இலங்கையின் நீண்டகால ட்ரொஸ்கிசவாதிகள் காலமாகிவிட்டனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கட்சியின் நீண்டகாலத் தோழர்கள் இருவர் கடந்த சனிக்கிழமை காலமாகியதை, சோசலிச சமத்துவக் கட்சி மிகவும் சோகத்துடன் அறிவிக்கிறது. இலங்கைத் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில், ட்ரொட்ஸ்கிச முன்னோக்கிற்காக, அவர்கள் நடத்திய பல தசாப்தகால இடைவிடாத போராட்டத்திற்கு நாங்கள் புகழஞ்சலி செலுத்துகிறோம். அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

லீலா பாலசூரிய

தோழி லீலா பாலசூரிய, டிசம்பர் 13 சனிக்கிழமை காலை சுயநினைவை இழந்தபின்னர் காலமானார். அவர், உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட திடீர் சிக்கல் காரணமாக கீழே விழுந்து, மூன்று மாதங்களாக படுக்கையில் இருந்தார். கொழும்பிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தொம்பேவைச் சேர்ந்த அவரது இறுதிச் சடங்கு நேற்று இடம்பெற்றது.

1974 ஆம் ஆண்டு சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் (பு.க.க.) இணைந்து கொண்ட லீலா, கடந்த ஆறு மாதங்களாக தனக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக வேலைகளில் ஈடுபடுவது தடைப்படும் வரை, கட்சிப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். ஒரு அரசு ஊழியரான அவர், 1980 பொது வேலைநிறுத்தத்தை நசுக்க வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கம் 100,000 அரச ஊழியர்களை வேலை நீக்கம் செய்தபோது தனது தொழிலை இழந்தார்.

லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க.) மற்றும் ஸ்ராலினிச இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) தலைமையிலான 1970-1977 கூட்டணி அரசாங்கத்திற்கு எதிரான பு.க.க.யின் அரசியல் போராட்டத்தில் அவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிஸ்டுகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட அகில இலங்கை அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் அதிகாரத்துவத் தலைமையை எதிர்ப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

ஆர்.எம்.குணதிலக

தோழர் ஆர்.எம். குணதிலக, சிறிது காலம் நாள்பட்ட நோய்களால் அவதிப்பட்டு வந்தார். அவர், சனிக்கிழமை காலமானார். இலங்கையில் வாழும் தொழிலாளர்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளும் கடினமான நிலைமைகளுக்கு அவரும் முகம் கொடுத்தார் என்பதில் சந்தேகமில்லை.  

கட்சி உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 1970 இல் குணதிலக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் சேர்ந்தார். ஒரு இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியராக இருந்த அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக எதிர்ப்பைத் அணிதிரட்ட முயன்றதற்காக லங்கா சமசமாஜக் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர்களால் தூண்டிவிடப்பட்ட பழிவாங்கல்களை எதிர்கொண்டார். குணதிலக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் / சோசலிச சமத்துவக் கட்சியின் நீண்டகால மத்திய குழு உறுப்பினராக இருந்தார்.

ஐ.தே.க. அரசாங்கத்தால், 1980 ஜூலை பொது வேலைநிறுத்தம் ஒடுக்கப்பட்டபோது வேலைநீக்கம் செய்யப்பட்ட 100,000 அரச ஊழியர்களில் குணதிலக்கவும் ஒருவர் ஆவார். அவர், 14 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.

அவர் ஒரு பிரதான தேயிலைத் பெருந்தோட்ட மாவட்டமான பதுளையில் உள்ள ஹாலி-எலவில் வசித்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மீண்டும் மீண்டும் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, அவரால் பணியை தொடர முடியாத நிலை ஏற்படும் வரையும், அவர் கட்சி அரசியல் பணிகளில் தீவிரமாக இருந்தார்.

Loading