இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (IYSSE), தற்போதைய மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தால், தங்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் தாக்குதல்களுக்கு எதிராகப் போராட்டங்களில் நுழையும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள், 2022 ஆம் ஆண்டு வெகுஜன எழுச்சியிலிருந்து பெறவேண்டிய அரசியல் படிப்பினைகள் பற்றி கலந்துரையாடுவதற்காக, ஜூலை 26, ஞாயிற்றுக்கிழமை, மாலை 7:00 மணிக்கு பகிரங்க நிகழ்நிலை விரிவுரை ஒன்றை நடத்தவுள்ளன.
2022 ஆண்டு எழுச்சியானது, கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரினாலும் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்திய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட கொடூரமான மற்றும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக எழுந்தது.
இலங்கையில் நடந்த இந்த வெகுஜன இயக்கம், உலகளாவிய தொழிலாள வர்க்க எழுச்சியின் மிக வீரியமான வெளிப்பாடாகும். இது, ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினராலும் தூண்டிவிடப்பட்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனவாதப் பிரிவுகளைக் கடந்து, இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளை ஒன்றிணைத்தது. தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சமூக சக்தியை வெளிக்காட்டும் வகையில் இந்த எழுச்சி, ஜூலை 9 அன்று, ராஜபக்ஷவை நாட்டை விட்டு வெளியேறவும், ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்யவும் நிர்ப்பந்தித்தது. அவரது அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.
எவ்வாறாயினும், இந்த வெகுஜன இயக்கம், அதில் பங்கேற்ற மக்களின் அபிலாஷைகளை அடையத் தவறியது ஏன், என்பதே தீர்க்கமான கேள்வியாகும். முடிவு முன்னரே தீர்மானிக்கப்படவில்லை. இரண்டு எதிரெதிர் அரசியல் முன்னோக்குகள் எழுச்சி முழுவதும் ஒன்றையொன்று எதிர்கொண்டன.
அப்போது, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் ஜே.வி.பி./தே.ம.ச.யும், முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட பல்வேறு போலி இடது அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் உதவியுடன், ஒரு “இடைக்கால அரசாங்கத்தை” அமைக்குமாறு அழைப்பு விடுத்து, வெகுஜன இயக்கத்தைத் தடம் புரளச் செய்யவும், அதனை முதலாளித்துவ பாராளுமன்றக் கட்டமைப்புடன் கட்டிப்போடவும் செயல்பட்டன.
இந்த சக்திகள் அனைத்திற்கும் நேரெதிராக, சோசலிச சமத்துவக் கட்சியானது தனது புரட்சிகர சோசலிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்திற்காகப் போராடத் தலையீடு செய்தது. ஒவ்வொரு தொழிற்சாலை, வேலைத்தளம், குடியிருப்புப் பகுதி மற்றும் கிராமப்புறத்திலும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை அமைக்க அது அழைப்பு விடுத்தது.
ஒரு மூலோபாய முன்முயற்சியாக, 2022 ஜூலை 20 அன்று, அந்த நடவடிக்கை குழுக்களிலிருந்து ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாடு ஒன்றை கட்டியெழுப்புவதற்கான ஒரு பிரச்சாரத்தை சோசலிச சமத்துவக் கட்சி தொடங்கியது. இந்த மாநாடானது சோசலிச மற்றும் அனைத்துலகவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் நோக்குடன், கிராமப்புற ஏழைகளின் ஆதரவைத் திரட்டிக்கொண்ட, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்திற்கான போராட்டத்திற்குத் தலைமை தாங்கும். இது, இடைக்கால அரசாங்கம் என்ற முன்னோக்கு மூலம் ஏற்பட்ட அரசியல் முட்டுக்கட்டைக்கு ஒரு மாற்றீடாக அமைந்தது.
தொழிலாள வர்க்கத்திற்கு தனக்கென ஒரு சுயாதீனமான புரட்சிகரத் தலைமையும், வேலைத்திட்டமும் அவசியம் என்பதே 2022 இன் பிரதான படிப்பினையாகும். ராஜபக்ஷவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, பாராளுமன்றக் கட்டமைப்பிற்குள் அந்த வெகுஜன இயக்கம் தடம் புரட்டப்பட்டமையானது முற்றிலும் மதிப்பிழந்த, அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவை ஆளும் வர்க்கம் ஜனாதிபதியாக நியமிக்க வழிவகுத்தது. அவர் கிளர்ச்சியை அடக்க முற்பட்டதோடு, சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட கொடூரமான சிக்கன நடவடிக்கைகளையும் செயல்படுத்தத் தொடங்கினார்.
விக்கிரமசிங்க அரசாங்கம் உழைக்கும் மக்களிடமிருந்து பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டபோது, ஆளும் வர்க்கம் ஜே.வி.பி./தே.ம.ச.யை நாடிய நிலையில், இலங்கையின் பாரம்பரிய கட்சிகள் மீதான வெகுஜன அதிருப்தியை சுரண்டிக்கொண்டு, 2024 இன் பிற்பகுதியில் நடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் அது ஆட்சிக்கு வந்தது.
இன்று, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகவின் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், விக்கிரமசிங்க ஒப்புக்கொண்ட, உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை சீரழித்து வரும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தைத் தொடர்ந்தும் அமுல்படுத்தி வருகிறது. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் போராட்டங்களை அச்சுறுத்துவதற்கும் அடக்குவதற்கும் அது கொடூரமான பொலிஸ்-அரசு வழிமுறைகளைப் பயன்படுத்தியுள்ளது. அதே நேரம், இந்த அரசாங்கம் அமெரிக்க தலைமையிலான சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்புக்களில் கொழும்பை நெருக்கமாக ஒருங்கிணைத்து வருகிறது.
2022 எழுச்சியின் வரலாற்றை மாற்றி எழுதுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகள், குறிப்பாக ராஜபக்ஷவின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும் அதன் கூட்டாளிகளும், இந்த வெகுஜன இயக்கத்தை, ராஜபக்ஷ அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக அமெரிக்க ஆதரவுடன் தீட்டப்பட்ட ஒரு சதி என்று முத்திரை குத்துகின்றனர். இலட்சக்கணக்கான மக்களைப் போராட்டத்திற்குத் தள்ளிய ஆழமான சமூக நெருக்கடியை மூடி மறைப்பதும், அரசின் அடக்குமுறை அதிகாரங்களை வலுப்படுத்துவதை நியாயப்படுத்துவதுமே அவர்களின் நோக்கமாகும்.
இதேசமயம், ஆளும் வர்க்கம் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் மாத்திரமே இந்த எழுச்சி தோற்கடிக்கப்பட்டது என்று முன்னிலை சோசலிசக் கட்சி கூறுகிறது. இந்தக் கூற்று அதன் சொந்த அரசியல் பொறுப்பை மூடி மறைப்பதாகும். இடைக்கால முதலாளித்துவ அரசாங்கம் குறித்த மாயைகளை ஊக்குவிப்பதன் மூலமும், சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதை எதிர்ப்பதன் மூலமும், இந்த இயக்கத்தைத் திசைதிருப்பி செயலிழக்கச் செய்வதில் முன்னிலை சோசலிசக் கட்சி ஒரு முக்கியப் பங்காற்றியது.
2022 ஆம் ஆண்டின் படிப்பினைகள் இலங்கைக்கு மாத்திரம் பொருத்தமானது அல்ல. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மோசமடைந்து வரும் சிக்கன நடவடிக்கைகள், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், முன்னெப்போதும் இல்லாத சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் வளர்ந்து வரும் உலகப் போரின் ஒரு முனையாக ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போர் தீவிரமடைவதையும் எதிர்கொள்கின்றனர். இலங்கைத் தொழிலாள வர்க்கத்தின் அனுபவங்கள், சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு இன்றியமையாத மூலோபாய படிப்பினைகளைக் கொண்டுள்ளன.
இந்த நிகழ்நிலை பகிரங்க விரிவுரையின் நோக்கம், வரவிருக்கும் போராட்டங்களுக்குத் தேவையான அரசியல் படிப்பினைகளை வரைவதும், புரட்சிகர முன்னோக்கை கலந்துரையாடுவதுமே ஆகும். முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனத்திற்கு ஒரு முடிவைக் காண விரும்பும் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள், இல்லத்தரசிகள் மற்றும் அனைவரையும் இந்த முக்கிய நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு சோசலிச சமத்துவக் கட்சியும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் கேட்டுக் கொள்கின்றன.
திகதி மற்றும் நேரம்: ஜூலை 26, ஞாயிறு, மாலை 7 மணிக்கு
சூமில் நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இங்கே பதிவு செய்யவும்.
மேலும் படிக்க
- இலங்கையில் 2022 மாபெரும் எழுச்சிக்குப் பின் நான்கு ஆண்டுகள்: அரசியல் படிப்பினைகள்
- இலங்கை: பாராளுமன்ற உறுப்பினர் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேர் மேல்முறையீடு செய்யத் தயாராகின்றனர்
- இலங்கை: 2022 எழுச்சியின் மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கொன்றதற்காக 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது
- உண்மையான சுதந்திரமா அல்லது போலிச் சுதந்திரமா?
