முன்னோக்கு

பைடெனின் பத்திரிகையாளர் சந்திப்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் வெறியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூலை 11, 2024 அன்று வாஷிங்டனில் நேட்டோ உச்சிமாநாட்டின் இறுதி நாளில் ஜனாதிபதி ஜோ பைடென் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசுகிறார். [AP Photo/Jacquelyn Martin]

வியாழக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனின் பத்திரிகையாளர் சந்திப்பைத் தொடர்ந்து வந்த ஊடக வர்ணனைகள், 2024 தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக தனது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள அவர் தன்னை நிரூபித்திருக்கிறாரா இல்லையா என்பது குறித்த விவாதத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.

எவ்வாறாயினும், பைடெனின் முதுமை நிலையை விட மிக முக்கியமானது, அவரது கொள்கைகள் மற்றும் அவரது அறிக்கைகளில் வெளிப்படும் அரசியல் பைத்தியக்காரத்தனமாகும். ஆனால், இது பெருநிறுவன ஊடகங்களுடன் சேர்ந்து ஒட்டுமொத்த ஆளும் வர்க்க அரசியல் ஸ்தாபகமும் பகிர்ந்து கொள்ளும் ஒரு பைத்தியக்காரத்தனமாகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய போரின் முன்னணியில் உள்ள இராணுவ கூட்டணியான நேட்டோ பதாகையின் கீழ், எட்டு நிமிட போர் வெறி ஆவேசத்துடன் பைடென் அந்த செய்தியாளர் சந்திப்பைத் தொடங்கினார். வாஷிங்டனில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டை ஒரு மாபெரும் வெற்றியாக அறிவித்த அவர், அதற்கு தலைமை தாங்கியதாக தன்னையே பெருமைப்படுத்திக் கொண்டார்.

ஜேர்மனியை தளமாகக் கொண்ட ஒரு நேட்டோ கட்டளையகத்தை ஸ்தாபித்ததன் மூலமாகவும், கியேவில் நேட்டோ அதிகாரிகளை நிறுத்தியதன் மூலமாகவும், மாஸ்கோ உட்பட ரஷ்யாவின் ஆழமான பிரதான நகரங்களைத் தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளை ஜேர்மனியில் நிலைநிறுத்த உடன்பட்டதன் மூலமாக, நேட்டோ ரஷ்யாவுடன் நேரடியாக போரில் ஈடுபடவில்லை என்ற பாசாங்குத்தனத்தை அந்த உச்சிமாநாடு நடைமுறையளவில் முடிவுக்குக் கொண்டு வந்தது.

புட்டினை பற்றி குறிப்பிட்ட பைடென், “மீண்டுமொருமுறை ஒரு கொலைகார பைத்தியக்காரன் அணிவகுத்து வந்தான்.” இந்த “அரக்கனை” எதிர்கொள்வதற்கான ஒரே தீர்வு பாரிய இராணுவ விரிவாக்கம் மட்டுமே என்று அறிவித்தார். உண்மையில், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு நேட்டோவின் இடைவிடாத விரிவாக்கத்தின் மூலமாக தூண்டிவிடப்பட்டது. பைடெனே பெருமையடித்துக் கொண்டதைப் போல, இராணுவ கூட்டணியின் அங்கத்துவத்தை அதிகரிக்கவும் மற்றும் அதை ரஷ்யாவின் நுழைவாயிலுக்கு இன்னும் கூடுதலாகக் கொண்டு வரவும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில், ரஷ்ய பிராந்தியத்தைத் தாக்குவதற்கு உக்ரேன் ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்கு விடையிறுப்பாக, பைடென், “செலென்ஸ்கி அமெரிக்க ஆயுதங்களை அண்மையில் பயன்படுத்த நாங்கள் அனுமதித்துள்ளோம்,” ஆனால் அவற்றைக் கொண்டு கிரெம்ளினைத் தாக்குவது உக்ரேனுக்கு “அர்த்தமற்றதாக” இருக்கும் என்று அறிவித்தார்.

மாஸ்கோவைத் தாக்க நீண்டதூர ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான ஒரு முடிவானது, அணு ஆயுதப் போரைத் தூண்டும் என்பதல்ல, பில்லியன் கணக்கானவர்கள் இல்லையென்றாலும் மில்லியன் கணக்கானவர்களின் உயிரிழப்பையும் தூண்டிவிடும் என்பதல்ல, மாறாக இந்த நேரத்தில் அது “அர்த்தமற்றது”, ஏனெனில் அது அது “அதனிடம் இருக்கும் ஆயுதங்களின் சிறந்த உபயோகமாக இருக்காது” என்று அவர் குறிப்பிட்டார். ஒரு அணுவாயுத பேரழிவாக போர் தீவிரமடைவதைத் தடுக்க பைடென் என்ன செய்கிறார் என்று கேட்பதன் மூலம் ஊடகங்களில் எவரும் பின்தொடர கவலைப்படவில்லை.

உண்மையில், இந்த மோதலில் நேட்டோ துருப்புகளை நேரடியாக நிலைநிறுத்துவது உட்பட, அந்த உச்சிமாநாட்டில் மற்ற நேட்டோ சக்திகளால் வழிமொழியப்பட்ட அமெரிக்காவின் ஒட்டுமொத்த கொள்கையும், இன்னும் கூடுதலாக போர் விரிவாக்கத்தை நியாயப்படுத்துவதுக்கு பயன்படுத்தக்கூடிய புட்டின் அரசாங்கத்திடம் இருந்து ஒரு விடையிறுப்பைத் தூண்டும் நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது.

மற்றொரு புள்ளியில், பைடென் வாய்வீச்சுடன் அறிவித்தார், “ஒவ்வொரு அமெரிக்கரும் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும்: நேட்டோவுடன் உலகம் பாதுகாப்பானதா? நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? உங்க குடும்பம் பாதுகாப்பாக இருக்கிறதா?” இந்த கேள்விகளுக்கான பதில் தெளிவாக “இல்லை” என்பதாகும். பைடென் நிர்வாகம் மற்றும் நேட்டோ சக்திகளின் ஒட்டுமொத்த கொள்கையும் மனிதகுலத்தை விளிம்பிற்கு இட்டுச் செல்கின்றன. ஆனால் தீவிரமடைந்து வரும் உலகளாவிய போர் “அமெரிக்க மக்களின்” நலன்களுக்கானது என்ற வலியுறுத்தலை பத்திரிகைகளில் எவரும் கேள்வி எழுப்பவில்லை.

பைடென் முதுமையடைந்தவராக இருந்தாலும், மாநாட்டில் அவரைக் கேள்வி கேட்பவர்கள் அறியாமை மற்றும் முட்டாள்தனம் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ரஷ்யாவுக்கு எதிரான போர் தீவிரப்பாட்டின் பின்விளைவுகளைக் காட்டிலும் மில்லியனர் நடிகர் ஜோர்ஜ் குளூனி மற்றும் ஜனநாயகக் கட்சியின் நன்கொடையாளர்களின் சமீபத்திய அறிவிப்புகளைக் குறித்தே அதிக கவலை கொண்டிருந்தனர்.

காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலை குறித்து பைடெனோ அல்லது செய்தி ஊடகமோ ஏறக்குறைய எதுவும் கூறவில்லை. அமெரிக்க/இஸ்ரேலிய போரில் காஸா மக்களின் இறப்பு எண்ணிக்கை 186,000 அல்லது அதற்கும் அதிகமாக, அதாவது, போருக்கு முந்தைய மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 8 சதவீதமாக கணக்கிடும் தி லான்செட் இன் சமீபத்திய கட்டுரை குறித்து அங்கே எந்த குறிப்பும் இல்லை. இருப்பினும், கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பைடென், இஸ்ரேலுக்கு தனது முழு ஆதரவை மீண்டும் வலியுறுத்தியதோடு, “நான் இஸ்ரேலுக்காக 2,000 பவுண்டு குண்டுகளை உருவாக்கவில்லை” என்ற பொய்யான அறிக்கையை வெளியிட்டார். “பெரும் மனித சேதத்தை ஏற்படுத்தாமல் காஸாவிலோ அல்லது மக்கள் வசிக்கும் எந்தவொரு பகுதியிலோ அவற்றைப் பயன்படுத்த முடியாது” என்றார்.

But just two weeks ago Reuters published an article reporting that Biden has sent Israel more than 10,000 of the city block-destroying 2,000 pound bombs since October.

ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ராய்ட்டர்ஸ் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அக்டோபர் முதல் பைடென் நகரக் கட்டிடத் தொகுதிகளை அழிப்பதுக்கு 10,000 க்கும் மேற்பட்ட 2,000 பவுண்டு குண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளார்.

“நான்காவது தூண்” என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட பத்திரிகைகள், உளவுத்துறை இயந்திரத்திற்குள் முழுமையாக ஒருங்கிணைந்துள்ளன. உக்ரேன் போரை பைடென் முன்வைத்ததற்கும், அதை “வெல்ல” வேண்டியதன் தேவைக்கும் எந்த சவாலும் இல்லை.

அதற்கு பதிலாக, நியூ யோர்க் டைம்ஸின் தலைமை வெளியுறவு விவகாரங்களுக்கான வருணனையாளர் டேவிட் சாங்கர், நேட்டோ அறிக்கையில் சீனாவுக்கு எதிராக திருப்பிவிடப்பட்ட போர்வெறி மொழியை மேற்கோளிட்டு, சீனா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான உறவுகளை “சீர்குலைக்க” நேட்டோ என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதையும், மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி பைடெனால், ஜனாதிபதி ஜின்பிங் உடனான ஒரு சந்திப்பில் “அவரின் சொந்தத் தன்மையை” தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பதையும் அறிய கோரினார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு டிரம்புக்கு எதிரான விவாத தோல்வியைத் தொடர்ந்து பைடெனுக்கு இந்த செய்தியாளர் சந்திப்பு ஒரு “உருவாக்கும் அல்லது உடைக்கும்” தருணம் என்று விவரிக்கப்பட்டது. அது முடிவடைந்த சிறிது நேரத்திலேயே, நவம்பரில் ட்ரம்பை தோற்கடிக்கக்கூடிய ஒரு ஜனநாயகக் கட்சியாளரை பிரதியீடு செய்வதற்காக, பைடெனின் வேட்புமனுவை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்து மேலும் ஐந்து பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சியினர் அறிக்கைகளை வெளியிட்டனர். இது வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி இந்த எண்ணிக்கையை 18 ஆகக் கொண்டுவந்தது, அத்துடன் பதவியில் இருக்கும் செனட்டரான வெர்மான்ட்டின் பீட்டர் வெல்ச்சும் அதில் உள்ளடங்கி இருந்தார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் நேற்று எக்ஸ் ட்விட்டரில் பிரசுரித்த ஒரு அறிக்கையில், “2024 தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக பைடெனின் தலைவிதி குறித்த விவாதங்களில் மிகவும் அதிர்ச்சியூட்டுவது என்னவென்றால், எந்தவொரு உண்மையான கொள்கை வேறுபாடுகளும் இல்லாததுதான். அனைத்து கன்னைகளும் ஒட்டுமொத்த மனிதயினத்திற்கும் பேரழிவை அச்சுறுத்தும் ஏகாதிபத்திய போரின் பாரிய விரிவாக்கதை ஆதரிக்கின்றன” என்று குறிப்பிட்டார்,

கிஷோர் மேலும் கூறியதாவது:

பைடெனைப் பாதுகாப்பதில் மிகவும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுத்துள்ள அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளின் (DSA) பிற உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து, குறிப்பாக கவனம் செலுத்தப்பட வேண்டும். காஸா இனப்படுகொலை குறித்த அவர்களின் நேர்மையற்ற மற்றும் பாசாங்குத்தனமான விமர்சனங்கள் என்னவாக இருந்தாலும், DSA முழுமையாக அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கைக்குப் பின்னால் உள்ளது. அது ஜனநாயகக் கட்சியின் ஒரு கன்னை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

ஜனநாயகக் கட்சி அதன் வேட்பாளரை மாற்றுவதில் முடிவடைந்தால், அது கொள்கையில் ஒரு மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதாக இருக்காது. மாறாக, பைடெனின் பத்திரிகையாளர் கூட்டத்தில் காட்டப்படும் அதீத பொறுப்பற்ற தன்மை மிகவும் திறம்பட்ட முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதாக இருக்கும்.

இது கடந்த காலத்தில் ஜனநாயகக் கட்சியை பெருமைப்படுத்தும் விடயம் அல்ல. ஆனால் 1968 தேர்தல்களுக்கு முன்பு ஜனநாயகக் கட்சிக்குள் இருந்த ஆழ்ந்த பூசல்களும் நெருக்கடியும் வியட்நாம் போரின் போக்கில் இருந்த மோதல்களுடன் பின்னிப் பிணைந்திருந்தன என்பதை நினைவுகூருவது மதிப்புடையதாகும். அத்தகைய வேறுபாடுகள் இன்று இல்லை.

முழு தேர்தல் செயல்முறையும் தன்னலக்குழு கோட்பாட்டால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. பைடெனின் தனிப்பட்ட தலைவிதி உட்பட அனைத்து முடிவுகளும், விரல்விட்டு எண்ணக்கூடிய பில்லியனர் நன்கொடையாளர்களால் எடுக்கப்படுகின்றன. அத்துடன் இராணுவ-உளவுத்துறை-அரசு இயந்திரத்தில் மேலாதிக்கம் செலுத்தும் பிரமுகர்களும் உள்ளனர். மக்களின் பரந்த பெரும்பான்மையினரின், அதாவது தொழிலாள வர்க்கத்தின் நலன்கள் முற்றிலும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த அரசியல் சூழ்நிலைக்குள்ளாக, ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக, தொழிலாள வர்க்கம் அதன் சுயாதீனமான நலன்களை வெளிப்படுத்த வேண்டும்.

உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் ஜூலை 24 அன்று வாஷிங்டன் டி.சி.யில் இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெதன்யாகு காங்கிரஸின் ஒரு கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் சந்தர்ப்பத்தில், ஒரு பேரணியையும் கூட்டத்தையும் ஏற்பாடு செய்துள்ளன. காஸா இனப்படுகொலை மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு வெகுஜன இயக்கத்திற்கான அரசியல் நோக்குநிலை மற்றும் மூலோபாயத்தை முன்னெடுப்பதே இந்தப் பேரணியின் நோக்கமாகும்.

அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் பேரணியில் கலந்து கொள்வதற்கான திட்டங்களை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading