இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
போக்டன் சிரோட்டியுக்கை உடனடியாக விடுதலை செய்யக் கோரும் சர்வதேசப் பிரச்சாரத்திற்கு இலங்கையின் தொழிலாளர்களும் மாணவர்களும் ஆதரவுக் குரல்களை இணைத்துள்ளனர். 27 வயதான உக்ரேனிய ட்ரொட்ஸ்கிசவாதியும், போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் முன்னணி உறுப்பினருமான அவர், 2024 ஏப்ரலில் கைது செய்யப்பட்டார். “இராணுவச் சட்டத்தின் கீழ் உயர் தேசத்துரோகம்” என்ற குற்றச்சாட்டின் பேரில், 2026 ஆகஸ்ட் 10 அன்று அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
உளவு நடவடிக்கை, நாசவேலை அல்லது ரஷ்ய இராணுவத்துடன் ஒத்துழைத்தமை தொடர்பாக அவருக்கு எதிராக எந்தவொரு ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை. ரஷ்யாவின் உக்ரேன் மீதான படையெடுப்பையும், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரையும் எதிர்த்து, செலென்ஸ்கி ஆட்சி நாஜி ஒத்துழைப்பாளர்களை மீளக் கௌரவிப்பதை அம்பலப்படுத்தி, போருக்கு எதிராக ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களின் ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்து உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட அரசியல் கட்டுரைகளை எழுதியதற்காகவே அவர் குற்றவாளியாக காணப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
போக்டனை விடுதலை செய்வதற்கான பிரச்சாரம் பரந்த ஆதரவைப் பெற்று வருகிறது. அவரது விடுதலைக்கான மனுவில் தற்போது 47 நாடுகளைச் சேர்ந்த 6,300 பேர் கையெழுத்திட்டுள்ளனர். சர்வதேச அளவில் வரலாற்றாசிரியர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த போலிக் குற்றச்சாட்டின் அடிப்படையிலான தீர்ப்பைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கைகளை உலக சோசலிச வலைத் தளம் பிரசுரித்துள்ளது.
இதற்கிடையில், நியூயோர்க் டைம்ஸ் போன்ற ஏகாதிபத்திய சார்பு ஊடக நிறுவனங்கள், இந்த ஜனநாயக விரோத குற்றத் தீர்ப்பு மற்றும் தண்டனை குறித்து செய்தி வெளியிட மறுத்துள்ளன.
ரத்மலானை தொழிற்சாலையைச் சேர்ந்த புகையிரத தொழிலாளியான ரொஷான், போக்டனை அதிகாரிகள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரினார். உக்ரேனில் நடைபெறும் போர் ஏகாதிபத்திய புவிசார் அரசியல் நலன்களுக்காகவும் வளங்களைக் கைப்பற்றுவதற்காகவும் நடத்தப்படுகிறது என்றும், அதன் விளைவாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களையும் சொத்துக்களையும் இழந்து வருவதாகவும் அவர் கூறினார்.
“இந்த அழிவுகரமான போர் எதிர்க்கப்பட வேண்டும். போருக்கு எதிராக நிற்பது எவ்வாறு ஒரு குற்றமாகும்? போரை உருவாக்கி நடத்தி வருபவர்களே உண்மையான குற்றவாளிகள். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
போரை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொய்கள் அம்பலப்படுத்தப்பட்டு வருவதாகவும், உண்மை அம்பலத்துக்கு வந்து கொண்டிருப்பதாகவும் ரொஷான் கூறினார். “இந்தப் பிரச்சினைகள் மேலும் மேலும் வெளிப்படையாகி, அவர்களுக்கு ஒரு தடையாக மாறும் நிலையில், ஆட்சியாளர்கள் போருக்கு எதிரானவர்களின் குரலை ஒடுக்க முயற்சிக்கின்றனர். அதனால்தான் உக்ரேனிய அரசாங்கம் தோழர் போக்டனைத் தண்டித்துள்ளது.”
அந்தத் தொழிலாளர் தனது கருத்தை பின்வருமாறு முடித்தார்: “உக்ரேனில் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் எதுவும் இல்லை. போரைக் காரணமாகக் காட்டி, செலென்ஸ்கி பலவந்தத்தின் மூலம் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறார். செலென்ஸ்கி ஆட்சியின் கதாநாயகர்கள் ஹிட்லரின் ஒத்துழைப்பாளர்கள் என்பது தெளிவாகிறது. அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் எதிரிகள். ஹிட்லர் மார்க்சிச இலக்கியங்களை அழித்தார் என்பது எனக்குத் தெரியும். அதேபோன்று, இப்போது அவர்கள் போக்டன் சிரோட்டியுக்கின் மார்க்சிச ஆவணங்களை அழித்து வருகின்றனர். சர்வதேச தொழிலாள வர்க்கம் இதற்கு எதிராக எழுச்சி பெற வேண்டும்.”
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியான எஸ். பகலரசி கூறியதாவது: “போக்டன் சிரோட்டியுக்கின் கைது மற்றும் அவருக்கு எதிரான தீர்ப்பு ஜனநாயக விரோதமான செயல்களாகும். உலக சோசலிச வலைத் தளம் தெளிவுபடுத்தியுள்ளதைப் போல், உக்ரேனில் உள்ள அரசாங்கம் ஜனநாயக விரோதமானது. அங்கு ஒரு பாசிச குணாம்சம் கொண்ட ஆட்சி உள்ளது. இந்த ஜனநாயக விரோத தீர்ப்பை நான் எதிர்க்கிறேன். இந்தக் கைது மற்றும் தீர்ப்பு, உக்ரேனில் மட்டுமல்ல, உலகளாவிய ரீதியிலும் கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்பட்டு வருவதைக் காட்டுகின்றன. இலங்கையிலும் உண்மையான கருத்துச் சுதந்திரம் இல்லை. உண்மையைத் துணிச்சலுடன் அம்பலப்படுத்திய இளம் சோசலிஸ்டின் விடுதலைக்கான உங்கள் பிரச்சாரத்தை நான் வலுவாக ஆதரிக்கிறேன்.”
பேராதனைப் பல்கலைக்கழக விவசாயப் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவரான சாமிக பின்வரும் கருத்தை வெளியிட்டார்:
“உலக சோசலிச வலைத் தளத்தின் மூலமாகத்தான் நான் போக்டனைப் பற்றி அறிந்துகொண்டேன். அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யாவுக்கு எதிராக நடத்தி வரும் மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான போரைப் பற்றி சமூகத்திற்குக் கற்பிப்பதற்காக அவர் எழுதியிருப்பதை நான் பாராட்டுகிறேன். போர்கள் அப்பாவி மனித உயிர்களையும் பொருளாதார வளங்களையும் அளவிட முடியாத அளவிற்கு அழிக்கின்றன. ட்ரம்ப் ஹிட்லரைப் போல போர்களை நடத்தி வருகிறார். இந்தப் போர்கள் இப்போது எமது வாழ்க்கையையும் நேரடியாகப் பாதிக்கின்றன. ஈரானிலும் அமெரிக்காவினால் போர் நடத்தப்படுகிறது. உலக சோசலிச வலைத் தளம் கூறுவதைப் போல, மூன்றாம் உலகப் போர் உருவாகி வருகிறது. ஒரு சோசலிஸ்டாக, போக்டன் போருக்கு எதிராக நின்றமை முற்றிலும் சரியானதாகும். அழிவுகரமான போரின் கசப்பான உண்மையை எழுதுவதற்கான அவரது சுதந்திரத்தை எவரும் தடுக்க அனுமதிக்கப்படக் கூடாது.”
அதே பல்கலைக்கழகத்தின் விவசாயப் பீடத்தில் நான்காம் ஆண்டு படித்து வரும் தனுஜா, “உக்ரேன் போரின் குற்றவியல் தன்மையை அம்பலப்படுத்தியதன் மூலம் போக்டன் சரியான காரியத்தைச் செய்துள்ளார். இது ஒரு துணிச்சலான செயல், மேலும் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்” எனக் கூறினார்:
கண்டி, பேராதனையில் உள்ள பாரதி வித்தியாலயத்தில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகி வரும் சஷிக், இந்த வழக்கு தொடர்பாக உலக சோசலிச வலைத் தளம் வழங்கிய விளக்கம் “பல விடயங்களைப் புரிந்துகொள்ள எனக்கு உதவியது. இந்த நாட்டிலும் நீங்கள் உண்மையைப் பேசவோ அல்லது சரியானதைச் செய்யவோ முடியாது; அதிகாரத்தில் இருப்பவர்களின் கருத்துக்களை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போரைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால் போர் ஒரு நல்ல விடயமல்ல. அது அழிவை ஏற்படுத்துகிறது, குறிப்பாக எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு.
“போருக்கு எதிராகப் பேசியும் எழுதியும் வந்தமைக்காக போக்டனுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததன் மூலம் உக்ரேனிய அரசாங்கம் ஒரு பெரும் குற்றத்தை இழைக்கிறது. இலங்கையில் ஒரு பாடசாலை மாணவனாக, இதற்கு எனது எதிர்ப்பைத் தெரிவிப்பதுடன், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோருகிறேன்,” என அவர் மேலும் கூறினார்.
கார்ட்டூன் கலைஞரான சஜித் பண்டார கூறியதாவது: “ஒரு கலைஞராக, உக்ரேனிய சோசலிஸ்டும் போர் எதிர்ப்பு செயற்பாட்டாளருமான போக்டன் சிரோட்டியுக்கிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை நான் வன்மையாக எதிர்க்கிறேன்.
“ஒரு போருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்காகவோ, ஓர் அரசாங்கத்தை விமர்சித்ததற்காகவோ அல்லது சமூகம் தொடர்பாக மாற்று அரசியல் கருத்துக்களை முன்வைத்ததற்காகவோ ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பது, ஜனநாயக உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடர்பாக பாரதூரமான கேள்விகளை எழுப்புகிறது.
“போர் மனித உயிர்களை அழிப்பதோடு மட்டுமன்றி, சமூகத்தில் ஜனநாயக உரிமைகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளுக்கும் வழிவகுக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், போருக்கு எதிரான குரல்களை ஒடுக்குவது, போரினால் ஏற்படும் அழிவை மேலும் தீவிரப்படுத்துவதற்கு மட்டுமே சேவை செய்கிறது.
“ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாள வர்க்கங்களின் ஐக்கியத்திற்காகவும், போருக்கு எதிராகவும் நின்ற ஒரு இளைஞரே போக்டன்.
“ஒரு கலைஞர், எழுத்தாளர் அல்லது அரசியல் செயற்பாட்டாளர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்படக்கூடிய ஒரு சமூகத்தில், உண்மையான சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் குறித்து தீவிரமான கேள்விகள் எழுகிறது. இன்று மௌனமாக்கப்படும் குரல் ஒரு தனி சோசலிச செயற்பாட்டாளருடையதாக இருக்கலாம்; ஆனால் நாளை, எந்தவொரு கலைஞர், எழுத்தாளர் அல்லது சாதாரண குடிமகனும் அவரது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான உரிமை மீதான தாக்குதலாக அது மாறக்கூடும்.
“போர் மற்றும் அரச ஒடுக்குமுறைக்கு முன்னால் கலை மற்றும் சுதந்திரமான சிந்தனை மௌனமாக இருக்கக் கூடாது. போருக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது குற்றமல்ல. ஓர் அரசியல் கருத்தைக் கொண்டிருப்பது குற்றமல்ல. ஓர் அரசாங்கத்தை விமர்சிப்பது குற்றமல்ல; ஆனால் மௌனமாக இருப்பதுதான் குற்றமாகும்.”
“எனவே, போக்டன் சிரோட்டியுக்கிற்கு விதிக்கப்பட்டுள்ள 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையை உடனடியாக இரத்துச் செய்து, அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு நான் கோருகிறேன்.”
கொழும்பில் உள்ள இலங்கை சட்டக் கல்லூரியில் மாணவரான அகலங்க செனவிரத்ன, போக்டனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை “கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு பாரதூரமான தாக்குதல்” என்று வகைப்படுத்தினார்.
அவர் கூறியதாவது: “உக்ரேனிய நீதித்துறையின் கூற்றுப்படியும், அந்நாட்டின் பாசிச குணாம்சம் கொண்ட போர் வெறியர்களான ஆட்சியாளர்களின் கூற்றுப்படியும், போக்டன் ஒரு ‘உயர் தேசத்துரோகி’ மற்றும் ரஷ்ய புட்டின் ஆட்சியின் ஆதரவாளர் ஆவார். உண்மையில், அவர் போருக்கு எதிராக ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாள வர்க்கங்களின் ஐக்கியத்திற்காகப் போராடிய ஒரு சோசலிஸ்ட் ஆவார். ஏகாதிபத்திய சக்திகளின் கட்டளையின் பேரில் உக்ரேன் ரஷ்யாவுக்கு எதிராக நடத்தி வரும் போரின் உண்மையான குணாம்சத்தை தொழிலாள வர்க்கம் புரிந்துகொள்வதற்கு உதவுவதற்காக அவர் தனது அறிவாற்றல் திறன்களைப் பயன்படுத்தினார்.
“தனது கட்டுரைகள் மூலம், உக்ரேனிய மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதை போக்டன் சிரோட்டியுக் விரிவாக அம்பலப்படுத்தினார்; 2024 மே மாதத்தில் தனது உத்தியோகபூர்வ பதவிக் காலம் முடிவடைந்த போதிலும், இராணுவச் சட்டத்தின் கீழ் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதி செலென்ஸ்கியின் சர்வாதிகார ஆட்சியை அம்பலப்படுத்தினார்; நாஜி ஒத்துழைப்பாளரான ஸ்டீபன் பண்டேராவையும் OUN இன் தலைவர்களையும் மகிமைப்படுத்துவதை அம்பலப்படுத்தியதுடன் அமெரிக்க மற்றும் நேட்டோ நலன்களுக்குச் சேவை செய்வதற்காக நடத்தப்படும் போரின் பலியாட்களாக உக்ரேனிய மக்கள் பயன்படுத்தப்படுவதை வெளிப்படுத்தினார். போக்டன் உண்மையில் எதற்காகப் போராடினார் என்பதை இந்தக் கட்டுரைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. எனினும், இத்தகைய தகவல்களை அணுகுவதற்கான உரிமையை உக்ரேனிய மக்களுக்கு மறுக்கும் வகையில், உக்ரேனிய பாசிச அரசு எந்திரம் 2024 ஜூன் 6 முதல் உலக சோசலிச வலைத் தளத்தை தடை செய்துள்ளது.
“15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, போக்டன் சிரோட்டியுக்கின் சக்திவாய்ந்த எழுத்து வடிவிலான சவால் செலென்ஸ்கியின் பாசிச குணாம்சம் கொண்ட ஆட்சிக்கு ஒரு தீவிரமான அச்சுறுத்தலாக இருந்ததை எடுத்துக்காட்டுகிறது. உக்ரேனிய தொழிலாள வர்க்கத்திற்குள் வளர்ந்து வரும் போர் எதிர்ப்பு உணர்வும் எதிர்ப்பும் ஆட்சியை அச்சுறுத்தியுள்ளது.
“தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களும் முதலாளித்துவ வர்க்கம் நடத்தும் போரில் பங்கேற்பாளர்களாக மாறக்கூடாது என்று அழைப்பு விடுத்த ஒருவரை சிறையில் அடைப்பதன் மூலம், போரின் கசப்பான யதார்த்தத்தை எவராலும் ஒடுக்கிவிட முடியாது. உண்மையான பிரச்சினை முதலாளித்துவ அமைப்புமுறையே என்றும், போரை முடிவுக்குக் கொண்டுவர முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தக் கசப்பான யதார்த்தத்தை எதிர்கொள்ளும் நிலையில், முதலாளித்துவ ஆளும் வர்க்கம் வளர்ந்து வரும் எதிர்ப்பை இரக்கமின்றி ஒடுக்குவதற்கு அவநம்பிக்கையுடன் முயன்று வருகிறது.
“சிறையில் கழிக்கும் ஒவ்வொரு நாளும் போக்டனின் உயிருக்கு ஆபத்தாகும். அவரது விடுதலைக்கான போராட்டம் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
“இது கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது உட்பட, இது ஒரு பரந்த சர்வதேசப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். ஏனைய நாடுகளிலுள்ள முதலாளித்துவ அரசாங்கங்களும் போரைக் கண்டிப்பவர்களை ஒடுக்குவதற்காக ஏகாதிபத்திய ஆட்சிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. 2024 நவம்பரில் ஆட்சிக்கு வந்த பின்னர், இலங்கையின் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்த இரண்டு இளைஞர்களை கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தது.
“போக்டன் சிரோட்டியுக்கிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள எதேச்சதிகாரமான சிறைத்தண்டனையை உடனடியாக விலக்கிக்கொள்வதுடன், அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று நான் உறுதியாகக் கோருகிறேன். உக்ரேனில் உலக சோசலிச வலைத் தளத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையும் நீக்கப்பட வேண்டும். சிரோட்டியுக்கின் விடுதலைக்காக உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுத்து வரும் சர்வதேசப் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன்.”
மேலும் படிக்க
- உக்ரேனிய அரசியல் கைதி போக்டன் சிரோடியுக்கிற்கு வளர்ந்துவரும் ஆதரவுக்கு மத்தியில், நியூயோர்க் டைம்ஸ் தனது குற்றவுணர்வுமிக்க மௌனத்தைக் கடைப்பிடிக்கிறது
- போக்டன் சிரோட்டியுக்கின் விடுதலைக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பிரச்சாரம் செய்த சோ.ச.க. உறுப்பினர்களுக்கு இலங்கை பொலிஸ் தொந்தரவு
- உக்ரேனின் சர்வாதிகார ஆட்சி போர் எதிர்ப்பாளர்களைச் சிறையில் அடைக்கும் நிலையில், தேர்தல்களை ஜெலென்ஸ்கி நிராகரிக்கிறார்
