இலங்கை தொழிற்சங்கத் தலைவர்கள் பல்கலைக்கழக ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை நாசப்படுத்த முயற்சிக்கின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்விசாரா ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஆறாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், தொழிற்சங்கங்கள் நடவடிக்கையை கைவிட திரைக்குப் பின்னால் செயல்பட்டு வருகின்றன. விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் பல்கலைக்கழக ஊழியர்கள் தமது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என தொழிற்சங்கத் தலைவர்கள் கூறுவது தோல்விகாணும் செயற்பாடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

7 ஜூன் 2024 அன்று கொழும்பு உயர் கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தில் பங்குபற்றிய பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களில் ஒரு பகுதியினர்

பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழுவின் (UTUJC) இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த, ஜூன் 6 அன்று டெய்லி மிரர் பத்திரிகைக்குத் கருத்துத் தெரிவிக்கையில், தொழிற்சங்கத் தலைவர்கள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவைச் சந்தித்து சம்பள முரண்பாடுகள் உட்பட “குறிப்பிட்ட உடன்பாட்டை” எட்டியுள்ளனர் எனத் தெரிவித்தார்.

தாம் அரசாங்கத்திடம் முன்மொழிவை சமர்ப்பித்ததாக கூறிய UTUJC தலைவர், “இந்தப் பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என்பதை அது கோடிட்டுக் காட்டுவதாக” தெரிவித்தார். “எங்களின் கோரிக்கைகளுக்கு இதுவரை குறைந்தபட்ச உடன்பாடு கிடைத்துள்ளது. நிதியமைச்சு அல்லது அமைச்சரவை மூலம் எங்களது கோரிக்கைகளுக்கு ஒப்புதல் கிடைத்தால், தற்போது நடைபெறும் வேலைநிறுத்தத்தை விலக்கிக்கொள்ளலாம்” எனவும் அறிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வகிபாகத்தை மூடிமறைத்த UTUJC தலைவர், “அரச அதிகாரிகளால் வழங்கப்பட்ட தவறான தகவல்களின் அடிப்படையிலேயே ஜனாதிபதி [முன்னர்] எங்கள் முன்மொழிவை நிராகரித்தார்” என்று கூறினார். அமைச்சர்கள் தற்போது “யதார்த்தத்தை” புரிந்து கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் விளைவாக, “எங்கள் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியிடமிருந்து அதிக நெகிழ்வுத்தன்மையை நாங்கள் அவதானித்துள்ளோம்,” என அவர் பிரகடனம் செய்தார்.

அவருக்கு “யதார்த்தம்” பற்றி தெரிவிக்கப்படாததால், கல்விசாரா தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஜனாதிபதி நிராகரித்தார் என்பது பொய்யானது. மே 27 அன்று, விக்கிரமசிங்க அமைச்சரவையில் பேசும் போது, ஆண்டின் முற்பகுதியில் வழங்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவைத் தவிர. பல்கலைக்கழக ஊழியர்கள் உட்பட அரச துறையினருக்கான சம்பள உயர்வுகளுக்கு வரவு செலவில் ஒதுக்கீடு இல்லை என்றும், மற்ற கோரிக்கைகளை 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவில் மட்டுமே பரிசீலிக்க முடியும் என்றும் அவர் அறிவித்தார்.

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்த மற்றும் UTUJC இன் பங்காளியான சுதந்திர தொழிற்சங்க மையம் (UITUC) ஊழியர்களின் வட்ஸ்அப் குழுவில் இடுகையிடப்பட்ட கடிதமொன்றில், நிதி இராஜாங்க அமைச்சருக்கு தொழிற்சங்கங்களின் முன்மொழிவுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. UITUC ஆனது முன்பு பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கம் என அழைக்கப்பட்டது.

“கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டை நிர்வகிப்பதன் மூலம்” தொழிலாளர்களுக்கு சிறிய சலுகைகளை வழங்குவதற்கான பணத்தை தேடிக்கொள்ளும் வகையில், தொழிற்சங்கங்கள் நிதி இராஜாங்க அமைச்சருடன் ஒரு உடன்பாட்டை எட்டியதாக அந்தக் கடிதம் கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிற்சங்கங்கள் பொதுக் கல்வியின் ஏனைய பகுதிகளுக்கு கணிசமான செலவின வெட்டுக்களை பரிந்துரைக்கின்றன.

ஏனைய தொழிற்சங்கங்களைப் போலவே, UTUJC தலைவர்களும் தங்கள் உறுப்பினர்களின் நலன்களுக்காக அன்றி, முதலாளித்துவ ஆட்சியின் கருவிகளாகவே செயல்படுகிறார்கள். UTUJC இணைத் தலைவர் மங்கள டாபரேரா மே 14 அன்று அத தெரன உடன் பேசும் போது: “நாட்டில் நிதி நெருக்கடி இருப்பதை நாங்கள் அறிவோம், எனவே பணம் கிடைக்கும்போது அவர்கள் [அரசாங்கம்] சம்பள உயர்வை வழங்க முடியும் என்று நாங்கள் கூறினோம்,” என்றார்.

அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனான தொழிற்சங்க கலந்துரையாடல்கள் தொழிற்சங்க உறுப்பினர்களின் முதுகுக்குப் பின்னாலேயே நடந்தன. உறுப்பினர்களுக்கு எந்த விவரமும் வழங்கப்படவில்லை.

வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது, ​​தொழிற்சங்க அதிகாரிகள் சம்பள முரண்பாடுகளை சரிசெய்ய 15 சதவீத வரையறுக்கப்பட்ட ஊதிய கோரிக்கையை முன்வைத்தனர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கை, கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக அளவு பணவீக்கத்தின் காரணமாக உண்மையான ஊதியத்தின் அதிகரிப்புக்கு எந்த வகையிலும் ஈடுசெய்யக் கூடியதல்ல.

UTUJC யின் ஒரு பகுதியாக இருக்கும், எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்பு அனைத்துப் பல்கலைக்கழக சேவைகள் தொழிற்சங்கம் (IUSTU), மிகவும் தீவிர தோரணை காட்டும் அதே நேரம், UTUJC யின் துரோக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கின்றது.. ஜே.வி.பி பத்திரிகையான ரது லங்கா (சிவப்பு இலங்கை) என்பதன் ஜூன் மாத இதழில், IUSTU வின் செயலாளர் விஜயதிலக்க ஜயசிங்க கருத்துத் தெரிவித்த போது: “இந்த ஆட்சியாளர்களால் இந்த பிரச்சினையை மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது... இந்த ஆட்சியாளர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும். உழைக்கும் மக்களின் உரிமைகளை நிலைநாட்டும் ஆட்சியை நாம் உருவாக்க வேண்டும்” என கூறினார்.

எவ்வாறாயினும், ஜே.வி.பி தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் நடவடிக்கைகளை மேலும் மேலும் தடுப்பதுடன் பெருகிவரும் கோபத்தை ஜே.வி.பி.யின் தேர்தல் முன்னணியான தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கான பிரச்சாரமாக திசை திருப்புகின்றன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி/தே.ம.ச. வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென ஜே.வி.பி. தொழிற்சங்கங்கள் கோருகின்றன.

உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் நிலைமையை மேம்படுத்துவதற்குப் பதிலாக, முதலாளித்துவ ஜே.வி.பி./தே.ம.ச. ஏனைய எதிர்க்கட்சிகளைப் போலவே, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கொள்கைகளை முழுமையாக அமுல்படுத்த உறுதிபூண்டுள்ளது. திஸாநாயக்க தனது கட்சியின் ஆட்சியின் முதல் வருடங்களில் “நாட்டை மீளக் கட்டியெழுப்ப” “மக்கள்” தியாகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

முழு அரசியல் ஸ்தாபனமும், நீதித்துறையும், பொலிசும் மற்றும் ஊடகங்களும் பல்கலைக்கழக கல்வி சாரா வேலை நிறுத்தக்காரர்களை கொச்சைப்படுத்துவதற்கும் ஒடுக்குவதற்குமான ஒரு முயற்சியில் அணிதிரட்டப்பட்டுள்ளன.

ஜூன் 4 அன்று “தொழிற்சங்கங்கள் தங்கள் வரம்புகளை அறிந்து கொள்ள வேண்டும்” என்ற தலைப்பில் டெய்லி மிரர் எழுதிய ஆசிரியர் தலையங்கம், வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. தேர்வுகள் மற்றும் முதுகலை படிப்புகளை ஒத்திவைப்பதால் மாணவர்களுக்கு ஒரு வருடத்தை இழக்க நேரிடும் என்று அது கூறியது. “தங்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு விடயத்திற்காக தங்கள் வாழ்க்கையை குறைந்தது ஒரு வருடமாவது ஒத்திவைக்குமாறு மாணவர்களைக் கோருவதற்கு எந்த ஒரு தொழிற்சங்க உறுப்பினருக்கோ அல்லது தலைவருக்கோ உரிமை இல்லை” என்று அது அறிவித்தது.

கல்வியை நாசமாக்குவதற்குப் பொறுப்பானவர்கள் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் அல்ல, மாறாக விக்கிரமசிங்க ஆட்சி உட்பட அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களே, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தின் ஒரு பகுதியாக பொதுக் கல்விக்கான நிதியைக் குறைத்து இலாப வெறி கொண்ட முதலீட்டாளர்களுக்காக கல்வியை தனியார்மயமாக்கும் வாய்ப்புகளை வழங்கின.

அதன் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை விலைகொடுக்கச் செய்ய முயற்சிக்கின்ற, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்ற அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், பல்கலைக்கழக ஊழியர்களோ அல்லது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமோ தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியாது என்று சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), வலியுறுத்தியுள்ளது. தொழிற்சங்கங்கள் பரப்பும் இந்த மாயை, அவற்றின் உறுப்பினர்களிடையே அதிகரித்து வரும் கோபத்தைக் கலைக்கும் ஒரு பொறியாகும் என்பதை நாம் விளக்கியுள்ளோம்.

கல்விசாரா ஊழியர்கள் ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான கோரிக்கைகளுக்காக தொழிற்சங்கங்களை நம்பி போராட முடியாது. அவர்கள் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து சுயாதீனமாக, ஜனநாயக ரீதியாக ஊழியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும். இலவசக் கல்வியைப் பாதுகாக்கப் போராடுவதற்கு, பல்கலைக்கழகக் கல்வி ஊழியர்கள் மற்றும் மாணவர்களினதும் ஆதரவை அவர்கள் பெற வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தின் கீழ் இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளின் பக்கம் பல்கலைக்கழக ஊழியர்கள் திரும்ப வேண்டும். தொழிலாள வர்க்கமானது விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு எதிராக, தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க ஒரு அரசியல் பொது வேலைநிறுத்தத்தை தயார் செய்ய வேண்டும்.

உழைக்கும் மக்களின் சமூக மற்றும் வாழ்க்கை நிலைமைகளைப் பாதுகாப்பதற்கான இந்தப் போராட்டம், வெளிநாட்டுக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கும், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் பெரு நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் வங்கிகளை தேசியமயமாக்குவதற்குமான போராட்டத்துடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. தொழிலாளர்களுக்கு மற்றொரு முதலாளித்துவ ஆட்சி தேவையில்லை, மாறாக சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்தும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் ஒன்றே அவசியமாகும்.

தொழில்கள், ஊதியங்கள், வேலை நிலைமைகள் மற்றும் போர் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டங்களில் முன்னணியில் இருக்கும் சர்வதேச தொழிலாள வர்க்கமே அவர்களின் நண்பர்கள் ஆவர். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தொடங்கப்பட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியுடன் (IWA-RFC) தங்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்குமாறு இலங்கை தொழிலாளர்களை சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி இலங்கையில் வேலைநிறுத்தம் செய்யும் கல்விசாரா தொழிலாளர்களுக்கு முன்னோக்கிய பாதை என்ற தலைப்பில் ஒரு இணையவழி கூட்டத்தை இந்த வெள்ளிக்கிழமை, ஜூன் 14 மாலை 7 மணிக்கு நடத்துகின்றது. இந்த கூட்டத்தில் கல்விசாரா ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்படும். தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஏனைய அனைவரையும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கூட்டத்தில் பங்குகொள்ள இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்.

Loading