்க்கத்தின் கணிசமான கன்னைகள், இதற்கு நவ-பாசிசவாதிகளை —பிரதானமாக மரின் லு பென்னின் தேசிய பேரணி— அதிகார அரங்குகளுக்குள் கொண்டு வருவது அவசியமென எதிர்பார்க்கின்றன. RN ஒரு பொறுப்பான பாத்திரம் வகிக்க தயாரா என்று கேட்கும் ஒரு பாரிய ஊடக பிரச்சாரத்திற்கு இடையே, லு பென்னும் அவரது உதவியாளர் ஜோர்டான் பார்டெல்லாவும் நேட்டோ மற்றும் வங்கிகளின் அணியில் நின்று நேர்காணல்களை வழங்கி வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பாக ரஷ்யாவுக்கு RN அனுதாபம் தெரிவித்தது ஒரு தவறு என்று பிரச்சாரத்தின் போது பார்டெல்லா வலியுறுத்திய பின்னர், மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களை இரத்து செய்வதற்கான RN இன் அழைப்பை நேற்று அவர் கைவிட்டார். 

ஆளும் வர்க்கத்தின் கன்னைகள் துரிதமாக ஜனநாயக பாசாங்குத்தனங்களைக் கைவிட்டு, இன்னும் வெளிப்படையான பாசிச-ஆதரவு நோக்குநிலையை ஏற்று வருகின்றன. நேற்று, கோலிச குடியரசுக் கட்சியின் (LR) தலைவரான எரிக் சியோட்டி, TF1 தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு நேர்காணலில் LR மற்றும் RN க்கு இடையே ஒரு தேசிய கூட்டணிக்கு அழைப்புவிடுத்தார். அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சித் தலைவர் ஜோன்-லூக் மெலோன்சோனை ஒரு இடதுசாரி அச்சுறுத்தலாக கண்டனம் செய்த சியோட்டி, ஒரு வலதுசாரி எழுச்சிக்கு அழைப்புவிடுத்தார்: 

“நமக்கு நாமே உண்மையாக இருக்கும்போது நமக்கு ஒரு கூட்டணி தேவை ... RN மற்றும் அதன் வேட்பாளர்களுடன். … எனது அரசியல் குடும்பம் இந்த திசையில் செல்லும் என்று நம்புகிறேன், பலர் என்னைப் பின்தொடர்கிறார்கள். … இன்று மேலெழும்பும் ஒரு சக்தி இருக்கிறது, அது மக்ரோனின் கையாலாகாத்தனம் மற்றும் மெலோன்சோனின் அபாயத்திற்கு எதிராக எழ வேண்டும்.”

நவ-பாசிசவாதிகளுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று ஏனைய உறுப்பினர்கள் பகிரங்கமாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருக்கின்ற நிலையில், LR க்குள்ளாக ஒரு கடுமையான கன்னை போராட்டம் வெடித்துள்ளது. மெலோன்சோன் அவர் பங்கிற்கு, “வலதுசாரிகளுக்கு [பாசிசத்திற்கு] ஒரு எதிர்ப்பு” இன்னும் இருக்கிறது என்று தான் நம்புவதாகக் கூறி LR நெருக்கடியில் தலையீடு செய்தார். இன்று காலை, டசின் கணக்கான நாடாளுமன்றத் தொகுதிகளில் LR வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் கூட்டணிகளுக்கு RN தயாரிப்பு செய்து வருவதாக பார்டெல்லா தெரிவித்தார்.

பிரெஞ்சு ஆளும் வர்க்கமானது, கடந்த உலகப் போரின் தொடக்கத்தில் இருந்ததை விட இன்று அதிதீவிர வலதுசாரிகளின் அரசியலை ஜனநாயகரீதியில் எதிர்க்கும் திறனை குறைவாகவே கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் அது இறுதியில் நாசிசத்துடன் ஒத்துழைத்தது. ஐரோப்பிய பாசிசத்தின் வரலாற்று பாரம்பரியமாக விளங்கும் இராணுவவாதம், இனப்படுகொலை மற்றும் பொலிஸ்-அரசு ஆட்சிக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பை அதனால் அணிதிரட்ட முடியாது, அணிதிரட்டவும் விரும்பவில்லை. ஏனென்றால், அது காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரித்து, உள்நாட்டில் அப்பட்டமான பொலிஸ் வன்முறை மூலமாக ஆட்சி நடத்தி, ரஷ்யாவுக்கு எதிராகவும், இறுதியில் சீனாவுக்கு எதிராகவும் ஒரு கண்டந்தழுவிய மற்றும் உண்மையில் உலகளாவிய போருக்கு தயாரிப்பு செய்து வருகிறது.

போரைத் தீவிரப்படுத்தல் மற்றும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை, பாராளுமன்ற இயந்திரத்திற்குள் கையாளுவதன் மூலமாக ஒரு தேசிய மட்டத்தில் தடுத்து நிறுத்த முடியாது. ரஷ்யாவில் 1917 அக்டோபர் போல்ஷிவிக் புரட்சி மற்றும் கெய்சரை கவிழ்த்த 1918 ஜேர்மன் புரட்சியால் நிறுத்தப்பட்ட முதலாம் உலகப் போரின் சமயத்தைப் போலவே, இது சோசலிசப் புரட்சிக்கான தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச போராட்டத்தால் மட்டுமே முடிவுக்குக் கொண்டுவரப்பட முடியும்.

இது, ஸ்ராலினிச மற்றும் சமூக-ஜனநாயகக் கட்சிகளுடனான ஒரு “மக்கள் முன்னணி”க்காக, அடிபணியா பிரான்ஸ் கட்சியின் உத்தியோகபூர்வமான அதிகாரியும், மக்ரோனின் கூட்டாளியுமானமான பிரான்சுவா றுபாஃன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அழைப்புகளின் திவால்நிலை மற்றும் பிற்போக்குத்தனமான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சோசலிஸ்ட் கட்சி (PS), ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), பசுமை கட்சியினர் மற்றும் அடிபணியா பிரான்ஸ் கட்சி ஆகியவற்றிற்கு இடையே ஒரு தேர்தல் கூட்டணிக்கு றுபாஃன் அழைப்புவிடுத்தார். அடிபணியா பிரான்ஸ் கட்சியானது முன்னதாக இக்கட்சி கூட்டணியை புதிய மக்கள் சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஒன்றியம் (NUPES) என்று அழைத்த போதினும், றுபாஃன் அதன் பெயரை மக்கள் முன்னணி என்று மறுபெயரிட முன்மொழிந்தார். ஒரு எக்ஸ் / ட்விட்டர் வீடியோவில், அவர் பின்வருமாறு கூறினார்: 

“நாம் ஏதாவது முயற்சி செய்ய வேண்டும். ஜனாதிபதி ரூஸ்வெல்ட்தான் புதிய உடன்படிக்கையின் போது இதை முயற்சித்தார், நாம் தோல்வியுற்றால் நாடு வருத்தப்படாது, ஆனால் நாம் முயற்சி செய்யாவிட்டால் அது நடக்கும். எனவே நேற்று இரவு நாங்கள் BFM -டிவியில் கடலில் புட்டியை போடுவதைப் போல ஒரு செய்தி ஒன்றை தெரிவிக்க முயற்சித்தோம், அது: மக்கள் முன்னணி. … கட்சிகள் அங்கு வந்துசேரும், ஆனால் அவர்கள் எவ்வளவு விரைவாகச் செய்கிறார்களோ அவ்வளவு சிறந்தது. வெள்ளை புகை தோன்றும் வரை நாங்கள் காத்திருக்கப் போவதில்லை. [ஒரு புதிய போப்பின் தேர்வை உறுதிப்படுத்துகிறது].

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

தற்போது, மக்ரோன் அரசாங்கத்தில் பங்கெடுப்பதுடன் மிகவும் நேரடியாக பொருந்தக்கூடிய “இடதின் ஐக்கியம்” சுலோகத்தை அறிவுறுத்தும் ஐரோப்பிய முன்னணி வேட்பாளர் ரஃபேல் குளுக்ஸ்மான் அல்லது முன்னாள் பிரதம மந்திரி பேர்னார்ட் கஸ்னேவ் போன்ற சோசலிஸ்ட் கட்சி பிரமுகர்களுடன் அடிபணியா பிரான்ஸ் கட்சி கன்னை மோதல்களை நடத்தி வருகிறது. ஆனால் றுபாஃனின் முன்மொழிவை மெலோன்சோன் ஆமோதித்தார். 2022 ஜனாதிபதித் தேர்தலில், மக்ரோனின் கீழ் பிரதமராக பணியாற்றுவதற்கான தனது வாய்ப்பை மீண்டும் வலியுறுத்தி, மெலோன்சோன் இவ்வாறு ட்வீட் செய்தார்:

“மீண்டும் ஒருமுறை, [LFI உறுப்பினர்கள்] அனைத்து காழ்ப்புணர்ச்சிகளையும் தூக்கி எறிந்துவிட்டு மக்கள் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டும். பார்டெல்லாவின் தண்டனைக்கு பிரான்ஸ் கண்டிக்கப்படவில்லை. புதிய மக்கள் முன்னணிக்கு எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என்பது தெரியும்.” 

உக்ரேனிலும் அதற்கு அப்பாலும் ரஷ்யாவுடன் போர் தொடுப்பதை வெறித்தனமாக ஆதரிக்கும் குளுக்ஸ்மான் போன்ற சக்திகளுடனான கூட்டணிகளுக்கு அது முறையிடுவதே இந்த “மக்கள் முன்னணியின்” தீர்க்கமான அம்சமாகும். கடந்த ஆண்டு மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துவதற்கு தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் எடுத்த முடிவையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். எனவே ஒரு அவசர எச்சரிக்கை செய்யப்பட வேண்டும்: அதாவது மக்ரோனின் அமைச்சர்களாக சேவையாற்றுவதற்கான அபிலாஷைகளை நியாயப்படுத்த மக்கள் முன்னணிவாதத்தை கையிலெடுப்பவர்கள், அவ்விதத்தில் தொழிலாள வர்க்கம், ட்ரொட்ஸ்கிசம் மற்றும் சோசலிசப் புரட்சி மீதான அவர்களின் கடுமையான குரோதத்தைத்தான் அம்பலப்படுத்துகின்றனர்.

1934-1938 மக்கள் முன்னணி ஸ்ராலினிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் தாராளவாதிகளின் கூட்டணி உலகப் போருக்கு வழி வகுத்தது. 1936 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்திற்கு மத்தியில் முதலாளித்துவத்தைத் தூக்கிவீசுவதற்கும் அதிகாரத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் ஒரு போராட்டத்தைத் தடுத்திருந்த அது, 1939 இல் இரண்டாம் உலகப் போர் தொடங்கிய சமயத்தில் உருக்குலைந்து முற்றிலும் ஒரு எதிர்ப்புரட்சிகர பாத்திரம் வகித்தது. போலாந்து மீது படையெடுத்து இரண்டாம் உலகப் போரைத் தொடங்குவதற்கு ஹிட்லரை விடுவித்த ஸ்ராலின்-ஹிட்லர் ஒப்பந்தத்தை பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. சமூக-ஜனநாயகவாதிகளும் தாராளவாதிகளும், அவர்களின் பங்கிற்கு, 1940 இல் நாஜி ஒத்துழைப்பாளர் சர்வாதிகாரி பிலிப் பெத்தனுக்கு அவசரகால அதிகாரங்களை வழங்குவதற்கு ஆதரவாக பெரும்பான்மையாக வாக்களித்தனர்.

பழைய போல்ஷிவிக்குகள் மீதான படுகொலை, களையெடுப்புகளின் போது சோவியத் மார்க்சிஸ்ட்டுக்கள் மீதான அரசியல் படுகொலை, மற்றும் 1940ல் லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கான தயாரிப்பு ஆகியவற்றை நியாயப்படுத்தி, மாஸ்கோ விசாரணைகளின் பொய்களுக்கு மக்கள் முன்னணி ஒப்புதல் அளித்தது.

மக்ரோனின் கொள்கைகள், இனப்படுகொலை மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான பரந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste - PES)  ஊக்குவிக்கிறது. ஆனால் போரும் எதேச்சாதிகாரவாதமும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு தார்மீக முறையீடுகள் செய்வதன் மூலமாக தோற்கடிக்கப்பட முடியாது. 20ம் நூற்றாண்டின் மாபெரும் அரசியல் படிப்பினைகள் கற்றுக் கொள்ளப்பட வேண்டும். வேலையிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேச இயக்கத்தையும், அந்த இயக்கத்தில் சோசலிசப் புரட்சிக்கான ஆதரவைக் கட்டியெழுப்ப தொழிலாள வர்க்கத்தில் ஒரு ட்ரொட்ஸ்கிச முன்னணிப் படையையும் கட்டியெழுப்பாமல் முதலாளித்துவத்தின் மரண நெருக்கடியைத் தீர்க்க முடியாது.

Loading