இலங்கை மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் உக்ரேனிய சோசலிஸ்ட் போக்டன் சிரோடியுக்கை உடனடியாக விடுதலை செய்யக் கோருகின்றனர்

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி, தேசத்துரோகம் என்ற பொய் குற்றச்சாட்டில் உக்ரேனியப் பாதுகாப்பு சேவையால் சிறைப்படுத்தப்பட்டுள்ள பொக்டான் சிரோட்யுக்கின் உடனடியான விடுதலையை கோரும் கடிதங்களைப் பெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த அறிக்கைகள், போக்டனின் விடுதலைக்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தால் ஆரம்பிக்கப்பட்ட உலகலாவிய பிரச்சாரத்திற்கான பதிலளிப்பாகும்.

போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான போக்டன் சிரோடியுக்

குற்றச்சாட்டுகள் சோடிக்கபட்டவை. போக்டன், முதலாளித்துவ புட்டின் ஆட்சிக்கும் உக்ரேன் மீதான அதன் படையெடுப்புக்கும் சளைக்காத எதிர்ப்பாளர். அவர் உக்ரேன், ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதும், அமெரிக்க-நேட்டோ பினாமிப் போருக்கும் அனைத்து அரசாங்கங்களுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு போர்-எதிர்ப்பு சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடினார். அவரது கைது, செலென்ஸ்கி ஆட்சியின் இடதுசாரி இயக்கங்கள் மீதான கொடூரமான அடக்குமுறையின் சமீபத்திய எடுத்துக்காட்டாகும், போருக்கான அவரின் எதிர்ப்பு உக்ரேனிய தொழிலாள வர்க்கத்திற்குள் வளர்ந்து வரும் ஆதரவை பெறுகிறது.

போக்டன் சிரோடியுக்கை விடுதலை செய்யும் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கவும் ஈடுபடவும், அறிக்கை சமர்ப்பிக்கவும், மனுவில் கையொப்பமிடவும், நிதிப் பங்களிப்பை செய்யவும் https://www.wsws.org/ta/special/pages/freebogdan.html ஐப் பார்வையிடவும்.

இத்தாலியில் உள்ள இலங்கைப் புலம்பெயர் தொழிலாளியான திசேரா:

நான், சோசலிஸ்டான தோழர் போக்டனை பொய்க் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் செலென்ஸ்சி அரசாங்கம் கைது செய்ததற்கு வன்மையான எதிர்ப்பை வெளிப்படுத்துவதோடு மேலும் வீரம்மிக்க இளமையான இந்தப் போர் எதிர்ப்பாளரின் விடுதலைக்காக ஒன்றிணையுமாறு சகல தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

உக்ரேனில் உள்ள பாசிச ஆட்சியை, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஆதரவுடன் உக்ரேனிய தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும். செலென்ஸ்கி அரசாங்கம் இந்தப் போருக்காக தொழிலாளர்களை பலி கொடுக்கிறது. அரை மில்லியன் உக்ரேனிய துருப்புக்கள், குடிமக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போரை ஆதரிக்கும் ஏகாதிபத்திய நாடுகள், பில்லியன் கணக்கான வரி செலுத்துவோரின் பணத்தை வழங்கி, இந்தப் போரின் சுமையை தங்கள் சொந்த தொழிலாளர்களின் முதுகில் சுமத்துகின்றன.

தொழிலாள வர்க்கத்தின் மீதான இந்தப் போரின் சுமை ஏகாதிபத்திய நாடுகளுக்குள் மட்டுப்படுத்தப்படவில்லை. இலங்கையில் ஒரு நுகர்வு வரி (vat tax) விரிவாக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் போர் முடிந்து நீண்ட காலம் ஆன போதும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி இன்னமும் அறவிடப்படுகிறது.

தொழிற்சாலை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில், எனக்கு அருகிலுள்ள இத்தாலிய நகரத்திற்கு மட்டுமே செல்கிறேன். அங்கே எல்லா இடங்களிலும் போலீஸார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் தொழிலாள வர்க்கத்தின் மீதான அடக்குமுறை இன்னும் மோசமாகி வருவதற்கான பல அறிகுறிகள் உள்ளன.

தோழர் போக்டனின் கைது, போருக்கு எதிரான எதிர்ப்பின் மீதான செலென்ஸ்கி  அரசாங்கத்தின் பாசிச ஒடுக்குமுறையின் நெருக்கடியான நேரத்தில் நடந்துள்ளது. போக்டன், போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட செயற்பட்டார். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ரஷ்யப் புரட்சியை வழிநடத்தி சோவியத் ஒன்றியத்தை கட்டியெழுப்பிய லெனினும் ட்ரொட்ஸ்கியும் “தொழிலாள வர்க்கம் ஏகாதிபத்தியப் போருக்கு ஒரு சதமோ, ஒரு துளி இரத்தமோ கொடுக்காதே” என்ற ஒரே மொழியைப் பேசினர்.

கொழும்பு துறைமுகத் தொழிலாளி சாலித:

நான், ரஷ்யா, உக்ரேன் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) அமைப்பின் 25 வயதுள்ள தலைவரான தோழர் போக்டன் சிரோட்யுக்கை கைது செய்தமையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சாலித

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அடிப்டை கொள்கைகளுக்கு இணங்க செயல்ப்பட்ட போக்டன், உக்ரேனிலும் ரஷ்யாவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஒற்றுமையாக அணிதிரட்ட போராடினார். அவரின் கைது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சிகளுக்கு எதிரான தாக்குதல் என்பதில் சந்தேகமில்லை. நான், தோழர் பொக்டானுக்கு எதிராக செலென்ஸ்கி ஆட்சி முன்வைத்த போலிக் குற்றப்பத்திரிகையை கண்டிக்கிறேன்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அந்த பேரழிவைத் தடுக்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் சர்வதேச முயற்சியில் ஈடுபட்டுள்ளது. போக்டன், மூன்றாம் உலகப் போருக்கு எதிராக சர்வதேச தொழிலா வர்க்கத்தின் ஆதரவுடன் ரஷ்ய, உக்ரேனிய தொழிலாளர்களின் ஐக்கியத்துக்காக அழைப்புவிடுத்துள்ளார். தோழர் போக்டனின் முயற்சிகளுக்கு எனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தைப் போலவே, இலங்கைத் தொழிலாளர்களும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் உள்ள துறைமுகத் தொழிலாளர்களும், அதே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர், மேலும் இந்த அநீதிகளுக்கு எதிராக போராடவும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் முன்மொழியப்பட்ட சாமானிய தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் கீழ் ஒன்றுபடவும் ஒவ்வொரு தொழிற்சாலை, வேலைத் தளம், கல்வி நிறுவனம் மற்றும் உள்ளூர் பகுதிகளில் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்கள் கட்டியெழுப்ப வேண்டும் என நான் நம்புகிறேன்.

இரத்மலானை புகையிரத பணிமனை தொழிலாளியான சஜித்.

உக்ரேன் சோசலிச இயக்கத்தின் தலைவர் தோழர் போக்டன் சிரோடியுக், செலென்ஸ்கி ஆட்சியால் கைது செய்யப்பட்டு தடுத்துவைத்திருப்பதை நான் எதிரக்கிறேன். அவரை உடனடியாக விடுவித்து அவரது ஜனநாயக உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று கோருகிறேன். அவர் விரும்பும் அரசியலில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும்.

சஜித்

உக்ரேன், ரஷ்யா இரு நாடுகளிலும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இந்த இரத்தக்களரிப் போரின் போது இலட்சக் கணக்கானவர்கள் மரணித்துள்ளதோடு தமது வீடுகளையும் இழந்துள்ளனர். சமுதாயத்திற்கு ஏற்பட்ட சேதம் வரம்பற்றது. போக்டனை நாம் பாதுகாக்க வேண்டும், ஏனெனில் அவர் இந்த பேரழிவுக்கு ஒரு எதிர்ப்பாளராகவும் மக்களின் பாதுகாவலராகவும் போராடுகிறார்.

நீடித்த ஏகாதிபத்தியப் போரின் விளைவாக, உலகம் முழுவதிலும் குறிப்பாக, அமெரிக்காவிலும் ஒரு சக்திவாய்ந்த போர் எதிர்ப்பு உணர்வு எழுந்துள்ளது. உலக சோசலிச வலைத் தளம் விளக்கியது போல, வளர்ந்துவரும் இந்த எதிர்ப்பு பற்றி ஏகாதிபத்திய சக்திகள் மிகவும் பதட்டமாக உள்ளன. போக்டனின் கைது ரஷ்யாவிலும் உக்ரேனிலும் போர்-எதிர்ப்பு இயக்கத்தை முன்கூட்டியே அழிக்கும் முயற்சியாகவே நான் பார்க்கிறேன்.

உலகில் உள்ள அனைத்தும் தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாங்கள் ஒரு சர்வதேச வர்க்கம், உலகின் மிக சக்திவாய்ந்த வர்க்கம், அத்தோடு போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கி இந்த போரை நிறுத்தக்கூடிய ஒரே வர்க்கம். போக்டனுக்கும், தைரியமான பத்திரிகையாளர் ஜூலியன் அசான்ஜிற்கும் சுதந்திரம் என்பது அத்தகைய இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே பாதுகாக்கப்பட முடியும்.

இரத்மலானை புகையிரத வேலைத்தளத்தில் இருந்து ஹர்ஷ:

கடந்த இரண்டு ஆண்டுகளில் உக்ரேனில் நடந்த இந்த போரினால் ஏற்பட்ட உயிர் இழப்பும் சொத்துக்ள் அழிவும் பாரியளவானது. எங்கு நடந்தாலும் போர் கொடூரமானது. இந்த கொடூரத்தை எதிர்த்த தோழர் போக்டன் கைது செய்யப்பட்டதை நான் கண்டிக்கிறேன், சிறையில் இருந்து உடனடியாகவும் நிபந்தனையற்றும் விடுவிக்க கோருகிறேன்.

உக்ரேனிலும் ரஷ்யாவிலும் உள்ள ஆளும் உயரடுக்கு, இரு நாடுகளிலும் உள்ள பெரும்பான்மையான மக்கள் இந்த இரத்தக்களரிப் போரை கடுமையாக எதிர்க்கிறார்கள் என்பதையும், இந்த எதிர்ப்பு ஒரு முக்கிய புள்ளியை நோக்கி வருவதையும் அவர்கள் முழுமையாக அறிவார்கள். பாசிச செலென்ஸ்கி ஆட்சியின் ஜனநாயக விரோத தாக்குதல்கள் தீவிரமடைவது இந்த நிலைமையுடன் நேரடியாக பிணைக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேல் மேற்கொள்ளும் இன அழிப்புக்கு எதிராக ஆயரக்கணக்கான மாணவர்களின் போராட்டங்களும் அவர்களைப் போலிஸ் தாக்குவதையும் ஊடகங்கள் வாயிலாக காண்கிறோம். இந்த நிலைமைகள் ஏற்கனவே போரைத் தொடங்கிய நாடுகளுக்கும் பரவும் என ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர். இந்த சூழ்நிலையை முன்கூட்டி தடுக்கவே பொக்டான் கைது செய்யப்பட்டிருக்கலாம்.

கட்சிகளும் அமைப்புகளும் தங்கள் சொந்த நாடுகளின் ஆட்சியாளர்களிடம் முறையிடுகின்றன, ஆனால் WSWS சுட்டிக்காட்டியுள்ளபடி, அனைத்தையும் உற்பத்தி செய்யும் தொழிலாள வர்க்கத்தால் மாத்திரமே இந்தப் போரை நிறுத்த முடியும். இது மிகவும் சக்திவாய்ந்த வர்க்கம் ஆகும். ஆகையால், தொழிலாளர்கள் முன் வந்தால் இந்தப் போரை நிறுத்தவும் போக்டனை விடுதலை செய்யவும் முடியும். இந்த பிரச்சாரத்தின் மூலமே உலகப் போருக்கு எதிராக உலகின் தொழிலாளர்கள் மற்றும் வெகுஜனங்களை ஒன்றிணைக்க வாய்ப்புகள் உள்ளன.

எஸ். சிவசீலன்- யாழ்பாணம் வடக்கில் உள்ள ஒரு மீனவர்:

இலங்கையில் நடந்த ஏறக்குறைய மூன்று தசாப்த கால தமிழர்-விரோத இனவாத போரினால் யாழ்ப்பாணம் அழிக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரிவினைவாத புலிகளின் [Liberation Tigers of Tamil Eelam] இராணுவத் தோல்வியுடன் முடிவடைந்த இந்தப் போரில் குறைந்தது 100,000 பேர், பெரும்பாலும் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

எஸ். சிவசீலன்

தோழர் பொக்டான் கைது செய்யப்பட்டதை நான் எதிர்க்கிறேன், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோருகிறேன். உக்ரேனில் தற்போதுள்ள இராணுவச் சட்டத்தின் கீழ் அவர் சித்திரவதை செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. நாம் 26 ஆண்டுகால உள்நாட்டு போருக்கு உள்ளானதோடு போரின் கொடூரங்களுக்கு முகங்கொடுத்தோம். உள்நாட்டுப் போரின் போது இலங்கை ஆட்சியாளர்கள் அதிருப்தியாளர்களையும் எதிர்ப்பாளர்களையும் கைது செய்து நீண்டகாலம் தடுத்துவ வைத்திருந்தனர். அவர்களில் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

நாங்கள் தோழர் பொக்டானின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும். தொழிலாளர்கள், இளைஞர்கள், ஜனநாய உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அனைவரையும், இந்தப் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்வும், அவரின் கைதை கண்டிக்கவும், உக்ரேனில் உள்ள மோசமான பாசிச ஆட்சியில் இருந்து அவரை விடுவிக்கக் கோருமாறும் கேட்டுக்கொள்கிறேன்.