இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை கிளையான சோசலிச சமத்துவக் கட்சியினதும் (சோ.ச.க.) அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினதும் (பு.க.க.) நீண்டகால உறுப்பினரான தோழர் கே.எஸ். கணேஷ்தேவ், 22 மார்ச் 2026 அன்று தனது 87வது வயதில் காலமானார்.
நீரிழிவு நோயினால் ஏற்பட்ட நீண்டகால உடல் உபாதைகள் காரணமாக தென்னிந்தியாவில் சென்னையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு ரோசா, லியோன், கீர்த்தி ஆகிய மூன்று பிள்ளைகளும், இரண்டு இளைய சகோதரர்களும் உள்ளனர்.
ட்ரொட்ஸ்கிசத்திற்கான அவரது தசாப்தகால நீண்ட துணிச்சலான போராட்டத்திற்கு சோசலிச சமத்துவக் கட்சி அஞ்சலி செலுத்துவதுடன், அவரது பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
கட்சித் தோழர்களால் கணேஷ் என்று அழைக்கப்படும் கணேஷ்தேவ், 1970 இல் பு.க.க.யில் இணைந்தார். அவர் விரைவில் ஒரு முழுநேர ஊழியராகியதோடு பு.க.க. மத்திய குழுவிற்கும் அரசியல் குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியத் துணைக்கண்டத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கட்டியெழுப்பும் போராட்டத்தில் அவர் முக்கிய பங்கு வகித்த போதிலும், கடினமான உடல் உபாதைகள் காரணமாக கடந்த ஒன்றரை தசாப்தங்களாக அரசியல் பணிகளை செயலூக்கத்துடன் தொடர முடியாமல் இருந்தார்.
கணேஷ் 15 மே 1939 அன்று அவரது குடும்பம் குடியேறியிருந்த மலேசியாவில் பிறந்தார். கணேஷிற்கு 16 வயதாக இருந்தபோது, குடும்பத்தினர் யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலையில் உள்ள அவர்களின் சொந்த கிராமமான அல்வாய்க்கு திரும்பினர். அவர் அருகில் உள்ள நெல்லியடி மத்திய கல்லூரியில் ஆங்கில மொழியில் விஞ்ஞானத் துறையில் படிப்பை முடித்தார்.
அவரது குடும்பம் இலங்கைக்கு திரும்பிய பின்னரான தசாப்தம் கூர்மையான அரசியல் கொந்தளிப்புகள் நிறைந்ததாக இருந்தது. தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் செல்வாக்கு வளர்வதையிட்டு அஞ்சிய இலங்கை ஆளும் உயரடுக்கு, தொழிலாளர்களை இனரீதியாகப் பிரிப்பதற்காக தமிழர்-விரோத இனவாதப் பிரச்சாரங்களை நாடியது. அது 1948 இல் சுதந்திரத்திற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கம் இலட்சக் கணக்கான இந்திய வம்சாவளி தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை பிரஜா உரிமையை ரத்து செய்ததில் இருந்து தொடங்கியது.
1956 இல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) சிங்களத்தை மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாக பிரகடனப்படுத்திய பிற்போக்குக் கொள்கையின் அடிப்படையில் தேசியத் தேர்தலில் வெற்றி பெற்றது, இதனால் தமிழ் பேசும் மக்களை இரண்டாம்தர பிரஜைகளாகத் தாழ்த்தி, கசப்பான இனப் பிளவுகளைத் தூண்டியது. ஸ்ரீ.ல.சு.க.யின் பிரச்சாரம், 1953 ஹார்த்தால் (நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம்) மூலம் நிரூபிக்கப்பட்ட தீவிரமடைந்து வரும் வர்க்கப் போராட்டத்திற்கு எதிரான ஆளும் வர்க்கத்தின் பிரச்சாரமாக இருந்தது.
அதுவரை ட்ரொட்ஸ்கிச இயக்கம் என்று உரிமை கோரிய லங்கா சம சமாஜக் கட்சி (ல.ச.ச.க), சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டையும் உத்தியோகபூர்வ மொழிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்து, இனவாதக் கொள்கையை எதிர்த்தது. அது 1956 உத்தியோகபூர்வ மொழிச் சட்டத்தை எதிர்த்ததுடன், சிங்கள இனவாதக் காடையர்களிடமிருந்து தமிழர்களைப் பாதுகாக்குமாறு தொழிலாளர்களை வலியுறுத்தியது. தமிழ் தேசியவாதம் மற்றும் பிரிவினைவாத அரசியலை நோக்கிய முதலாளித்துவத் தமிழ் கட்சிகளின் திருப்பத்தையும் அது எதிர்த்தது.
நாட்டின் பெரும்பான்மைத் தமிழர்கள் வாழும் வடக்கில், கணேஷ் தமிழ்க் கட்சிகளின் இனவாத அரசியலை நிராகரித்து ல.ச.ச.க.யை ஆதரித்தார். தனது இடைநிலைக் கல்வியை முடித்த உடனேயே, 1958 இல் யாழ்ப்பாணத்தில் ல.ச.ச.க. இளைஞர் அமைப்பில் இணைந்தார்.
ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான அவரது ஈர்ப்பானது ஒரு வெற்றிடத்தில் உருவாகவில்லை. 1940களின் முற்பகுதியில் இருந்து, நான்காம் அகிலத்தின் இந்திய துணைக்கண்டப் பிரிவான இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (பி.எல்.பீ.ஐ.), யாழ்ப்பாண குடாநாட்டிலும் நாடு முழுவதிலும் கணிசமான செல்வாக்கைப் பெற்றிருந்தது.
இருப்பினும், மைக்கல் பப்லோ மற்றும் ஏர்னஸ்ட் மண்டேல் தலைமையில் நான்காம் அகிலத்திற்குள் உருவான இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய சந்தர்ப்பவாதப் போக்கின் தாக்கத்தின் கீழ், ஸ்தாபக வெகுஜன தொழிலாளர் கட்சிகளுக்குள் நுழையும் போர்வையில் பி.எல்.பீ.ஐ. கலைக்கப்பட்டது. இலங்கையில், ல.ச.ச.க. பப்லோவாத அகிலத்துடன் சேர்ந்துகொண்டு, 1953இல் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாப்பதை எதிர்த்தது. இந்த சூழ்நிலையிலேயே இலங்கையில் பி.எல்.பீ.ஐ. ஆனது ல.ச.ச.க. உடன் கரைத்துவிடப்பட்டது.
ல.ச.ச.க., ஸ்ரீ.ல.சு.க.யின் சிங்களம் மட்டும் கொள்கையை எதிர்த்த அதேவேளை, அதன் சிங்கள ஜனரஞ்சகவாத அரசியலுக்கு மென்மேலும் இணங்கிப் போய், 1964 இல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்தில் சேர்ந்துகொண்டது. இது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மிக அடிப்படைக் கொள்கைகளான சோசலிச அனைத்துலகவாதம் மற்றும் முதலாளித்துவ முகவர்களிடமிருந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதற்கும் எதிரான வரலாற்றுத் துரோகமாகும். 21 அம்ச கோரிக்கைகளுடனான தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன எழுச்சிக்கு மத்தியில், பண்டாரநாயக்க அரசாங்கம் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள இந்த துரோகம் உதவியது.
பப்லோவாத அகிலம் ல.ச.ச.க.யின் அரசியல் சீரழிவை மூடி மறைத்தமை அது ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைவதற்கான பாதையை அமைத்தது, ல.ச.ச.க.யின் காட்டிக்கொடுப்புக்கு எதிராக, இளைஞர்களின் ஒரு பகுதி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பக்கம் திரும்பி, அதன் அரசியல் வழிகாட்டுதலின் கீழ், 1968 இல் பு.க.க. நிறுவப்பட்டது.
தொழிலாள வர்க்கத்திற்கு ல.ச.ச.க. செய்த காட்டிக்கொடுப்பு, இனவாத அரசியலை அடிப்படையாகக் கொண்ட குட்டி முதலாளித்துவ இயக்கங்கள் தலைதூக்குவதற்கு வழிவகுத்தது. தீவின் தெற்கே தீவிரமயமான சிங்கள இளைஞர்கள் மத்தியில், மா ஓ வாதம் மற்றும் காஸ்றோவாத கலவை மற்றும் கொரில்லாவாத வழிமுறையினதும் கலவையின் அடிப்படையில் 1960களின் நடுப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே,வி.பி.) ஸ்தாபிக்கப்பட்டது. வடக்கில், தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற தமிழ் ஆயுதக் குழுக்கள் தலை தூக்கி பிரிவினைவாதத்தைப் பிரச்சாரம் செய்தன.
ல.ச.ச.க.யின் காட்டிக்கொடுப்பை எதிர்த்த கணேஷ், ல.ச.ச.க.யில் இருந்து பிரிந்த போதும் பப்லோவாத அகிலத்துடன் தொடர்பைப் பேணிய புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சியை (பு.ல.ச.ச.க.) சிறிது காலம் ஆதரித்தார். அவர் 1970களின் முற்பகுதியில் கொழும்பில் இருந்து வெளிவந்த சன் என்ற பிரதான செய்தித்தாளின் சுதந்திர ஊடகவியலாளராகப் பணியாற்றினார்.
பலரைப் போலவே, கணேஷும் விரைவில் பு.ல.ச.ச.க.யின் சந்தர்ப்பவாத அரசியலால் வெறுப்படைந்தார். அக்கட்சி புரட்சிகர சோசலிச முன்னோக்கில் இருந்து விலகி, தொழிற்சங்க போர்க்குணத்தை ஊக்குவித்த அதே வேளை, ஸ்டாலினிச மற்றும் சிங்கள-இனவாத மக்கள் ஐக்கிய முன்னணி தலைமையிலான கூட்டணியான ஐக்கிய இடது முன்னணியை புனரமைக்க முயன்றது.
ல.ச.ச.க. காட்டிக்கொடுப்புக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்து, புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காகப் போராடி வந்த பு.க.க. தோழர்களை கணேஷ் சந்தித்தார். பொதுச்செயலாளர் கீர்த்தி பாலசூரிய உட்பட பு.க.க. உடனான கலந்துரையாடல்களின் பின்னர், ல.ச.ச.க.யின் காட்டிக்கொடுப்பானது பப்லோவாதத்திலேயே வேரூன்றியுள்ளது என்பதைப் புரிந்து கொண்டு பு.க.க.யில் இணைந்தார்.
கணேஷ் விரைவில் பு.க.க.யின் முழுநேர ஊழியராகவும் அதன் முன்னணி குழுக்களிலும் இணைந்தார். கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மத்திய மலைநாட்டின் பெருந்தோட்டப் பகுதிகளில் தமிழ் மக்கள் மத்தியில் கட்சியின் அரசியல் வேலையை அபிவிருத்தி செய்வதில் அவர் தீர்க்கமான பங்கை வகித்தார். அவர் பு.க.க.யின் தமிழ் பத்திரிகையான தொழிலாளர் செய்தியில் அவர் இடைவிடாமல் எழுதினார்.
1971 ஏப்ரலில், கூட்டு அரசாங்கம் ஜே.வி.பி.யின் சாகசவாத ஆயுத கிளர்ச்சியை கொடூரமாக நசுக்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்களும் ஜே.வி.பி. உறுப்பினர்களும் கொல்லப்பட்டதோடு ஆயிரக்கணக்கானோர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த கொடூரமான அடக்குமுறையை பு.க.க. எதிர்த்த போது, அரசாங்கம் பு.க.க.க்கு எதிராக திரும்பியது. கட்சி ஏறத்தாழ சட்டவிரோதமாக்கப்பட்டு அதன் பத்திரிகைகள் தடை செய்யப்பட்டன. கட்சியின் தலைமறைவு வெளியீடுகளை அச்சிட உதவுவதில் கணேஷ் ஈடுபட்டார்.
1972 இல் புதிய பெயர்களில் சட்டப்பூர்வ வெளியீடு மீண்டும் தொடங்கிய போது, கணேஷ் தொழிலாளர் பாதையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். தமிழ் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் தமிழ் பிரிவினைவாதத்தின் பிளவுபடுத்தும் இனவாத அரசியலுக்கு எதிராக தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் கட்சியின் முன்னோக்கிற்கு வென்றெடுப்பதில் அவர் முக்கிய கருவியாக இருந்தார்.
வடக்கில் முதன்முதலில் பு.க.க.க்கு வென்றெடுக்கப்பட்டவர்களில் ஒருவரான எஸ்.கே. சந்திரசேகரன், தான் கம்யூனிஸ்ட் கட்சி (பெய்ஜிங் பிரிவு) நோக்கி அவதானித்துக் கொண்டிருந்ததாகவும், இருப்பினும், கணேஷுடனான அவரது உரையாடல்கள், ஸ்டாலினிசத்தின் சீன வடிவமான மாவோவாத்தின் துரோகப் பாத்திரத்தை அவருக்கு உணர்த்தி, அவரை டிரொட்ஸ்கிசத்திற்கு வென்றெடுத்ததாகவும், இந்த கட்டுரையின் ஆசிரியரிடம் கூறினார். சந்திரசேகரனும் மற்றவர்களும் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் பு.க.க. கிளையை அமைத்தனர்.
இரண்டாவது ஸ்ரீ.ல.சு.க. கூட்டு அரசாங்கம் பௌத்தத்தை நாட்டின் அரச மதமாகவும், சிங்களத்தை உத்தியோகபூர்வ மொழியாகவும் ஸ்தாபித்த இனவாத அரசியலமைப்பை திணித்த பின்னர் வெடித்த, தமிழ் தேசியவாத அலையில் தான் சிக்கியதாக கொழும்பில் அரசாங்க ஊழியராக இருந்த என். பஞ்சாட்சரம் தெரிவித்தார். தமிழ் தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதிலும், இன எல்லைகளை கடந்து தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்துவதிலும் கணேஷ் முன்னணி பங்கு வகித்தார். பஞ்சாட்சரமும் வேறு பலரும் கொழும்பில் ஒரு கட்சிக் கிளையை நிறுவினர்.
1979 இல், தெற்காசியாவில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவது அத்தியாவசியமானது என்பதைப் புரிந்து கொண்ட பு.க.க., இந்தியாவில் நான்காம் அகிலத்தின் அனைத்தலகக் குழுவின் ஒரு பிரிவைக் கட்டியெழுப்புவதற்கான வேலையைத் தொடங்குவதற்காக கணேஷை அப்போதைய மெட்ராசுக்கு அனுப்பும் முக்கியமான முடிவை எடுத்தது. இரண்டாம் உலகப் போரின் மத்தியில், அப்போதைய இலங்கையைச் சேர்ந் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் துணைக்கண்டம் முழுவதும் பி.எல்.பி.ஐ.யை உருவாக்குவதில் முன்முயற்சி எடுத்திருந்தனர். ஆனால் 1940களின் பிற்பகுதியில், பி.எல்.பி.ஐ. தலைவர்கள் மைக்கேல் பப்லோவின் ஊக்குவிப்பால், இந்தியாவில் உள்ள குட்டி முதலாளித்துவ காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் கட்சியை கலைத்துவிட்டனர்.
கணேஷ் மற்றும் சோ.ச.க. சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான நந்த விக்கிரமசிங்கவும் இணைந்து எழுதிய கட்டுரை ஒன்று விளக்கியதாவது: “பி.எல்.பி.ஜ. கலைக்கப்பட்டமை, தெற்காசியாவில் நான்காம் அகிலத்தின் வளர்ச்சியில் பேரழிவுதரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் பலமான முறையில் அழிக்கப்பட்டது.” இந்த நடவடிக்கை, 1964 இல் ல.ச.ச.க.யின் காட்டிக்கொடுப்புடன் சேர்ந்து, இந்தியாவில் உள்ள ஸ்டாலினிசக் கட்சிகளை, குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சி.பி.எம்.ஜ பெரிதும் பலப்படுத்தியது.
கணேஷ் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வேண்டியிருந்தது. சென்னையின் தொழிலாள வர்க்கப் பகுதியில் குடியேறிய அவர், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தொடர்புகளை ஏற்படுத்தி, ஒரு ட்ரொட்ஸ்கிச முன்னோக்கின் அவசியத்தைப் பற்றி கலந்துரையாடினார். அவர் தனது அரசியல் பணிகளுக்கு உதவ இலங்கையில் வெளியிடப்பட்ட தொழிலாளர் பாதை பத்திரிகையை பயன்படுத்தியதுடன் அனைத்துலகக் குழுவின் ஏனைய வெளியீடுகளையும் அதில் இணைத்துக்கொண்டார்.
இந்திய தேசிய காங்கிரஸ் உட்பட முதலாளித்துவக் கட்சிகளுக்கான ஸ்டாலினிசக் கட்சிகளின் வர்க்க-ஒத்துழைப்புக் கொள்கைகளையும் அவற்றின் ஆதரவையும் விளக்குவது அவரது முக்கிய அரசியல் பணிகளில் ஒன்றாக இருந்தது. இந்திய ஸ்டாலினிசமானது அக்டோபர் புரட்சியையும் உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தையும் காட்டிக்கொடுத்த சோவியத் ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் எதிர்-புரட்சிகரப் பாத்திரத்திலேயே வேரூன்றியிருந்தன. இலங்கையில் செய்தது போலவே, கணேஷும், இந்தியாவுக்கு வருகை தந்த பு.க.க. தோழர்களின் உதவியுடன் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்களின் ஆரம்பக் குழுவை திரட்டினார்.
1985–86 இல், அனைத்துலகக் குழு பிரித்தானியாவில் உள்ள தொழிலாளர் புரட்சிக் கட்சியுடன் (தொ.பு.க.) பிளவடைந்தமை, பு.க.க. உட்பட ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அனைத்துப் பிரிவுகளின் பணிகளுக்கும் ஒரு அடிப்படைத் திருப்புமுனையாக அமைந்தது. தொ.பு.க.யின் அரசியல் சீரழிவு, பப்லோவாதத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்தைக் கைவிட்டதிலும், ஸ்டாலினிசம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதம் நோக்கியும், பிரித்தானியாவில் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் நோக்கியும் பயணித்த அதன் சந்தர்ப்பவாத போக்கில் வெளிப்பட்டது.
கீர்த்தி பாலசூரிய 1985 இன் இறுதியில் சென்னைக்கு விஜயம் செய்து, கணேஷ் மற்றும் இதர தோழர்களுடன் கலந்துரையாடிய போது, கணேஷ் அனைத்துலகக் குழுவின் நிலைப்பாடுகளை உற்சாகத்துடன் ஆதரித்தார். 1986 மற்றும் 1987 இல், இப்போது உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவராக இருக்கும் டேவிட் நோர்த், பாலசூரியவுடன் சென்னைக்கு விஜயம் செய்து, பிளவில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து கணேஷ் மற்றும் ஏனைய தோழர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார்.
கணேஷும் அனைத்துலகக் குழுவின் இந்திய ஆதரவாளர்கள் குழுவும் 1986 டிசம்பர் 12 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டனர். “ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் (தொ.பு.க. தலைவர்கள்) துரோகக் கும்பல், அனைத்துலகக் குழுவின் அரசியல் மற்றும் கோட்பாட்டு அடித்தளங்கள் மீதான தாக்குதல்கள் மூலம், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் முன்னோடியை, ஸ்டாலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் தேசிய முதலாளித்துவத்திற்கும், அதன் மூலம் ஏகாதிபத்தியதிற்கும் கீழ்ப்படியச் செய்ய ற்சிக்கு எதிராக, அனைத்துலகக் குழுவின் பெரும்பான்மைப் பிரிவுகள் நடத்திய போராட்டத்திற்கு” அந்த அறிக்கை முழுமையாக ஒப்புதல் அளித்தது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துலகக் குழுவின் இந்திய ஆதரவாளர்களின் குழு, பல அரசியல் சவால்களை எதிர்கொண்டது. தொழிற்சங்கங்களில் ஸ்டாலினிச மேலாதிக்கத்தைப் போலவே, இலங்கையில் நடந்த இனவாத யுத்தமும், தீவின் பாக்கு நீரிணைக்கு அக்கரையில் உள்ள தமிழர்களின் அவலநிலையுடன் நெருக்கமாக அடையாளம் காணப்பட்ட தமிழக மக்கள் மத்தியில், தமிழ் தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளை வலுப்படுத்த உதவியது.
ஸ்ரீ.ல.சு.க. கூட்டரசாங்கத்திற்கு எதிரான பரவலான எதிர்ப்பின் மத்தியில், 1977 இல் அதிகாரத்திற்கு வந்த வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், உலகில் முதலில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையின் பேரில், கடுமையான சந்தைச் சார்பு கொள்கைகளை அமுல்படுத்திய நாடுகளில் ஒன்றாகும். வேலைகள், ஊதியங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் மீதான தாக்குதலுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பு வெடித்ததால், ஐ.தே.க., பிரிவினையை உருவாக்கும், தமிழர்-விரோத இனவாதத்தை மென்மேலும் தூண்டியமை, நாடு தழுவிய அளவில் கொடூரமான தமிழர்-விரோத இனப் படுகொலையில் முடிவடைந்ததுடன், தமிழீழ விடுதலைப் புலிகளுடான முழு அளவிலான போரைத் தூண்டியது.
தமிழ்நாட்டின் தென் பகுதியில், அரசியல் அமைதியின்மை ஏற்படும் என கவலையடைந்த இந்திய அரசாங்கம் இலங்கையில் நேரடியாகத் தலையிட்டது. 1987 ஜூலையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் புலிகளை நிராயுதபாணியாக்கவும், தமிழ் உயரடுக்கிற்கு வரையறுக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு சலுகைகளை வழங்கவும் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இந்தியப் படைகள் நிறுத்தப்பட்டன.
கொழும்பில் உள்ள பு.க.க. உடன் ஒருங்கிணைந்து, கணேஷும் அவரது தோழர்களும் இந்த சிக்கலான சூழ்நிலையில் தலையிட்டனர். அவர்கள் கட்சி இலக்கியங்களை விநியோகித்ததுடன், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் ஏராளமான கலந்துரையாடல்களை நடத்தி, இந்திய அரசாங்கத்தின் அரசியல் போலித்தனத்தை அம்பலப்படுத்தியதுடன் தொழிலாள வர்க்கத்திற்கு இனவாத அரசியலின் மிகப்பெரும் ஆபத்துகள் குறித்து எச்சரித்தனர்.
இலங்கை மற்றும் இந்தியாவில் சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம் மட்டுமே தமிழ் வெகுஜனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதை விளக்குவதற்கு ஒரு கூர்மையான அரசியல் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. கணேஷ் கட்சியின் தமிழ் மொழி வெளியீடுகளில் இந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள தொடர் கட்டுரைகளை எழுதினார்.
பாலசூரிய மற்றும் 1987 இல் அவரின் அகால மரணத்தின் பின்னர் பு.க.க. பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற விஜே டயஸ் உட்பட முன்னணி இலங்கை தோழர்கள் இந்தியாவிற்கு விஜயம் செய்து கணேஷுடன் இணைந்து அங்கு கட்சியின் வேலையை அபிவிருத்தி செய்யப் பணியாற்றினர். அனைவருக்கும் கணேஷ் அன்பான உபசரிப்பை வழங்கினார்.
பிந்தைய ஆண்டுகளில், கணேஷ், சென்னைக்கு வருகை தந்த பு.க.க. தோழர்களுடன் சேர்ந்து, கட்சியின் அரசியல் வேலையை கல்கத்தாவிற்கு விரிவுபடுத்தினார். அங்கு அவர் நீண்ட காலம் செலவிட்டார். கல்கத்தா 1940களில் பி.எல்.பி.ஐ.யின் செயற்பாடுகளின் முக்கிய மையமாக இருந்தது.
1991ல் முதலாவது வளைகுடா போருக்கு மத்தியில், ஏகாதிபத்திய போருக்கும் காலனித்துவத்திற்கும் எதிரான தொழிலாளர்களின் பேர்லின் உலக மாநாட்டிற்கான அனைத்துலகக் குழுவின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கொல்கத்தாவில் டயஸ் உட்பட இலங்கை தோழர்கள் உரையாற்றிய கூட்டங்களை ஏற்பாடு செய்ய கணேஷ் உதவினார். சோவியத் யூனியன் ஸ்டாலினிச அதிகாரத்துவத்தால் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா உலகளாவிய ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்த பல தசாப்த கால போரைத் தொடங்கியதால், ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தைத் அணிதிரட்டுவதில் பெர்லின் மாநாடு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருந்தது.
பிரச்சாரத்தின் போது, துலால் போஸ், துருப ஜோதி மஜும்தார் மற்றும் கணேஷ் தத்தா உட்பட முன்னாள் பி.எல்.பீ.ஐ. உறுப்பினர்கள், அவர்களது தொடர்பாளர் நிர்மல் சமாஜ் பதியுடன் இணைந்து, கணேஷையும் இதர தோழர்களையும் சந்தித்தனர். அவர்கள் பி.எல்.பீ.ஐ. கலைக்கப்பட்டதில் பப்லோவாதத்தின் பாத்திரத்தை தெளிவுபடுத்தினர். அவர்கள் பப்லோவாத ஐக்கிய செயலகத்தில் இருந்து விலகியதுடன், மரபு வழி ட்ரொட்ஸ்கிசத்தின் தொடர்ச்சியாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவை அங்கீகரித்து அதில் இணைந்தனர்.
1998 இல் உலக சோசலிச வலைத் தளத்தை தொடங்கியதன் முக்கியமான முன்னேற்றத்தைப் பற்றி கணேஷ் மிகவும் ஆர்வமாக இருந்தார். அவர் கட்டுரைகளை எழுதியதுடன், அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் முக்கியப் பிரச்சினைகள் தொடர்பாக மற்றவர்களுடன் இணைந்து கட்டுரைகளை எழுதினார்.
அவருடன் பணியாற்றியவர்கள் கடினமான சூழ்நிலைகளில் அவரது அர்ப்பணிப்பு, ஆற்றல் மற்றும் விடாமுயற்சியை நினைவுகூர்கிறார்கள். நோயால் மென்மேலும் இயலாமல் போனபோதும் அவரது கடைசி ஆண்டுகளில் கூட, சுறுசுறுப்பாக செயற்பட்ட அவர், இளம் தோழர்களுக்குக் கற்பிக்கும் மற்றும் ட்ரொட்ஸ்கிசக் கொள்கைகளைப் பாதுகாக்கும் பணிக்குத் தனது அனுபவத்தையும் உறுதியையும் கொண்டு வந்தார்.
கணேஷின் கடைசி ஆண்டுகளில் மற்றும் அவரது இறுதியாக மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு உதவிய இந்திய ஆதரவாளர் ஆகாஷ் தேவ், இந்த கடுடிரை ஆசிரியரிடம் விளக்கியதாவது: “தினசரி அடிப்படையில் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளிவரும் அரசியல் பகுப்பாய்வு குறித்து, கணேஷ் மிகவும் ஆர்வமாக இருந்தார். தளத்தைப் படிக்க முடியாததால் கட்டுரைகளில் என்ன இருக்கிறது என்பதை விளக்குமாறு அவர் என்னிடம் கேட்பார். ட்ரொட்ஸ்கிசத்தின் மீதும் அனைத்துலகக் குழுவின் மீதும் அவருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது.”
தொழிலாள வர்க்கத்தினுள் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்திற்கான தோழர் கணேஷ்தேவின் வாழ்நாள் முழுவதுமான அர்ப்பணிப்பின் நினைவுகள், இலங்கை மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் கட்சித் தோழர்கள் மத்தியில் நிலைத்திருக்கும்.
