பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்க டோக்கியோ ஆலோசிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சீனாவிற்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான போர் முனைப்பை ஜப்பான் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், டோக்கியோ பெய்ஜிங் மீது பல முனைகளில் அதன் அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. இத்தகைய நகர்வுகள் மிகவும் ஆத்திரமூட்டுபவை என்பதுடன், வடகிழக்கு ஆசியாவை மேலும் ஆயுத மோதலின் விளிம்பிற்குத் தள்ளும். சீனாவை அரக்கத்தனமானதாக சித்தரிக்க முயலும் வாஷிங்டனின் பொய்களை நம்பவைக்கும் வகையில் தான் டோக்கியோவின் சூழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை, Yomiuri Shimbun செய்தியிதழ், பிப்ரவரியில் பெய்ஜிங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் அமெரிக்கத் தலைமையிலான இராஜதந்திர புறக்கணிப்பில் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் நிர்வாகமும் இணைந்து கொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது, அதாவது அரசாங்க வட்டாரங்களின் கூற்றுப்படி, ஒலிம்பிக் நிகழ்ச்சிகளுக்கு அமைச்சரவை அளவிலான அதிகாரிகளை அனுப்பாமல் புறக்கணிக்கப்படவுள்ளது. ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு நிறுவனமான NHK உம் இந்த அறிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது.

National Speed Skating Oval in China. (Arne Müseler/Wikimedia Commons) [Photo]

இருப்பினும், ஜப்பானிய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் யசுஹிரோ யமஷிதா, அல்லது ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளின் டோக்கியோ ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் சீகோ ஹாஷிமோடோ போன்ற ஜப்பானிய தடகள அதிகாரிகளை அனுப்புவதன் மூலம் டோக்கியோ எந்தவொரு இராஜதந்திர வீழ்ச்சியையும் ஈடுசெய்ய முயற்சிக்கலாம். இந்த ஆண்டு இறுதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிக்கைக்கு முன்னதாக, பிரதமர் கிஷிடா டிசம்பர் 9 அன்று புறக்கணிப்புக்கான சாத்தியம் பற்றி, “இராஜதந்திர ரீதியிலான காரணிகளையும் மற்றும் பிற காரணிகளையும் விரிவாக பரிசீலித்த பின்னர், தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளித்து ஜப்பானிய அரசாங்கத்தின் பதிலை உரிய நேரத்தில் முடிவு செய்வேன்” என்று கூறியுள்ளார்.

“மனித உரிமைகள்” தொடர்பாக சீனா மீதான அழுத்தத்தை அதிகரிப்பதற்காக பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு உத்தியோகபூர்வ பிரதிநிதிகளை அனுப்பப்போவதில்லை என்று டிசம்பர் 6 அன்று வாஷிங்டன் பாசாங்குத்தனமாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பிரிட்டன் உட்பட ஒரு சில மற்ற நாடுகளும் ஒலிம்பிக் புறக்கணிப்பில் இணைந்து கொண்டுள்ளன.

கிஷிடா அரசாங்கத்தை பெய்ஜிங்குடன் மிக வெளிப்படையாக மோத வைப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் டோக்கியோவின் உரத்த குரல்களில் முன்னால் பிரதமர் ஷின்சோ அபே இன் குரலும் ஒன்றாகும். டிசம்பர் 9 அன்று ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியில் (Liberal Democratic Party-LDP) உள்ள அவரது ஹோசோடா பிரிவின் கூட்டத்தில் பேசுகையில், கிஷிடாவின் அரசாங்கம் ஜின்ஜியாங்கில் “அரசியல் அணுகுமுறையைக் காட்டுவதும், மனித உரிமைகள் நிலைமை பற்றிய செய்தியை அனுப்புவதும் அவசியம்” என்று தெரிவித்தார். “ஜப்பானின் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கான நேரம் இது இல்லையா?” என்றும் அபே கேள்வி எழுப்பினார். கிஷிடா எதிரணியான கொச்சிக்காய் பிரிவைச் சேர்ந்தவராவார்.

அபே சமீபத்திய வாரங்களில், “ஒரே சீனா” கொள்கையின் கீழ் சீனப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக கருதப்படும் தைவானின் நிலைமைகள் குறித்தும் தூண்டிவிட்டார். டிசம்பர் 1 அன்று, அபே, “தைவான் அவசரநிலை என்பது ஜப்பானின் அவசரநிலையாகும், அதாவது ஜப்பான்-அமெரிக்க கூட்டணிக்கான அவசரநிலையாகும். பெய்ஜிங்கில் உள்ள மக்கள், குறிப்பாக ஜனாதிபதி ஜி ஜின்பிங், இதை அங்கீகரிப்பதில் ஒருபோதும் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது” என்று கூறி ஒரு போர் அச்சுறுத்தலுக்கு சமமான அறிக்கையை வெளியிட்டார்.

ஜப்பானின் அமைதிவாத அரசியலமைப்பு என்று அழைக்கப்படுவதன் கீழ், அந்த நாடு இராணுவப் படைகளை வைத்திருக்கவோ அல்லது வெளிநாடுகள் மீது போர் தொடுக்கவோ தடைசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அரசியலமைப்பு வரம்புகள் அபேயின் கீழ் உட்பட, தொடர்ச்சியாக குறைமதிப்பிற்குட்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் ஜப்பானின் இராணுவப் படைகள் போரில் ஈடுபடுவதை நியாயப்படுத்த தனது நாட்டின் “தற்காப்பு” அல்லது அமெரிக்கா போன்ற கூட்டணி நாடுகளுடனான “கூட்டு தற்காப்பு” பற்றி கூறி நியாயப்படுத்துவது அதற்கு பெயரளவில் அவசியமாகும்.

இந்த கருத்துக்கள் பெய்ஜிங்கில் கோபத்தை ஏற்படுத்தியது, அதனால் சீனாவின் உதவி வெளியுறவு அமைச்சர் ஹூவா சுன்யிங் ஜப்பானிய தூதர் ஹிடியோ தருமியை ஒரு சந்திப்பிற்கு அழைத்தார். டோக்கியோ தைவான் குறித்து மேலும் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், பெய்ஜிங் “இருதரப்பு உறவுகளை எவ்வாறு அணுகுவது மற்றும் ஜப்பானை எவ்வாறு நடத்துவது என்பது பற்றி மறுபரிசீலனை செய்யும்” என்று ஹூவா கூறினார்.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பதவியில் அபே இல்லாத நிலையில், அவரது கருத்துக்கள் தனிப்பட்ட முறையில் வெளியிடப்பட்டவை என்று டோக்கியோ அதனை ஒதுக்கிவிட்டது. இருப்பினும், 2020 இல் உடல்நலக் காரணங்களுக்காக அபே தனது பதவியை இராஜிநாமா செய்தார் என்றாலும், இன்னும் LDP க்குள் பெரும் செல்வாக்கைப் பேணுகிறார்.

அத்தகைய “தைவான் அவசரநிலை” டிசம்பர் 13 அன்று எப்படி இருக்கும் என்பதை அபே விரிவாகக் கூறினார், அதாவது, “ஒரு அமெரிக்க கப்பல் மீது தாக்குதல் நடந்தால், அது ஜப்பானின் உயிர்வாழ்வுக்கு அச்சுறுத்தலான சூழ்நிலையாக இருக்கும், அது கூட்டு தற்காப்புக்கான பயிற்சியை அனுமதிக்கும்” என்கிறார். வேறு வகையில் கூறுவதானால், தைவான் ஜலசந்தியில் அமெரிக்கா நடத்தும் ஆத்திரமூட்டல், டோக்கியோ வாஷிங்டனுடன் சேர்ந்து சீனாவுடன் போருக்குச் செல்வதற்கான காரணமாக எடுத்துக் கொள்ளப்படலாம் என்பதாகும்.

பெய்ஜிங்கிற்கு எதிரான எதிர்ப்பு என்பது, ஜின்ஜியாங்கில் வீகர் இனத்தவருக்கு எதிரான இனப்படுகொலை, பிற “மனித உரிமை” மீறல்கள், மற்றும் தைவானுக்கு எதிராக கூறப்படும் அச்சுறுத்தல்கள் ஆகிய தவறான குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டது என்றாலும், ஒலிம்பிக் புறக்கணிப்பில் பங்கேற்கும் நாடுகளில், கடந்த முப்பது ஆண்டுகளில் மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தான் முழுவதிலும் உள்ள ஒட்டுமொத்த சமூகங்களின் அழிவுக்கு காரணமான நாடுகளும் அடங்கும். இந்த நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை, சீனாவை குறிவைக்கும் இராணுவ தயாரிப்புகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

ஜப்பானின் பங்கேற்பு மிகவும் ஆத்திரமூட்டுவதாக இருக்கும். டோக்கியோவின் அரசியலமைப்பு கட்டுப்பாடுகளை தூக்கி எறிந்து ஆசிய கண்டத்தில் அதன் ஏகாதிபத்திய நலன்களை பாதுகாப்பதற்கான முயற்சியில் அமெரிக்க தலைமையிலான போர் உந்துதலில் டோக்கியோவின் சொந்த ஈடுபாட்டை ஆழப்படுத்துவதற்கான முனைப்பை இது பிரதிபலிக்கிறது.

பிரதமர் கிஷிடா, உலக சுகாதார அமைப்பில் (WHO) தைவான் தீவின் பங்கேற்பை ஆதரிப்பது உட்பட, தீவு குறித்த ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டார். டோக்கியோ முறைப்படி ஒப்பந்தத்தில் இணைந்துள்ளதான “ஒரே சீனா” கொள்கையின் கீழ், தைவான் ஒரு சுதந்திர நாடு அல்ல, மாறாக சீனாவின் ஒரு பகுதியாகும். தைவான் சுதந்திரத்தை அறிவிக்குமானால், வாஷிங்டனும் டோக்கியோவும் இத்தீவை பிரதான நிலப்பகுதியை குறிவைக்கும் ஒரு இராணுவ தளமாக மாற்றும் என்று பெய்ஜிங் நியாயமாக அஞ்சுகிறது.

“சர்வதேச சுகாதாரப் பிரச்சினைகளைக் கையாள்வதில் புவியியல் செல்லுபடியற்ற தன்மை இருக்கக்கூடாது என்று WHO இல் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், மேலும் தைவான் பார்வையாளராக வருவதையும் நாங்கள் தொடர்ந்து ஆதரித்தோம்” என்று பிரதமர் டிசம்பர் 9 அன்று தேசிய உணவு நிகழ்வில் கூறினார். மேலும், “நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் தகவல்களையும் அறிவையும் பரவலாகப் பகிர்வது முக்கியம்” என்றார்.

சீனா கோவிட்-19 தொற்றுநோயை மறைக்க முயன்றது அல்லது வைரஸை உருவாக்குவதற்கான நேரடி பொறுப்பாளியாக அது இருந்தது என்ற பொய்யை மேலும் ஊர்ஜிதப்படுத்துவதற்கான வழிமுறையாக WHO இல் தைவானைச் சேர்ப்பதற்கு வாஷிங்டன் குறிப்பாக வலியுறுத்தியுள்ளது. இது சம்பந்தமாக, “தகவல் பகிர்வு” பற்றி குறிப்பிடுவதானது, தொற்றுநோயை சமாளிக்க சீன விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் எடுத்த முயற்சிகளை இழிவுபடுத்துவதாக உள்ளது, அதேவேளை பெய்ஜிங் தகவல்களை மறைக்கிறது என்று கூறுவதுடன், பெய்ஜிங்கிற்கு ஜனநாயக மாற்றாக தைபேயை ஊக்குவிக்க முனைகிறது.

பெய்ஜிங்கை அரக்கத்தனமானதாக சித்தரிப்பதற்கான இந்த உந்துதலுக்கு மத்தியில், பிரிட்டனின் லிவர்பூலில் நடந்த இரண்டு நாள் வெளியுறவு அமைச்சர்கள் உச்சிமாநாட்டை தொடர்ந்து டிசம்பர் 12 அன்று சீனாவையும் ரஷ்யாவையும் அச்சுறுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்ட மற்ற ஜி7 நாடுகளுடனான தனது கூட்டணிகளை ஆழப்படுத்த டோக்கியோ உறுதியளித்துள்ளது.

மாநாட்டின் ஒருபுறம், ஜப்பானின் வெளியுறவு அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கெனை சந்தித்தார். “அதிகரித்தளவிலான கடுமையான பாதுகாப்பு சூழலுக்கு மத்தியில் கூட்டணியின் எதிர்க்கும் மற்றும் பதிலடி கொடுக்கும் திறன்களை வலுப்படுத்துவது இன்றியமையாதது” என்று இருவரும் கூறினர். அவர்கள் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுடன் நெருக்கமாக வேலை செய்ய உறுதியளித்துள்ளனர், இவை நான்கும் “நாற்கர” கூட்டணியில் உள்ளவை, இது சீனாவிற்கு எதிரான ஜனநாயகங்கள் என்றழைக்கப்படும் ஒரு நாற்கர-இராணுவ கூட்டணியாகும்.

பெய்ஜிங் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதற்கான ஒரு சூழ்ச்சியில், தென் கொரியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (Association of Southeast Asian Nations-ASEAN) இல் உள்ள, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர்களும் ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். தனது ஆஸ்திரேலிய சம தரப்பினர் மாரிஸ் பெய்ன் உடனான பேச்சுவார்த்தையின் போது, ஹயாஷி நாற்கர கூட்டணிக்கான டோக்கியோவின் கடமைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இவ்வாறாக டோக்கியோ சீனாவுடனான ஒரு ஆபத்தான மோதலுக்கு நெருக்கமாக நகர்கிறது, அது பிராந்தியத்தை போரில் மூழ்கடிக்கும்.

Loading